அரசாங்கங்களின்
ஆசிகளோடு
கொலைகள்
செய்யும் கார்ப்பரேட்மயம்
உமா கேசுக்கு 24 வயது.ஒடிஷாவைச் சேர்ந்தவர்.
கொல்கத்தாவின் பிரபலமான, மேல் நடுத்தர பிரிவு
நோயாளிகள் எப்போதும் நிறைந்திருக்கிற எஎம்ஆர்அய் (அட்வான்ஸ்ட் மெடிகேர் அன்டு ரிசர்ச் இன்ஸ்டிடியுட்)
என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த
மூன்றரை ஆண்டுகளாக செவிலியர்.
கடந்த சில நாட்களாக கடுமையான
தலை வலி இருப்பதாக சொல்லிக்
கொண்டிருந்தார். அந்த மருத்துவமனையின் கண்சிகிச்சை
பிரிவில் பரிசோதனை செய்து கொண்டு ஆகஸ்ட்
9, புதன் அன்று கண்ணாடியும் வாங்கினார்.
ஆனால் அதற்கும் முன்பு திங்கள் அன்று
மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்தார். நான்கு
நாட்கள் விடுப்பு கேட்டார்.மறுக்கப்பட்டது.ஒரு நாள் விடுப்பு
எடுத்துக் கொண்டு புதன் காலை
8 மணிக்கு மீண்டும் பணிக்கு வந்தார். சில
மணி நேரங்களில் மீண்டும் வாந்தி எடுக்கத் துவங்கினார்.
அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு
மதியம் 1 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த அவசர சிகிச்சை
பிரிவின் மருத்துவர் உடனடியாக சிடி ஸ்கேன் மற்றும்
இசிஜி எடுக்க வேண்டும் என்றார்.
ரூ.21,000க்கும் மேல் ஊதியம்
பெறுபவர்கள்தான் அதே மருத்துவமனையில் பரிசோதனைகள்
செய்துகொள்ள முடியும் என்றும் உமா அதற்கும்
குறைவாக ஊதியம் பெறுவதாலும் இஎஸ்அய்
திட்டத்தில் வருவதாலும் அவருக்கு இஎஸ்அய் மருத்துவமனையில்தான் பரிசோதனைகள்
செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
உமாவுக்கு அங்கேயே உடனடியாக பரிசோதனைகள்
செய்யப்பட வேண்டும் என்று ஊழியர்கள் அதிகாரி
அதிகாரியாய் பார்த்திருக்கிறார்கள். பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை; விதிகளை யாருக்காகவும் வளைக்க
முடியாது என்று செவிலியர் கண்காணிப்பாளர்
சொல்லியுள்ளார். வாந்தி நிற்க, தலைவலி
குறைய, வாயு உருவாவதை தடுக்க
மருந்துகள் மட்டும் உமாவுக்கு தரப்பட்டுள்ளன.
எதுவும் பலன் தரவில்லை. வியாழன்
காலை 7.30க்கு உமாவின் உடல்நிலை
மிகவும் மோசமானபோது, அவர் தீவிர சிகிச்சை
பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு உமா இறந்துவிட்டார்
என்று அறிவிக்கப்பட்டது.
இஎஸ்அய்யில்தான்
பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று
சொன்ன அதிகாரியையும் விதியை வளைக்க முடியாது
என்று சொன்ன கண்காணிப்பாளரையும் தற்காலிக
பணிநீக்கம் செய்தது மட்டும்தான் ஊழியர்
சீற்றத்தைத் தவிர்க்க மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை. உமாவின் குடும்பத்துக்கு ரூ.
5 லட்சம் இழப்பீடு தர நிர்வாகம் முன்வந்துள்ளதாக
ஒரு செய்தி வருகிறது. ஓர்
உயிர், அதுவும் அந்த மருத்துவமனை
நிர்வாகத்தின் லாபம் மேலும் மேலும்
வளர உழைத்துக் கொடுத்த உயிர் போனதற்கு
சரியான ஒரு பதில், ஈடான
ஓர் இழப்பீடு தர முடியுமா?
கார்ப்பரேட்
நியாயம்! அங்கு மனித உயிர்களுக்கு
மதிப்பில்லை.பணமும் அது வருவதற்கான
விதிகளும் விதிமீறல்களும்தான் ஒருவர் உயிர் வாழ்வதா,
வேண்டாமா என தீர்மானிக்கும். தலை
எந்திரத்தில் சிக்கியதால் உயிர்விட்ட நோக்கியா தொழிலாளி அம்பிகா நமக்கு நினைவுக்கு
வருகிறார். அன்றும் அந்த எந்திரத்தை
உடைத்து அம்பிகாவை காப்பாற்ற வேண்டும் என்று தொழிலாளர்கள் சொன்னபோது,
மிகவும் விலை உயர்ந்த எந்திரம்,
அப்படி எதுவும் செய்ய முடியாது
என்று அன்றிருந்த அதிகாரிகள் எந்திரத்தனமாகச் சொன்னார்கள்.
நோக்கியா
தொழிலாளர்கள் சீற்றமுற்றது போலவே இந்த மருத்துவமனை
ஊழியர்களும் பொதுமக்களும் சீற்றமுற்று, உமா மரணத்துக்கு பொறுப்பான
பதில் சொல்லாத மனிதவள மேம்பாட்டு
அதிகாரியை முற்றுகையிட்டனர். மருத்துவமனையின் வேறு சில அதிகாரிகளும்
மக்களின் ஊழியர்களின் சீற்றத்துக்கு ஆளாயினர். இப்போது உமாவின் மரணத்துக்கு
நீதி வேண்டும் என்ற சாமான்யர்கள் குரலை
விட மருத்துவமனையில் வன்முறை நடக்கவிடக் கூடாது
என்ற கார்ப்பரேட் மருத்துவமனை உரிமையாளர் குரல் சத்தமாகக் கேட்கிறது.
இதே மருத்துவமனையில் 2011ல் தீ விபத்து
ஏற்பட்டபோது, பெண்கள் பிரிவில் இருந்த
8 நோயாளிகளை காப்பாற்றிவிட்டு, ஒன்பதாவது நோயாளியை காப்பாற்ற போனபோது புகை மூட்டத்தில்
சிக்கி இரண்டு செவிலியர்கள் உயிர்த்
தியாகம் செய்தார்கள். அந்த விபத்தில் இறந்த
91 நோயாளிகளின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
தருவதாக கோயன்கா நிர்வாகம் அப்போதும்
சொன்னது. பிரச்சனை மிகப் பெரியது என்பதால்,
அப்போது அந்த செவிலியர்களுக்கும் சேர்த்து
அந்த இழப்பீடு என்று சொன்னார்களா என்பது
தெரியவில்லை. தனது மாநிலத்தைச் சேர்ந்த
செவிலியர்கள் என்பதால் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் அப்போது கொண்டாடிய கேரள
உம்மன் சான்டி அரசாங்கம் அமைச்சரவையில்
ஆலோசித்து இழப்பீடு அறிவிப்பதாகச் சொன்னது; பிறகு அப்படி
எதுவும் அறிவித்ததா என்றும் தெரியவில்லை.
இதே மருத்துவமனையில் 1998ல் தவறான சிகிச்சை
அளித்ததால் உயிரிழந்த ஒருவரின் கணவர் தொடுத்த வழக்கில்
மருத்துவமனை நிர்வாகம் ரூ.11 கோடி இழப்பீடு
தர வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு 2013ல்
வந்தது. அதற்குள்தான் 2011ல் தீ விபத்தில்
பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
சற்றும்
விதிகளை மதிக்காத, விதிகளை வளைக்கிற ஒரு
நிர்வாகம் தொடர்ந்து இயங்க முடிகிறது. இதற்கு
முந்தைய உயிரிழப்புகளுக்கு நீதிமன்றத்துக்கும் சிறைக்கும் செல்ல நேர்ந்த நிர்வாகம்
இப்போது துணிச்சலாக மருத்துவமனைக்குள் வன்முறை நடக்கக் கூடாது
என்று சத்தமாகப் பேசுகிறது.
அந்த மருத்துவமனையில், பல நோயாளிகளுக்கு மருத்துவம்
தந்து பலரை குணப்படுத்திய அந்த
செவிலியர் தனக்கு நன்கு தெரிந்து
தனது உயிர் கொஞ்சம் கொஞ்மாக
போகும்போது எந்த அளவுக்கு மனவேதனை
அடைந்திருப்பார்? அவர் அப்படி செத்துக்
கொண்டிருந்ததை பார்த்த, அவருக்கு முறையான சிகிச்சை தரப்பட
வேண்டும் என்று கோரிய அவரது
சக ஊழியர்கள் பொறுமை காக்க வேண்டும்
என சொல்ல முடியுமா?எல்லாம்
கண் எதிரில், கைக்கெட்டும் தொலைவில் இருக்கின்றன.ஆனால் ஓர் உயிரை
காப்பாற்ற முடியவில்லை. சாமான்யர்களின் உயிர் அவ்வளவு மலிவா?
மருத்துவமனைக்குள்
வன்முறை செய்ய வேண்டும் என்று
சாமான்ய மக்கள் யாரும் சபதம்
செய்து கொண்டு வரவில்லை. வேறு
எங்கும் கூட சாமான்ய மக்கள்
வன்முறை நடவடிக்கைகளில் இறங்குவதில்லை. எல்லா வன்முறைகளுக்கும் அரசும்
கார்ப்பரேட் லாப வெறியும் நேரடி
காரணமாக இருக்கிறது. 91 பேர் உயிரிழக்கும் அளவுக்கு
நிர்வாகத்தில் மெத்தனம் காட்டியது வன்முறை இல்லையா? உயிருக்காகப்
போராடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, வாய்ப்புகள் அனைத்தும் இருந்தும் முறையான சிகிச்சை தராதது
வன்முறையன்றி வேறென்ன? இந்த நிகழ்வுகளை, கார்ப்பரேட்
நிர்வாகம் செய்த கொலைகளை வன்முறை
என்று வரையறுத்து அந்தத் தனியார் மருத்துவமனை
உரிமத்தை ரத்து செய்து, நிர்வாகத்தின்
மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால்
இன்று உயிரிழப்பும் வன்முறை என்று சொல்லப்படும்
ஒன்றும் நடக்காமல் இருந்திருக்கலாம். இப்போதும் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்கள் அரசு வேலை கிடைத்தால்
போய்விடுவதாகவும் அதனால் மருத்துவமனைக்கு இழப்பு
என் றும் அந்த இழப்பை
ஈடுகட்ட தானே செவிலியர் கல்லூரியும்
துவங்கப் போவதாகவும் அப்போதுதான் செவிலியர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்றும் நியாயமாக ஏதோ
பேசுவதைப் போல் அடுத்த அத்துமீறல்
என்ன செய்யப் போகிறது என்பதை
உரிமையுடன் வெளிப்படையாகச் சொல்கிறது. படிப்பதற்காக வரும் சாமான்ய மக்கள்
வீட்டு பிள்ளைககளை மருத்துவமனையில் நேரடியாக, போதுமான பயிற்சி இருக்கிறதோ,
இல்லையோ, செவிலியர் பணி பார்க்கச் சொல்லப்
போகிறது. ஒரே நேரத்தில் செவிலியர்
படிப்புக்கு வரும் மாணவர்களையும் சிகிச்சைக்கு
வரும் நோயாளிகளையும் விதிகளை மிதித்து ஏறி
ஆபத்தில் தள்ளப் போகிறது.
ஒரு சாவுக்கு காரணமாகியிருக்கிற நேரத்தில் இப்படிச் சொல்ல அந்த தனியார்
நிர்வாகத்துக்கு துணிச்சல் இருக்கும் அளவுக்கு நிலைமை சீர்கெட்டுப் போயிருப்பது,
டோக்லம், எல்லை பாதுகாப்பு ஆகியவற்றை
விட மிகப்பெரிய பிரச்சனை. இங்கு நாட்டுக்குள் தனியார்
முதலாளிகள் என்ற பெயரில் தீவிரவாதிகள்
சட்டபூர்வமாக நடமாடுகிறார்கள்.
தனியார்மயம்
வந்தால் எல்லாம் சுபிட்சமாகி விடும்
என்ற முதலாளித்துவ கருத்துக்கள் ஆட் டம் போடுகின்றன.
திட்ட ஆணையத்தின் இடத்தில் வந்துள்ள நிதி ஆயோகின் தலைமை
நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த்
பள்ளிகளை, கல்லூரிகளை, சிறைக்கூடங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்கிறார். மாவட்ட மருத்துவமனைகளில் தனியார்
மருத்துவமனை செயல்பாடுகளை அனுமதிக்கும் திட் டத்தையும் ஏற்கனவே
நிதி ஆயோக் முன்வைத்துள்ளது. அரசு
உள்கட்டுமான வசதிகளை முழுமையாக பயன்படுத்தி
அரசு - தனியார் பங்கேற்பு திட்டத்தில்
தனியார் மருத்துவமனைகள் சம்பாதிக்கும் அற்புதமான முன்வைப்பு அது. தனியார் மருத்துவமனைகள்
உருவாக்கப் போகும் படுக்கை வசதிகளில்
எந்தவிதமான ஒதுக்கீடும் கிடையாது.
உள்கட்டுமான
வசதிகள் அனைத்தையும் இயக்கும் பராமரிக்கும் பணியை தனியாரிடம் விட்டுவிட
வேண்டும் என இந்திய முதலாளி
கள் கூட்டமைப்பின் கூட்டத்தில் அமிதாப் காந்த் சொன்னபோது,
அதற்கு நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்
கட்கரி உடனடியாக அந்த கூட்டத்திலேயே ஒப்புதல்
தெரிவித்தார். நெடுஞ்சாலை திட்டங்கள் சிலவற்றை 20 - 30 ஆண்டுகள் பராமரிப்புக்கு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம்
விட்டு விட அவரது அமைச்சகம்
உடனடியாக நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றார். ஏலம்
எடுக்கும் கனவான்கள் நாளை அந்தச் சாலையில்
யார் செல்ல வேண்டும், யார்
செல்லக் கூடாது என்பதை தீர்மானிப்பார்கள்.
யாராவது சாகக் கிடந்தால், செத்துக்கிடந்தால்
விதிகள் பேசி பணம் பார்ப்பார்கள்.
உமாவின் மரணம் அதை முன்னறிவிக்கிறது.
பள்ளிகளை, கல்லூரிகளை, மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து விட்டால், காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகங்கள்
இல்லாத தமிழ்நாடு மட்டுமல்ல, மக்கள் இல்லாத மக்களாட்சியே
உருவாக்கி விடலாம். யோகி ஆதித்யநாத்தின் உத்தரபிரதேசத்தில்
இந்த இயக்கப்போக்கை பாஜக துவக்கி வைத்துவிட்டது.
ஒரே வாரத்தில் 71 குழந்தைகள் செத்துவிட்டார்கள். அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன்
தட்டுப்பாடு. யோகியின் உத்தரபிரதேசத்தில் மானுட மாண்புகளுக்கு ஆக்சிஜன்
அவசியப்படுவதை மிக குறுகிய காலத்தில்
பல வன்முறை சம்பவங்களில் பார்த்துவிட்டோம்.
எங்கே போனார் அந்த வெற்று
வாய்வீச்சு நரேந்திர மோடி? சக மனிதர்களை
சாகடிப்பதில் நரேந்திர மோடிக்கும் யோகிக்கும் குற்றஉணர்வு இருப்பதில்லை.
மோடி வந்தால் இந்தியா எங்கோ
போகும் என்றார்கள். சாமான்ய மக்களின் இந்தியா
எந்த விதத்திலும் இந்த மூன்றரை ஆண்டுகளில்
முன்னேற்றமும் காணவில்லை. யோகி வந்துவிட்டார், உத்தரபிரதேசத்தில்
எல்லாம் மாறும் என்றார்கள். சாவுகள்
எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. மோடி, யோகி வந்தால்......
என்பதுபோல்தான் தனியார்மயம் வந்தால்........ என்பதும்.சாமான்ய மக்களின் சாவுகள்
மட்டும் மிஞ்சி நிற்கும்.