தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100% ஊதிய உயர்வு
கொள்ளையர்களுக்காக
கொள்ளையர்களே நடத்தும் கொள்ளையர்களின் ஆட்சி
தமிழ்நாடு
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி அவர்கள் மாதமொன்றுக்கு ஊதியமாக
மட்டும் ரூ.1.05 லட்சம் பெறுவார்கள்.
இதற்கு மேல் படிகள், சலுகைகள்
உண்டு. அவர்களது ஓய்வூதியம் ரூ.12000த்தில் இருந்து
ரூ.20,000 என உயர்த்தப்படுகிறது. தொகுதி
வளர்ச்சி நிதி ரூ.2 கோடியில்
இருந்து ரூ.2.5 கோடியாகி இருக்கிறது.
மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவு மக்களும்
தங்களது வாழ்வாதாரம் பற்றிய கவலைகளில், கேள்விகளில்,
போராட்டங்களில் இருக்கிற இந்தச் சூழலில், சட்டமன்ற
உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிப்பு
அருவருப்புடனான சீற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளதை
காண முடிகிறது. கொள்ளையர்களுக்காக கொள்ளையர்களே நடத்தும் கொள்ளையர்களின் ஆட்சி இது என்பதை
அப்பட்டமாக எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
2017ல்
அறிவிக்கப்பட்டுள்ள இந்த 100% ஊதிய உயர்வுக்கு முன்பு
2011ல் ஜெயலலிதா ஊதிய உயர்வு அறிவித்தார்.
2011க்கு முன்பு ரூ.30,000 பெற்ற
சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த அறிவிப்பை ஒட்டி
ரூ.55000 ஊதியம் பெற்றனர். இதுவும்
கிட்டத்தட்ட 100% உயர்வு.
2011க்கு
முன்பு 2008ல் கருணாநிதி ஆட்சியில்
ரூ.25000த்தில் இருந்து ரூ.30000
என ஊதிய உயர்வு பெற்றனர். இந்த
உயர்வு பற்றி கேள்வி எழுந்தபோது,
கருணாநிதி அவரது வழக்கமான பாணியில்
மற்ற மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்
பெறுவதை விட அந்த உயர்வு
குறைவே என்றார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த உயர்வு குறைவு
என்றும் மகாராஷ்டிரா போல் ரூ.65,000 ஊதியம்
வேண்டும் என்றும் கேட்டனர். தொகுதிக்கு
ஒரு ஜீப், ஓய்வூதியம் ரூ.7000த்தில் இருந்து ரூ.8000
உயர்வு என அறிவித்து கருணாநிதி
கதையை முடித்தார்.
2006 செப்டம்பரில்
கருணாநிதி ஆட்சியில் ரூ.16000த்தில் இருந்து
ரூ.20000 என அவர்கள் ஊதியத்தில்
ரூ.4000 உயர்வு தரப்பட்டது. அப்போதும்
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த உயர்வு குறைவு
என்றார்கள். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து
வருகிற அந்தச் சூழலில் சட்டமன்ற
உறுப்பினர்களுக்கு மடிக் கணிணி வேண்டும்
எனக் கேட்டார்கள்.
பிறகு
2007ல் கருணாநிதி ஆட்சியிலேயே சட்டமன்ற
உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரூ.6000த்தில் இருந்து
ரூ.7000 என உயர்த்தப்பட்டது. அத்துடன்
தினப்படி, ரயில் படி ஆகியவையும்
உயர்த்தப்பட்டன. இந்த உயர்வு இதற்கு
முந்தைய உயர்வு அறிவிக்கப்பட்டு எட்டே
மாதங்களில் அறிவிக்கப்பட்டது.
2017லும்
100% உயர்வு அறிவிக்கப்பட்டபோது, ஒரு திமுக உறுப்பினர்
தொகுதி நிதி மூன்று கோடியாக
உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக, மூன்று விரல்களை உயர்த்திக்
காட்டியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆக,
2006ல் கருணாநிதி ஆட்சியிலும் 2011ல் ஜெயலலிதா ஆட்சியிலும்
அதன் பிறகு 2017ல் பழனிச்சாமி ஆட்சியிலும்
11 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம்
ஆகியவை 5 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட ஊதியமும்
கணிசமான உயர்வு டன் அறிவிக்கப்பட்டது.
கருணாநிதி ஆட்சி யில் அடுத்தடுத்து
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் உயர்வும்
ஜெயலலிதா ஆட்சி காலத்தில், அவர்
பெயரால் நடக்கும் ஆட்சியில், 90% முதல் 100% உயர்வும் சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே கால கட்டத்தில் திமுகவும்
அதிமுகவும் போட்டி போட்டு தமிழக
இயற்கை வளங்களை கொள்ளையடித்தது பற்றி
நாம் நன்கறிந்து நொந்து போயுள்ளோம். இன்று
காசு கொடுத்தாலும் குடிநீர் கிடைக்காது என்ற நிலையை இந்த
சட்டமன்ற உறுப்பினர்கள்தான் நமக்கு உருவாக்கியிருக்கிறார்கள்.
நமது வரிப்பணத்தில் நமது ஒப்புதல் இல்லாமல்
தங்கள் ஊதியத்தை உயர்த்திக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,
தமிழக உழைக்கும் மக்களின் ஊதிய உயர்வு என்று
வரும்போது துரோகம் இழைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின்
குறைந்தபட்ச ஊதிய ஆலோசனை வாரியத்தில்
உறுப்பினராக இருக்கிற, ஏஅய்சிசிடியு தமிழ் மாநிலத் தலைவர்
தோழர் எ.எஸ்.குமார்,
அந்த வாரியத்தின் கூட்டத்துக்கான தயாரிப்பில் இருந்தபோது, பல ஆண்டுகளாக குறைந்தபட்ச
ஊதியம் மாற்றியமைக்கப்படாத சில தொழில்களின் பட்டியலை
வாரியத்துக்கு சமர்ப்பிக்க தயார் செய்திருந்தார்.
அந்தப்
பட்டியல்படி, கிராமப்புற ஊராட்சிகள் தவிர, சென்னை, மதுரை
மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின்
குறைந்தபட்ச மாத ஊதியம் இன்றைய
தேதியில், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்கள் ரூ.1,05,000 என ஆறிலக்க மாத
ஊதியம் பெறும்போது, ரூ.100 முதல் ரூ.170!
இது மாத ஊதியம்! தமிழ்நாட்டின்
சட்டமன்ற உறுப்பினர்களே, உங்களுக்கு இது தெரியுமா? 1977ல்
இது கடைசியாக அறிவிக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளாகிவிட்டன! 11 ஆண்டுகளில் 5 முறை
ஊதிய மாற்றம் எங்கே, நாற்பது
ஆண்டுகளாக ஒரே ஊதியம், அதுவும்
மூன்றிலக்கத்தைத் தாண்டாத ஊதியம் என்பது
எங்கே?
கம்பிளி
விரிப்பான் மற்றும் போர்வை நெய்தல்
தொழிலின் தொழிலாளர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1992ல் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச
ஊதியம் நாளொன்றுக்கு ரூ.12.50 முதல் ரூ.42 வரை.
இந்தத் தொழிலில் செய்யும் வேலையின் அளவுக்கேற்ப சில வேலைகளில் குறைந்தபட்ச
ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இன்று வரை இந்தத்
தொழிலில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச
ஊதியம் மாற்றி யமைக்கப்படவில்லை. பஞ்சப்படி
மட்டும் மாறுகிறது. பஞ்சம் மாறவில்லை.
வாங்கப்பட்ட
தேயிலையை பதப்படுத்தும் தொழிலில் உள்ள தொழிலாளர்களுக்கு கடைசியாக
1995ல் குறைந்தபட்ச ஊதியம் மாற்றிய மைக்கப்பட்டது.
அதன் பிறகு 23 ஆண்டுகளில் அவர்களுக்கு ஊதியம் மாற்றியமைக்கப்படவில்லை.1995ல் அவர்களுக்கு
அறிவிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.900
முதல் ரூ.1000 வரை. இன்றும்
அதேதான்.
தமிழக அரசு 78 தொழில்களுக்கு மட்டும்தான்
குறைந்தபட்ச ஊதியம் அறிவித்துள்ளது. அந்த
78 தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியம் மிகவும் குறைவாக,
மிகவும் நீண்ட இடைவெளி களில்தான்
மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அரசின் அதிகாரபூர்வ குறைந்தபட்ச ஊதிய அறிவிப்புக்குள் வராத
தொழிலாளர் பிரிவுகள் இன்னும் பலப்பல உள்ளன.
பல தொழில்களில் அரசால் மாற்றியமைக்கப்பட்ட குறைந்தபட்ச
ஊதியத்தை அமல்படுத்துவதில் முதலாளிகள் சர்க்கஸ் காட்டுகிறார்கள்.
நாட்டுக்கு
பெருமளவில் அந்நியச் செலாவணி ஈட்டித் தரும்
தையல் தொழிலில் உள்ள தொழிலாளர்களுக்கு 2004ல் மாற்றியமைக்கப்
பட்ட குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்தப்படவேயில்லை. ஜவுளித் துறை
முதலாளிகள், அந்த ஆணைக்கு தடை
பெற்று காலம் கடத்தினர். இப்போது
2014ல் ஊதியம் மாற்றியமைக்கப்பட்டபோதும் முதலாளிகள் தடை
கோரி வழக்கு தொடர்ந்ததால் 2016 ஜுலை வரை அந்த குறைந்தபட்ச
ஊதியத்துகான ஆணை அமலாக்கப்படவில்லை. 2016 ஜுலையில் சென்னை
உயர்நீதிமன்றம் தடை கோரிய முதலாளிகளின்
மனுக்களை தள்ளுபடி செய்துவிட்ட பிறகும் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான
தையல் தொழிலாளர்களுக்கு அந்த அறிவிப்பின் பயன்
சென்று சேரவில்லை. தானே போட்ட ஆணையை
அமலாக்க தமிழக அரசும் இதுவரை
நடவடிக்கை எடுக்கவில்லை.
2005ல்
சட்டமன்ற உறுப்பினர்கள் ரூ.16,000 ஊதியம் பெற்றபோது, தமிழ்நாட்டின்
விவசாயத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் என அரசு
அறிவித்திருந்தது ரூ.45 முதல் ரூ.100.
இதுவே மாபெரும் அநீதி. இன்று சட்டமன்ற
உறுப்பினர்கள் ஊதியம் ரூ.16,000ல்
இருந்து ரூ.1,05,000 என பலமடங்கு உயர்ந்திருக்கும்போது,
தமிழக விவசாயத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.146. 2005, விவசாயத்
தொழிலாளர்களுக்கு ஏதோ வேலை கிடைத்த
காலம். இன்று விவசாயம் சீரழிந்துபோய்,
விவசாயத் தொழிலாளர்கள் முற்றிலுமாக வாழ்வாதாரம் இழந்து கிடக்கும் நிலை.
எவ்வளவு பெரிய அநீதி! இந்த
ஊதியம் 2015ல் கடைசியாக மாற்றியமைக்கப்பட்டது.நூறு நாள் வேலைத்
திட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள
குறைந்தபட்ச கூலி ரூ.205. இதே
தொழிலில் தமிழ்நாடு அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலி இதை விட
ரூ.49 குறைவு. தமிழ்நாட்டின் இந்தக்
குறைந்தபட்சக் கூலியும் வேலை அளவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
(சட்டமன்ற உறுப்பினர் ஊதிய உயர்வு வரும்போது,
அவர்கள் வேலை அளவு, வேலை நேரம்
எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை). வேலை அளவுடன் கூலி
இணைக்கப்படுவது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி
அவிகிதொச வழக்கு தொடுத்தபோது, பீகாரிலேயே
இதுதானே நிலை என்று விவர
மறிந்த நீதிபதி சொன்னார். இப்போது
திட்டத்தில் கூலி பாக்கியை
பெறுவதே பெரும் பாக்கியம் என்ற
நிலையை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டார்கள். நூறு நாள் திட்டத்தில்
வேலை கிடைப்பதே அரிய பேறு என்று
கிராமப்புற வறிய மக்கள் கருதும்
நிலை அவர்கள் மீது சுமத்தப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டின்
தொழிலாளர்களுக்கு திமுக, அஇஅதிமுக ஆட்சிகள்
வழங்கியுள்ள இந்த கொடூரமான பொருளாதார
மரண தண்டனை பற்றி, மாறி
மாறி பரஸ்பரம் குற்றம் சுமத்திக் கொள்ளும்
இந்தக் கட்சிகள் பேசுவதில்லை. எங்களுக்கு ஊதிய உயர்வு தருவதற்கு
பதிலாக, தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யுங்கள்
என்று எந்த சட்டமன்ற உறுப்பினரும்
சட்டமன்றத்தில் இதுவரை, எந்த அரசு
அறிவித்தபோதும் பேசவில்லை. இப்போதும், ஓய்வூதியப் பயன்கள் கூட பெறாததால்
போராட்டத்தில் இறங்கிய போக்குவரத்துத் தொழிலாளர்களின்
கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று எந்த சட்டமன்ற
உறுப்பினரும் சொல்லவில்லை.
இந்த நேரத்தில் இந்த உயர்வு அவசியமா
என்று ஸ்டாலின் கூட கேட்டாக வேண்டிய
அளவுக்கு மக்கள் பிரச்சனைகளும் போராட்டங்களும்
பற்றியெரியும்போது, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது என்ன செய்வார்கள்
என்று கணிக்க முடியாத முதலமைச்சர்
பழனிச்சாமி, அவர்களை சாந்தப்படுத்த தந்துள்ள
டிப்ஸ்தான் இந்த ஊதிய உயர்வு.
விவசாயம்
காக்க, விவசாயிகளைக் காக்க கடன் தள்ளுபடி
உட்பட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி
டில்லியில் போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகள் சட்டமன்ற
உறுப்பினர்களின் ஊதிய உயர்வு அறிவிப்பைக்
கண்டித்து தங்களைத் தாங்களே செருப்பால் அடித்துக்
கொள்ளும் போராட்டம் நடத்தினர். இவர்கள் ஏன் இப்படிச்
செய்தார்கள் என்று அறிவாளிகள், அதிலும்
பாஜக அறிவாளிகள் கேட்பார்கள். தமிழ்நாட்டின் மாண்பை குலைத்து விட்டதாக
அமைச்சர்கள் கூப்பாடு போடுவார்கள். மூன்றாவது நாளாக போராடிக் கொண்டிருக்கும்
அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள்
எந்த பதிலும் சொல்லாத நேரத்தில்,
இந்த அறிவிப்பும் வந்தபோது, என்ன வேண்டுமானாலும் எண்ணம்
தோன்றியிருக்கலாம். ஆற்றாமையை அப்படி வெளிப்படுத்தியிருக்கக் கூடும். அது
தமிழக ஆட்சியாளர்களுக்கு சற்றும் வெட்கக்கேட்டை உருவாக்கவில்லை
என்பதுதான் பிரச்சனை. இதுபோன்ற ஆட்சியாளர்களை போராட்டங்களால் அடித்து பதில் சொல்ல
தமிழக மக்கள் தயாராகிறார்கள்.