தீவிரவாதம்
பற்றிய இரண்டு செய்திகள்
ஆகஸ்ட்
14 அன்று ஒரே நாளில், ஒரே
பத்திரிகையில் (தினகரன்) தீவிரவாதம் பற்றி அடுத்தடுத்து இரண்டு
செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு செய்தி, ‘மத்திய அரசு நடவடிக்கையைத்
தாங்க முடியாமல் காஷ்மீரை விட்டு தீவிரவாதிகள் ஓடுகின்றனர்’‘அருண்
ஜெட்லி பெருமிதம்’ எனப் பெருமிதத்துடன் பிரகடனம்
செய்தது. அதே பக்கத்தில், பக்கத்திலேயே
ஒரு செய்தி, ‘தீவிரவாத இயக்கங்களில் சேரும் இளைஞர் எண்ணிக்கை
அதிகரிப்பு’‘7 மாதங்களில்
70 பேர் இணைந்தனர்’ எனச் சொல்கிறது
.
இரண்டாவது
செய்திப்படி, 2010ல் 54 இளைஞர்களும் 2011ல்
23 இளைஞர்களும், 2012ல் 21 இளைஞர்களும் தீவிரவாத
இயக்கத்தில் சேர்ந்தனர். அதாவது, தீவிரவாத இயக்கத்தில்
சேர்வது குறைந்தது. ஆனால் மோடி பதவியேற்ற
2014ல் தீவிரவாத இயக்கத்தில் 53 இளைஞர்களும் 2015ல் 66 பேரும் 2016ல்
88 பேரும் சேர்ந்தனர். 2017ல் 7 மாதங்களில் 77 பேர்
சேர்ந்துள்ளனர். இந்தச் செய்தி, தீவிரவாத
இயக்கத்தில் சேரும் இளைஞர்களின் ‘எண்ணிக்கை
அதிகமாகி வருவது, பாதுகாப்பு படைகளுக்கு
கவலை அளிக்கின்றது’ என முடிவடைகிறது.
ஒரு செய்தி தீவிரவாதிகள் ஓடுகின்றனர்
என்கிறது. இன்னொரு செய்தி தீவிரவாதிகள்
அதிகரிக்கின்றனர் என்கிறது.
பாஜக ஆட்சி, காஷ்மீர் பிரச்சனை
என்று ஒன்றுமில்லை எனச் சொல்லப் பார்த்தாலும்,
காஷ்மீர் மக்களும் காஷ்மீர் இளைஞர்களும், இந்தியாவை விட்டு மேலும் மேலும்
விலகி செல்வதையே, மோடியின் இந்தியா சாதித்துள்ளது.
நமது நாட்டு வீரர்களை, ராணுவத்தினரை
துணைராணுவத்தினரை எது அதிகம் சாகடிக்கிறது?
இராணுவத்தினரில்,
துணை இராணுவத்தினரில் ஏகப்பெரும்பான்மையினர் கீழ் நடுத்தரக் குடும்பங்களைச்
சேர்ந்தவர்களே. இவர்கள் சம்பளத்துக்கு வேலை
என கவுரவமாக உழைத்துப் பிழைக்கிறார்கள். இவர்களுக்கும் பணிப் பாதுகாப்பும், கவுரவமும்
மிக மிக அடிப்படையான உரிமைகளே.
சிஆர்பிஎஃப்
என்ற மத்திய துணை இராணுவத்தினர்‘மாவோயிஸ்ட்களால்’ கொத்து
கொத்தாய்க் கொல்லப்படுவதாக ஊடகங்கள் சொல்கின்றன. சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்டில், 2015ல்
5, 2016ல் 31, 2017ல் ஏப்ரல் 4 வரை
13 பேர் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறந்துள்ளனர். சிஆர்பிஎஃப் படையினர் விபத்தில் 2015ல் 57 பேர், 2016ல்
82 பேர், 2017ல் 17 பேர் இறந்துள்ளனர்.
2015ல் இவர்களில் 219 பேர் மாரடைப்பிலும் 20 பேர்
மலேரியாவிலும் பலியாயினர். 1991 முதல் 2016 வரை சிஆர்பிஎஃப் படையில்
950 பேர் எய்ட்ஸ் நோயில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2009ல் இருந்து ஆண்டுக்கு 20 பேர்
எய்ட்சுக்கும் பலியாகின்றனர். 2015ல் 35 பேர், 2016ல்
26 பேர், 2017ல் இதுவரை 16 பேர்
தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், மாவோயிஸ்ட்களோடு
நடக்கும் மோதலில் உயிரிழப்பதை விட
24 மடங்கு அதிகம் பேர், எய்ட்சுக்கு,
மன நோய்க்கு, மலேரியாவுக்கு, தற்கொலைக்கு, மாரடைப்புக்கு உயிரைத் தந்துள்ளனர். தேசம்,
அதாவது, தேச பக்தி பேசும்
தேசத் தலைவர்கள், அவர்களைச் சரியாகக் கவனிக்காததால், இராணுவத்தினரும் துணை இராணுவத்தினரும் நிறைய
பேர் மடிந்துள்ளனர்.