தமிழக இளைஞர்களிடம் இருந்து
சற்று எட்டியிருப்பது பாஜகவினருக்கு நல்லது
தமிழ்நாட்டின்
இளைஞர்கள் தயாராகிவிட்டார்கள், இங்கு தாமரை மலரப்
போகிறது என்று பாஜகவின் இளைஞர்
அணி பேரணியில் பாஜக தலைவர்கள் சொல்லிக்கொண்டனர்.
அதற்காக மற்ற மாநிலங்களில் நடப்பதுபோலவே
சாம பேத தான தண்டம்
எல்லாம் பாஜக கையில் எடுக்கும்.
பாஜக அப்படி கனவு காண்பதற்கு,
துரதிர்ஷ்டவசமாக ஆளும் கட்சி இடம்
உருவாக்கித் தந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்காக பாஜக
காண்கிற கனவை தமிழ்நாட்டின் இளைஞர்களும்
காண்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தால்
ஏமாற்றம் கிடைக்கும்.
ஏனென்றால்
தமிழ்நாட்டின் இன்றைய இளைஞர்களின் குறைந்தபட்ச
கனவு குறைந்தபட்ச கவுரவமான வாழ்க்கை. அதை உறுதிப்படுத்திக் கொள்ள
குறைந்தபட்ச கவுரவமான வேலை, வருமானம். இதற்கு
மோடியோ, தமிழிசையோ பதில் வைத்திருக்கிறார்களா?
ஹு ண்டாய்
நிறுவனம் தொழிலாளர்களுக்கு விரோதமாக நாள்தோறும் ஏதாவது ஒரு செயலாவது
செய்துவிடுகிறது. சமீபத்தில் ஒரு பயிற்சி தொழிலாளி
அவருக்கு தரப்பட்ட ஓராண்டு பயிற்சி காலத்தை
முடித்தார். முடித்த பிறகு அவரை
அடுத்த கட்ட பயிற்சிக்கு நிறுவனம்
அனுப்ப வேண்டும். (பயிற்சிக்குத்தான், நிரந்தர வேலைக்கு அல்ல).
அந்தத்
தொழிலாளி வேலையில் சேர்ந்தபோது 85 கிலோ எடை இருந்தாராம்.ஓராண்டில் அந்த எடை கூடிவிட்டதாம்.
இதைக் காரணமாகச் சொல்லி, எடையை பழைய
அளவுக்குக் குறைக்கச் சொல்லி, எடை குறைந்த
பிறகு வந்தால், அந்தத் தொழிலாளியை எங்கு
இடம் காலியாக உள்ளதோ அங்கு
அமர்த்துவதாகச் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அந்தத்
தொழிலாளியும் ஏதேதோ செய்து உடல்
எடையை பழைய அளவுக்குக் குறைத்துவிட்டு,
நிறுவனத்தை அணுகியபோது, வேலை இல்லை என்று
சொல்லி திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார். எங்கு சென்றும் அவரால்
முறையிட முடியாது.எந்தச் சட்டத்திலும் அவருக்கு
பாதுகாப்பு கிடையாது.அவர் இப்போது திருபெரும்புதூர்
பகுதியில் வேறு வேலை கிடைக்க
தவம் கிடக்கிறார்.இந்தத் தவத்தில் ஓரிடத்தில்
அமர்ந்திருக்க முடியாது.நாயாய் பேயாய் நாள்தோறும்
அலைய வேண்டும். இவருக்கு தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தால் என்ன?
இரட்டை இலை உதிர்ந்தால்தான் என்ன?
வயிறு பசிக்கிறது. ஊருக்கு பணம் அனுப்ப
வேண்டும். பாஜகவினரிடம் பதில் உள்ளதா?
மூலதனம்
தமிழக இளைஞர்களின் சுயமரியாதையோடு விளையாடும் திருபெரும்புதூரில் உள்ள இன்னொரு பன்னாட்டு
நிறுவனத்தில், தொழிலாளர்கள் இயற்கை உபாதைகளுக்காக கழிப்பறை
சென்றால், அங்கு இருக்கிற தானியங்கி
தடுப்பான்கள் அவர் எப்போது உள்ளே
செல்கிறார், எப்போது வெளியே வருகிறார்
என்று பதிவு செய்யும்.
சிறுநீர்
கழிக்கச் செல்லும்போது கூட கண் காணிக்கப்படும்
ஒரு தமிழக இளைஞருக்கு உடனடியாக
அவரது சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். இளைஞர் பேரணி நடத்திய
பாஜகவினரிடம் பதில் இருக்கிறதா?
திருபெரும்புதூர்,
இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் பகுதிகளில் பணியிடத்தில்
விபத்தில் உயிரிழப்பு, உடல் உறுப்புகள் இழப்பு,
அந்த இழப்புகள் மறைக்கப்படுவது, மறுக்கப்படுவது, இழப்பீடுகள் மறுக்கப்படுவது என்று ஒரு பெரிய
துயர வாழ்க்கையை அங்குள்ள இளைஞர்கள் அன்றாடம் வாழ்கிறார்கள். இது போன்ற நிலைமைகள்
பற்றி சக தொழிலாளர்கள் கேள்வி
எழுப்பும்போது, அவர்களுக்கு பொருளாதார ஆயுள் தண்டனையோ, மரண
தண்டனையோ வழங்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள்
பற்றிய செய்திகளே பல நேரங்களில் வெளியே
தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகின்றன. கேள்வி கேட்டவர்கள் பெற்ற
தண்டனையும் மறைக்கப்பட்டு மூலதனம் பேயாட்டம் போடுகிறது.
தமிழ் பெருமை, தமிழர் பெருமையை
சமீப காலங்களில் உரக்கப் பேசுபவர்கள் பலர்
இந்தத் தமிழ் இளைஞர்களின் படுபாதகமான,
சுயமரியாதையற்ற வாழ்க்கை நிலைமைகள், வேலை நிலைமைகள் பற்றி
பேசுவதில் தயக்கம் காட்டுகின்றனர். திருபெரும்புதூர்
தொழில் பகுதி ஏதோ தமிழ்நாட்டுக்கு
வெளியில் இருப்பதுபோல், இன்னும் சில தமிழ்ப்
பற்றாளர்கள் நடந்துகொள்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை கொண்டாடியவர்கள்,
இந்த இளைஞர்களின் சுயமரியாதை, வாழ்வுரிமை, கவுரவம் ஆகியவற்றுக்காக நடக்கிற
போராட்டங்களில் இருந்து ஒதுங்கி நிற்கிறார்கள்.
தமிழ்நாட்டின் இளைஞர்களை கூட்டி பேரணி நடத்துகிற
பாஜக இளைஞர் அணியினரோ, அல்லது
2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பிரதமராக
தமிழகத்துக்கு வந்து தமிழகத்தின் தலையெழுத்தை
மாற்ற தாமரை மலர வேண்டும்
என தமிழக இளைஞர்களுக்கு அழைப்பு
விடுத்த மோடியோ, இந்த வாழ்க்கையில்
மாற்றம் வரும், மூலதன வெறியாட்டம்
கட்டுப்படுத்தப்படும், தமிழ்நாட்டின் இளைய தொழிலாளர்களுக்கு, சிறைச்சாலைகளாக
மாறியிருக்கும் தொழிற்சாலைகளில் ஜனநாயக உரிமைகளும் சுயமரியாதையும்
பாதுகாக்கப்படும் என்று உறுதி எதுவும்
தருவார்களா?
மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்
அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, ஸ்கில்
இந்தியா, டேலண்ட் இந்தியா எல்லாம்
பன்னாட்டு உள்நாட்டு மூலதனத்தின் ஹயர் அண்டு பயர்
இந்தியா முன் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு
சிட் டவுன் இந்தியாவாகவும் ஷட்
அப் இந்தியாவாகவும் மாறியுள்ளன.
வாழ்வுரிமை
பறிக்கப்படுவதற்கு எதிராக கதிராமங்கலத்திலும் நெடுவாசலிலும்
நாட்கணக்கில் நிறைந்திருக்கும் இளைஞர்களுக்காகவும் அந்தப் பேரணி எதுவும்
பேச முடியாது. தமிழக இளைஞர்களுக்கு கிராமப்புறத்தில்
எந்த எதிர்காலமும் இருக்காது என்பதை அங்கு நடக்கும்
போராட்டங்கள் பற்றிய பாஜகவினர் அணுகுமுறை
உறுதி செய்துவிடுகிறது. ஒரு ஊர் நாசமாகிப்
போனால் என்ன என்று கேட்கும்
தேசப்பற்றாளர்கள் அங்கு நிறைந்துள்ளதையும் தமிழக
இளைஞர்கள் பார்த்துவிட்டார்கள்.
அரியலூரில்
சிறுமி நந்தினியை ஏமாற்றி பாலியல் வன்முறைக்கு
உள்ளாக்கி பிறகு கொலையும் செய்த
மணிகண்டனுக்கும் அந்த கயவனின் கூட்டாளிகளுக்கும்
பாதுகாப்பாக இருந்த ராஜசேகரன் போன்ற
சமூக விரோத சக்திகளை இந்துத்துவ
அமைப்புகள் முன்னிறுத்தும்போது, தமிழக இளைஞர்களுக்கு பாஜகவின்
இளைஞர் பேரணியில் உற்சாகம் தரும் அம்சம் எதுவும்
இருக்க வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டுக்கு
பாஜகவின் ரகசியத் திட்டம்தான் என்ன
என்று யாரும் யூகிக்க பாஜக
இடம் தரவில்லை. தற்போதைய ஆட்சி இறுதி வரை
தொடர காத்திருக்குமா, கூட்டணி ஆட்சி அமைக்க
முயற்சிக்குமா, ஆட்சியை கலைக்கும் சூழலை
உருவாக்குமா....? பார்க்கலாம். எப்படியாயினும் பாஜகவின் திட்டம் ஜனநாயக வரம்புகளுக்குள்
இருக்கப் போவதில்லை. மற்ற மாநிலங்களில் அப்படித்தான்
நடக்கிறது.
தமிழ்நாட்டில்
இப்படி எதுவும் நடக்காது என்றும்
உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அஇஅதிமுககாரர்கள்,
பாஜக விளையாட போதுமான களம்
ஏற்படுத்தித் தருகிறார்கள். தமிழ்நாட்டில் இளைஞர்களை திரட்டி ஒரு பேரணி
நடத்த பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கும் அளவு தமிழக ஆட்சியாளர்கள்
இளைஞர்கள் வாழ்க்கையை, எதிர்காலத்தை கேள்விக்கு, கேலிக்கு உள்ளாக்கிவிட்டார்கள்.
தமிழக இளைஞர்களுக்கு கவுரவமான வேலை வேண்டும். இந்த
அடிப்படை அம்சம் பற்றி அஇஅதிமுக
ஆட்சியாளர்களுக்கு எந்த தொலைநோக்கும் இருப்பதில்லை.
தமிழக இளைஞர்களின் இந்த அடிப்படை உரிமை
பிரச்சனையாக இருப்பது பற்றிய உணர்வற்றுதான் அவர்கள்
இருக்கிறார்கள். தமிழக அரசின் இளைஞர்
நலன் காக்கும் துறை விளையாட்டு மட்டும்தான்
இளைஞர் நலன் தொடர்பானது என்ற
பார்வையைத்தான் கொண்டிருக்கிறது. 89 லட்சம் பேர் வேலை
கேட்டு தமிழக வேலை வாய்ப்பு
அலுவலகங்களில் பதிவு செய்திருப்பது அவர்களுக்கு
வெறும் எண்ணிக்கையாகத் தெரிகிறதே தவிர, தமிழக இளைஞர்
89 லட்சம் பேருக்கு எதிர்காலம் நிச்சயமற்று, தெளிவற்று இருப்பது தெரிவதில்லை. இவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும்
திட்டம் என்ற எதுவும் முன்வைக்கப்படவில்லை.தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புத் துறை
அதிகபட்சம் முன்வைக்கிற திட்டம் திறன்வளர்ப்புதான்.
தமிழக அரசு நடத்துகிற அய்டிஅய்க்களில்
திறன்வளர்த்துக் கொண்ட இளைஞர்கள்தான் திருபெரும்புதூர்
பகுதியின் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் சுயமரியாதையை தொலைத்துவிட்டு, பிறகு எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு,
பிறகு மீண்டும் அங்கேயே, மீண்டும் சுயமரியாதையை அடகு வைக்கும் வேலை
வாய்ப்பு பெறவாவது வழி கிடைக்காதா என்று
தேடி அலைகிறார்கள்.
ஆகஸ்ட்
6 அன்று தமிழக அரசின் குரூப்
2 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசின் தேர்வாணைய தேர்வுகள்
நடந்தன. 1953 காலிப் பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட
7,53,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். 6,50,000
பேர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வாணையத்தில்
பதிவு செய்ய பதிவு கட்டணம்
ரூ.150 மற்றும் தேர்வு கட்டணம்
ரூ.100 செலுத்த வேண்டும். தேர்வு
கட்டணத்தை 7,53,000 பேரும் செலுத்தியிருப்பார்கள். பதிவு கட்டணம்
முன்பின் மாறலாம். 2017ல் பட்டதாரிகளானவர்களில் பெரும்பாலானோர் விண்ணப்பித்திருக்கக்
கூடும். இந்த வகையிலேயே தமிழக
அரசுக்கு ரூ.10 கோடிக்கும் மேல்
வருவாய் வந்திருக்கிறது. இந்த அற்பத் தொகையை
கணக்கில் கொண்டு வருவதில் தமிழக
அமைச்சர்களுக்கு பிரச்சனை இருக்கப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் குறி அந்த
1953 இடங்களை நிரப்புவதில் வரவிருக்கும் வருமானம்தான். தமிழக அரசின் தேர்வாணையம்
நடத்தும் தேர்வுகள் பாரபட்சமில்லாமல், முறைகேடுகள் இல்லாமல் நடப்பதாக காட்டிக் கொள்ள முதல் சில
இடங்கள் பெறுபவர்களுக்கு, ஊரைக் கூட்டி, காமிராக்கள்
முன் நிற்க வைத்து பணி
நியமன ஆணை தந்து கதையை
முடித்து விடுகிறார்கள், திரைமறைவு பேரங்கள் நடந்துகொண்டுதான் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பழனிச்சாமி அரசாங்கத்தில் ஆயா வேலைக்கு ரூ.5
லட்சம் லஞ்சம் என்று மாற்று
அணியைச் சேர்ந்த ஒருவர் சொன்னது
பத்திரிகைகளிலேயே வெளிவந்த செய்தி.
தமிழக இளைஞர்களை திருபெரும்புதூர் போன்ற தொழில் பகுதிகளில்
மூலதனம் நேரடியாக தாக்குகிறது என்றால், மூலதன விசுவாச அரசு
தன் பங்கிற்கு துரோகம் இழைக்கிறது. அந்நிய
முதலீடு, முதலீட்டாளர் மாநாடு பேச்சுக்கள் எவையும்
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பாக மாறவில்லை. நிர்மலா சீதாராமன் கூட
தொழில் ஏன் அண்டை மாநிலங்களுக்குச்
செல்கிறது என்று பரிசீலனை செய்யுங்கள்
என்று ஆலோசனை சொல்லும் அளவுக்கு
தமிழ்நாட்டின் நிலைமையை அஇஅதிமுகவினர் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள்.
மத்திய,
மாநில அரசுகளின் அனைத்தும் தழுவிய துரோகங்களுக்கு அப்பால்,
திருபெரும்புதூரில் மூலதனத்தின் தாக்குதலை நேரடியாக எதிர்கொள்ளும் இளைஞர்கள் உட்பட, தமிழ்நாட்டின் இளைஞர்கள்
தங்கள் போராட்ட உள்ளாற்றலை போதுமான
அளவு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து சற்று எட்டியிருப்பது
பாஜகவினருக்கு நல்லது.