COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 15, 2013

புதுக்கடை தியாகிகள் நினைவு உறுதியேற்பு நிகழ்ச்சி

1956 நவம்பர் 1 அன்று குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து விடுதலை பெற்று தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து மட்டுமல்ல, மன்னர் ஆட்சிக் கொடுமைகளில் இருந்தும் விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் குமரி மாவட்டத்தில் சாதி, இனம், மதத்தை கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டுப் போராடினர். அந்தப் போராட்டத்தை திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒடுக்கியது.

புதுக்கடையில் 1956 ஆகஸ்ட் 11 அன்று துப்பாக்கிசூடு நடத்தியது. அதில் 36 பேர் கொல்லப்பட்டனர் என்று சொல்கிறார்கள். ஆனால், 11 பேர் பெயர்கள் மட்டுமே இப்போது சொல்லப்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் மன்னராட்சிக் கொடுமைகளை எதிர்த்துப் போரிட்டு உயிர் நீத்த அந்த தியாகிகளின் நினைவு போற்றும் அதேவேளை, இன்றும் அவர்கள் எதற்காகப் போராடினார்களோ அந்த வாழ்வுரிமைகள் இன்றைய கார்ப்பரேட் சார்பு ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்டும் குமரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மக்கள் வாழ்வாதாரங்களை மணல் மாஃபியாக்கள், அணுசக்தி வியாபாரிகள் அழித்துக் கொண்டும் இருக்கும் நிலையில், கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாக்க மதவெறி சக்திகள் உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் நிலையில், புதுக்கடை தியாகிகளின் லட்சியத்தை நிறைவேற்ற உறுதியேற்கும் வகையில் குமரி மாவட்டம் புதுக்கடையில் இகக(மாலெ) 01.11.2013 அன்று உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்தியது.

நிகழ்ச்சிக்கு மாலெ கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து தலைமை தாங்கினார். புதுக்கடை தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அந்தோணிமுத்து, ஜி.ரமேஷ், மேரிஸ்டெல்லா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், சுசிலா, புதுக்கடை போராட்ட தியாகி கொடிக்கால் சேக்அப்துல்லா மற்றும் தியாகிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கட்சி முன்னணியினர், பொதுமக்கள் வீர வணக்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் உறுதியேற்பு நிகழ்ச்சி பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் விஞ்ஞானி லால்மோகன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர், மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் அருள்ராஜ், சமூகநீதிப் பேரவை அமைப்பாளர் டாக்டர் ராஜன், சிபிஅய் (எம்எல்) சிவப்பு நட்சத்திரம் கட்சியின் அமைப்பாளர் பால்ராஜ், ஒளிவெள்ளம் பத்திரிகை ஆசிரியர் பிதலீஸ், குமரி மாவட்ட பாசனத் துறைத் தலைவர் வின்ஸ் ஆன்றோ உட்பட முற்போக்கு ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மாலெ கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் பேசும்போது “இந்த நாள் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைக்கப்பட்ட நாள் என்று சொல்வதைக் காட்டிலும் தொட்டால் பாவம், பார்த்தால் தீட்டு, மாராப்பு வரி என பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றி வந்த மன்னராட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத் தியாகிகள் தங்கள் இன்னுயிரைத் தந்து விடுதலை வாங்கித் தந்த நாள் ஆகும். இந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று இகக(மாலெ) கோரிக்கை வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதன் விளைவாக தமிழக அரசு நவம்பர் 1 அரசு விழாவாக நடத்த அறிவிப்பு செய்துள்ளது. ஆனபோதும் இன்றைக்கும் அந்த மன்னராட்சிக் கொடுமைகள் கார்ப்பரேட் உலகிலும் தொடர்கின்றன. உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

மதவெறி பிஜேபி  மக்களைப் பிளவுபடுத்துகிறது. பாட்னாவில் மோடி கூட்டத்தில் குண்டு வெடிக்க, குமரியில் பேருந்துகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அதிமுக அரசு அந்தக் கயவர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது. அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது.

சிறுபான்மை, தலித் மக்களுக்கு அதிமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை. ஆகவே, புதுக்கடை தியாகிகள் லட்சியத்தை நிறைவேற்ற இன்றைய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட உறுதியேற்போம்” என்று கூறினார்.

Search