பீகாரில்
ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அய்க்கிய ஜனதா
தளம் - பாஜக கூட்டணி
2015 மக்கள்
தீர்ப்புக்கு வஞ்சகம் இழைத்தது மீதான
இகக மாலெ அறிக்கை
திபங்கர்,
பொதுச் செயலாளர்
இகக மாலெ
ஜுலை 28,
2017
பீகாரில்
இருந்த மகா கூட்டணி அரசாங்கத்தின்
முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார்
முதலில் விலகியது, பிறகு பாஜக கூட்டணிக்கு
திரும்பச் சென்று தேஜமு அரசாங்கத்தின்
தலைவராக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது - இருபத்து
நான்கு மணி நேரத்துக்குள் வேகவேகமாக
நடந்த இவை யாவற்றையும் பீகாரில்
ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது என்றே விவரிக்க
முடியும்.
பீகாரில் பாஜக ஆட்சிக்கு வருவதை
தடுப்பதற்காகவே மக்கள் மகா கூட்டணிக்கு
வாக்களித்தார்கள்; அந்த அடிப்படையே இப்போது
தலைகீழாகிவிட்டது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பின்
மூலம் நிதிஷ் குமார் தனது
பழைய நீண்டகால கூட்டாளி பீகாரில் ஆட்சியைப் பிடிக்க உதவியிருக்கிறார். நவம்பர்
2015 மக்கள் தீர்ப்பை மீறும் விதத்தில் அய்க்கிய
ஜனதா தளம் - பாஜக கூட்டணியை
ஆட்சியமைக்க அழைப்பதை இகக மாலெ எதிர்க்கிறது
என்று பீகாரின் இகக மாலெ சட்டமன்ற
கட்சி தலைவர் தோழர் மெகபூப்
ஆலம் ஆளுநரை சந்தித்து சொல்லியுள்ளார்.
ஆனால் அந்தக் கவிழ்ப்பு நடத்தப்பட்டுவிட்டது.
இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மக்கள் தங்கள் தீர்ப்பை அளிக்க
உடனடியாக மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தனது நடவடிக்கைகளை ஊழல் எதிர்ப்பு தளத்தில்
நியாயப்படுத்த நிதிஷ் குமார் முனைகிறார்.
ஆனால் அவருடைய முந்தைய ஆட்சியில்
நடந்த கருவூல ஊழல், தற்போதைய
ஆட்சியில் பட்டம் பெறுவதில் நடக்கும்
ஊழல் என தொடர் ஊழல்களுக்கு
அவரே தலைமை தாங்கி வருகிறார்.
பீகாரிலும் பிற மாநிலங்களிலும் மத்தியிலும்
பாஜக கூட பல்வேறு ஊழல்
குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. மக்கள் தீர்ப்புக்கு துரோகம்
இழைக்கும் இந்த நடவடிக்கையே ஓர்
இமாலய அரசியல் ஊழல் நடவடிக்கை.
2015 தீர்ப்பின் பொருளையே, திசையையே நிதிஷ் குமார் தனது
ஆட்சிக் காலத்தின் நடுவிலேயே மாற்றிவிட்ட இந்த ஆட்சிக் கவிழ்ப்பு
நடவடிக்கை, ‘மக்கள் தீர்ப்புக்கெதிரான மிகப்பெரிய
ஊழலாக’,
பீகார் வரலாற்றில் அறியப்படும்.
2017ல்
தேஜமு கூட்டணிக்கு நிதிஷ் குமார் திரும்பியிருப்பது,
பாஜக மேலாதிக்கம் செலுத்தும் ஓர் அரசாங்கத்தை அமைத்திருப்பது
என்பதாகவே இருக்கும்; இதில் நிதிஷ் குமார்
நிரந்தரமாக பாஜக தயவிலேயே இருக்க
வேண்டியிருக்கும். பீகாரில் 2005 முதல் 2013 வரை பாஜகவுடன் நிதிஷ்
அமைத்த கூட்டணி ஆட்சியிலும், மத்தியில்
தேஜமு, பாஜக அரசாங்கம் இல்லாதபோதே,
இன்று நாம் அனுபவிப்பதுபோல் சங்
பரிவார் அனைத்தும் தழுவிய தாக்குதல் தொடுக்கும்
நிலைமை இல்லாதபோதே, அவரது அரசாங்கம் சங்
- பாஜக நிகழ்ச்சி நிரலுக்கு விசுவாசமாக சேவை செய்தது. அமீர்தாஸ்
ஆணையம் கலைக்கப்பட்டதும் நிலச்சீர்திருத்த ஆணைய அறிக்கை கிடப்பில்
போடப்பட்டதும் துவக்கத்திலேயே இதன் இரண்டு முக்கியமான
அறிகுறிகளாக இருந்தன. பதவியேற்பு நிகழ்ச்சியின்போது எழுந்த ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற உரத்த முழக்கங்கள், இந்த
முறை நிதிஷ் அரசாங்கம் சங்
- பாஜக ஆட்சியின் பொம்மையாக இருக்கும் என்பதை போதுமான அளவுக்கு
தெளிவுபடுத்திவிட்டன.
இகக மாலெ சட்டமன்ற உறுப்பினர்கள்,
நிதிஷ் குமார் முன்வைத்த ‘நம்பிக்கை
தீர்மானத்துக்கு’ எதிராக
வாக்களித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு துரோகம்
இழைத்தவர்கள், மக்கள் தீர்ப்புக்கு வஞ்சகம்
இழைத்தவர்கள், சட்டமன்றத்தின் நம்பிக்கையை கோர உரிமையற்றவர்கள். அய்க்கிய
ஜனதா தளம் - பாஜக கூட்டணி
தேவையான எண்ணிக்கையை பெறுவதில் வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால்
பாஜகவுக்கு எதிராக வாக்களித்த மக்களின்
பார்வையில் அது நம்பகத்தன்மை பெற
முடியாது. 1857 சுதந்திர போராட்டம் முதல், சுதந்திரம், ஜனநாயகம்,
சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றுக்கான
போராட்டங்களின் தலைமை தாங்கும் மய்யமாக
பீகார் இருந்துள்ளது. இன்று பாஜக அதன்
மதவெறி துருவச் சேர்க்கை மற்றும்
சமூக ஒடுக்குமுறை என்ற அதன் நிகழ்ச்சி
நிரலுடன் ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளபோது, பாசிச எதிர்ப்பு போராட்டத்தின்
முன்வரிசையில் பீகார் மக்கள் இருப்பார்கள்.
நிதிஷ் குமாரின் சட்டவிரோத ஆட்சிக்கெதிரான போராட்டம், பாசிச சக்திகளை அதிகாரத்தில்
இருந்து வெளியேற்ற, எல்லா தளங்களிலும் தீவிரப்படுத்தப்படும்.