ஹடியா வழக்கில்
தீர்ப்புக்கள்
திருத்தப்பட வேண்டும்
நம் நாட்டின் சட்டப்படி திருமண வயதை எட்டி
விட்ட ஒரு பெண் தன்
விருப்பப்படி செய்துகொண்ட ஒரு திருமணத்தை, நாட்டில்
நீதி பரிபாலனத்தை பராமரிக்க வேண்டிய ஒரு நீதிமன்றம்,
ஓர் உயர்நீதிமன்றம், செல்லாததாக்கி அந்தப் பெண்ணை அவரது
பெற்றோருடன் அனுப்பிவிட்டது.
தனது மனைவியை மீட்டுத்
தரக் கோரி, அதற்கும் மேல்
இருக்கிற நீதிமன்றத்தை, உச்சநீதிமன்றத்தை அந்தக் கணவன் அணுகியபோது,
அந்தத் திருமணம் உண்மையானதா என்று தேசிய புலனாய்வு
மய்யம் விசாரணை நடத்த வேண்டும்
என்று அந்த நீதிமன்றம் ஆணையிட்டுவிட்டது.
இந்தியா
அசாதாரணமான காலங்களின் ஊடே சென்று கொண்டிருப்பதை
இந்த வழக்கு போதுமான அளவுக்கு
விளக்குகிறது.
கர் வாப்சியை இயக்கமாக நடத்த பிரச்சாரம் செய்து,
வெளிப்படையாக, பெருமிதத்தோடு நடத்துபவர்கள் இருக்கிற நாட்டில், அதற்கு வலுவான அரசியல்
ஊக்குவிப்பும் ஆதரவும் பின்புலமும் இருக்கிற
நாட்டில், இசுலாமிய மதத்துக்கு மாறிவிடும் ஓர் இந்து இருக்கக்
கூடாதா?
அப்படி
இருப்பது மிகவும் துன்பங்கள் தருவதாக
இருக்கும் என்பதை ஹடியா வழக்கு
போதுமான அளவுக்கு விளக்குகிறது.
அந்தப்
பெண் கேரளாவின் வைக்கத்தைச் சேர்ந்தவர். (இது தற்செயல்தான்). பிறப்பால்
இந்து. பெற்றோர்க்கு ஒரே பிள்ளை. கண்ணும்
கருத்துமாகத்தான் வளர்த்திருப்பார்கள். அதற்காக அவள் அவர்களுக்கு
அடிமையாகிவிட வேண்டும் என்று நாட்டின் சட்டங்கள்
சொல்லவில்லை. ஹோமியோபதி மருத்துவ படிப்பு படிக்க வந்த
இடத்தில் இசுலாத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு இசுலாத்துக்கு
மாறியும்விட்டாள். அகிலா என்ற தனது
பெயரை ஹடியா என்று மாற்றிக்
கொண்டாள். தனது பெற்றோர் தனது
வழிபாட்டு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் வீட்டுக்குச் செல்லவில்லை.
1999ல்
தனது 65ஆவது வயதில் இசுலாமியராக
மாறிய கமலா சுரய்யா கூட
இந்து அடிப்படைவாதிகளின் எதிர்ப்புகளைச் சந்தித்தார். பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக வாழ்நாள் முழுவதும்
எழுதி வந்தவர், பர்தா எனக்கு பாதுகாப்பு
உணர்வு தருகிறது என்றார். இசுலாத்துக்கு மாறும் எண்ணம் தனக்கு
அதற்கு முன்பு 7 ஆண்டுகளாக இருந்தது என்றும் பல்வேறு காரணங்களால்
அதை தள்ளிப் போட்டதாகவும் சொன்னார்.
இசுலாமியராக இறந்தார்.
ஹடியாவுக்குக்
கூட அப்படி ஒரு பாதுகாப்பு
உணர்வு வந்திருக்கலாம். இல்லையென்று கூட வைத்துக் கொள்வோம்.
அதனால் அவள் குற்றவாளியாகவோ, அப்பாவியாகவோ
ஆகி விட மாட்டாள். (அவளை
குற்றவாளி என்று சொல்லியிருந்தால் சற்று
ஆறுதலாக இருந்திருக்குமோ? அப்பாவி என்று சொல்லிவிட்டார்கள்).
தனது மகள் இசுலாத்துக்கு மாறிவிட்டதை
அறிந்த ஹடியாவின் தந்தை அசோகன் கேரள
நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்றத்துக்கு வந்த ஹடியா தனது
வழிபாட்டு முறைகளுக்கு தனது பெற்றோர் எதிர்ப்பு
தெரிவித்ததால், தனது சொந்த விருப்பப்படியே
வீட்டில் இருந்து வெளியேறியதாக நீதிமன்றத்தில்
சொன்னதால், 2016 ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்ட அந்த
மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனு தாக்கல்
செய்யப்படும் முன்னர் தனது மகள்
காணவில்லை என்று அவளது நண்பர்களின்
தந்தை மீது அவர் கொடுத்த
புகாரின் பேரில் அந்த தந்தையும்
கைது செய்யப்பட்டார். சங் பரிவாரின் இந்தியாவில்
இசுலாமியரை கைது செய்துவிடுவது அவ்வளவு
எளிது.
2016 ஜனவரி
மனுவில் தனது மகளை கொண்டு
வந்து சேர்க்க வேண்டும் என்று
கேட்ட அசோகன், 2016 ஆகஸ்டில் மீண்டும் ஓர் ஆட்கொணர்வு மனு
தாக்கல் செய்தார். தனது மகள், கட்டாய
மதமாற்றம் செய்யப்பட் டாள் என்றும் அவளை
சிரியாவுக்குக் கடத்திச் செல்ல முயற்சி நடக்கிறது
என்றும் இந்த மனுவில் சொன்னார்.
இசுலாமிய சகோதரிகள், அவர்களது தந்தை மீது குற்றம்
சுமத்தினார்.
அந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்,
ஹடியாவை பெண்கள் விடுதியில் கண்காணிப்பில்
தங்க வைக்க உத்தரவிடுகிறது. தன்னிடம்
கடவுச் சீட்டு இல்லை, எனவே
வெளிநாடு செல்ல முடியாது, தனது
விருப்பப்படி தங்க வேண்டும் என்று
ஹடியா செப்டம்பரில் நீதிமன்றத்தில் சொன்ன பிறகு அவர்
மீண்டும் தன் விருப்பப்படி தங்க
அனுமதிக்கப்பட்டார். அவர் ஓர் இசுலாமிய
பெண்ணுடன் தங்கியிருந்தார்.
டிசம்பரில்
வழக்கு விசாரணைக்கு வந்த ஹடியா தனது
கணவருடன் வந்தார். ஷஃபீன் ஜெஹானுடன் தனக்கு
திருமணமாகிவிட்டது என்றார். விசாரித்ததில் அன்றுதான் திருமணம் நடந்தது தெரியவந்தது. கேரள
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கோபம் வந்துவிட்டது; வழக்கு
நடந்து கொண்டிருக்கும்போதே, நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் திருமணம் நடந்ததால் ஹடியாவின் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்து, ஹடியாவை
அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர். அத்துடன் தனது பெற்றோர் வீட்டில்
இருக்கும் ஹடியாவுக்கும் அவரது பெற்றோருக்கும் பாதுகாப்பு
மற்றும் கண்காணிப்பு
இருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்போது ஹடியாவின் வீட்டு வாசலில் காவலர்கள்
இரண்டு பேர் எப்போதும் இருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சனையில் விசாரணை நடத்த வேண்டும்
என்றும் பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள எஸ்டிபிஅய், பிஎஃப்அய் அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் கேரள காவல்துறை
தலைவருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
சங் பரிவார் ஆட்சி நடக்கும்
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு பெரிய
பிரச்சனைதான். ஆனால் சுதந்திரமாக தன்
விருப்பப்படி இருக்க வேண்டும் என்று
நீதிமன்றத்திலேயே சொல்லிவிட்ட பெண் பாதுகாப்பு என்ற
பெயரில் சொந்த வீட்டில் சிறை
வைக்கப்பட்டுள்ளார்.
ஷஃபீன்
ஜெஹான் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று தனது மனைவியை
மீட்டுத்தரக் கேட்ட போது, உச்சநீதிமன்றம்
தேசிய புலனாய்வு மய்ய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த விசாரணையை உத்தரவிடும் முன் உச்சநீதிமன்றம் பிரச்சனையின்
மய்யமான ஹடியாவிடம் பேசவே இல்லை. விசாரணையில்
வெளிவரும் எல்லா விவரங்களையும் வைத்துக்
கொண்டு பேசவிருப்பதாகச் சொல்கிறது.
கேரள உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் ஹடியாவை அகிலா என்றே
குறிப்பிடுகின்றன. நீதிமன்றங்கள் ஹடியா என்ற இசுலாமிய
அடையாளத்தை அந்தப் பெண்ணுக்குத் தர
தயாராக இல்லை.
அகிலா சொந்தமாக சரியான முடிவெடுக்கும் ஆற்றல்
பெற்றவராக இல்லை என்று அரசு
வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் சொன்னார். இந்த பிரச்சனை கட்டாய
மதமாற்றம் பற்றியது என்றும் தேச நலன்
பற்றியது என்றும் கேரள உயர்நீதிமன்றம்
தனது தீர்ப்பில் சொல்கிறது.
அசியா,
அதியா, ஹடியா என்று வெவ்வேறு
ஆவணங்களில் தனது பெயரை அவர்
மாற்றித் தந்திருக்கிறார், அவர் மதம் மாறியதற்கான
அதிகாரபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை, ஷஃபீன்
ஜெஹானின் தாயார் வெளி நாட்டில்
இருப்பதால், அவரும் அங்கு சென்றுவிடும்
திட்டம் இருப்பதால், ஹடியாவையும் அவர் அழைத்துச் சென்று
விடலாம், ஹடியா பெயரில் குழப்பங்கள்
இருப்பதால், பிறகு அவரை கண்டுபிடிக்கவே
முடியாது, இதற்கு முன் பல
இளம்பெண்களை இப்படித்தான் கண்டுபிடிக்க முடியாமல் போனது, அவரது எதிர்காலம்
பற்றி அவருக்கு தெளிவு இல்லை, தனது
பெற்றோர் சொல் கேட்காமல் யாரோ
சொல்வதைக் கேட்டு நடந்து கொள்கிறார்,
பெற்றோரிடம்தான் அவர் பாதுகாப்பாக இருக்க
முடியும், 24 வயதாகிற அவர் இந்த
வயதில் மிகவும் பலவீனமானவர், எளிதில்
ஏமாற்றப்படக் கூடியவர், பெற்றோரின் அன்பும் பாதுகாப்பும் வழிகாட்டுதலும்
இப்போது அவருக்கு அவசியம், அவரது வாழ்க்கையில் மிகவும்
முக்கியமான முடிவான திருமணம் பற்றி
அவரது பெற்றோரின் ஈடுபாட்டுடன்தான் எடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் சொல்கிறது.
ஹடியா வழக்கை இன்று நாட்டில்
நிலவுகிற இந்துத்துவ வெறிச் சூழலில் இருந்து
பிரித்து பார்க்க முடியாது. நீதிமன்றம்
சட்டங்களின், சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்க வேண்டும். ஹடியா
வழக்கில், ஒரு பெண் ஆணுக்குக்குக்
கட்டுப்பட்டவள் என்ற மனுநீதி அடிப்படையில்
கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு தந்துள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பெண் தனக்கு
பாதுகாப்பு வேண்டும் என்று எங்கும் கேட்கவில்லை.
24 வயதான தான் தன் விருப்பப்படி
தனக்கு சரி எனப் படுகிற
மதத்தை பின்பற்றிக் கொண்டு, தனக்கும் ஒப்புதல்
இருக்கிற திருமணம் செய்து கொண்டு சுதந்திரமாக
இருக்க வேண்டும் என்று சொல்கிறார். நாட்டின்
அரசியல் சாசனத்தில் இதற்கு இடம் இருக்கிறது.
பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும், பெண்களுக்கு பெற்றோர்தான் பொருத்தமான பாதுகாவலர்கள் என்று சொல்லும் சட்டம்
எதுவும் இல்லை என்பது நீதிபதிகளுக்குத்
தெரியும். ஹடியா பலவீனமானவர், எளிதில்
ஏமாற்றப்படக் கூடியவர் என்று எந்த அடிப்படையில்
முடிவுக்கு வந்தார்கள் என்று அவர்கள் தீர்ப்பில்
சொல்லவில்லை. பெற்றோர் சொல் கேளாமல் யாரோ
சொல்வதைக் கேட்டு ஹடியா நடந்து
கொள்வதால் நீதிமன்றத்துக்கு என்ன பிரச்சனை? வேறு
சட்ட மீறல் இதில் உள்ளதா?
ஷஃபீன் ஜெஹான் தீவிரவாத கட்சி
என்று அறியப்படுகிற ஒரு கட்சியில் இருக்கிறார்,
அவர் மீது குற்ற வழக்கு
நிலுவையில் உள்ளது போன்ற விசயங்கள்
தெரிந்து ஹடியா அவரை திருமணம்
செய்துகொள்ள முடிவு செய்திருந்தால் அதில்
யார் தலையிட முடியும்? அப்படி
திருமணம் செய்துகொண்டால் அதில் தேசப் பாதுகாப்புக்கு
என்ன அச்சுறுத்தல் வந்துவிடும்?
முழுமையாக
சட்டங்களின், சாட்சியங்களின் அடிப்படையில் இல்லாத ஒரு தீர்ப்பின்
மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம்
உயர்நீதிமன்றத்தையும் விஞ்சி, உயர்நீதிமன்றமே ஏற்கனவே
காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதையும் கணக்கில் கொள்ளாமல், ஹடியாவிடமும் பேசாமல், ஒரு திருமணத்தை, அது
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அதுவும், இந்துவும் இசுலாமியரும் செய்துகொண்டார்கள் என்பதாலேயே, தேசிய புலனாய்வு விசாரணைக்கு
உட்படுத்தி, உத்தரவிட்டு, இந்தத் திருமணம் நாட்டின்
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதுபோன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியிருப்பது
இன்று நாடு இருக்கிற சூழலில்
மிகவும் பிற்போக்கானது; ஆபத்தானது.
பெண்கள்
உரிமைகளைப் பறித்துவிடும், அவர்கள் சுதந்திரத்தை முடக்கும்,
அவர்கள் பலவீனமானவர்கள், எனவே பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்,
ஆணுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற நிலப்பிரபுத்துவ கருத்துக்களை
மீண்டும் நிறுவப் பார்க்கும் தீர்ப்பு
என்பதுடன், இசுலாமியர்கள் அனைவரும் உள்ளாற்றல்மிக்க தீவிரவாதிகள் என்ற ஆர்எஸ்எஸ் கருத்துக்கு
வலுச்சேர்க்கும் தீர்ப்பாகவும் இருக்கிறது. காதல் ஜிகாத் என்ற
ஒரு விசயத்தையே உயர்நீதிமன்றம் பேசாதபோது, உச்சநீதிமன்றம் அதைப் பற்றி பேசியிருப்பது,
ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக காலில்
போட்டு மிதிக்கிற சங் பரிவார் காலிகளுக்கு
துணிச்சல் தருவதாகவே அமைந்துவிடும். காதல் ஜிகாத் என்று
வதந் தியை பரப்பிவிட்டுத்தான் முசாபர்நகரில்
இசுலாமியர்களை வேட்டையாடினார்கள்; இசு லாமிய பெண்களை
பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள். இனி யார் மதம்
மாறி ôலும், வேற்று மதத்தில்
திருமணம் செய்து கொண்டாலும் தேசிய
புலனாய்வு விசாரணை வேண்டும் என்று
இந்தக் காலிகள் கூச்சல் போடத்
துவங்கிவிடும் ஆபத்துக்கு இந்தத் தீர்ப்பு வழி
வகுத்துவிட்டது.
பெண்ணுரிமைக்கும்
ஜனநாயகத்துக்கும் தனிநபர் உரிமைகளுக்கும் ஒரே
நேரத்தில் ஆபத்தாக வெளி வந்திருக்கிற
கேரள உயர்நீதி மன்ற மற்றும் உச்சநீதிமன்றத்
தீர்ப்புக்கள் திருத்தப்பட வேண்டும். இந்த வழக்கில் உச்ச
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து வெளி
வந்த தனிநபர் அந்தரங்கம் தொடர்பான
தீர்ப் பால் ஜனநாயகம் விரும்புவோர்
சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். அந்தத்
தீர்ப்பின் உணர்வை, உச்சநீதிமன்றம், ஹடியாவிடம்
பேசும்போது தக்க வைக்க வேண்டும்.
அந்தரங்கம் தொடர் பான தீர்ப்பால்
நாட்டின் நீதிமன்றங்கள் மீது நாட்டு மக்களுக்கு
ஏற்பட்டுள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். நீதிமன்றங்கள் இந்துத்துவ வெறிச் சூழலின் செல்வாக்குக்கு
அடி பணிந்து விடாது என்பதை
மக்களுக்குச் சொல்ல முயற்சி செய்ய
வேண்டும்.