COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, August 16, 2017

மோடியின் ஆட்சியில் கார்ப்பரேட் தொலைதொடர்பு நிறுவனங்களை கடனில் இருந்து காப்பாற்ற மீட்பு முடிப்பா?

டிசம்பர் 2016 நிலவரப்படி நாட்டின் தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ.4.85 லட்சம் கோடி கடனில் உள்ளன. இந்த நிறுவனங்கள் இந்திய அரசுக்கு அலைக்கற்றை பாக்கி ரூ.3 லட்சம் கோடி தர வேண்டும். அதாவது கிட்டத்தட்ட ரூ.8 லட்சம் கோடியை விழுங்கியிருக்கிறார்கள்.கழுத்தில் நிற்கிறதா, சீரணமாகி விட்டதா என்றுதான் இனி பார்க்க வேண்டும்.

உலகின் மிகப்பெரிய ஊழல் அலைக்கற்றை ஊழல் என்று சொல்லித்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் மத்தியில் மோடியும் ஆட்சியை பிடித்தார்கள். காங்கிரசும் திமுகவும் என்னதான் முயற்சி செய்தாலும் அந்தக் கறையை மட்டும் போக்க முடியவில்லை.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் நேர்மையாக அலைக்கற்றை ஏலம் நடத்துகிறோம், அரசுக்கு பெரிய அளவுக்கு வருமானம் என்று வீடு கட்டினார்கள். இப்போது அலைக்கற்றை பாக்கி ரூ.3 லட்சம் கோடி என்கிறார்கள். இதற்கும் ஊழல் என்றுதான் பெயர். அந்த ஊழலை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூடுதல் தொகை அரசாங்கத்துக்கு வரவில்லை.
அலைபேசி சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களின் சங்கம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணங்களை குறைக்க வேண்டும், உரிமக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும், செலுத்தப்படாத அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணத்தை செலுத்த அய்ந்தாண்டு கால அவகாசம் வேண்டும், ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12% என குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைத்திருக்கிறது.
பெரிய மீனான ரிலையன்ஸ் ஜியோ சின்ன மீன்களை விழுங்கும் அவாவில், மீட்பு முடிப்பு எதுவும் அவசியமில்லை என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தத் துறையில் இரண்டு மடங்கு வருவாய் உயர்வு இருக்கும் என்றும் சொல்கிறது. (இலவசம் என்று பொய் சொல்லி லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் வலையில் பிடிக்கும் திட்டம் இருப்பதால் தனது வருவாய் உயர்வு பற்றி மட்டும் சொல்கிறதா?)
விவசாயிகளை தெருவில் நிறுத்துவதுபோல் முதலாளிகளை நிறுத்த முடியுமா? சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சக அதிகாரிகளின் குழு அலைபேசி தொழிலில் உள்ள முதலாளிகளை பாதுகாப்பது பற்றி விவாதிக்கிறது. கடனை ஏய்க்கும் அந்த நிறுவனங்களுக்கு மீட்பு முடிப்பு தருவது பற்றியும் விவாதிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது. துடிப்பான தொலைதொடர்பு துறை நாட்டின் ஒட்டுமொத்த நிதிநிலைமைக்கும் நல்லது என்று அதற்கு காரணமும் சொல்லத் துவங்கிவிட்டது.
2016 - 2017ல் அரசு எதிர்ப்பார்த்த அளவு அலைக்கற்றை ஏலத்தில் வருவாய் வராததால், இப்போது இந்த நிறுவனங்களுக்கு உதவி செய்யாமல் போனால் அரசாங்கத்துக்குத்தான் நாளை நட்டம் என்றும் சொல்லப்படுகிறது.
தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு தர வேண்டிய அலைக்கற்றை கட்டணங்களை தாமதமாகத் தரலாம் என்று சொல்லிவிட்டால், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.75,000 கோடி வரை ஆதாயம் உண்டு என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் அந்த அளவுக்கு அரசாங்கத்துக்கு இழப்பு.
2016 நிதியாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கடன் ரூ.66,213 கோடி. 2017 நிதியாண்டில் அது ரூ.1,07,428 கோடியாகிவிட்டது. குமார்மங்கலம் பிர்லாவின் அய்டியா செல் நிறுவனத்தின் கடன் 2016 நிதியாண்டில் ரூ.40,541 கோடி. 2017 நிதியாண்டில் ரூ.55,055 கோடி. டாடாவின் கடன் 2016 நிதியாண்டில் ரூ.10,659 கோடி. 2017 நிதியாண்டில் ரூ.14,283 கோடி. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ரூ.44,000 கோடியும் ஏர்செல் நிறுவனம் ரூ.23,000 கோடியும் வோடாபோன் நிறுவனம் ரூ.65,250 கோடியும் கடன் வைத்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் மொத்த வாராக் கடன்களின் மதிப்பு ஏற்கனவே ரூ.9.5 லட்சத்தை எட்டிவிட்டது, இதுவும் சேர்ந்தால் தாங்காது என்கிறார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தால் நாட்டில் நிதி ஒழுங்கு கெட்டுவிடும் என்று சொன்ன அருந்ததி, ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கியிருக்கிற தொலை தொடர்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு சலுகைகள் தர வேண்டும், அவற்றின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.
பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ள இந்த தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்று கூட இன்று வரை நட்டத்தில் இயங்குவதாகச் சொல்லவில்லை. லாபம் தான் பார்க்கின்றன. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சர்வதேச, ஆசிய பணக்காரர்கள் பட்டியல்களில் இடம் பெறுகிறார்கள். இவர்களிடம், இவர்கள் கடனாக பாக்கி வைத்துள்ள பணம் இருக்கிறது. அதை வசூலிக்க வேண்டும். கடன் பாக்கி வைத்திருப்பவர்களிடம் பணம் இருக்கிறது என்று நன்றாகத் தெரிந்தும் அந்தப் பணத்தை கறாராக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்கள் சொல்வதே இல்லை.
2017 நிதியாண்டில் ரூ.81,683 கோடி வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டதை விட இது 41% கூடுதல். கடந்த அய்ந்து ஆண்டுகளில் ரூ.2.46 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் அய்முகூ கால தள்ளுபடியை விட்டுவிட்டுப் பார்த்தால் மோடி அரசாங்கம் வந்த பிறகு ரூ.2,22,696 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பணக்காரர்களிடம் கறாராக நடந்து கொள்வதாக அன்றாடம் மக்களிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிற மோடி ஆட்சியில்தான் இது நடந்துள்ளது. இந்தக் கடன்களை விவசாயிகள் வாங்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் வாங்கியுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி தந்தால் நிதி ஒழுங்கு கெட்டுப் போகும் என்று அருந்ததி பட்டாச்சார்யாவோ நிதி ஆயோகின் முன்னாள் துணைத் தலைவர் அர்விந்த் பனாகரியாவோ கவலைப்படவில்லை. இந்த எல்லா துரோகங்களையும் மூடி மறைக்க மோடி அரசு வங்கி முறைப்படுத்துதல் திருத்த மசோதாவை முன்வைத்துள்ளது. கடன் பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த மசோதா வங்கிகளுக்கு அதிகாரம் தருகிறது. அருந்ததி பட்டாச்சார்யா போன்றவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? மோடியும் அருண் ஜெட்லியும் இந்தப் பழியை வங்கிகள் மீது சாட்டிவிட்டு தங்களது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலில் துரிதமாக பயணிப்பார்கள்.
கார்ப்பரேட் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மீட்பு முடிப்பு தர வேண்டும் என்று சொல்பவர்கள் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லை விற்றுவிட வேண்டும் என்கிறார்கள். தனியார் நிறுவனங்களை வளர்க்க தேய்மானச் செலவு என ஒன்றைச் சொல்லி பிஎஸ்என்எல்லின் வருவாயை குறைத்துக் காட்டுகிறார்கள்.

ஒரு விஜய் மல்லையா நாட்டை விட்டு ஓட விட்டுவிட்டு, அவரை திரும்ப அழைத்து வர தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பது போல் பாசாங்குகள் செய்துகொண்டு, உள்நாட்டில் இருக்கும் விஜய் மல்லையாக்களுக்கு பாதுகாப்பு, கடன் தள்ளுபடி, சலுகை, விலக்கு அளித்து, அவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிற மோடி அரசாங்கத்தை விவரிக்க, பாரதியின் பாடல் பொருந்திப் போகிறது. நெஞ்சில் உரமுமுன்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி, கிளியே, வாய்ச் சொல்லில் வீரரடி! சாமான்ய மக்கள் சொல்வது போல் சொல்ல வேண்டும் என்றால், மோடி அரசின் துணையோடு ஆதரவோடு மக்கள் பணம் கொள்ளை போகிறது.

Search