டோக்லம்
பிரச்சனை
அண்டை நாடுகளுடனான பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தைகள் மூலம்
தீர்வு காண வேண்டும்!
உள்நாட்டு
பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தை
திசைதிருப்பி ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மக்களை ஏற்றுக்கொள்ள வைக்க,
அண்டை நாடுகளுடன் ஏதோ ஒரு மட்டத்தில்
மோதல், அல்லது தேசப் பாதுகாப்பு
பிரச்சனைகள் முன்னிறுத்தப்படுவது, எல்லா நாடுகளிலும் உள்ள
முதலாளித்துவ அரசாங்கங்கள் கடைபிடிக்கும் நடைமுறைதான்.
பாசிச அரசாங்கங்கள் இதில்
மிகவும் திறமை வாய்ந்தவை.கார்கில்,
சமீபத்திய துல்லிய தாக்குதல் ஆகியவற்றில்
நாம் இதை பார்த்திருக்கிறோம்.தனது
பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்த, பாசிசம், தேசப் பாதுகாப்பை மிகவும்
வசதியாக பயன்படுத்தும் என்பதை பார்த்து வருகிறோம்.
தேசப்பாதுகாப்பு,
எல்லை பாதுகாப்பு ஒரு பிரச்சனையா என
இந்திய குடிமக்கள் யாரும் சொல்லப் போவதில்லை.
நிச்சயமாக முக்கியமாக பிரச்சனை. 1962 இந்திய சீனப் போருக்குப்
பிறகு, அதுபோன்ற பிரச்சனை இரண்டு நாடுகளுக்கு இடையில்
பெரும் போர் மூளும் அளவுக்கு
எதுவும் வரவில்லை. பாகிஸ்தானை காட்டி, சீனத்தை காட்டி
அச்சுறுத்தியே ராணுவத்துக்கு கூடுதல் ஒதுக்கீடு, ராணுவ
தளவாடங்கள் இறக்குமதி, அதில் பலப்பல ஆயிரம்
கோடி ரூபாய் மதிப்பில் ஊழல்கள்
என இன்று வரை நடந்து
வருவதையும் நாம் பார்க்கிறோம்.
இப்போது,
போர் என்று வந்தால் இந்திய
ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை இருப்பதாக
மத்திய தணிக்கை அதிகாரி அறிக்கை
வெளியிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. கூடவே, இந்தியாவுக்கும் சீனத்துக்கும்
இடையே எல்லை பிரச்சனை, பதட்டம்,
எந்த நேரமும் போர் மூளலாம்
என்ற பொறுப்பற்ற செய்திகளும் வெளியிடப்படுகின்றன. எல்லைப் பிரச்சனை என்று
சொல்லப்படுவதை பேசித் தீர்க்க வேண்டும்
என்று சொல்லும் கரிசனங்களும் அரசின் முன்னாள், இந்நாள்
உயரதிகாரிகள் தரப்பில் இருந்து வெளிப்படுகின்றன.
பணமதிப்பகற்றும்
நடவடிக்கையை மக்கள் மீது திணிப்பதற்கு
முன்பு துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜிஎஸ்டி மக்கள் மீது
திணிக்கப்படுகிற நேரத்தில் டோக்லம் பிரச்சனை முன்னிறுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வுகள் தற்செயலாக இணையாக நிகழ்ந்தன, மோடி
அரசால் திட்டமிடப்பட்டு முன்னிறுத்தப்படுபவை அல்ல என்று சங்
பரிவார் பிரச்சாரகர்கள் சொல்ல முனைவார்கள். இப்படி
கேள்வி கேட்பவர்களை தேச விரோதிகள் என்று
முத்திரை குத்தி வழக்கு போட்டு
சிறைகளில் தள்ளுவார்கள். ஆனால் இதுபோன்ற கேள்வி
எழுவதற்கு எல்லா இடமும் தற்போதைய
பிரச்சனையில் இருக்கிறது.
இந்தியாவுக்கும்
சீனத்துக்கும் இடையில் இப்போது நடந்துகொண்டிருக்கிற
பிரச்சனை எல்லை பிரச்சனை அல்ல.
பிரச்சனையின் மய்யமான டோக்லம் பகுதி,
இந்தியா, பூடான், சீனா ஆகிய
நாடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ளது. இந்தப் பகுதி
தொடர்பாக நீண்டகாலமாக சீனத்துக்கும் பூடானுக்கும் இடையில்தான் தாவாவே தவிர இதில்
இந்தியாவுக்கு நேரடியாக எந்த எல்லை தாவாவும்
இல்லை.
இப்போதும்,
இது சீனத்துக்கும் பூடானுக்கும் இடையிலான பிரச்சனைதானே தவிர இதில் இந்தியா
மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம்
இல்லை. இருப்பினும் இந்தியா தனது மூக்கை
நுழைத்துள்ளது. இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையில் பூடானுக்கு ஆதரவு
தருவது என்று போடப்பட்டுள்ள பொதுவான
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா தனக்கு சம்பந்தம்
இல்லாத டோக்லம் பகுதிக்குள் தனது
படைகளை அனுப்பியுள்ளது. பூடான் இந்தியாவிடம் உதவி
கேட்டதாக சில செய்திகளும், உதவி
கேட்கவில்லை என்று செய்திகளும் உள்ளன.
எப்படியாயினும் இப்போது நாடு இருக்கும்
நிலைமையில், அண்டை நாட்டுடன் பகையை
மூட்டும் ராணுவ நடவடிக்கை ஒன்று
தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.
சீனத்தின்
மக்கள் விடுதலைப் படையின் பொறியாளர்கள் சர்ச்சைக்குரிய
டோக்லம் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை
மேற்கொண்டபோது, இந்திய ராணுவம் ஜுன் 16 அன்று அங்கு சென்று
அந்தப் பணிகளை நிறுத்தி உள்ளது.
மக்கள் விடுதலைப் படையின் சாலை அமைக்கும்
பணியை நடக்கவிடாமல் தனது ராணுவத்தை அங்கேயே
நிறுத்தியுள்ளது. இந்தியப் படைகள் திரும்பப் பெறப்பட
வேண்டும் என சீனம் சொல்கிறது.
சீனம் தனது படைகளை திரும்பப்
பெற்றால்தான் பேச்சுவார்த்தை என்று சுஷ்மா ஸ்வராஜ்
சொல்கிறார்.
இலங்கை,
நேபாளம், பாகிஸ்தான் என அண்டை நாடுகளுடனான
சீன உறவு பல தளங்களிலும்
மேம்பட்டு வருகிறது. ஆசியா, அய்ரோப்பா, ஆப்பிரிக்கா
நாடுகளை இணைக்கும் பெல்ட் ரோட் இனிஷியேடிவ்
என்ற மிகப் பெரிய முன்முயற்சியில்
சீனம் இறங்கியுள்ளது. அய்க்கிய அமெரிக்காவின் ஒரு துருவ உலக
கனவுகளுக்கு, இந்த முன்முயற்சியும் சீனத்தின்
ஷாங்காய் கோஆபரேஷன், பிரிக்ஸ் போன்ற முயற்சிகளும் அச்சுறுத்தலாக
இருக்கின்றன. தெற்காசிய நாடுகளில் சீனத்தின் செல்வாக்கு வளர்வதை தடுக்க அய்க்கிய
அமெரிக்காவின் பிராந்திய அடியாளாக இந்திய அரசாங்கம் செயல்பட்டு
வருகிறது. இந்த ஒட்டுமொத்த சர்வதேச
உறவுகள் பின்னணியில்தான் டோக்லம் பிரச்சனையை அணுக
வேண்டியுள்ளது.
ஏற்கனவே,
சீனத்தின் பெல்ட் ரோட் இனிஷியேடிவ்
மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
இப்போது சீனா, சர்வதேச ஒப்பந்தங்களை
மீறியதாகச் சொல்லி இந்தியா, சீனா
- பூடான் நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையில் தலையிட்டுள்ளது. எந்த ராஜீய காரணங்கள்
அடிப்படையில் இலங்கை பிரச்சனையை இலங்கை
பார்த்துக் கொள்ளும் என்று இந்திய அரசாங்கம்
முன்வைக்கிறதோ, அதே அடிப்படையில், பூடான்
பிரச்சனையை பூடான் பார்த்துக் கொள்ள
இந்தியா அனுமதிக்க வேண்டும்.
இந்தியாவின்
வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும்
சிலிகுரி தாழ்வாரத்துக்கு நேராக மேலே இருக்கும்
டோக்லம் பகுதியில் சீனம் சாலை அமைப்பது
இந்திய வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரித்துவிடும் ஆபத்தை
உருவாக்கும் என்றும் இந்தியாவின் இந்தத்
தலையீட்டுக்கு இது ஒரு காரணம்
என்றும் சொல்லப்படுகிறது. இப்படி ஓர் ஆபத்து
யதார்த்தத்தில் இது வரை உருவாகவில்லை.
உருவாகக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அப்படி ஒரு செய்தி, கருத்து
நாட்டு மக்களுக்குத் தரப்படுகிறது. காலம்காலமாக சீனம் பற்றி இந்திய
மக்களின் பொதுப் புத்தியில் உள்ள
எதிர்ப்பும் சேர்ந்து கொள்வது, உள்நாட்டில் பல பிரச்சனைகளை சமாளிக்க
மோடி அரசுக்கு நிச்சயம் உதவும். தேசப் பாதுகாப்பு
பூதத்தை கிளப்பி விட்டு உள்நாட்டு
போராட்டங்களை ஒடுக்குவது, போரின் பெயரால் ராணுவ
செலவுகளை அதிகரிப்பது, அதையொட்டிய ஊழல்களுக்கு வழிவகுப்பது என்ற வழமையான நிகழ்வுகளை
அனுமதிக்க முடியாது.
பிரச்சனை
உருவாகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட
நிலையில் தீர்வு காணப்படும் எந்த
அறிகுறியும் தெரியவில்லை.பேச்சு வார்த்தைகளுக்கு வழி
காண்பதைத் தவிர வேறு வழி
இருக்க முடியாது; பேச்சு வார்த்தைகள் மூலம்
தீர்வு காணப்படுவதைத் தவிர வேறு தீர்வு
இருக்க முடியாது; ராணுவ நடவடிக்கை ஒரு
தீர்வாக நிச்சயம் இருக்கவே முடியாது. சீனம் பால் நமக்கு
எந்த மாயையும் இல்லை. அதே நேரம்
சீனத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டம் சர்வதேச ரவுடியான
அய்க்கிய அமெரிக்காவுக்கும் உலகெங்கும் உள்ள ஆயுத உற்பத்தி
முதலாளிகளுக்கும் சாதகமாக அமைவதையும் அனுமதிக்க
முடியாது. சீனம் பக்கம் தவறு
இருக்கும்பட்சம், முதன்மையாக சுட்டிக் காட்டி, தட்டிக் கேட்டு,
திருத்தும் பணியை சீன மக்கள்
பார்த்துக் கொள்ளட்டும்.
இன்றைய
நிலைமைகளில் ராணுவ நடவடிக்கைக்கு இட்டுச்
செல்லும் எந்த முயற்சியிலும் இந்திய
அரசாங்கம் இறங்க வேண்டிய அவசியம்
இல்லை. பாகிஸ்தான் உட்பட, அனைத்து அண்டை
நாடுகளுடனும் நல்லுறவு வேண்டும். சீனத்துடனான தற்போதைய பிரச்சனை உட்பட, அனைத்து பிரச்சனைகளுக்கும்
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண
வேண்டும்.