(நவம்பர் 10, 2013 அன்று சென்னையில் நடைபெற்ற ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு கூட்டத்தில் ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் குமாரசாமி ஆற்றிய உரையின் சாரம்)
வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. தேர்தல் என்றால் அது அரசியல் சண்டை. தொழிற்சங்க சண்டை அல்ல. இந்தச் சண்டையில் முதலாளித்துவ கட்சிகள் உக்கிரமாக மோதிக் கொள்வார்கள். அவர்கள் முதலாளித்துவ அரசியலை பிரச்சாரம் செய்வார்கள்.
அதிமுக, திமுக, தேமுதிக இன்ன பிற கட்சிகள் நம்மைப் போல் சங்க உறுப்பினர் போடமாட்டார்கள். வீதிவீதியாகச் சென்று கையெழுத்து இயக்கம் நடத்த மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ஓட்டு விழும். அவர்கள் அரசியலுக்கு கை மேல் பலன் கிடைக்கும். நாம் நடத்துகிற வர்க்கப் போராட்ட அரசியலுக்கு, வாக்கு வாங்குவது அவ்வளவு சுலபம் அல்ல. நாம் கடினப்பட்டுத்தான் பயணித்தாக வேண்டும்.
இன்று உலக அளவில், சிரியா விசயத்தில் அய்க்கிய அமெரிக்கா பலத்த அடி வாங்கியிருக்கிறது. அய்க்கிய அமெரிக்கா இன்று உலகின் பல நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில், ஈராக்கில் போர் தொடுத்தது. பாகிஸ்தான் நட்பு நாடுதான் என்ற போதிலும், அந்நாட்டுக்குள் சென்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. லிபியாவின் கடாபியைக் கொன்றது. ஆனால் இன்று சிரியா விசயத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒபாமா ஒரு சிவப்புக் கோடு போடுகிறார்.
புராணத்தில் இலட்சுமண ரேகை என்று சொல்கிறார்கள். இலட்சுமணன் போட்ட கோட்டை சீதை தாண்டியதால்தான் பிரச்சனையே ஏற்பட்டது என்று சொல்வார்கள். இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தினால் நான் கை வைப்பேன், தாக்குதல் தொடுப்பேன் என்று ஒபாமா சொல்கிறார். அன்று ஆணாதிக்கக் கோடு. இன்று ஏகாதிபத்தியம் போட்ட கோடு. சின்னஞ்சிறு வியட்நாம் அய்க்கிய அமெரிக்காவிற்கு பாடம் கற்பித்தது. இப்போது சிரியாவிலும் அடி விழுகிறது. இன்று உலக அரங்கில் ஏகாதிபத்தியம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்திய ஆளும் வர்க்கங்களும் நெருக்கடியில் உள்ளன. டாடா தொடுத்த வழக்கில் திருப்பமாக உச்சநீதிமன்றம் ராடியா ஒலி நாடாவை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லியுள்ளது. இது பெருந்தொழில் குழும - ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் - உயரதிகாரிகள் கூட்டை அம்பலப்படுத்தும். இன்று இந்தியாவில் கார்ப்பரேட் பாசிசம், கார்ப்பரேட் ஊழல், மதவெறி பாசிசம் ஆகியவை மிகப் பெரிய பிரச்சனைகள்.
பலரும் ‘மதம் ஒரு அபின்’ என்ற மார்க்ஸ் கூற்றின் ஒரு பகுதியை மட்டுமே சொல்லி விட்டு விட்டுவிடுகின்றனர். ஆனால் இதைச் சொல்லும்போது மார்க்ஸ், மதம் ஒடுக்கப்பட் டோரின் நெடுமூச்சு, அது தலைகீழ் உலக பிரக்ஞை என்றும் சொல்லியிருக்கிறார். லௌகீக உலகில் துன்பப்படுகிற மக்கள் ஆன்மீக சுகம் காண்கிறார்கள் போலும்.
இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அய்முகூ ஆட்சி நடக்கிறது. மதவெறி பாசிசம் எழுந்து வருகிறது. பாசிசம் எப்போதும் மந்திரத் தீர்வுகளுக்கான ஏக்கத்தை திருப்திப்படுத்தப் பார்க்கும். மோடி ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தான், சீனா வாலை சுருட்டிக் கொள்ளும் என்று சொல்கிறார்கள். நாடு முன்னோக்கிப் போகும் என்கிறார்கள். மாற்று மந்திரத் தீர்வை, மதச்சார்பின்மை என்ற பெயரால் முன்வைக்கிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதவெறிக்கெதிராக டெல்லியில் கருத்தரங்கம் நடத்தியது. அதில் நேற்று வரை, பீகாரில் ஆட்சியில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த நிதீஷ்குமார், கரசேவைக்கு செங்கல் அனுப்பிய ஜெயலலிதா, பாஜகவுடன் கரம் கோர்த்திருந்த ஒடிஷாவின் நவீன் பட்நாயக் போன்றோரை அழைத்திருந்தார்கள்.
இந்தியாவின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது, கருவூலத்தை கபளீகரம் செய்வது, மக்களின் உழைப்பால் உருவான செல்வங்களை வாரி சுருட்டிக் கொள்வது என்ற விசயங்களில் முதலாளித்துவ கட்சிகள் ஓரணியில் உள்ளன.
இந்த செல்வங்கள் மீது இந்திய மக்களுக்கு பாத்தியதையில்லை. ஆகவே நமது முழக்கம் இயற்கை வளங்கள் மீதும், தேசத்தின் கருவூலத்தின் மீதும், சமூக செல்வங்கள் அனைத்தின் மீதும் மக்களுக்கு பாத்தியதை கோருவதாக இருக்க வேண்டும். மக்கள் அணிதிரட்டலில், மக்கள் அறுதியிடலில் நிஜத் தீர்வு உள்ளது.
மக்கள் நேரடியாக அரசியலுக்கு வர மாட்டார்கள் என்ற கருத்து சிலரிடம் உள்ளது. மக்களின் உடனடி, அன்றாட தேவைகள் மீது அவர்களை ஈர்த்து, பிடிமானம் வந்த பின்பு நம் அரசியலைக் கொண்டு செல்வது என்ற பார்வை தவறானது. நம்மிடம் தொழிற்சங்கவாத, பொருளாதாரவாத அரசியலும் உள்ளது. ஆனால் நிஜ வாழ்க்கையில் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு படிப்பினை தந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
கருணாநிதியை, ஜெயலலிதாவை தேர்தலில் தோற்கடிக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால், நாம் அரசியல் மாற்றாகச் செல்லவில்லை. அரசியலை கொண்டு செல்பவர்களிடம் பிரச்சனை இருக்கிறது. அமைப்பாக்கப்பட்ட விதத்தில் வேலை செய்வதில், நமது அர்ப்பணிப்பில் பிரச்சனை உள்ளது.
முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டும் என்று பேசும்போது அதில் தாக்குதல் தன்மை இருக்க வேண்டும். அது வெறும் போராட்ட வடிவம் தொடர்பானதல்ல. ஆளும் வர்க்கங்கள் தமது பலவீனங்களாலேயே தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர், நிச்சயம் பெரும்பான்மை சிறுபான்மையை வீழ்த்தும், அந்த நாளைப் பக்கத்தில் கொண்டு வர இன்றே போராடுவோம் என்ற நிலை எடுப்பதில்தான் தாக்குதல் தன்மை உள்ளது.
ஜெயலலிதா முன் போல் இல்லை. அவரிடம் அரசியல் முதிர்ச்சி இருக்கிறது. தோற்ற அளவிலேனும் நெளிவுசுளிவாக இருக்கிறார். இந்தியாவில், தமிழகத்தில் எங்கு குண்டு வெடித்தாலும் இந்தியன் முஜாகிதீன் (அய்எம்) என்று சொல்லி விடுகிறார்கள். புத்தூரிலும், இசுலாமிய பயங்கரவாதிகளோடு மோதல் எனச் சொல்லப்பட்டது. நீதிமன்ற விசாரணை முடியும் முன்னரே இசுலாமிய பயங்கரவாதிகள் என்று முடிவு செய்கிறார்கள்.
இந்த ஆப்பரேஷனில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு பதவி உயர்வும், பதக்கமும் வழங்கப்படுகிறது. இங்கு தான் கருணாநிதியின் மதச்சார்பின்மையைப் பார்க்க வேண்டும். விடுபட்டுப் போன இன்னும் சில காவலர்களுக்கு பரிசும் பதவி உயர்வும் ஏன் வழங்கவில்லை என்பது அவரின் கவலையாக இருக்கிறது. பிறகு, நீதிமன்றம் பிடிபட்டவர்களுக்கும் சுமத்தப்பட்ட குற்றங்களுக்கும் தொடர்பில்லை என்று சொன்னால், என்ன செய்வார்கள்? பதக்கத்தை பதவி உயர்வை திரும்பப் பெறுவார்களா?
தமிழகத்தில் பாஜக தேவையில்லை. அந்த வேலையை ஜெயலலிதா பார்த்துக் கொள்வார். அய்க்கிய அமெரிக்கா மற்றும் இந்தியாவின் சர்வதேச இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஜெயலலிதா நிச்சயமான ஒரு கூட்டாளி ஆவார். இந்துத்துவா விசுவாசியான ஜெயலலிதாவிடம் இயல்பாக உள்ள தலித் விரோதத் தன்மை பரமக்குடி, தருமபுரி, மரக்காணத்தில் வெளிப்பட்டது.
இடதுசாரி முகாமில் இகக(மா) தனது மேற்கு வங்க தோல்விக்கு காரணமாக, நவதாராளவாத பொருளாதார கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தியது, அதிகார மமதை ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை என்பதை நாம் கவனப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விசயம் ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்.
தமிழகத்தில் ஆட்டோமொபைல் தொழில் பொது பயன்பாட்டு சேவை என அறிவிக்கப் பட்டது முக்கியமான விசயமாகும். 2007ல் ஹுண்டாயுடன் கருணாநிதி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். அப்போதே, அவசியம் வந்தால் ‘பொது பயன்பாட்டு சேவை’ என்ற அறிவிப்பு தருவேன் என்றார். பொது பயன்பாட்டு சேவை என்று அறிவிக்க (பப்ளிக் எமர் ஜென்சி, பப்ளிக் சர்வீஸ்) பொது அவசரம், பொது நலன் என்ற அம்சங்கள் இருக்க வேண்டும். அது இல்லாதபோதும் அறிவிப்பு செய்வேன் என்பது முதலாளித்துவ விசுவாசத்தைக் காட்டுகிறது.
09.08.2012 முதல் 08.02.2013 வரை ஆறு மாதங்களுக்கு மட்டுமே, எப்படி, ஆட்டோமொபைல் தயாரிக்கும் தொழில் பொது அவசரம் அல்லது பொது நலன் கருதி வேலை நிறுத்தங்களை தடை செய்யும் பொது பயன்பாட்டு சேவையாக இருந்தது, அதற்குப் பிறகு, இன்று வரை, எப்படி பொது அவசரம், பொது நலன் இல்லாமல் போனது என்ற கேள்விகளுக்கு ஆகப்பெரிய அறிவாளியான ஜெயலலிதாவிடம் பதில்கள் இல்லை. ஆட்டோமொபைல் துறையை பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவிப்பதை நீட்டிக்கக் கூடாது என்பது திருபெரும்புதூரில் புரட்சிகர இளைஞர் கழகம் நடத்தவிருக்கும் கையெழுத்து இயக்க கோரிக்கையாக வர வேண்டும்.
ஏகாதிபத்தியம் இஸ்லாத்தை சாத்தானாக கற்பிதம் செய்கிறது. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்களை தங்களுக்குள் சுருங்கி நிற்க வைக்க முயற்சிக்கிற போக்கு இருப்பதையும் பார்க்கிறோம். ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் அனைவரோடும் அவர்களும் இணைந்து வர வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு.
செயற்குழு திட்டமிட்டிருக்கிறபடி உறுப்பினர் சேர்ப்பது, அமைப்பாக்குவது, கையெழுத்து இயக்கம், மக்கள் சாசனம், அணி திரட்டல் போன்ற வேலைகளை எடுத்துச் செல்ல வேண்டும். தங்கியிருந்து வேலை செய்வதில் தோழர் மணிவேல் தனது அனுபவங்களை எழுதலாம். இது தவிர சென்னை மற்றும் கோவையில் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யலாம். மற்ற இடதுசாரிகளையும் அழைக்கலாம்.
நம்மைப் பொறுத்தவரையில் தொழிலாளர்களை அரசியல்படுத்துவதும் சங்கங்களை ஜனநாயகப்படுத்துவதும் நம்முன் உள்ள மய்யமான கடமைகளாகும். தமிழகத்தில் தொழிலாளர் வர்க்கத்துக்கு உரிய இடத்தை கோருவதோடு, அரசியல்படுத்துவது தொடர்புடையதாகும். சங்கங்களின் எல்லா நடவடிக்கைகளிலும் ஆகக் கூடுதலான தொழிலாளர்களை தொடர்ச்சியாக பங்கேற்க வைப்பது சங்கங்களை ஜனநாயகப்படுத்துவதற்கான அளவுகோலாகும்.
தமிழகத்தில் நகர்மயமாதலும் தொழில்மயமாதலும் அதிகமாக அதிகமாக, நகர்ப்புற, நாட்டுப்புற தொழிலாளர் எண்ணிக்கையும் அதிகமாகிறது. வேறுவேறு வகைப்பட்ட தொழி லாளர்கள் எண்ணிக்கைரீதியாக இன்று ஒரு மிகப்பெரிய சக்தியாகியுள்ளனர். தலைமை தோழர்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தை உன்னிப்பாக கவனிப்பதும், அதன் மீது வினையாற்றுவதும், உரிய நேரங்களில் உரிய தலையீடுகள் செய்வதும் மிகமிக முக்கியமானவை ஆகும்.
இறுதி ஆராய்ச்சியில், தமது போராட்ட அனுபவங்களால், வரலாற்றால், பெற்ற வெற்றிகளால், படிப்பினைகளால், அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களே, தொழிலாளர் வர்க்கத்தின் கருவாவார்கள். தமிழகத்தில் ஏறத்தாழ 85,000 பேர் பணியாற்றும் மின்வாரியத்தில் இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படவில்லை. ஒரு லட்சம் பேருக்கு மேல் பணியாற்றும் போக்குவரத்து கழகத்திலும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் இழுத்தடிக்கப்படுகிறது.
கூட்டு பேரம், பேச்சுவார்த்தைகள் போன்றவற்றின் சுவடுகளே இல்லாமல், அரசே ஒருதலைபட்சமாய் சம்பளத்தை அறிவிக்கும் ஆபத்து நிலவுகிறது. மாதிரி (மாடல்) வேலையளிப்பவர், தனியார் துறைக்கு முன்னுதாரணமாய் இருக்கிறார். முருகப்பா குழும கார்பரண்டம், ஓசூரில் மாறுகிற பஞ்சப்படி வேண்டாம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, அதனை அரசின் முன்பு போடுகிற, ஏற்காதவர்களையும் கட்டுப்படுத்தும் 12(3) பிரிவு ஒப்பந்தமாக மாற்றப் பார்க்கிறது.
திருபெரும்புதூர் மண்டலத்தில், குறைகூலி, ஒப்பந்த முறை பயிற்சியாளர் முறை ஆகியவற் றின் மூலம் கூலி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. சங்க அங்கீகார உரிமை மறுப்பு, அந்த வகையில் கூட்டுபேர உரிமை மறுப்பு என, கூலி உயர்வு போராட்டத்தின் மீது கை வைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த, பயிற்சியாளர் முறைகளால், தொழிற்சங்க இயக்கம் உற்பத்தியின் மீது கட்டுப்பாட்டை இழந்து, கூலிஉயர்வு, பணிநிலைமைகள் முன்னேற்றத்துக்கான பேர ஆற்றலில் அடிமேல் அடி வாங்கி நிற்கிறது.
மூலதனத் திரட்சிக்கு முதலாளித்துவ வளர்ச்சிக்கு, வேலையின்மை - தொழிற்துறை சேமப் பட்டாளம் - உபரி மக்கள் தொகை நிலவுவது நல்ல நெம்புகோலாகும். முற்றிவரும் விவசாய நெருக்கடி, தாறுமாறான ஏற்றத்தாழ்வான நகர்மய தொழில்மய வளர்ச்சி, தமிழகத்தின் சிறிய மற்றும் பெரிய நகரங்களை, உழைக்கும் மக்கள் வீசியெறியப்பட்டுள்ள குப்பை கூடங்களாக்கியுள்ளன. தமிழ்நாட்டில் இருபெரும் வர்க்கங்கள் மோதி நிற்கின்றன.
கோவையில் திருபெரும்புதூரில் அம்பத்தூரில் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களை கருவாகக் கொண்டு, அவர்களைச் சுற்றி அமைப்பாக்கப்படாத முறைசாராத தொழிலாளர்களை, வறியவர்களை, கீழ்நடுத்தர மக்களை திரட்டிக் கொண்டு தொழிலாளர் வர்க்கப் போராட்டப் பகுதிகள் கட்டப்பட வேண்டும்.
தமிழகத்தில் இந்தியாவில் அரியணையில் உள்ள கொள்கைகள் மூலதனத்திற்கே சேவை செய்கின்றன, முதலாளித்துவ வளர்ச்சிக்கே ராஜபாட்டை போடுகின்றன; உழைக்கும் மக்கள் அரசியலின் நடுநாயகத்துக்கு வருவோம், எங்கள் காலம் வந்துவிட்டது; எங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற திசையில் தொழிலாளர் வர்க்கப் பயணத்தை செலுத்த பாடுபடுவோம்.