COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 15, 2013

இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய மீனவர்களுக்காக குரல் எழுப்ப வேண்டியது ஒரு ஜனநாயகக் குடியரசின் கடமை

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளப் போவதில்லை. தமிழக அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட அனைத்தும் எழுப்பிய ஒன்றுபட்ட குரலால் இது வரை சாத்தியமானது. காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவில் இருந்து யாரும் கலந்துகொள்ளாமல், கருணாநிதி மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு துரும்பு கூட கலந்து கொள்ளாமல், முழுக்கமுழுக்க புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் வாய்ப்புக்கள் தெரியவில்லை.

உள்துறை அமைச்சர் கலந்துகொள்வது விவாதத்துக்குரியது என்று சொல்லி, கருணாநிதி வழக்கம்போல் அம்பலப்பட்டு நிற்க, ஜெயலலிதா, அவசர சட்டமன்ற கூட்டம் நடத்தி, மனவேதனை மேலிட, இன்னும் ஒரு சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி, தமிழர்களின் தனிப்பெரும் தலைவர் தான் என்று சொல்லிக் கொண்டார்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளாமல் போவதால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கப்பட்டு அதனால், இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் கிடைக்க வேண்டிய நல்வாழ்க்கையும் பாதுகாப்பும் கெட்டுப்போய்விடும் என்ற பொருள்பட இந்து பத்திரிகை தலையங்கம் எழுதுகிறது.  தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் இதே கருத்தைச் சொல்கின்றனர். இதுபோன்ற கருத்தை முன்வைப்பவர்கள் யாரை மிரட்டுகிறார்கள்? அல்லது யாரை ஏமாற்றுகிறார்கள்?

இத்தனை ஆண்டு காலம் காத்த நல்லுறவால் எத்தனை மீனவர்கள் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன? எத்தனை மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பினார்கள்? இலங்கைத் தமிழர்கள் எத்தனை பேர் படுகொலையில் இருந்து, சித்தரவதையில் இருந்து பாதுகாக்கப்பட்டார்கள்? தொலைந்துபோன இலங்கை தமிழர்கள் மீட்கப்பட்ட செய்தி ஏதும் உண்டா? உறவினர் ஒன்று சேர்ந்த காட்சிதான் கண்டோமா?

இலங்கையுடன் நல்லுறவு பேண வேண்டியதில்லை என்பதல்ல வாதம். அய்க்கிய அமெரிக்கக் கட்டளைகளுக்கு அடிபணியாமல் அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேண இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து தவறுவதுதான், தேவையே இல்லாமல் பகை பாராட்டுவதுதான், நாட்டில் பல எதிர்ப்புப் போராட்டங்களைச் சந்திக்கிறது.

இலங்கையுடனும் நல்லுறவு பேணலாம். அது போர்க்குற்றம் புரிந்த அரசாக இல்லாமல் இருந்திருந்தால். அது அப்பாவி மக்களை கொன்று குவிக்காமல் இருந்திருந்தால். அது சரணடைந்தவர்களை துப்பாக்கி குண்டுகளால் துளைக்காமல் இருந்திருந்தால். திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால்.

இப்போது இலங்கை மீது போர் தொடுக்கச் சொல்லி யாரும் கேட்கவில்லை. நடந்த போர்க் குற்றத்துக்கு நியாயம் கேட்கச் சொல்கிறார்கள். இருக்கிற தமிழர்கள் உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்கிறார்கள். போர்க் குற்றம் செய்த அரசு நடத்தும் நிகழ்ச்சிக்குச் சென்று அந்த அரசுக்கு அங்கீகாரம் தர வேண்டாம் என்கிறார்கள். நிகழ்ச்சிக்குச் செல்லாமல் எதிர்ப்பைப் பதிவு செய் என்கிறார்கள். இப்படிச் செய்வது எந்த விதத்தில் தமிழ்நாட்டு, இலங்கை தமிழர் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும்?

இலங்கைத் தமிழர்களுக்காக, இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் கொல்லப்படும் சொந்த நாட்டு மீனவர்களுக்காக குரல் எழுப்ப வேண்டியது ஒரு ஜனநாயகக் குடியரசின் கடமை. அதை செய்யத் தவறுகிறது அய்முகூ அரசாங்கம்.

ஓர் அரசாங்கம் சாதாரணமாக செய்ய வேண்டிய ஒன்றை செய்யச் சொல்ல இங்கு தீக்குளித்துச் செத்து எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் நியாயம் வேண்டும் என்று கேட்பவர்கள், மத்திய அரசின் செயலின்மைக்கு, போர்க்குற்றம் புரிந்த அரசின்பால் அது காட்டுகிற கரிசனத்துக்கு, பொறுப்பாக முடியாது.

பிரதமர் இலங்கைக்குச் செல்லவில்லை என்றால் சீனா அங்கே மனைபோட்டு அமர்ந்து விடும் என்று அபாய எச்சரிக்கைபோல் ஏதோ சொல்கிறார்கள். இலங்கைத் தமிழர்களை சாகடிக்க இந்தியா செய்யாத எந்த உதவியை எந்த உலக நாடு இனி இலங்கைக்குச் செய்துவிட முடியும்? அன்று படை அனுப்பியது முதல் இன்று போர்க்கப்பல் அனுப்புவது வரை, இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவுவதில் என்ன குறை வைத்துவிட்டது?

சமீபத்தில் இலங்கை சென்ற சல்மான் குர்ஷீத் இலங்கை அரசுடன் ஒன்பது ஒப்பந்தங்கள் போட தயாரிப்புக்கள் செய்துவிட்டு, சிலவற்றில் கையெழுத்தும் போட்டுவிட்டுத்தானே வந்தார்? இதற்கும் மேல் இலங்கையை கூட வைத்துக்கொண்டு சீனா இந்தியாவை என்னதான் செய்துவிடும்?

அண்டை நாடு என்ற அடிப்படையில் இலங்கையுடனான நல்லுறவை வலியுறுத்த இன்னொரு அண்டை நாடான சீனத்தை பகை நாடாக ஏன் காட்ட வேண்டும்? தர்க்கத்துக்கு ஒத்துவரவில்லையே? பாகிஸ்தான் நட்பு நாடு என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு மறுபுறம் அந்த நாட்டின் மீதே ட்ரோன் தாக்குதல் நடத்தும் அய்க்கிய அமெரிக்கா போன்ற ஒரு நாட்டுடன் அளவுகடந்த நட்புறவு கொண்டாடும்போது சீனம் மட்டும் எப்படிப் பகையாகும்?

இலங்கையுடனான தொழில் உறவுகளுக்கு பங்கம் வந்துவிடும் என்று யாரும் கவலைப்பட வில்லை. ஏனென்றால் மன்மோகன் போகாததால் அந்தத் தொழில் உறவுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அவர் வராததால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று ராஜ பக்சே கூட சொல்லும்போது, அது பெரிய பிரச்சனையாகிவிடும் என்று இங்கிருப்பவர்கள் சொல்வதன் உள்நோக்கம் என்ன?

இலங்கை தமிழர் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசு இனியும் பாராமுகம் காட்ட ஒரு சாக்கு. இதுவரை இந்திய அரசு செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள இந்திய அரசுக்கு ஒரு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று ஒரு நியாயம். போர்க்குற்றம் புரிந்த, இனவழிப்பு செய்கிற ராஜபக்சே அரசாங்கத்தை கண்டிக்காமல், தண்டிக்காமல், நல்லுறவுகளை மட்டும் தொடர்வதற்கு அங்கீகாரம்.

மறுபுறம், எந்த சக்திகள் இன்று இலங்கை தமிழர் உரிமைகளுக்காக குரல் எழுப்புகின்றனவோ அந்த சக்திகள் தான் இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் தீராமல் தொடர காரணம் என்று பழிசொல்வது. இப்படியாக ராஜபக்சேயின் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு பச்சைக் கொடி காட்டுவது.

அய்முகூ அரசாங்கத்தின் துரோகங்களை இந்த ஒரு தளத்தில் இருந்து மட்டும் தமிழக கட்சிகளும் ஜனநாயக இயக்கங்களும் எதிர் கொண்டுவிட முடியாது. அதை முழுமையாக பலவீனப்படுத்த அதன் அனைத்து விதமான துரோகங்களுக்கும் எதிர்ப்பு அவசியமாகிறது.

மொத்த பிரச்சனைக்கும் பார்த்தே ஆக வேண்டிய இன்னொரு பக்கம் உள்ளது. அதிமுகவும் திமுகவும் மாறிமாறி ஆட்சி செய்கிறார்கள். தமிழினத் தலைவர் பட்டத்துக்கு போட்டி போடுகிறார்கள். இருவரும் இலங்கை தமிழர் விசயத்தில் செய்த துரோகங்களை நாம் மறக்கப் போவதில்லை.

தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வை உறுதிசெய்வதில் இவர்களை யார் தடுத்தது? ஜெயலலிதாவும் கருணாநிதியும் பாடுகிற தமிழர் ஆதரவுப் பாட்டுக்குப் பின் 2014 தேர்தல் என்ற விசை இருக்கிறது. இங்குள்ள தமிழர் களை இவர்கள் இருவருமே இத்தனை ஆண்டுகளாக எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. இனவழிப்பு ராஜபக்சே அரசுக்கு அங்கீகாரம் தரக்கூடாது. சட்டமன்றத்  தீர்மானம் நிறைவேற்றுவதால் மட்டும் அதிமுக தமிழர் பாதுகாவலாளி ஆகாது.

Search