COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 2, 2013

பெண்கள் மீதான குற்றங்களை தண்டனைகள் நிச்சயம் தொடர வேண்டும்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று திமுககாரர்கள் சொல்லிக் கொள்வதுபோல், சுதந்திரம், நியாயம், அச்சமின்மை என்று தெஹல்கா பத்திரிகை தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறது. இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, அதை பொய்மை, போலி, அச்சமூட்டுவது என்று மாற்றிச் சொன்னார்.

ஊழல், போலி மோதல் படுகொலைகள், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள், மக்கள் விரோத நடவடிக்கைகள், ராணுவம், சிறப்பு காவல் படையினர் நடத்துகிற பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் என அம்பலப்படுத்துதல் குரல்களில் முக்கிய குரலாக கருதப்பட்ட தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் தருண் தேஜ்பால், தனக்குக் கீழே வேலை செய்த பெண் நிருபர் மீது பாலியல் தாக்குதல் தொடுத்துள்ளார்.

ஓர் ஆணைக் கீறிப்பார்த்தால் தோலுக்குள் ஓர் ஆணாதிக்கவாதியைப் பார்க்க முடிகிறது. ஆதிக்கமும் அதிகாரமும் அதனால் விளைந்த ஆணவமும் கொண்ட நிலப்பிரபு தன் நிலத்தில் கட்டுண்டு கிடந்த தலித் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதற்கும் இதற்கும் என்ன பெரிய வேறுபாடு? திமிர். தன் கீழே வேலை செய்கிறாள். இவள் என்ன செய்துவிட முடியும்? ஆணாதிக்கத் திமிர். அதிகாரத் திமிர்.

தருண் தேஜ்பால் செய்துள்ள குற்றங்களை மன்னிக்க முடியாத தவறுகளை பின்வருமாறு பட்டியலிடலாம்.

•    தனக்குக் கீழே வேலை செய்த பெண்ணை இரண்டு முறை பாலியல் துன்புறுத்துதலுக்கு உட்படுத்தியது.

•    உன் வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் உனக்கு இதுதான் வழி என்று அந்தப் பெண்ணிடம் சொன்னது.

•    மன்னிப்பு கோரியபோது தன் நடத்தை பாலியல் தாக்குதல் என்று சொல்லாதது.

•    தனக்குத் தானே நீதிபதியாகி தண்டனை கொடுத்துக் கொண்டது.

•    நிலைமைகள் கட்டுமீறும்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினருக்கு தொந்தரவு கொடுத்தது.

•    அங்கும் அந்தப் பெண் என்ன எதிர் பார்க்கிறார் என்று கேட்டது.

•    கைது செய்யப்படும் சூழல் நெருங்கி விட்டபோது பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட எந்த ஆணையும் போல, பாதிக்கப்பட்ட பெண் மீது சேற்றை வாரியிறைப்பது.

•    இறுதியாக, பாஜகவின் அரசியல் சதி என்ற பலவீனமான வாதத்தை முன்வைப்பது.

தருண் தேஜ்பாலின் நடவடிக்கைகளை நமது சட்டங்கள் பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல் என்று வரையறுக்கின்றன.

அன்று பாஜகவை ஆட்டி வைத்த தருண் தேஜ்பாலை, இனியொரு விதி செய்ய எழுந்துவிட்ட பெண்களின் அறுதியிடலிலிருந்து எந்த ஆணாதிக்க வாதமும் வழிமுறையும் காப்பாற்ற முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. அவர் செய்த குற்றத்துக்கு தண்டனை பெற்றே தீர வேண்டும். அவர் குற்றத்தை மறைக்க முயற்சி செய்த குற்றத்துக்காக ஷோமா சவுத்ரியும் தண்டனை பெற்றே தீர வேண்டும்.

தெஹல்கா பத்திரிகையை பாதுகாப்பது என்ற பெயரால் தருண் தேஜ்பாலைப் பாதுகாக்க முயற்சி செய்கிற ஷோமா சவுத்ரி இன்று அம்பலப்பட்டும் தனிமைப்பட்டும் நிற்பதோடு குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உள்ளாகும் நிலையை தானே உருவாக்கிக் கொண்டார்.

அவரது பெண்ணிய குரலின் ஜனநாயகக் குரலின் உண்மை தன்மை வெளிப்பட்டுள்ளது. தருண் தேஜ்பாலும் ஷோமா சவுத்ரியும் பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்கள். தெஹல்காவில் வேலை செய்த பத்திரிகையாளர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

ஷோமா சவுத்ரி அமைப்பதாகச் சொன்ன பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான குழுவுக்கு தலைமை தாங்க முடியாது என்று ஊர்வசி புட்டாலியா சொல்லிவிட்டார். இத்தனைக்கும் பிறகு வந்திருக்கிற ஷோமா சவுத்ரியின் பதவி விலகல் மிகவும் தாமதமானது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் வந்த அன்றே செய்திருந்தால் அது வேறு. இந்தப் பதவி விலகல் குற்றத்தை மறைக்க முயற்சித்த குற்றத்தில் இருந்து விலக்கி விடாது.

துரதிர்ஷ்டவசமாக, தருண் தேஜ்பாலின் நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள இந்த நிலைமையிலும் ஷோமா சவுத்ரி தவிர அவருக்கு இன்னும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

புலிக்கு பயந்தவர்கள் எல்லாரும் வந்து என் மீது படுத்துக் கொள்ளுங்கள் என்று ஒருவர் சொன்னாராம். தருண் தேஜ்பாலுக்கு பரிந்து பேச சாரு நிவேதிதா முயற்சி செய்வது இது போன்ற ஒன்றுதான். தருண் தேஜ்பாலுக்காக பரிந்து பேசவில்லை என்று சொல்லிக் கொண்டு மிகச்சரியாக அதையே செய்திருக்கிறார் சாரு நிவேதிதா.

பெண்கள் இச்சைப் பொருட்கள் என்ற தனது கருத்தை தனது எழுத்துக்களில் மறைக்காத சாரு நிவேதிதா இப்படிச் சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. சமூகத்தில் இரண்டு விதமான கருத்துக்கள், சிந்தனைகள் தான் இருக்க முடியும். ஒன்று முதலாளித்துவ சிந்தனை. மற்றொன்று பாட்டாளி வர்க்க சிந்தனை. இவற்றுக்கு இடையில் நடுநிலை என்று ஒன்று இருக்க முடியாது.

தேஜ்பாலுக்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு கருத்துதான் இருக்க முடியுமே தவிர அவை அல்லாத ஒன்று இருக்க முடியாது. தேஜ்பால் நல்ல புத்தகங்கள் எழுதியுள்ளதால் அவரது குற்றங்களிலிருந்து அவருக்கு எந்த விலக்கும் அளிக்க முடியாது.

சாருநிவேதிதாவின் வாதங்கள் இரண்டு விசயங்களை முன்வைக்கின்றன. 1) அன்று நெருடா இழைத்த தவறைத்தான் தேஜ்பாலும் செய்திருக்கிறார், அவரை ஏற்றுக்கொள்பவர்கள் ஏன் தேஜ்பாலை வேட்டையாட வேண்டும். 2) குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரை ஒருவர் குற்றவாளி ஆகமாட்டார், நீதி விசாரணை நடக்கத் துவங்கும்போது ஊடக விசாரணை நடத்தக் கூடாது.

முதல் விசயத்தைப் பொறுத்தவரை, குற்றங்களும் தண்டனைகளும் அந்தந்த காலத்துச் சூழல்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அவற்றுக்கேற்ப மாறுகின்றன. நெருடா காலத்தில் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் இன்று இருப்பதைபோல் குற்றமாக இருந்திருந்தால் எதிர்ப்பு எழுந்திருந்தால் அவரும் தண்டிக்கப்பட்டிருக்கலாம். புறச்சூழல் முற்றிலும் மாறியிருப்பதை காணத் தவறி சாரு நிவேதிதா தனக்கு அதிவிருப்பமான இடதுசாரி சாடலுக்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறார்.

இரண்டாவது விசயத்தில், தருண் தேஜ்பால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவருடைய மின்னஞ்சல்கள் போதுமான அளவுக்கு அவருடைய குற்றத்தை விளக்குகின்றன. அதனால் அவர் குற்றம் மெய்ப்பிக்கப்பட வேண்டிய தேவை எழவில்லை. ஊடகங்கள் எந்தப் பிரச்சனையிலும் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதுபோல் இந்தப் பிரச்சனையிலும் வெளியிடுகின்றன. அது ஊடக விசாரணை ஆகி விடாது.

ஆக, பின்நவீனத்துவம் என்ற பெயரிலான கம்யூனிச சாடல் விவாதத்துக்குரிய பொருளே என்றாலும் தற்போதைய விவாதத்தின் மய்யப் பிரச்சனை அதுவல்ல.

பெண்கள் மீதான சட்ட விரோத ஆணாதிக்க அத்துமீறல்களுக்கு முடிவு கட்டும் முடிவில் இருந்து பெண்கள் பின் வாங்கப் போவதில்லை என்பதை ஒவ்வொரு நாளும் பெண்கள் நிகழ்த்திக் கொண்டிருக்க சாரு நிவேதிதா போன்றவர்கள் அதை பின்னோக்கித் திருப்ப எடுக்கும் முயற்சிகளும் குற்றம் புரிந்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் முயற்சிகளும் நிச்சயம் தோல்வியே அடையும்.

தருண் தேஜ்பால் நோக்கி தனது சுட்டு விரலை நீட்டியிருக்கும் பாஜக மோடி மற்றும் அமித் ஷா சேர்ந்து ஓர் இளம்பெண்ணை வேவு பார்த்ததைப் பற்றி மவுனம் காக்கிறது. குஜராத் அரசாங்கம் வேறு வழியின்றி ஒரு விசாரணை குழு அமைத்திருக்கிறது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட நடமாட்டங்களை வேவு பார்த்த குற்றத்துக்கு மோடியும் அமித் ஷாவும் தண்டிக் கப்பட வேண்டும்.
நீதிபதிகள் பாலியல் குற்றமிழைத்தாக அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விசாகா வழக்கிலான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்படி பாலியல் துன்புறுத்தலை விசாரிக்கும் குழுவில் வெளியாட்கள் இருக்க வேண்டும். ஆனால் வெளியாட்கள் யாரும் இல்லாமல் குழு அமைக்கும் உச்சநீதிமன்றம் தன் வழிகாட்டுதல்களை தானே மீறுகிறது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றம் செய்த இந்த நீதிபதிகள் பெயர்கள் வெளியிடப்பட்டு அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

பெண்கள் தங்கள் மீதான பாலியல் குற்றங்களை பொறுத்துக் கொள்வதில்லை என்று சூழல் மிகத்தெளிவாகக் காட்டும்போதும் சிபிஅய் இயக்குநர் பெண்களை இழிவு படுத்துவதே நகைச்சுவை என்ற குரூரத்துக்கு துணை போகிறார்.

பாலியல் வன்முறையை தடுக்க முடியவில்லையா, அதை அனுபவித்து விடு என்று சொல்லிவிட்டு நான் தவறாக எதுவும் சொல்லவில்லை என்று சொல்கிறார். அவர் தவறாகச் சொல்லவில்லை, நகைச்சுவையாக பழமொழி ஒன்றைத்தான் சொன்னார் என்று ஆதரவு காட்டவும் அதிகாரிகள் இருக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்தும் பழமொழிகளுக்கு இங்கு இடமில்லை. சிபிஅய் இயக்குநர் பதவி விலகுவது ஒன்றுதான் இந்தியப் பெண்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை தரும்.

தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சர்வதேச திரைப்பட விழாவில் ஜவஹர்லால் நேரு பல்கலை கழக பெண் மாணவர் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறார். இவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்து உரிய நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்த அதிகாரக் குற்றங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக இணைய வெளியில் ஏறிவிட்டன. பெண்ணின் மனம் இனியும் ஆழம் அல்ல. எந்த இழிவுபடுத்துதலையும் மனத்தில் புதைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்ற சூழலை பெண்களே உருவாக்கிவிட்டனர்.

பெண்கள் அறுதியிடல் அதிகரிக்க அதிகரிக்க அப்படி ஒரு சூழலுக்கு ஆண்கள் தயாராவதைத் தவிர மாற்று வேறு இல்லை. பாலியல் துன்புறுத்தலும் பாலியல் வன்முறையும் பிற வடிவங்களிலான பாலியல் தாக்குதல்களும், நிச்சயம் முன்னேறிச் செல்கின்ற பெண்களின் இயங்காற்றலை தடுத்து நிறுத்தப் போவதில்லை. அப்படி அவர்கள் முன்னேறிச் செல்வது மொத்த சமூகமும் முன்னேறிச் செல்வதன் வெளிப்பாடேயன்றி ஆண்களின் வெளி பறிக்கப்படுவதன் விளைவு அல்ல.

மனமாற்றம் வளர்ப்பு மாற்றம் வர வேண்டும் என்று தொலைக்காட்சிகளில் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தருண் தேஜ்பால் பிரச்சனையில் சில விசயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். மனமாற்றம் வளர்ப்பு மாற்றம் வேண்டும்தான். ஆனால் அந்த வாதம் இன்று குற்றமிழைப்பவர்கள் தப்பித்துவிட உதவிவிடக் கூடாது. தருண் தேஜ்பால் இந்த நிகழ்வுக்கு முன்பு வரை பெண் சுதந்திரத்துக்கு ஆதரவானவர் என்ற பிம்பம் கொண்டவர்.

பெண்கள் காட்சிப் பொருட்கள் அல்ல என்ற கருத்து சொன்னவர். இப்போதும் தனது நடத்தைக்கு அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். தனது அத்துமீறலுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது அவருக்கு தெரியும்.

இதுபோன்ற, இது தொடர்பான பல பிரச்சனைகளில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் வேண்டும் என்று அவர் நடத்துகிற பத்திரிகை தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளது. குற்றம் நடந்த இடம் அவர் நடத்துகிற சிந்தனை விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் தங்கியிருந்த இடம். ஆக, தருண் தேஜ்பால் விசயத்தில் மனமாற்றம் வளர்ப்பு மாற்றம் என்ற பேச்சுக்களுக்கு பொருத்தமோ அவசியமோ இல்லை. இருந்தும் இப்படி ஒரு குற்றத்தில் அவர் ஈடுபட என்ன காரணம்? தண்டனை பற்றிய அச்சமின்மை. யார் என்ன செய்துவிட முடியும் என்ற திமிர்.

அந்தச் சிறுபெண்ணை சமாளித்துவிட முடியும் என்ற இறுமாப்பு. தன் வசம் உள்ள அதிகாரம் செல்வாக்கு தாண்டி சட்டம் தீண்டாது என்ற துணிச்சல்.

இவற்றை எல்லாம் உறுதி செய்யும் ஆணாதிக்க அரசியல் சூழல். ஆக மாற்றம் வர வேண்டியது முதலில் இந்தப் புள்ளியில். இந்தியச் சட்டங்கள் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குற்றம் என்று வரையறுக்கும்போது அவற்றுக்கான தண்டனைகளை நிர்ணயித்து இருக்கும்போது அவை அமலாக வேண்டும்.

அந்த அமலாக்கம் நாம் விரும்புகிற மனமாற்றம் மற்றும் வளர்ப்பு மாற்றத்தை உருவாக்கும் சூழல் தரும். எந்த ஆணும் எந்தப் பெண்ணை யும் இச்சைப் பொருளாகப் பார்க்கும் பழக்கம் உடனடியாக மாறவில்லை என்றாலும் அப்படிப் பார்ப்பது தவறு, அந்தப் பார்வையையொட்டிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றம், அதிகரம், செல்வாக்கு எதுவும் துணைக்கு வராது என்பது உள்வயமாகி அச்சம் ஏற்படும். இந்த அச்சம் குற்றங்களை தடுக்கும். குறைக்கும்.

ஆக, நம் முன் இன்று உள்ள மிகப்பெரிய சவால் பெண்கள் மீதான குற்றங்களுக்கு உடனடி தண்டனை உறுதிப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது.

தருண் தேஜ்பால் மட்டுமின்றி தங்ஜம் மனோரமா, ஷோபியன் பெண்கள் ஆகியோர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டு கொல்லப்பட்டதற்கும் காரணமானவர்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தண்டனைக்கு உட்படுத்தப்படுவதை நாட்டில் உள்ள பெண்கள் இயக்கம் நிர்ப்பந்தப்படுத்த வேண்டும்.

பெண்களின் போராட்டத்தின் விளைவால் சட்டமாகியும் விதிகள் உருவாக்கப் படாததால் பயனின்றி இருக்கும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம் பயன்பாட்டுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.

Search