அம்பத்தூர்
மாநகராட்சி அலுவலகத்தை
கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் முற்றுகை
கொசுவை
ஒழிக்க முடியாத அரசாங்கங்கள் நமது
மத்திய மாநில அரசாங்கங்கள். மலேரியா,
சிக்குன்குன்யா, டெங்கு என சாமான்ய
மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பல அரசு மருத்துவமனைகளில்
என்ன காய்ச்சல் என்றே வெளியில் சொல்லாமல்
மர்மக் காய்ச்சல் என்று சொல்லி ஏதோ
சிகிச்சை அளித்து உயிரிழப்புக்களும் ஏற்பட்டுக்
கொண்டிருக்கின்றன.
கொசுக்களால்
வியாதி பரவுவதைத் தடுக்க எல்லா நடவடிக்கைகளும்
எடுப்பதாக சுகாதார துறை அமைச்சர்,
துறையின் செயலர் தொலைக்காட்சிகளில் தோன்றி
சொல்கிறார்கள். அம்பத்தூரையும் உள்ளடக்கிய சென்னை மாநகராட்சியின் ஏழாவது
மண்டலத்தில் மலேரியா கட்டுப்பாட்டுக்கான திட்டத்தில்
பணியாற்றும் கொசு ஒழிப்பு தொழிலாளர்களின்
பணிநிலைமைகள், அமைச்சரின், செயலரின் அறிவிப்புகள் பொய் என்பதை அம்பலப்படுத்துகின்றன.
248 தொழிலாளர்கள்
மலேரியாவை கட்டுப்படுத்தும் பணிகளில் சென்னை மாநகராட்சியின் இந்த
மண்டலத்தில் ஈடுபடுகிறார்கள். பல ஆண்டுகளாக ஒப்பந்த
அடிப்படையில் வேலை செய்யும் அவர்கள்
நிரந்தரப்படுத்தப்படுவார்கள்
என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்தார்கள். மாநகராட்சி நிர்வாகம் திடீரென அவர்களை தனது
நேரடி ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருக்கும் நிலையில் இருந்து தனியார் ஒப்பந்தத்
தொழிலாளர்களாக மாற்ற முயற்சி செய்கிறது.
அம்பத்தூரில்
இககமாலெயின் விடாப்பிடியான போராட்டங்களை பார்த்து வரும் அந்தத் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனை மீதும்
போராட்டம் நடத்த வேண்டும் என்று
இகக மாலெ மாநிலக் குழு
உறுப்பினரும் புரட்சிகர இளைஞர் கழக தேசியச்
செயலாளருமான தோழர் பாரதியை அணுகினார்கள்.
அவர்கள் 150 பேர் கலந்துகொண்ட கூட்டம்
ஆகஸ்ட் 27 அன்று நடந்தது. கோரிக்கைகள்
மீது போராட்டங்கள் கட்டமைக்க திட்டமிடப்பட்டது.
அகில இந்திய மாணவர் கழக
மாநிலச் செயலாளர் தோழர் சீதா, ஏஅய்சிசிடியு
மாநிலச் செயலாளர்கள் தோழர்கள் மோகன், முனுசாமி, இககமாலெ
சென்னை மாநகரக் கமிட்டி உறுப்பினர்
தோழர் பசுபதி ஆகியோரும் இந்தக்
கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆகஸ்ட்
28 அன்று 200 பேர் அம்பத்தூர் நகராட்சி
அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆகஸ்ட் 29 அன்று ஒப்பந்த முறை
கூடாது என்று மாநகராட்சி ஆணையருக்கு
கடிதம் தர ரிப்பன் மாளிகைக்குச்
சென்றவர்கள், அங்கும் முற்றுகை போராட்டம்
நடத்தினர்.
ஆதிக்க
சாதியினர் நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதற்கு
எதிராக
புதுக்கோட்டை
மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் நம்புரான்பட்டியில் ஊராட்சிக்குச் சொந்தமான ஊரக விளையாட்டு திடலையும்
16 ஏக்கர் அளவுக்கு உள்ள பசு மேயும்
தரிசு நிலத்தையும் ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பு
செய்துள்ளனர். அந்த பொதுவான நிலத்துக்குள்
தலித் மக்களை நுழைய விடாமலும்
தடுத்து வருகின்றனர்.
பகுதியின்
தலித் மக்கள் வட்டாட்சியரிடம் இது
பற்றி புகார் செய்தபோது, வட்டாட்சியர்
ஆதிக்க சாதி ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சாதகமாகவே பேசியுள்ளார்.
ஆதிக்க
சாதியினர் பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளதைக்
கண்டித்தும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிற வட்டாட்சியரை கண்டித்தும் அந்த நிலத்தை மீண்டும்
பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர, நிலத்துக்குள்,
திடலுக்குள் சென்ற தலித் மக்களை
மிரட்டிய ஆதிக்க சாதியினர் மீது
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வட்டாட்சியர்
அலுவலக முறைகேடுகளுக்கு எதிராகவும் ஆகஸ்ட் 23 அன்று கந்தர்வக்கோட்டையில் இககமாலெ
ஆர்ப்பாட்டம் நடத்தியது. பகுதியில் வண்டல் மண் எடுப்பது
என்ற பெயரில் நடக்கும் மணல்
கொள்ளைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இககமாலெ
மாவட்டக் குழு உறுப்பினர் தோழர்
சோதிவேல் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்
கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி
மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கண்டன
உரையாற்றினர்.