COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 2, 2013

அதிமுக அரசின் அலட்சியத்தால் தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள்

தீபாவளிக்கு முதல் நாள். தீபாவளியைக் கொண்டாட எல்லாரும் பட்டாசு வாங்கச் சென்று கொண்டிருக்க, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் ஒழுகச்சேரி கிராமத்தில் அணைக்கரை அருகே பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியது. இதில், விளையாடும் வயதில் காசு சம்பாதிக்கச் சென்ற பள்ளிக்கூடச் சிறுவர்கள் நான்கு பேர் உட்பட ஒன்பது பேர் இறந்து போயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த ஆலை ராஜாங்கம் என்பவரது மனைவி தனலட்சுமி என்பவரின் பெயரில்  செயல்பட்டு வந்துள்ளது. நான்குபேர் மட்டுமே அமர்ந்து வேலை செய்யக்கூடிய இடத்தில் விதிகளுக்குப் புறம்பாக 50 பேர் வரை வேலை செய்துள்ளார்கள். ஆலைக்கு நான்கு வழிகள் இருக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், ஒரு வழி மட்டுமே இருந்துள்ளது. ஒரு நாளைக்கு 12.5 கிலோ வெடி மருந்துதான் இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால், தீபாவளி விற்பனையில் காசு பார்க்க கிட்டத்தட்ட 4 டன் அளவிற்கு வெடிமருந்து அடைத்து வைத்திருந்துள்ளார்கள். பட்டாசு தயாரிக்க மட்டும் உரிமம் பெற்றுள்ள ஆலையில் பட்டாசு விற்பனையும் நடந்துள்ளது.

விபத்து நடந்த ஆலை உள்ள இடத்திற்குச் செல்வதற்கு சரியான பாதை இல்லை.   காயம் பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வாகனங்கள் வரக்கூட முடியாது. வாகன போக்குவரத்து வசதிகளும் இல்லாத இடத்தில்தான் பட்டாசு தயாரித்து வந்துள்ளார்கள்.  அந்த இடம் வனத்துறைக்குச் சொந்தமானதாம். எப்படி பட்டாசு ஆலை வைக்க அனுமதி வழங்கினார்கள் என்று தெரியவில்லை.

வெடி விபத்து மதியம் 2 மணியளவில் நடைபெற்றுள்ளது. பல தொழிலாளர்கள் சாப்பிடச் சென்றிருந்த நேரம். மதிய நேரம் என்பதால் பட்டாசு வாங்க வருவோரும் இல்லை. இல்லையென்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும். விபத்து நடந்தவுடன் ஆலை முதலாளி சிதறிக்கிடந்த பணத்தை அள்ளிக் கொண்டு ஓடுவதில்தான் அக்கறையாக இருந்துள்ளார்.

விபத்து நடந்தவுடன் வழக்கம்போல் அமைச்சர்கள், அதிகாரிகள் படையெடுத்தார்கள். இடத்தைப் பார்வையிட்டனர். மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினர். அம்மாவின் அரசு நிபுணர் குழு அமைத்து அதிரடி ஆய்வும் செய்து தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வந்த 31 பட்டாசு ஆலைகளைகளுக்கும் உரிமத்தை ரத்து செய்து தன்னுடைய கடமையை முடித்துக் கொண்டது. தீபாவளி நெருங்குவதை முன்னிட்டு செப்டம்பர் 11 அன்றுதான் உரிமத்தைப் புதுப்பித்துள்ளார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு உரிமத்தைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளார்கள் அதிகாரிகள்.

இந்த ஆலை, கோவில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின்போது வாண வேடிக்கைக்கான வெடிகளை மட்டுமே தயாரிக்க அனுமதிக்கப்பட்ட ஆலை என்கிறார்கள். ஆனால், சிவகாசி யில் செய்யப்படும் பட்டாசுகளை இந்த ஆலையில் தயாரித்தது மட்டுமின்றி விற்பனையையும் அங்கேயே செய்து வந்துள்ளார்கள். விபத்து நடந்த ஆலை மட்டுமல்ல, தஞ்சை மாவட்டதில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளுமே அவ்வாறுதான் இயங்கி வந்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி முதலிப்பட்டியில் பட்டாசு ஆலை வெடித்து 30க்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார் கள். ஜெயலலிதாவே நேரில் வந்து பார்வையிடப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், மரணமடைந்தவர்களுக்கும் காயம்பட்டவர்களுக்கும் நஷ்டஈடு அறிவித்துவிட்டு சும்மா இருந்துவிட்டார்.

பட்டாசு ஆலைகள் விதிமீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், பட்டாசு ஆலைகள் இயங்கக்கூடிய இடங்களுக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி உட்பட தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அறிவித்தார். ஆனால், இது எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. பட்டாசு ஆலை விபத்துக்களும் மரணங்களும் சிவகாசி, சேலம், தஞ்சாவூர் என தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் விவசாயம் அழிந்து வருவதாலும் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கிடைக்கும் வருமானம் போதாததாலும் ஏழை மக்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காக உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிந்தும் இது போன்ற ஆபத்தான வேலைகளுக்குச் செல்கிறார்கள். பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் அனுப்புகிறார்கள். ஆனால், அரசோ விவசாயத் தொழிலை மேம்படுத்துவதற்குப் பதிலாக மீத்தேன் எரிவாயு ஆலை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று சொல்லி விளைநிலங்களை நாசப்படுத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 200 நாட்கள் வேலை, நாள் ஒன்றுக்கு 148 ரூபாய் கூலி என்பதை அமல்படுத்தத் தயாராக இல்லை. சிறுவர்களுக்கு இலவசக் கல்வி கட்டாயம் என்று சொல்லும் அரசு அச்சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை இல்லாத, வருமானம் இல்லாத நிலையைப் போக்கத் தயாராக இல்லை.

இந்தச் சூழலில்தான் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டு கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் ஆலை முதலாளிகள். காவல்துறையில் உள்ளவர்கள் (தன் ஒடுக்குமுறை ஆயுதமான காவல்துறைக்கு அதிக சலுகையை அம்மா அரசு அறிவித்துக் கொண்டே இருக்கும்போதுகூட) சாதாரணமாக இறந்தால் கூட இழப்பீடு கொடுக்கும் ஜெயலலிதா அரசு ஒழுகச்சேரியில் இறந்தவர் குடும்பத்தினருக்கோ காயம்பட்டவர்களுக்கோ இதுவரை எவ்வித நஷ்டஈடும் அறிவிக்கவில்லை. பட்டாசு ஆலைகளில் நடப்பவை விபத்துக்கள் அல்ல. அரசின் அக்கறையின்மையால், அராஜகத்தால் நடக்கும் படுகொலைகள்.

விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழுவாம். கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? விதி மீறல்களே விதியாக இருக்கும்போது. நிபுணர் குழு அமைத்து அவர்கள் அறிக்கை விடுப்பார்கள். சில காலங்கள் ஆலைகள் மூடப்பட்டிருக்கும். பின், மாற்றம் ஏதுமின்றி அதே பழைய நிலையில் ஆலைகள் இயங்கும். மீண்டும் விபத்து நடந்தால் மீண்டும் நிபுணர் குழு. இதுதான் அதிமுக அரசின் சாதனை.
 
விபத்து நடந்த பட்டாசு ஆலை இடத்தையும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங் களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் டிகேஎஸ் ஜனார்த்தனன், அவிதொச மாவட்டத் தலைவர் தோழர் கண் ணையன், அய்சா மாநிலப் பொதுச் செயலாளர்  ரமேஷ்வர் பிரசாத் ஆகியோர் தோழர்கள் மணிகண்டன், மாறன், கணேசமூர்த்தி, வழக்குரைஞர் மணிசேகர், சசிகுமார், சுந்தரமூர்த்தி ஆகியோரின் உதவியுடன் சென்று பார்த்தனர்.

இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உடனடியாக 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், காயம்பட்டவர்களுக்கு 5 லட்ச ரூபாய் நஷ்டஈடும் முறையான உரிய சிகிச்சையும் வழங்க வேண்டும், பட்டாசு ஆலைகள் எல்லாம் விதிகள்படி இயங்கவும் ஏற்கனவே அரசு அறிவித்தபடி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவும் வேண்டும் என இகக(மாலெ) கோரிக்கை வைத்துள்ளது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 18 அன்று மாலெ கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பகுதி மக்கள் உட்பட நூறு பேர் வரை கலந்துகொண்டனர்.

(தகவல்கள்: எஸ்.இளங் கோவன், டி.கே.எஸ்.ஜனார்த்தனன், தொகுப்பு: ஜி.ரமேஷ்).

Search