COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, August 16, 2017

தமிழ்நாட்டின் விவசாயப் பகுதிகளை அழிக்கும் கொள்ளையனே வெளியேறு

ஆகஸ்ட் 9 அன்று கும்பகோணத்தில் அவிகிதொச, அஇவிமச ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டு விவசாய நெருக்கடிக்கு தீர்வு எதுவும் காணாமல் அடுத்தடுத்து தமிழக விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஒத்திசைந்து செயல்படுவதை கண்டித்தும் கதிராமங்கலம், நெடுவாசல், சீர்காழி, கடலூர் பகுதிகளில் விவசாயத்தை ஒழித்துக் கட்டும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் வெள்ளையனே வெளியேறு தினமான ஆகஸ்ட் 9 அன்று கொள்ளையனே வெளியேறு என்ற
முழக்கத்துடன் அவிகிதொசவும் அஇவிமசவும் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தின. தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களின் கிராமப்புற வறியவர்கள் கணிசமாக கலந்துகொண்டனர். கடலூர், விழுப்புரம் மாவட்ட தோழர்களும் கலந்துகொண்டனர்.
கிராமப்புற தொழிலாளர்களின், வறிய விவசாயிகளின் உணவு உரிமையை, வாழ்வுரிமையை பறிக்காதே, பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்காதே, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை உயர்த்தாதே, வீட்டுமனை, வீட்டு உரிமையை அடிப்படை உரிமையாக்கு, நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை, நாள் கூலி ரூ.500 வழங்கு ஆகிய கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆகஸ்ட் 10 அன்று இகக மாலெ கிராமப்புற கட்சி ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. விவசாய நெருக்கடியால் தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி விவாதித்த கூட்டம், கட்சியின் கிராமப்புற வேலைகளை வளர்த்தெடுப்பது பற்றியும், வறிய விவசாயிகள் பிரச்சனைகளில் தலையீடுகள் மேற்கொள்வது பற்றியும் அவிகிதொச உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் பற்றியும் விவாதித்தது.
ஆகஸ்ட் 9 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்திலும் ஊழியர் கூட்டத்திலும் இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, கட்சி மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் மற்றும் மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள், அஇமவிசவின் தோழர் சிம்சன் கலந்துகொண்டனர்.

கடுமையான சிரமங்களுக்கு இடையிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊழியர் கூட்டம் ஏற்பாடு செய்வதில் சிறப்பான பங்காற்றிய தஞ்சை மாவட்ட தோழர்களுக்கு இந்தக் கூட்டங்கள் உற்சாகம் தந்துள்ளன.

Search