COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, August 1, 2017

அம்பத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய
காலவரையற்ற பட்டினிப் போராட்டம் வெற்றி

அம்பத்தூர் ரயில்வே நிலையம் அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பகுதி மக்கள் மே மாத இறுதியில் நடத்திய சாலை மறியல் போராட்டத்துக்குப் பிறகு அந்தக் கடை தற்காலிகமாக மூடப்பட்டு மீண்டும் இயங்கத் துவங்கியது.
கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி .வி.அழகேசன் நகர் மற்றும் சம்தாரியா நகர் குடியிருப்போர் நல மன்றத்தைச் சேர்ந்த முன்னணி தோழர்கள் டில்லிபாபு, ஆரோக்கியராஜ், சேகர், கண்ணன் ஆகியோர் ஜுலை 23 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தினர். அம்பத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூடி வெற்றிகரமாக போராட்டங்கள் நடத்திய புரட்சிகர இளைஞர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், முற்போக்கு பெண்கள் கழகம் ஆகிய அமைப்புக்களின் தோழர்கள் போராட்டம் தொய்வின்றி விடாப்பிடியாக முன்செல்வதை உறுதி செய்தனர்.
முதல் நாள் பட்டினிப் போராட்டத்தை அரசு நிர்வாகமும் டாஸ்மாக் நிர்வாகமும் அலட்சியம் செய்ததால், பட்டினிப் போராட்டத்தின் இரண்டாவது நாள் பகுதி மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மே மாத இறுதியில் நடந்த சாலை மறியலை ஒட்டி, கடை மூடப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த காவல்துறையினர், தங்கள் கையில் எதுவும் இல்லை என்றும் டாஸ்மாக் நிர்வாகம்தான் இது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் சொல்லி பிரச்சனையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் பார்த்தனர். ஆனால் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு அளிக்கும் உன்னதமான கடமையில் இருந்து மட்டும் அவர்கள் விலகவே இல்லை.
அரசு நிர்வாகத்தின் கேளாச் செவிகளுக்கு மக்கள் குரல் இன்னும் வலுவாகக் கேட்பதை உறுதி செய்ய, பட்டினிப் போராட்டத்தின் மூன்றாவது நாள் பகுதி மக்கள், பெருமளவில் பெண்கள், நூறு பேருக்கும் மேல், திருமழிசையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட நிர்வாக அலுவலகத்துக்குச் சென்றனர். மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய உயர்அதிகாரி, வயிற்றுப் போக்கு என்ற காரணத்தால் அலுவலகம் வரவில்லை என போராட்டக்காரர்களுக்குச் சொல்லப்பட்டது. அந்தக் கடை அகற்றப்படும் என்று அவருக்கு அடுத்த நிலை அதிகாரி எழுத்துபூர்வமாக உறுதி தரும் வரை அந்த இடத்தை விட்டுச் செல்லப் போவதில்லை என்று சொன்ன போராட்டக்காரர்கள், அலுவலகத்துக்குள் அமர்ந்து கொண்டனர்.
திருமழிசை காவல்துறையினர் இப்போது சமாதான முயற்சி எடுத்தனர். உயர்அதிகாரியை பேச்சுவார்த்தைக்கு வரவழைக்க முயற்சி எடுத்தனர். வயிற்றுப் போக்கு என்று சாக்கு சொல்லி மக்களைச் சந்திக்க மறுத்த உயரதிகாரியை மக்கள் போராட்டம் அலுவலகத்துக்கு வரவழைத்தது. புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி தலைமையிலான குழு நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் கடை உடனடியாக தற்காலிகமாக மூடப்படும் என்றும் நிரந்தர மூடலுக்கு சில நாட்களில் எழுத்துபூர்வமாக உறுதி தருவதாகவும் சொன்ன டாஸ்மாக் உயரதிகாரி பட்டினிப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கடை உடனடியாக மூடப்பட்டால்தான் பட்டினிப் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்த போராட்டக்காரர்கள் அம்பத்தூர் திரும்பினர். பட்டினிப் போராட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்லும் முன், சிடிஎச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இப்போது தலையிட்ட அம்பத்தூர் காவல்துறையினர், கடை உடனடியாக மூடப்படும் என்றும் உள்ளே இருக்கிற பொருட்களை எடுக்க மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் கேட்டதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மக்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை மீறி கடை திறக்கப்பட்டால், மீண்டும் போராட்டம் என்ற முடிவுடன் மூன்றாம் நாள் இரவு பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பட்டினிப் போராட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் ஜனப்பன்சத்திரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதைக் கண்டித்தும் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும் அந்தக் கடை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் புரட்சிகர இளைஞர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், எம்ஜிஆர் நகர், மல்லையா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், முற்போக்கு பெண்கள் கழகம் இணைந்து ஜுலை 14 அன்று ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடத்தின. கூட்டத்தில் பேசிய பகுதி பெண்கள், கடை அகற்றப்பட வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு கொடுத்தும் ஆட்சியர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை, கடை அகற்றப்படவில்லை என்றால் மக்கள் ஒன்று கூடி அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.

Search