COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 15, 2013

சம்பத் ஆணைய அறிக்கையும் கோபாலசமுத்திரம் கொலையும் - ஜி.ரமேஷ்

2011 செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற மக்கள் மீது ஜெ. அரசின் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 7 பேரைக் கொன்றது. துப்பாக்கிச் சூடு சம்பவம்  பற்றி விசாரிக்கப் போடப்பட்ட நீதிபதி சம்பத் ஆணையம் தனது அறிக்கையை 2013 மே மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. 2013 அக்டோபர் 31 அன்று தமிழக சட்டமன்றத்தில் அது முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தவுடன் அது பற்றி 12.09.2011 அன்று சட்டமன்றத் தில் துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாக ஜெயலலிதா எதை முன்மொழிந்தாரோ அதையே வழிமொழிந்துள்ளது.

பரமக்குடி பச்சேரியில் 09.09.2011 அன்று கொலை செய்யப்பட்ட சிறுவன் பழனிக்குமார் வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க ஜான்பாண்டியன் செல்லக்கூடாது என்று கூறி,  அவர் தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் காரணமாக பரமக்குடி அய்ந்து முனை சந்திப்பில் அவர் ஆதரவாளர்கள் கூடி கோஷம் போட்டு மறியல் செய்தார்கள். அப்போது மற்றொரு ஆதிதிராவிடர் தலைவர் கிருஷ்ணசாமியின் வருகை பதற்றத்தை மேலும் அதிகரித்தது. அதனால் கலவரம் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

 கலவரக்காரர்கள் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தார்கள். காவல் துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தினார்கள். காவலர்கள் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன் உயிருடன் இருந்திருக்க மாட்டார்.

எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் வேறுவழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்தவும் பெரும் சேதங்கள் ஏற்படாமல் தடுக்கவும் கலவரம் தென் மாவட்டங்களின் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் செய்யவும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 96ன் கீழ் தற்காப்பு நடவடிக்கையாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறெல்லாம் ஜெயலலிதா சொன்னதற்கு கண் காது மூக்கு வைத்து, காவல்துறையினர் அத்துமீறவில்லை, சட்டப்படியே செயல்படுள்ளார்கள் என்று சப்பைக் கட்டுகட்டி போலீஸôருக்கு நற்சான்றிதழ் கொடுத்து அரசு பயங்கரவாதத்தை, போலீஸ் அத்துமீறலை நியாயப்படுத்தியுள்ளது சம்பத் ஆணையம்.

விசாரணை ஆணையம் என்றால், சம்பந்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சம்பவம் தொடர்புடைய அனைவரிடமும் பாரபட்சமின்றி முழுமையாக விசாரித்து அதன் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், கலவரத்திற்குக் காரணம் ஜான்பாண்டியன் பரமக்குடிக்குப் புறப்பட்டது என்று சொல்லும் சம்பத் ஆணையம் அவரிடம் விசாரணையே நடத்தவில்லை. மேலும், பரமக்குடி அய்ந்துமுனை சந்திப்பில் ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் கூடியிருந்தபோது கிருஷ்ண சாமியின் வருகை பதற்றத்தை அதிகரித்தது என்று (சட்டசபையில் ஜெயலலிதா அளித்த விளக்கத்தில் கூட அவ்வாறு இல்லை) யாருமே சொல்லாத ஒரு புது விசயத்தைச் சொல்லியிருக்கிறது.

அடுத்து, தன்னுடைய பரிந்துரையில், இனி வரும் காலங்களில், இதுபோன்று கும்பல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பெண் காவலர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது. இவையெல்லாம் உண்மையை மறைத்து பிரச்ச னையைத் திசை திருப்புவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.

எங்கெல்லாம் போலீஸின் அத்துமீறலால் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்களோ அங் கெல்லாம் கலவரக்காரர்கள் பெண் காவலர்களிடம் தவறாக நடந்தார்கள் என்ற சித்திரத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். தாமிரபரணிப் படுகொலை தொடர்பான மோகன் ஆணையமும் இதேபோன்றுதான் அன்று சொன்னது. திமுக ஆட்சியாக இருந்தாலும் அதிமுக ஆட்சியாக இருந்தாலும் தலித் மக்கள், சிறுபான்மை மக்கள், உழைக்கும் மக்கள் அரசு பயங்கரவாதத்தால், காவல்துறை அத்துமீறலால் பாதிக்கப்படும்போது, அரசால் போடப்படும் ஆணையங்கள் அனைத்தும் ஒரே மாதிரிதான் சிந்திக்கின்றன.

கலகக்காரர்கள் அப்பாவிகள், அவர்கள் அய்ந்துமுனை பகுதியில் இருந்து அடித்து விரட் டப்பட்டார்கள், அவர்கள் வாகனங்கள் தடை செய்யப்பட்டன, போலீசார் தாக்கினர் என்று சொல்லப்படுவதெல்லாம் கட்டுகதை என்கிறது சம்பத் ஆணையம். அதாவது முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் மற்றும் மும்பை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ் தலைமையில் நடந்த பொது விசாரணை (இந்தப் பொது விசாரணைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய பரமக்குடி காவல் ஆய்வாளர் சிவகுமார் உயர்நீதிமன்றத்தில் தடை கோரினார்) மாலெ கட்சியின் உண்மை அறியும் குழு ஆகியவற்றின் முடிவுகளை மறுக்கிறது.


கலவரக்காரர்களின் நடத்தை மன்னிக்க முடியாதது, அவர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டு, கலவரத்தின்போது காவல்துறையினர் மிகவும் சுயகட்டுப்பாட்டுடன் இருந்தாலும் போலீசார் சிலர் காவல்நிலைய உத்தரவுகளுக்கு மாறாக, கலவரத்துக்குப் பிறகு சூழ்ந்துகொண்ட கலவரக்காரர்களை அடித்தது உகந்ததாக இல்லை என்று அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

விசாரணை ஆணையம் மிகவும் நியாயமாக நடந்து கொண்டுள்ளதாக தோற்றத்தை உருவாக்குவதற்கு மட்டுமின்றி, அடித்தட்டு மக்களை அடித்து நொறுக்குவதற்கு, சுட்டுக் கொல்வதற்கு ஆணையிட்ட ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தினரையும் நல்லவர்களாகவும் நியாயவாதிகளாகவும் காட்டி, அடிமட்ட காவலர்கள் மீது பழிபோட்டுத் தப்பிக்கும் செயல் இது. அதைக்கூட அம்மா திமுக அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சம்பத் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் அரசு ஏற்றுக் கொள்கிறது. அதேவேளை, போலீசாரைப் பழிப்பதுபோல் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் தனது உத்தரவில் கூறியுள்ளார். அந்த அளவிற்கு கொஞ்சம் கூட குற்றமில்லாமல் காவல்துறை மிகவும் நேர்மையாக நடந்து கொண்டுள்ளது என்று தமிழக அரசு சொல்லப் பார்க்கிறது.

ஜெயலலிதா ஆட்சி அரியணை ஏறியது முதல் தமிழகத்தில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையும் தாக்குதலும் காவல்துறையின் காட்டு தர்பாரும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. 2012 நவம்பர் 7 அன்று நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி சாதி வெறியர்களால் நாசமாக்கப்பட்டது.

இன்று வரை அங்குள்ள தலித் மக்கள் வீடில்லாமல் வீதியில் நின்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தலித் தலைவர்கள் தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களுக்குள் நுழையத் தடை. காவல்துறையினர் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகச் செயல்படும் அவல நிலை.

இந்தச் சூழ்நிலையில் தேவர் குரு பூஜை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் கிராமத்தில் முக்குலத்தோர் கொடியை யாரோ அவமதித்து விட்டதாகக் கூறி மறியல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து அங்கு 100க்கும் மேற்பட்ட போலீஸôர் குவிக்கப்படுகிறார்கள். போலீஸôர் ஊருக்குள் இருக்கும்போதே தீபாவளி அன்று காலை தர்மராஜ் என்கிற தலித் இளைஞர் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கோபாலசமுத்திரம் பள்ளியில் படித்துவரும் தலித் பெண் மாணவர் ஒருவரை தேவர் சாதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கேலி செய்ய அது தொடர்பாக தர்மராஜ் புகார் செய் துள்ளார். அதனால், அவர் மீது வன்மம் கொண்டு அவரைக் கொன்றுவிட்டனர்.

தர்மராஜ் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தலித் மக்கள் செல்கிறார்கள். அங்கு காவலுக்கு நிற்கும் போலீசாரிடம் நாங்கள் கொலை செய்யப்பட்ட தர்மராஜைப் பார்க்க வேண்டும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள், எங்களுடன் வாருங்கள் என தலித் மக்கள் கேட்க, கண்டு கொள்ளவில்லை காவல் துறையினர். அது மட்டுமின்றி எதிர்த் திசையில் இருந்து ஆதிக்க சாதியினர் கம்பு, கடப்பாரை, மண்வெட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் திரண்டு வர அவர்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்கள் காவல்துறையினர்.

நடக்கப் போகும் அபாயம் கண்டு தலித் மக்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள நாலா பக்கமும் சிதறி ஓடியுள்ளனர். அப்போது கடைசியாக நின்று கொண்டிருந்த 19 வயது கணேசனை மண்வெட்டியால் தலையில் வெட்டியுள்ளார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் நிதானமாக கணேசனை ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டார்கள். மூளையினுள் எலும்பு குத்தி ஆபத்தான நிலையில் ஆபரேசன் செய்யப்பட்டு இன்னும் மருத்துவமனையில்தான் உள்ளார் கட்டிடத் தொழிலாளியான கணேசன். இவருடைய உழைப்பால்தான் வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தி வந்துள்ளார்கள். ஆனால், ஊடகங்களிலும் தினசரிகளிலும் தர்மராஜ் கொலை, தடுக்கப்போன கணேசனுக்கு வெட்டு என்று காவல்துறையினர் கதை எழுதி விட்டார்கள்.

ஓமநல்லூர் கிராமத்தில், தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இடத்தை ஆக்கிரமிக்க முயல அதைக்கண்டித்த தலித் பெண் மீது தேவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் மோசமாகப் பேசித் தாக்க வர, தலித் சமூகப்பெண் முன்னீர்பள்ளம் காவல்நிலையத் தில் புகார் செய்துள்ளார். இதன் விளைவாக, தீபாவளிக்கு வந்திருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகனையும் அவர் மனைவியையும் மகன் இருவரையும் மகள் மற்றும் மருமகனையும் வெட்டித் தள்ளியுள்ளார்கள். முருகன் இறந்துவிட அவர் மனைவி ஆபத்தான நிலையிலும் மற்றவர்களும் மதுரை மருத்துவமனையில் உள்ளார்கள்.

கோபாலசமுத்திரத்தில்  குடும்பத்தகராறில் ஆதிக்க சாதிப் பெண்ணின் காதை அவருடைய மகனே அறுத்துவிட, அதற்கும் தலித் மக்கள் மீதே பழி போட முயன்றுள்ளார்கள். இப்படி சாதி வெறி கொண்டு அலையும் கும்பல்கள் இருக்கும் நிலையில், இரண்டு கொலைச் சம்பவங்க ளுக்கும் முன்பு, காவல்நிலையத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்தும் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்கள். இதுவே கொலை நடக்கக் காரணமாகிவிட்டது.

இங்கும்கூட வழக்கம் போல் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல், காவல்துறை வாகனங்கள் மீது கல் வீச்சு கலவரம் என்று சொல்லி கோபாலசமுத்திரத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், ஜனநாயக  சக்திகள் ஊருக்குள் போக அனுமதி மறுப்பு. கம்பு கடப்பாரையுடன் ஆட்கள் வந்த போது கண்டு கொள்ளாமல் நின்ற காவல்துறையினர் இப்போது ஊரைச் சுற்றி நின்று கொண்டு சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல் சிலரை சரணடைய வைத்து வழக்கை ஜோடிக்கத் தொடங்கிவிட்டது காவல்துறை.
 
போலீசாருக்கு மிகவும் பொறுப்புள்ளவர்கள் என்று நற்சான்று கொடுத்த நீதிபதி சம்பத் ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நேரத்தில் காவல்துறையினர் ஆதிக்க சாதியினர் கொடிக்கு பொறுப்புடன் காவல்காத்துக் கொண்டிருக்க, அவர்கள் கண் முன்னேயே தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படும்போதும் பொறுப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய ஜெ அரசின் பொறுப்பான காவல்துறை.

சம்பத் அறிக்கையையும் சரி, கோபாலசமுத்திரம் கொலையையும் சரி திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, மதிமுக என எந்தக் கட்சியும் கண்டிக்கத் தயாராக இல்லை. பாமகவைச் சொல்லவே வேண்டாம். ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றோர் ஜெயலலிதாவைக் கண்டிக்காமல் இது ஏதோ காவல்துறை அதிகாரிகளின் அத்துமீறல் என்ற அளவில் நிறுத்திக் கொள்கிறார்கள்.

ஜெயலலிதாவும் திட்டமிட்டு சம்பத் ஆணைய அறிக்கையை தேவர் குரு பூஜை தினத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் முன்வைத்து தன் ஆதிக்க மனோபாவத்தை அழகாக அடையாளப்படுத்திக் கொண்டார்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை ஒரு தொடர்கதை. போட்டி போட்டு ஒடுக்குவார்கள். தேர்தல் நேரத்தில் கருணாநிதியின் தாமிரபரணியை ஜெயலலிதாவும், ஜெயலலிதாவின் கொடியங்குளத்தை கருணாநிதியும், தங்கள் தொலைக்காட்சியில் காட்டி வாக்குக் கேட்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் ஜெயலலிதா, கோபாலசமுத்திரம் மற்றும் ஓமநல்லூரில் இறந்துபோன இருவர் குடும்பத்திற்கும் தலா 3.75 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். ஆனால், காயம்பட்டு மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்கு ஏதும் அறிவிக்கவில்லை. இறந்தவர் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடும், அரசு வேலையும், காயம்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தரமான முழுச் சிகிச்சையும் உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என இகக (மாலெ) கோருகிறது.

உண்மை வெளி உலகிற்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, அரசியல் கட்சிகளை, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளை ஊருக்குள் விட மறுக்கும் தமிழக அரசையும் காவல் துறையையும் இகக (மாலெ) வன்மையாகக் கண்டிக்கிறது.

பரமக்குடி, தருமபுரி, மரக்காணம் வரிசையில் இப்போது கோபாலசமுத்திரமும் ஓமநல்லூரும் சேர்ந்து கொண்டுள்ளன. இந்த தலித் ஒடுக்குமுறைச் சம்பவங்களுக்கு பதில் சொல்லாமல் ஜெயலலிதா தப்பிவிட முடியாது.

Search