COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 1, 2013

கோவையில் தீப்பொறி வாசகர் வட்டம்

‘தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் விழிப்பிலே (முதன்மையாக, தொழில்துறைப் பாட்டாளி வர்க்கத்தின் விழிப்பிலே) அடங்கி இருக்கிறது, அதன் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வின்மையிலும் முன்முயற்சியின்மையிலும் அடங்கியுள்ளது.’  - லெனின்

நீண்ட நாட்களாக தீப்பொறி வாசகர் வட்டம்  பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம். ஓர் அமைப்பின் சாரம் அதன் நடைமுறைகளால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அய்ன்ஸ்டீன், ‘ஒரு டன் தியரி ஒரு பரிசோதனைக்கு சமம்’ எனச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

தீப்பொறி வாசகர் வட்டம் துவக்கியே ஆகவேண்டும் என்பதற்காக முன்னணி ஊழியர்களைக் கொண்டு அலுவலகத்தில் தீப்பொறி வாசிப்பு துவங்கியது. அந்த வாசகர் கூட்டத்தில் வாசகர் வட்டம் பகுதிகளில் நடத்த வேண்டும் என்ற கருத்துமுன் வந்தது.

சாந்தி கியர் தொழிலாளர்கள் மத்தியில் 161 தீப்பொறி சந்தா இருக்கிறது. கட்சி அமைப்பில்லை. கட்சி உறுப்பினர்கள் இல்லை. ஏஅய்சிசிடியு சங்கம் இருக்கிறது.  சாந்தி கியர்ஸ் தொழிலாளர் சங்கம் ஏஅய்சிசிடியுவுடன் இணைந்த சங்கம். ஏஅய்சிசிடியுவுக்கு சிபிஅய் (எம்எல்) தான் தலைமை தாங்குகிறது என்பது வெளிப்படையானது. சாந்தி கியர்ஸ் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீப்பொறி வாசகர்வட்டக் கூட்டம் கூட்ட திட்டவட்டமான முடிவு எடுக்கப்பட்டு அமலாக்கப்பட்டது. அக்டோபர் 20 மற்றும் 27 தேதிகளில் நான்கு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அக்டோபர் 20 அன்று சிங்காநல்லூரில் நடந்த கூட்டம் குறித்த நேரத்தில் துவங்கியது. 52 பேர் கலந்து கொண்டனர். தலையங்கம், தோழர் திபங்கர் கட்டுரை, கோவை நாடாளுமன்ற தொகுதி ஒரு பார்வை, ஆகிய மூன்று கட்டுரைகள் படிக்கப்பட்டன.

வெளியில் தண்ணீர் பாட்டில் ரூ20க்கு விற்கும் போது அம்மா தண்ணீர்பாட்டில் ரூ10க்கு விற்பது நல்லதுதானே, ஏற்காடு தொகுதியில் சிபிஅய், சிபிஅய்(எம்.) எப்படி அஇஅதிமுகவை ஆதாரிக்கலாம், சங்கம் துவங்கும்போது கட்சி சார்பற்றது என்று சொல்லப்பட்டது, ஆனால் கட்சி அரசியலை புகுத்துவது எப்படி சரியாகும் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. வாசகர் மத்தியிலிருந்தே கேள்விகளுக்கு பதில்களும் வந்தன.

வாசகர்கள் விவாதம் மக்கள் பிரச்சனைகள் மீது இயக்கம் கட்டுவது நோக்கி முன்னேறியது. கோவை விமான நிலைய விரிவாக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்துத் தள்ள இருக்கின்றனர். இந்தப் பிரச்சனையில் தலையிட வேண்டுமென கருத்து முன்வந்தது.

அதே தேதியில் ஒண்டிபதூரில் நடந்த வாசகர் வட்டக் கூட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். இங்கு இரண்டு கட்டுரைகள் படிக்கப்பட்டன. ஒரு தோழர் அனைத்து தீமைகளுக்கும் அரசே காரணம் என்றார். மற்றொரு தோழர் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஃபிராடுகள், நமது சங்கம், கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி சேரக்கூடாது, தனித்து போட்டியிட வேண்டும், தொழிலாளர் ஒருவரை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்றார்.

பகுதி மக்கள் கோரிக்கைகளும் முன் வந்தன. இருகூர் பாலம் உடனே திறக்கப்பட வேண்டும் அல்லது நாமே திறக்க வேண்டும், டோல்கேட் கட்டணத்திற்குப் பயந்து லாரிகள்  சாலைகளை நாசமாக்குவதை கண்டித்து இயக்கம் நடத்தவேண்டுமெனக் கோரிக்கைகள் முன் வந்திருக்கின்றன.

அக்டோபர் 27 அன்று சூலூரிலும், குரும்பபாளையத்திலும் முறையே 23 பேர், 42 பேர் கலந்து கொண்ட இரண்டு வாசகர் வட்டக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஒரு வார இடைவேளையில் ஆலைக்குள் வாசகர் வட்டக் கூட்டங்கள் பற்றிய விவாதங்கள் அதில் விவாதிக்கப்பட்ட கேள்விகளுடன் பங்கு பெற்றனர். இங்கும் சுற்றுசூழலை மாசுபடுத்தும் ஆலையை மூட இயக்கம் நடத்த வேண்டுமென கருத்துக்கள் முன்வைத்தனர்.

வாசகர் வட்டக் கூட்டங்களில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், மாவட்ட சிறப்புத் தலைவர் தோழர் தா.சந்திரன், மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.தாமோதரன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ஜானகிராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

Search