வெள்ளையனே
வெளியேறு இயக்கமும்
சங் பரிவாரும்
கேள்வி:
எப்படி எப்போது யாரால் வெள்ளையனே
வெளியேறு இயக்கத்துக்கு அழைப்பு தரப்பட்டது?
பதில்:
காங்கிரஸ் இயக்கம், தனது, 08.08.1942 செயற்குழுவில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தது. இயக்கம்,
ஆகஸ்ட் 9 அன்று, 1942ஆம் ஆண்டு துவங்கியது.
கேள்வி:
இயக்கம் யாரால், முன்நகர்த்தப்பட்டது?
பதில்:
காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் முன்னணிகள் 1 லட்சம் பேர் வரை
உடனே சிறை வைக்கப்பட்டனர். காந்தியின்
மனைவி கஸ்தூரிபா காந்தி சிறைவாசத்திலேயே 24.02.1944 அன்று இறந்தார்.
காந்தி ஆகஸ்ட் 9 முதலான தமது 637 நாட்கள்
சிறைவாசத்தின்போது, 21 நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரதமும்
இருந்தார். நேரு, ஆகஸ்ட் 9, 1942 முதல்
15.06.1945 வரை 1,030 நாட்கள் சிறையில் இருந்தார்.
வெள்ளையனே
வெளியேறு இயக்கம், காங்கிரசின் தலைவர்கள் இல்லாமலே, சாமான்ய மக்களால், ஏழைகள்,
நடுத்தர மக்கள், மாணவர்கள், இளைஞர்கள்
ஆகியோரால் முன் எடுக்கப்பட்டது. (கரேங்கே
யா மரேங்கே) செய் அல்லது செத்துமடி
என்ற முழக்கமும் உணர்வும் இயக்கம் நெடுக மேலோங்கி
இருந்தது. நகரங்களில் இயக்கம் மூன்று வாரங்களுக்கு
மேல் நீடிக்கவில்லை. ஆனால், நாட்டின் மற்ற
பகுதிகளில், இயக்கம் காட்டுத் தீயாய்ப்
பரவியது. நேருவின் கணக்குப்படி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் ஒடுக்குமுறையால் 10,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
டெலிகிராப் லைன்கள் துண்டிக்கப்பட்டன. காவல்
சாவடிகள் தாக்கப்பட்டன. அரசு அலுவலகங்களுக்குத் தீயிடப்பட்டது.
சுருக்கமாகச் சொன்னால், வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒரு மக்கள் யுத்தமாகச்
சில ஆண்டுகள் நீடித்தது. வங்கத்தின் மிதினாபூர், ஒடிஷாவின் தல்சார், மகாராஷ்டிராவின் சத்தாரா பகுதிகளில் மக்கள்
போராளிகள், இணையான மாற்று அரசுகளை
நிறுவினர். காந்தி சிறையிலிருந்து மே
1944ல் வெளியே வந்துதான், கை
மீறிப் போகிறது எனச் சொல்லி,
இயக்கத்திற்கு முடிவு கட்டினார்.
கேள்வி:
எத்தகைய சர்வதேசப் பின்னணியில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்தது?
பதில்:
பிரிட்டிஷ், பிரெஞ்ச், அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியங்கள், மிகவும் பிற்போக்கான பாசிசத்தை/நாஜிசத்தை ஜெர்மனியில், இத்தாலியில் வளரவிட்டு வேடிக்கை பார்த்தனர். சில வகைகளில் உற்சாகப்படுத்தினர்.
ஹிட்லரும் முசோலினியும், தோழர் ஸ்டாலினால் கம்யூனிஸ்ட்
கட்சியால் வழிநடத்தப்பட்ட சோவியத் சோசலிஸ்ட் குடியரசுகளின்
ஒன்றியத்தை ஒழித்துக் கட்டி விடுவார்கள் என,
ஏகாதிபத்தியவாதிகள் விரும்பினார்கள். நம்பினார்கள்.
ஆனால்,
ஜெர்மனி 01.09.1939ல் போலந்தை ஆக்கிரமித்தது.
சில தினங்களில் பிரிட்டன் ஜெர்மனி மேல் போர்
தொடுத்தது. பிரிட்டன் ஒப்புக்குக் கூட இந்திய மக்களிடம்
அவர்கள் பிரதிநிதிகளிடம் சொல்லாமல், இந்தியாவை, போரில், தான் பிரகடனம்
செய்த சில மணி நேரங்களிலேயே
ஈடுபடுத்தியது. 1942 வாக்கில், பாசிச முகாமில், ஜெர்மனி
இத்தாலி ஜப்பான் அச்சு நாடுகள்,
உலகத்தையே, மோசமான இருளுக்குள் தள்ள
முயன்று கொண்டிருந்தனர். பிரிட்டன் பிரான்ஸ் அய்க்கிய அமெரிக்கா என நேச நாடுகள்,
சோவியத் ஒன்றியத்துடன் அணி சேர்ந்தன. (உலகைக்
காக்கும் போரில் பிரும்மாண்டமான தியாகங்கள்
செய்து, பாசிச முகாமை வீழ்த்தி,
போரின் வெற்றிக்கு சோவியத் ஒன்றியமே முதன்மைப்
பங்காற்றியது என்பதை ஏகாதிபத்தியங்களும் கூட
ஒப்புக்கொள்ளும்). இந்தக் கட்டத்தில், ஆசியா,
ஜப்பான் பிடியில் சிக்கியது. சுபாஷ் சந்திரபோசின் இந்திய
தேசிய இராணுவம் ஜப்பானுடன் சேர்ந்து கொண்டது. இந்தியாவின் எல்லையை பாசிச முகாம்
நெருங்கியது. இந்தப் பின்னணியில்தான், காங்கிரஸ்,
வெள்ளையனே வெளியேறு அழைப்பு தந்தது.
கேள்வி:
1942க்கு முன்னும் பின்னும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வேறு இயக்கங்கள்
நடந்தனவா?
பதில்:
1857 முதல் இந்திய சுதந்திரப் போர்
நடந்தது. காலனிய வரலாற்றாசிரியர்கள் இதனை
சிப்பாய் கலகம் எனச் சுருக்கிச்
சொல்வார்கள். இந்து - முஸ்லிம் தோளோடு
தோள் நின்று அந்நியருக்கு எதிராய்
வெள்ளையன் வெளியேற 1857லேயே போர் தொடுத்தனர்.
அதன் பிறகு, புதிதாகப் பிறந்த
தொழிலாளர் வர்க்கம், தனது போராட்டங்களில் 1908ல்
இருந்தே பிரிட்டிஷ் எதிர்ப்பு அம்சத்தை இணைத்தது.
பகத்சிங்
போன்றோரின் புரட்சிகர மரபு பிரிட்டிஷாரை வெளியேற்றும்
போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றியது. காங்கிரஸ், 1921 - 1922ல் ஒரு மிகப்
பெரிய ஒத்துழையாமை இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்திய
தேசிய இயக்கம் ஒரு மக்கள்
திரள் தன்மையைப் பெற்றது. சீற்றமுற்ற விவசாயிகள் பீகாரின் சவுரிசவுராவில் ஒரு காவல் நிலையத்தைத்
தாக்கி தீ வைத்ததில் சில
காவலர்கள் இறந்தனர். காந்தி, இயக்கத்தில் வன்முறை
புகுந்துவிட்டதாகச் சொல்லி, ஒத்துழையாமை இயக்கத்தைத்
திரும்பப் பெற்றார்.
காங்கிரஸ்,
1932 - 1934ல் பிரும்மாண்டமான சட்ட மறுப்பு (சிவில்
டிஸ்ஒபீடியன்ஸ்) இயக்கத்தை வழி நடத்தியது. துவக்கத்திலேயே,
விவசாயிகள் நிலபிரபுக்களுக்கு குத்தகைப் பணம் செலுத்த மாட்டேன்
எனத் தப்பித் தவறியும் சொல்லக்
கூடாது என, காங்கிரஸ் கட்டளையிட்டது.
சிட்டகாங்கில் (தற்போது வங்க தேசத்தில்
உள்ளது) சூர்யா சென், கல்பனா
தத் போன்ற புரட்சியாளர்கள், பிரிட்டிஷாரின்
ஆயுதக் கிடங்குகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினார்கள். தற்போது பாகிஸ்தானில் உள்ள
பெஷாவரில், போராடிய இசுலாமிய மக்கள்
மீது துப்பாக்கி சூடு நடத்த, கார்வாலி
படைப் பிரிவுக்கு (இந்துக்கள் மட்டுமே கொண்டது) பிரிட்டிஷ்
ஆட்சி உத்தரவிட்டது. கார்வாலி படைப் பிரிவினர், சொந்த
நாட்டு மக்களைக் கொல்ல மறுத்தனர். 10 வருட
சிறைவாசம் முதல் ஆயுள் தண்டனை
வரை பெற்றனர். ஆகஸ்ட்
1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம்,
இந்திய மக்கள் போராட்டங்களின் ஒரு
தொடர்ச்சியே.
கேள்வி:
கம்யூனிஸ்ட்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து
கொண்டனரா?
பதில்:
கலந்து கொள்ளவில்லை. இந்திய கம்யூனிச இயக்கத்தில்
இது ஒரு வரலாற்றுத் தவறு.
சோசலிச சோவியத் யூனியனும் பிரிட்டனும்
இணைந்து பாசிச முகாமை எதிர்த்துப்
போராடும்போது, பிரிட்டனைப் பலவீனப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என
கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.
சோசலிச சோவியத் ஒன்றியத்தைக் காக்கும்
சர்வதேச வரலாற்றுக் கடமைக்கு விசுவாசமாக இருப்பதாகக் கருதி, இந்தத் தவறான
முடிவை கம்யூனிஸ்ட் கட்சி எடுத்தது. இந்தியாவின்
எல்லை வரை பாசிச முகாம்
வந்த காலப் பின்னணியில், காங்கிரஸ்
இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது
என கம்யூனிஸ்ட் கட்சி கருதியது. எது
எப்படி ஆயினும், இந்திய மக்களோடு சேர்ந்து,
முனைப்போடு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கியிருக்க வேண்டும்.
முடிவுக்குப் பின் இருந்த சூழல்
எண்ணம் எல்லாம் தாண்டி, வெள்ளையனே
வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற வேண்டாம்
என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு, தவறானதாகும். அதே
நேரம், கம்யூனிஸ்ட்கள் எப்போதும் பிரிட்டிஷ் விசுவாசிகளாக இருந்ததில்லை. மீரட் சதி வழக்கு
கான்பூர் சதி வழக்கு என
நாடெங்கும் பிரிட்டிஷாரால் கம்யூனிஸ்ட்கள் கடைசி வரை வேட்டையாடப்பட்டனர்.
பிரிட்டிஷார், கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்வது,
கம்யூனிஸ்ட் களை சிறையில் வைத்து
சித்திரவதை செய்வது, சுட்டுக் கொல்வது, தூக்கிலேற்றுவது போன்ற நிகழ்வுகள்தான் நடந்துள்ளன.
மக்கள் சார்புத் தன்மையுடனான நாட்டுப் பற்றுடன் கம்யூனிஸ்ட்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்தில்
பங்காற்றிய வரலாறு, மறுக்கவோ மறைக்கவோ
முடியாத ஒன்றாகும்.
கேள்வி:
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சங் பரிவாரின் பங்கு
என்ன?
பதில்:
சங் பரிவார், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டது. அது பிரிட்டிஷ் அடிவருடியாகச்
செயல்பட்டது. வீர்சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் தந்து, அனைத்து
விதங்களிலும் ஒத்துழைக்க விண்ணப்பித்தார். இந்து மகா சபாவும்,
முஸ்லீம் லீகும் சிந்த் மற்றும்
வங்க மாகாணங்களில், அப்போது பிரிட்டிஷ் குடையின்
கீழ் கூட்டணி ஆட்சி நடத்தின.
வங்கத்தில் கூட்டணி ஆட்சியில், பாஜகவின்
முன்னோடியான ஜனசங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத்
முகர்ஜிதான் நிதி அமைச்சராக இருந்தார்.
பிரிட்டிஷ் ஆளுநர் ஜான் ஹெர்பெர்ட்,
வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு எதிராக கடுமையான ஒடுக்குமுறையை
ஏவு அல்லது பதவி விலகு
என சியாமா பிரசாத் முகர்ஜி
மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு கட்டளையிட்டார்.
பாஜக மூலவர் சியாமா பிரசாத்
முகர்ஜி, பதவி விலகாமல், வெள்ளையனே
வெளியேறு இயக்கத்தின் மீது ஒடுக்குமுறையை ஏவும்
பணியிலேயே ஈடுபட்டார்.
சியாமா
பிரசாத் முகர்ஜி, வீர் சாவர்க்கர் முதல்
வாஜ்பாய், மோடி வரை, ஏகாதிபத்திய
விசுவாசிகளே. சங் பரிவாருக்கு, வெள்ளையர்
ஆட்சி, விரோதமான ஆட்சியாக இருந்ததில்லை. அதனால்தான் 11.06.2014 அன்று, நரேந்திர மோடி,
1200 வருட காலனிய/அந்நிய ஆட்சி
என, பிரிட்டிஷ் ஆட்சியைச் சுத்தப்படுத்த, இசுலாமியர் ஆண்ட காலமே காலனிய
காலம், அந்நியர் ஆண்ட காலம் என
வரலாற்றைத் திருத்தி பேசினார்.
கேள்வி:
ஆகஸ்ட் 15, 1947 இந்திய சுதந்திரத்தில் ஆகஸ்ட்
9 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பங்கு என்ன?
பதில்:
வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்திய விடுதலையைத்
துரிதப்படுத்தியது. காந்தி, நேரு, காங்கிரஸ்
இல்லாமலே, இந்திய மக்கள் நாடு
தழுவிய அளவிலும், விடாப்பிடியாகவும், அனைத்து வடிவங்களிலும் போராடுவார்கள்
என, வெள்ளையனே வெளியேறு இயக்கம் முகத்தில் அறைந்து
பிரிட்டிஷாருக்குச் சொன்னது.
இதம் தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைபட்டாலும்
பதம் திரு இரண்டும் மாறி
பழி மிகுந்து இழிவுற்றாலும்
விதம் தரு கோடி இன்னல்
விளைந்து என்னை வருத்திட்டாலும்
சுதந்திர
தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே
என்பதே
இந்திய மக்களிடம் மேலோங்கிய உணர்வாய் இருந்தது.
இந்திய
தேசிய ராணுவத்தினர் மீதான விசாரணை, அதற்கு
நாடெங்கும் மக்கள் எதிர்ப்பு, கடற்படை
எழுச்சி, தெபாகா, தெலுங்கானா விவசாயப்
புரட்சிகள், போர் முடிந்த பின்
நடந்த, தொழிலாளர்களின் பிரும்மாண்டமான வேலை நிறுத்த அலைகள்,
பிரிட்டிஷ் ஆட்சி பலவீனமடைந்தது ஆகிய
காரணங்களும் வெள்ளையர் வெளியேற்றத்தைத் துரிதப்படுத்தின.