COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 1, 2013

பொது விநியோகத்தைச் சுமப்பவர்களுக்கு நியாயம் வேண்டும்! - சங்கரபாண்டியன்

உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தை அய்முகூ அரசாங்கம் கொண்டுவந்தபோது, அதனால் தமிழகத்தின் பொது விநியோகம் பெரிதும் பாதிக்கப்படும், தமிழ்நாட்டில் உள்ள 1,97,82,593 அட்டைதாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று, தமிழக மக்களின் ஏக போக நல்மேய்ப்பராக ஜெயலலிதா பொங்கி எழுந்தார்.

இப்போது, தமிழக மக்கள் அனைவ ருக்கும் இருக்கிற பொது விநியோகத் திட்டம் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால், கிராமப்புறங்களில் 2.33 கோடி பேர், நகர்ப்புறங்களில் 1.32 கோடி பேர் என சுருங்கி விடும் என, இப்போதுள்ள நிலைமைகளிலேயே மாதமொன்றுக்கு 20,000 டன் அரிசி கூடுதலாக வாங்க வேண்டியுள்ள நிலையில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசின் ஒதுக்கீடு குறைந்து இன்னும் கூடுதல் பற்றாக்குறை ஏற்படும் என, அரசுக்கு கூடுதலாக ரூ.3000 கோடி செலவாகும் என கவலைப்பட்டார். என்ன நேர்ந்தாலும் அனைத்தும் தழுவிய பொது விநியோக முறை இப்போது இருப்பதுபோலவே தொடரும் என உறுதியும் அளித்தார்.

தமிழ்நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்யும் கழகங்கள் பொது விநியோகத் திட்டத்தில் குளறுபடி செய்தால் தமிழக மக்கள் பலமாக அடி கொடுப்பார்கள் என்பதை நன்கறிந்தவை. கிட்டத்தட்ட அவர்கள் ஆட்சியின் அஸ்திவாரமாக இருப்பது பொது விநியோகத் திட்டம். இந்தத் திட்டத்தை தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள் நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7000 பேர்.

இவர்கள் வேலை செய்தால்தான் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்கள் பெருமை என்று சொல்லிக் கொள்ளப் பார்க்கும் பொது விநியோகத் திட்டத்தில் உணவுப் பொருட்கள் கிட்டங்கிகளில் இருந்து ரேசன் கடைகளுக்குச் செல்லும்.

உணவுப் பொருட்கள் ரேசன் கடைகளுக்கு வந்தால்தான் அவற்றை ஜெயலலிதா படம் போட்ட பையிலோ, கருணாநிதி படம் போட்ட பையிலோ போட்டு விநியோகிக்க முடியும். அப்படி விநியோகித்தால்தான் நான் தான் தமிழக மக்களின் பாதுகாவலர் என்று அவர்கள் பேசிக் கொள்ள முடியும்.

ரத்தத்தின் ரத்தங்களும் உடன்பிறப்புக்களும் துதிபாட முடியும். சுமைதூக்கும் தொழிலாளர் பணியில் சற்று மாற்றம் ஏற்பட்டாலும் கழக ஆட்சியாளர்களின் கனவுகள் அனைத்தும் நொறுங்கிப் போகும்.

தமிழ்நாட்டு அரசியலை கிட்டத்தட்ட தீர்மானிக்கும் நிலையில் இருக்கும் இந்தத் தொழி லாளர்கள் சில பத்தாண்டுகள் சேவைக்குப் பிறகும் இன்று வரை நிரந்தரமற்ற தொழிலா ளர்களாக, பீஸ் ரேட் முறையில் சம்பளம் பெறுகிறார்கள்.

பொது விநியோகத் திட்டத்தை பாதுகாப்பது, தானே என்று சொல்லும் ஜெயலலிதா ஆட்சியில், இந்த அத்தியாவசிய தொழிலாளர் கள் குறைந்தபட்ச உரிமையான காலமுறை  ஊதியம் கூட இல்லாமல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பல பத்தாண்டுகளாக நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் மத்தியில் சங்கங்கள் நடத்தும் கழகங்கள் இந்த சுமைதூக்கும் தொழிலாளர்களை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. இந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுத்தால் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு சவால் விடுக்க வேண்டியிருக்கும்.


பொது விநியோகத் திட்டத்தில் உணவுப் பொருட்கள் தங்குதடையின்றி மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்ய தமிழ்நாட்டில் கூடுதலாக 47 கிட்டங்கிகள் அமைக்கப்படும் என்று சமீபத்தில் ஜெயலலிதா அறிவித்தார். அதாவது, அய்முகூ அரசாங்கம், உணவுப் பாது காப்பு பற்றி அக்கறையின்றி இருக்கும்போது, தமிழ்நாட்டில் அதற்கு நேரெதிராக பொது விநியோக முறை கட்டிக் காக்கப்படுகிறது என்பது ஜெயலலிதா சொல்ல வரும் உள்செய்தி.

நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் சமீபத்தில் ஜெயலலிதாவை நோக்கி ஒரு கேள்வி எழுப்பினார்கள். அய்முகூ அரசாங்கத்தைப் பற்றி கிடைத்த வாய்ப்பில் எல்லாம் விமர்சனம் செய்யும் ஜெயலலிதா, எங்களுக்கு ஏன், இந்திய உணவு கழக கிட்டங்கிகளில் வேலை செய்யும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு வழங்குவதன் அடிப்படையில் வழங்கப்படும்  கால முறை ஊதியம் தரக் கூடாது?

இந்திய உணவு கழக கிட்டங்கிகளில் வேலை செய்யும் சுமை தூக்கும் தொழிலாளி மார்ச் 2013ல் ரூ.21,942 சம்பளம் பெற்றுள்ளார். உத்தரவாதம் செய்யப் பட்ட குறைந்த பட்ச கூலி, ஊக்க ஊதியம், மிகை நேரப் பணி ஊதியம் என மூன்று கூறுகள் இதில் உள்ளன. இதுபோன்ற எதையும் இது வரை கேட்டறியாதவர்கள் இந்தத் தமிழ்நாட்டு அட்லஸ்கள்.

ஆண்டாண்டு காலமாக எந்த உரிமையும் கண்டறியாத இந்தத் தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியுவில் இணைந்த பிறகு தங்கள் குறைந்த பட்ச உரிமைகளுக்காக குரல் எழுப்புகிறார்கள். தொடர் இயக்கம் நடத்தி வருகிறார்கள்.

குறைந்தபட்ச ஊதியம், மாறுகிற பஞ்சப்படி போன்ற 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 15.10.2013 முதல் அவர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் அரசாங்கத்தை, நிர்வாகத்தை, சுமைதூக்கும் தொழிலாளர் பணி நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்துவது பற்றிய மறு சிந்தனைக்குத் தள்ளியுள்ளது. ஆயினும் தனது தாமதப்படுத்தும் தந்திரத்தை செயல்படுத்தப் பார்க்கிறது.

வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒடுக்க, தடுக்க நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் எடுத்துப் பார்த்தது. அந்தத் தடைகளை உடைத்து நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருப்பூர், கோவை, ஊட்டி, தர்மபுரி, நாமக்கல், சேலம், திருவாவூர், விழுப்புரம், திருவள்ளூர், கரூர், சென்னை மாவட்டங்களில் வேலை நிறுத்தம் எழுச்சியுடன் நடைபெற்றது. 1500 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

காவல்துறை அனைத்து கிடங்குகளின் முன்பும் காவல் காத்தது. பல்வேறு மண்டலங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்டது தெரியப்படுத்தப்படவில்லை.

நெல்லையில் காவல்துறை பாதுகாப்புடன் வெளியாட்களை வைத்து பணி செய்ய எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. திருப்பூர், சேலம், நாமக்கல் மண்டலங்களில் தொமுச, அண்ணா தொழிற் சங்கத்தினர் வெளி அரசியல் துணையுடன் மூட்டை தூக்கி ரூ.500 கூலி கொடுத்து வேலை செய்தனர்.

அவினாசியில் வெளியாட்களை அமர்த்தி வேலை செய்ததற்கு மண்டல மேலாளர் மன்னிப்பு கேட்ட பின்பே வேலையை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. 15.10.2013, 16.10.2013 தேதிகளிலும் வேலை நிறுத்தம் நீடித்தது. மண்டல மேலாளர் மன்னிப்பு கோரிய பிறகே, 17.10.2013 காலை 12 மணிக்கு வேலைகள் தொடங்கப்பட்டன.

பொது விநியோகத் திட்டத்தை தோளிலும் முதுகிலும் சுமக்கிற சுமைதூக்கும் தொழி லாளர்கள், தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிமுக அரசின் அலட்சியத்தை, ஒடுக் குமுறை போக்கை, மக்கள் சார்பு பொய் முகத்தை அழுத்தமாக அம்பலப்படுத்தியுள்ளனர்.

Search