COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 1, 2013

மதவாத அரசியல் மற்றும் சிறுபான்மையினர் வேட்டையாடப்படுவதற்கு எதிராக இகக மாலெ கருத்தரங்கம்

செப்டம்பர் 25 அன்று டெல்லியில் மதவாத அரசியல் மற்றும் சிறுபான்மையினர் வேட்டையாடப்படுவதற்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, சிறுபான்மையினர் வேட்டையாடப்பட்டதில் பலியானவர்களின் உறவினர்கள், மூத்த பத்திரிகையாளர் செய்யத் முகம்மது ஹஸ்சி, மனித உரிமை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அஹலக், இகக(மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் முகம்மது சலீம், ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாவோயிசத்திற்கு எதிராக போராடுவது என்ற பெயரால் மக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வேட்டையாடப்படும்போது, தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் முஸ்லீம்கள் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது.

அய்க்கிய அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட நவதாராளவாத கொள்கைகளுக்கு எதிராகவும், மதவாத வேட்டையாடுதல் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மதவாத வன்முறைக்கு எதிராகவும், தேஜமு மற்றும் அய்முகூ ஆழமாக கடமைப்பட்டுள்ள கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராகவும் விடாப்பிடியான போராட்டம் தேவை என்று தோழர் திபங்கர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பீகாரில் நரேந்திர மோடியின் ‘ஹுங்கார்’ பேரணி ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளபோது, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை பாதுகாக்க இகக(மாலெ) மற்றும் வறியவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் ‘கபர்தார்’ (எச்சரிக்கை) பேரணி நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டார்.

கருத்தரங்கில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதவாத மற்றும் குறிவைத்த வன்முறை தடுப்பு மசோதா 2011 நிறைவேற்றப்பட வேண்டும்.

    முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவதற்கு எதிராக, அதைத் தடுத்து நிறுத்தும் கொள்கை வேண்டும்.

    அதில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

    மதவாத வன்முறை வழக்குகளில் காலவரைக்குட்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் வேண்டும்.

    குறிப்பிட்ட காலவரைக்குள் பிணை வழங்கப்பட வேண்டும்.

    உத்தரபிரதேசத்தில் நிமேஷ் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.

    உத்தரபிரதேசத்தில் ஹாலித் முகம்மது, மகாராஷ்ட்ரா எர்வடா சிறையில் குயாட்டீல் சித்திக் ஆகிய சிறைச்சாலை மரணங்களுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதையும், வேட்டையாடப்படுவதையும் விசாரிக்க தேசிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்.

    சுதந்திரமான விசாரணை நடத்தி முசாபர்நகர் வன்முறையாளர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதில் பாதிப்படைந்தவர்களுக்கு முழு நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும்.

    மதவாத, சாதிய வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்.

    ஜம்மு மற்றும் காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்காமல், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்  (இச்சட்டப்படி வெறும் சந்தேகத்தின் பெயரில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஒருவரை சிறையிலடைக்க முடியும்).

    பல மாநிலங்களிலும் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் போன்ற கொடிய சட்டங்கள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும்.

இதே போன்ற கருத்தரங்கம் பீகார் மாநிலம் தர்பங்காவிலும் நடைபெற்றது. முன்பாக, அங்கு 100 முஸ்லிம் குடியிருப்பு பகுதிகளில் சந்திப்பு ஒன்றும் நடத்தப்பட்டது. மதச்சார்பற்றவை என்றுச் சொல்லிக் கொள்கிற கட்சிகள் அமைதி காக்கும்போது இகக(மாலெ) கட்சியின் இம்முயற்சியை பாதிக்கப்பட்ட, முத்திரைகுத்தப்பட்ட மக்கள் வரவேற்றனர்; பெரும் எண்ணிக்கையில் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Search