நினைத்தாலே
இனிக்கும்
எஸ்கே
தாராபுரம்
பேருந்து நிலையத்தில் கையில் காசில்லாமல் இருந்த
ஒரு வாலிபர், பசிக்கு ஒரு பன்னை
ஒரு கடையில் இருந்து எடுத்து
சாப்பிட்டுவிட்டார்.
கருணாநிதிக்கு,
வாக்குறுதி அளித்தபடி, நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் தர,
மனம் இருந்ததாம். ஆனால் நிலம்தான் இல்லை
என்று, பிறகு தெரிந்து கொண்டாராம்.
தாராபுரத்தில், பன் தின்ற வாலிபரிடம்
காசு கொடுக்க மனம் நிச்சயம்
இருந்திருக்கும். பணம்தான் இல்லாமல் போய்விட்டது. பன் தின்று பணம்
தராத அந்த வாலிபரை, கடைக்காரர்
காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
காவல்துறை,
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அவர் மீது திருட்டு
வழக்கு போட்டது. விஜய் மல்லையா போல்
மக்கள் பணம் பல ஆயிரம்
கோடியை வங்கியில் இருந்து விழுங்கினால், நீங்கள்
லண்டனுக்கு பறந்து போய்விடலாம். 1000 கோடி,
10,000 கோடி, லட்சம் கோடி என்ற
அளவில் பொதுப் பணத்தை விழுங்கினால்,
நீங்கள் அம்பானி, அதானி போல் பிரபலம்
ஆகிவிடலாம். அரசையே ஆட்டி வைக்கலாம்.
பசிக்கு பன் எடுத்துத் தின்றால்,
அதற்கு காசு தர வழியில்லை
என்றால், இந்திய தண்டனைச் சட்டம்
உங்களைத் திருடா திருடா என
விரட்டும். மிரட்டும்.சிறையில் வைக்கப் பார்க்கும்.
பன், தின்றவர் வழக்கு மாஜிஸ்ட்ரேட் ஜியாவுதின்
நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதாகவும், வழக்கில் நடந்த சுவையான விஷயங்கள்
என்றும், தினமலர் வாசகர் க.அர்ச்சுனன் என்பவர் ஒரு கடிதம்
எழுதியுள்ளார்.
மாஜிஸ்ட்ரேட்
முன்பு பன் தின்றவர் காவலரால்
ஆஜராக்கப்பட்டபோது, மாஜிஸ்ட் ரேட் என்ன விஷயம்
என காவலர்களிடம் கேட்டாராம். காவலர்கள் பசிக்கு பன் தின்ற
விஷயத்தைச் சொன்னார்களாம். பசின்னு ஒரு பன்ன
திருடிட்டான், அதுக்குப் போய் சிறையா என்று
மாஜிஸ்ட்ரேட் கேட்டாராம். காவலர்கள் இன்னும் புலன் விசாரணை
முடிய வில்லை என, சிறைக்கு
அனுப்ப வழி பார்த்தனராம். காவலர்களிடம்,
இதுல என்னய்யா இன்வெஸ்டிகேஷன் என்று கேட்ட மாஜிஸ்ட்ரேட்
திடீரென தானே இன்வெஸ்டிகேஷனை ஆரம்பித்துள்ளார்.
பன்னு சாப்பிட்ட பிறகு ஒன்னுக்கு இரண்டுக்கு
போனயா என, பிடிபட்டவரிடம் கேட்டாராம்.
அவர் போனேன் என்று சொன்னவுடன்
எங்கே போனாய் எனக் கேட்க,
பிடிபட்டவர் போலீஸ் ஸ்டேஷன்ல தான்
போனேன் என்றாராம்.
மாஜிஸ்ட்ரேட்
இதுக்கு மேல என்னய்யா இன்வெஸ்டிகேஷன்,
அவன் திருடின பன் உங்க
ஸ்டேஷன்லயே வேற விதமா வந்திருச்சு.
திருட்டு போன பிராப்பர்டி ரிகவரி
ஆயிடுச்சு.இதுக்கு மேல எதுக்கு
வழக்கு என்று வழக்கை முடித்து
வைத்துவிட்டாராம். அந்த வாலிபருக்கு பெரிய
சைஸ் பன்னும் தண்ணி பாட்டிலும்
வாங்கித் தர வைத்து, சொந்த
ஊர் திரும்ப பஸ் செலவிற்கு
காசு கொடுத்து, அனுப்பி வைத்தாராம்.
சம்பவத்தின்
நம்பகத்தன்மை பற்றியோ, மாஜிஸ்ட்ரேட் ஜியாவுதினின் மக்கள் சார்புத் தன்மை
பற்றியோ, வழக்கமாக அவர் எப்படி நடந்து
கொள்வார் என்பது பற்றியோ, நமக்கு தெரியாது. ஆனாலும்
இந்தச் சம்பவம் போல் மாநிலமெங்கும்
நாடெங்கும் நடந்தால் எப்படி இருக்கும் என,
நினைத்தாலே இனிக்கிறது.