COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 1, 2013

மத்திய அரசு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் புரட்சிகர இளைஞர் கழகம் வலியுறுத்தல்

லட்சக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சே தலைமையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை மத்திய அரசு புறக்கணிக்கக் கோரி புரட்சிகர இளைஞர் கழகம் திருபெரும்புதூரில் 24.10.2013 அன்று தெருமுனைக் கூட்டம் நடத்தியது.

காஞ்சிபுரம் ஆர்ஒய்ஏ அமைப்பாளர் தோழர் ராஜகுரு தலைமை தாங்கினார். ஆர்ஒய்ஏ முன்னணிகள் செந்தில், குணா, ராஜேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் இரணியப்பன் மற்றும் புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் தோழர் பாரதி உரையாற்றினர். ஆசியன் பெயிண்ட்ஸ் குணசேகர் கவிதை வாசித்தார்.

தெருமுனைக் கூட்டத்தில் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்திருக்கும்போது, இந்திய அரசு கலந்து கொண்டால் கொடுங்கோலன் ராஜபக்சேவிற்கு கிரீடம் சுமத்துவது போல் ஆகிவிடுமென்றும், இலங்கைத் தமிழர்கள் கொன்று
குவிக்கப்பட்டபோது போர் என்றால் அப்பாவி மக்கள்சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன தமிழக முதல்வரும், இலங்கையில் போரை நிறுத்த சில மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொன்ன கருணாநிதியும், இலங்கைத் தமிழர்களுக்கு துரோக மிழைத்தவர்கள் என்றும் தோழர்கள் குறிப்பிட்டனர்.

கூட்டத்தில் பின் வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன:

    போர்க் குற்றவாளி ராஜபக்சே சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு  தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

    இலங்கை தமிழர் பகுதிகளில் ராணுவ ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்பட வேண்டும்

    தமிழர் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

    இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் சிறை முகாம்கள் மூடப்பட்டு, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கி, கல்வி வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் உடனடியாக உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

    தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படும் மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு துரிதமான நடவடிக்கையை  மேற்கொள்ள வேண்டும்.
ஹுண்டாய், ஆசியன் பெயிண்ட்ஸ், டென்னகோ, சிஅண்டுஎஃப், மியாங்கோ ஆகிய ஆலைகளின் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாது என அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

Search