அஇஅதிமுக
கொள்ளை ஒடுக்குமுறை கும்பல்களிடம் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு
விடுதலை வேண்டும்!
பழனிச்சாமி பதவி விலகட்டும்
சட்டமன்றத்
தேர்தல்கள் நடக்கட்டும்
மக்கள்
பிரச்சனைகள் முன்னுக்கு வரட்டும்
ஜெயலலிதா,
சசிகலாவின் கணக்கிட முடியாத, கணக்கில்
வராத ஆயிரம் ஆயிரம் கோடி
ரூபாய் சொத்துக்களைக் கட்டி ஆள்வதாகக் கருதப்படும்
டிடிவி தினகரன், ‘தியாகத்துக்கும் துரோகத்துக்கும்’ இடையிலான
போர் நடப்பதாகக் கூசாமல் சொல்கிறார். அவர்
தரப்பினர் ‘பழனிச்சாமி’ முதலமைச்சராகத் தொடர வேண்டாம் என்றுதான்
கேட்கின்றனர்.
அவர்கள் ஆட்சியைக் கலைக்க
மாட்டோம் என் கின்றனர். அஇஅதிமுகவின்
ஆதிக்க பிரிவினர்
அனைவரும், ‘தனபால்’ தலையை தயங்காமல் உருட்டுகின்றனர்.
2017 பிப்ரவரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாடகம் அரங்கேற்றியபோது, ஈ.பழனிச்சாமி கும்பலும் ஓ.பன்னீர்செல்வம் கும்பலும்
நேரடியாக மோதிக் கொள்ளவில்லை. ‘தனபாலையும்’ திமுகவினரையும்
மோதவிட்டனர். தலித்துகளை அதிலும் அருந்ததியர் பிரிவைச்
சேர்ந்த தனபாலை திமுகவினர் சிறுமைப்படுத்திவிட்டனர்
என ஊடகங்கள் பேசும் நிலை உருவாக்கப்பட்டது.
இப்போதும் மன்னார்குடி மாஃபியா, ‘தனபால்’ ஏன் முதலமைச்சராக்கப்படக் கூடாது என
கேட்கிறது. பதவிச் சண்டையில் ஆட்சி
நிலைக்குமா, நிலைக்காதா என்ற சூழலில், அத்தகைய
சூழலில் மட்டுமே, அவர் களுக்கு தனபால்
நினைவுக்கு வருகிறார். அய்ம்பது ஆண்டு கால கழகங்கள்
ஆட்சிக் காலத்தில், தலித்துகளுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்புக்கள்,
மாவட்டச் செயலர் பொறுப்புக்கள் கொடுப்பதில்
இருந்து, இவர்களை எது தடுத்தது?
நடக்காது எனத் தெரியும்போது, அப்படியே
நடந்தாலும் நீடிக்காது எனத் தெரியும்போது, ‘தீண்டாமை’ அகன்று
தலித்துகளை, ‘தொட்டுக் கொள்ள’ தயாராகிவிட்டனர்.
சொந்த ஊரில் சொந்தக் கிணறு
உருவாக்கிய பூதத்தால் விரட்டப்பட்டுக் கொண்டிருந்த பன்னீர்செல்வம் இப்போது ‘தர்மயுத்தத்தை’
முடித்துக் கொண்டுவிட்டார். ஒருங்கிணைப்பாளர் பதவி, இரண்டு அமைச்சரவை
பதவிகள் என, கமுக்கமாக ‘தர்ம
யுத்தம்’
முடிந்துவிட்டது. ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே பாஜககார
ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருக்கும் படம்,
பாஜக உருவாக்கிய ஒற்றுமை பற்றி, தமிழ்நாட்டுக்கே
செய்தி சொன்னது. பிப்ரவரி 2017ல் 10% உண்மையை மட்டுமே
தாம் சொல்லியுள்ளதாகவும் 90% உண்மையை நெஞ்சுக்குள் பூட்டி
வைத்திருப்பதாகவும் பன்னீர்செல்வம் சொன்னார். ‘தர்மயுத்தத்தின்’ முடிவில்
90% உண்மை வெளியே வருமா, பன்னீர்செல்வத்தின்
சர்ச்சைக்குரிய கிணற்றிலோ, வேறு கிணற்றிலோ ஆழப்
புதைக்கப்படுமா?
தினகரன்,
‘தியாகம் எதிர் துரோகம் போர்’ பற்றி
பேசியபோது, பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ என சாமியாடியபோது, பழனிச்சாமி,
‘அமைதி மற்றும் எளிமைக்கு’ அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே உதாரணம் என்றார். அமைதியாக,
எளிமையாக இதுவரை அவர்கள் செய்ததை
எல்லாம் நினைக்கும் போது, அமைதியாக எளிமையாக
இனி என் னென்ன செய்ய
திட்டமிட்டுள்ளனரோ என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டுக்கு சர்வநாசமும் பேரழிவும் உருவாக்க தயாராக உள்ளதாக பழனிச்சாமி
தரப்பு மிரட்டுகிறது.
இப்போதும்
‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ புராணம்தானா?
தினகரன்
ஒரு மாயாவி. மந்திரவாதி. தொப்பிக்குள்
இருந்து, அவர் முயலையும் எடுப்பார்,
யானையையும் எடுப்பார் என, இந்த காலத்தில்
நாம் சொல்லக் கூடாது. அவர்
தொப்பிக்குள் இருந்து, சில ஆயிரம் கோடி
களையும் எடுப்பார், சில பத்தாயிரம் கோடிகளையும்
எடுப்பார் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் புரிதலாகும். அவர் பக்கம் 20 சட்டமன்ற
உறுப்பினர்கள் உள்ளனரா? கூடுதலாக உள்ளனரா?
ஆகஸ்ட்
28 அஇஅதிமுக கூட்டத்திற்கு 30 அமைச்சர்களும் 38 சட்டமன்ற உறுப்பினர்களும் மட்டுமே சென்றனர் என்றும்
கூட ஒரு செய்தி உள்ளது.
233ல், திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லீம் லீக் 1 என எதிர்க்கட்சிகள்
98 போக, அஇஅதிமுக அணி 135 இருக்க வேண்டும்.
அது, கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி போக
132 ஆகும். தினகரன் ஆதரவு சட்டமன்ற
உறுப்பினர்கள் 20 பேர் என்றால் ஈபிஎஸ்
ஓபிஎஸ்ஸின், அம்மா, புரட்சித் தலைவி
அம்மாவின் கட்சியில் 112 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். கூட்டத்தில்
68 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் கலந்து கொண்டனர் என்றால்,
மீதம் உள்ள 44 பேர் கதை
என்ன?
தமிழ்நாட்டு
ஊடகங்களுக்கு பஞ்சமே இல்லாமல் பரபரப்பு
செய்திகள். திமுகவின் 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவைக்குள் குட்கா கொண்டு வந்ததாகச்
சொல்லி உரிமை மீறல் அறிவிப்புத்
தரப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை
வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்த ஓபிஎஸ்
அணி மீது கட்சித் தாவல்
சட்டம் பாயாமல் பழனிச்சாமியை மாற்றுமாறு
மட்டுமே கேட்டுள்ள தினகரன் ஆதரவாளர்கள் மீது
மட்டும் கட்சித் தாவல் சட்டம்
பாயுமா? தொலைக்காட்சி ஊடகங்களில் தோன்றி அறிஞர் பெருமக்கள்
கருத்து மழை பொழியத் துவங்கிவிட்டனர்.
முக்கிய
கட்சிகள் அனைத்துமே, இன்னமும் ‘சட்டமன்றத்தை கூட்டுக’,
‘நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துக’ என்ற அதே பழைய
பல்லவியை பாடுகிறார்கள். ஒரு வேளை அப்படி
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து, மத்திய பாஜக
மற்றும் மாநில காவல்துறை துணை
கொண்டு டிடிவி தினகரன் ஆட்களையும்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தால்,
பழனிச்சாமி அரசாங்கம் தொடரலாமா? இந்தக் கோரிக்கையை எழுப்பும்போது,
பழனிச்சாமி அரசாங்கம் தொடரும் ஒரு வாய்ப்புக்கு
இடம் தருவதாக ஆகாதா?
அஇஅதிமுக
செப்டம்பர் 12 பொதுக் குழு கூட்டப்படும்
என்கிறது. பன்னீர்செல்வம் துவங்கிய ‘தர்மயுத்தத்தை’
மோடி தலையிட்டு முடித்து வைத்தார். இப்போது ‘தியாகத்துக்கும் துரோகத்துக்கும்’ இடையிலான
போரில் பாஜகவால் ஒரு சமாதானத்தை கொண்டு
வர முடியுமா? தினகரன் தரப்பு, கட்சியில்
ஆட்சியில் சில பதவிகள் என
முடித்துக்கொண்டு விடுமா? பாஜக, தேசிய
ஜனநாயக முன்னணியில் அஇஅதிமுகவை இணைத்துக் கொண்டு, எல்லா கும்பல்களையும்
குஷிப்படுத்த மத்திய அரசில் ஏதாவது
பதவி தருமா? தினகரன் தன்னோடு
இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடிகோடியாய் கொட்டிக் கொடுத்து, கவனித்து, ஆட்சியை கலைக்கும் அளவுக்குச்
செல்வாரா?
தமிழ்நாட்டில்
பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என தமிழிசை நம்பிக்கை
தெரிவித்துள்ளார். தாங்கள் அஇஅதிமுக ஆட்சியைக்
கட்டுப்படுத்துவதை மறைக்க, திமுக புறவாசல்
வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வதாக
பொன்.ராதாகிருஷ்ணன் புகார் சொல்கிறார். தமிழிசை,
தமிழ்நாட்டில் அவர்கள் எடுபிடிகள் ஆள்வது
போதாது, நேரடி ஆட்சி வேண்டும்
என விரும்புவது பழனிச்சாமி, பன்னீர்செல்வம், தினகரன் கும்பல்களுக்கு நிச்சயம்
கசப்பாகவே இருக்கும்.
துரோக பினாமி ஆட்சி வேண்டவே
வேண்டாம்
மறைந்த
ஜெயலலிதா, மதவாத கார்ப்பரேட் அரசியலுக்கு
நெருக்கமானவர். ஆனால், அவர், மக்கள்
திரள் செல்வாக்கை பெற முடிந்த ஓர்
அரசியல்வாதி. அவர் மிகவும் திறமையாக,
ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்காக தாம் நிற்பதாக காட்டிக்
கொள்ள முடிந்தது. அவர் 2016ல் தேர்தலில் வென்று
வந்த பிறகும் நீட் தேர்வை
ஏற்க முடியாது, தேசிய உணவுப் பாதுகாப்புச்
சட்டத்தை ஏற்க முடியாது, மின்சாரத்
துறையில் உதய் திட்டத்தை ஏற்க
முடியாது, ஜிஎஸ்டி சட்டத்தை ஏற்க
முடியாது எனச் சொல்லி வந்தார்.
இந்தித் திணிப்பை, மாநில அதிகாரங்கள் பறிக்கப்படுவதை,
மாநிலத்தின் நியாயமான நிதிப் பங்கு மறுக்கப்படுவதை
எதிர்த்து வந்தார். (இவற்றில் அவர் எவ்வளவு தூரம்
நின்றிருப்பார் என்பது வேறு விசயம்).
இப்போதைய, இரட்டை அம்மா ஆட்சி,
அதாவது, அம்மா, புரட்சித் தலைவி
அம்மா அஇஅதிமுக ஆட்சி, ஜெயலலிதா சொல்லி
வந்த இந்த எல்லா விசயங்களிலும்
நேர் எதிரான நிலை எடுத்து
மத்திய அரசின் கட்டளைகளுக்கு அடிபணிந்துவிட்டது.
கல்வி உள்ளிட்ட விசயங்கள் மாநிலப் பட்டியலுக்கு வர
வேண்டும், பொதுப் பட்டியல் விவகாரங்களிலும்
மாநில அரசிடம் கலந்து பேசியே
சட்டம் இயற்ற வேண்டும், மாநிலச்
சட்டங்கள் இயற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அவற்றுக்கு
மத்திய அரசு ஒப்புதல் தர
வேண்டும் என்ற மாநில நலன்
காக்கும் கோரிக்கைகளை இப்போதைய அரசால் நினைத்துப் பார்க்கக்
கூட முடியாது. இந்த அரசுக்கு, வாக்களித்த
மக்கள் பற்றி, தம் உழைப்பால்
சமூக செல்வங்களை பெருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் பற்றி ஒடுக்கப்பட்டோர் நலிந்த
பிரிவினர் பெண்கள் மாணவர் இளைஞர்
பற்றி, எந்த அக்கறையும் கிடையாது.
மக்கள் நலன் சார்ந்த எந்தப்
பார்வையும் கிடையாது. மக்கள் செல்வாக்கு கிஞ்சித்தும்
இல்லாத இந்தக் கூட்டம், கொள்ளையடித்ததை
காப்பாற்றிக் கொள்ள, கொள்ளையைத் தொடர,
எதிர்ப்பை நசுக்க, மத்திய பாஜகவிடம்
மண்டியிட்டுவிட்டது.
பாஜக பன்மைத்துவத்துக்கு எதிரி. பாஜக இசுலாமியர்,
கிறித்துவர்கள், தலித்துகளுக்கு விரோதி. பாஜக தொழிலாளர்கள்,
விவசாயிகள், கம்யூனிஸ்டுகளின் பகை இயக்கம். பாஜக
மூலதன அடிவருடி. பாஜக ஏகாதிபத்திய விசுவாசி.
அதற்கு தொண்டூழியம் செய்யும் அடிமை அரசாங்கமே பழனிச்சாமி
அரசாங்கம். இந்த அரசாங்கம் சீழ்
நிறைந்த தொற்று உள்ள புண்ணாகும்.
இது நீடித்தால் உடல் முழுவதற்கும் மீள
முடியாத பாதிப்பு நேரும். அதனால்தான், நம்பிக்கை
வாக்கெடுப்பு என்ற பேச்சுக்களை எல்லாம்
நிறுத்திக் கொண்டு, இந்த அரசு
உடனே பதவி விலகி, தேர்தல்களுக்கு
வழி விட வேண்டும் எனக்
கோர வேண்டியுள்ளது.
எதிர்க்கட்சிகள்,
தாங்கள், நம்பிக்கை வாக்கெடுப்பென, விடாமல் ஓயாமல் பேசுவது,
மக்களை நம்பிக்கை இழக்க வைக்கும், மக்கள்
மத்தியில் தங்களது நம்பகத் தன்மையை
சிதைக்கும் என, உணர
வேண்டும். மெல்லத் தலையெடுக்கத் துவங்கியுள்ள
மக்கள் பிரச்சனைகள், தேர்தல் நேரத்தில் நிச்சயமாய்
கூடுதல் முக்கியத்துவம் பெறும். வளர்ச்சி, நல்வாழ்க்கை,
முன்னேற்றம், ஜனநாயகம், சுதந்திரம் தொடர்பான தமிழ்நாட்டு மக்களின் விருப்பங்கள், தேவைகள் அரசியல் களத்தில்
முன்வர, தமிழ்நாட்டில் உடனடியாக தேர்தல்கள் நடக்கட்டும்.