மோடி, மோடி எடுபிடி பழனிச்சாமி
அரசாங்கங்களுக்கு எதிரான
தொழிலாளர்
போராட்டங்களை வளர்த்தெடுப்போம்!
(ஆகஸ்ட்
20 அன்று சென்னையில் நடந்த ஏஅய்சிசிடியு மாநிலப்
பொதுக் குழு கூட்டத்தில் ஏஅய்சிசிடியு
தேசியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரை. சில
சேர்க்கைகளுடன்)
தமிழ்நாடு
ஏன் மாறுபட்டு இருக்கிறது?
2009 செப்டம்பர்
22 அன்று பிரிக்கால் நிறுவன மனித வளத்துறை
அதிகாரிதுரதிர்ஷ் டவசமாய் மரணமடைய, நம்
இயக்கம் கொலை/கொலைச் சதி
வழக்குகளைச் சந்தித்தது. குற்றம் சுமத்தப்பட்ட 27 பேரில்
பலர் முன் ஜாமீன் பெறமுடிந்தது.
மற்ற அனைவரும் 4 மாதங்கள் முடிவில் ஜாமீன் பெற்றோம். 2015 டிசம்பர்
3, 2017 ஜனவரி என இரு சுற்றுக்களில்
25 பேர் விடுதலையாகி உள்ளோம்.
அதே செப்டம்பர் 22. ஆனால் 2008ஆம் வருடம். நோய்டாவின்
கிராசியானோ ஆலை நிர்வாக இயக்குனர்
கொல்லப்பட்டதாகப் போடப்பட்ட வழக்கில், கடைசி வரை பிணை
கிடைக்காமல், 71ல் 4 பேருக்கு இந்த
ஆகஸ்ட் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நமது சங்கம் திறம்பட செயல்பட்டதால்
மட்டுமே, நாம் விரைந்து ஜாமீன்
பெற்றோம், 27ல் 25 பேர் உச்சநீதிமன்ற
கட்டத்திற்கு முன்பாகவே விடுதலையானோம் எனச் சொல்ல முடியுமா?
அதற்கு,
தமிழ்நாடு, சமூக பொருளாதார அளவுகளில்,
அரசியல்ரீதியாக ஜனநாயக மட்டம் என்பதில்
கூட, இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து ஒப்பீட்டுரீதியில்
முன்னேறிய மாநிலம் என்பதும் ஒரு
முக்கியக் காரணமாகும்.
பகத்சிங்,
வர்க்க கோணத்தில் இருந்து, சுதந்திர இந்தியா முதலாளிகள் நிலப்பிரபுக்கள்
கைகளில் இருக்குமா, தொழிலாளிகள் விவசாயிகள் கைகளில் இருக்குமா, சுதந்திர
இந்தியாவில், வெறுமனே வெள்ளை நிற
எசமானர்களிடம் இருந்து பழுப்பு நிற
எசமானர்களிடம் அதிகாரம் மாறுவதாக சுதந்திரம் நின்று விடுமா எனக்
கேள்வி எழுப்பினான். அம்பேத்கரும், பெரியாரும், சுதந்திர இந்தியா, மேல்சாதியினர், கீழ் சாதியினராக நிறுத்தப்பட்டுள்ளவர்களை
ஒடுக்குவதாக, அவர்கள் மீது ஆதிக்கம்
செலுத்துவதாக நின்று விடக் கூடாது
என்றனர்.
பெரியாரும்
திராவிட இயக்கமும் ஆதிக்க எதிர்ப்பு சுயமரியாதை
உணர்வுடன், மக்கள் திரள் பிரிவினரை
சமூக அரசியல் நடவடிக்கைகளில் ஈர்ப்பதில்
வெற்றி கண்டனர். அவையும், தஞ்சை மண்டலம் போன்ற
விவசாயப் பகுதிகளில், கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான வறிய உழவர்களின்
எழுச்சியும் இந்தித் திணிப்புக்கு எதிரான
மாணவர் இளைஞர் பேரெழுச்சியும், 60களின்
பிற்பகுதிகளில் வெடித்தெழுந்த தொழிலாளர் போராட்டங்களும், தமிழகத்தில் ஜனநாயகம் வலுப்பெறப் பங்காற்றின.
இன்று இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள்,
அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைப் பணியாளர்கள் உள்ளனர். நகர்மயமாக்கமும் தொழில்மயமாக்கமும் வேகம் அடைந்துள்ளது. மக்கள்
போராட்டங்கள், ஒரு ஜனநாயக சூழலுக்கு
இடம் தந்தன என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்.
ஒன்று அதன் எதிர்மறையாகிறது
திராவிட
இயக்கம், தன் துவக்க கால
முற்போக்கு விழுமியங்களை எல்லாம் தொலைத்துத் தலைமுழுகி,
பிற்போக்கின் கோட்டையாக மாறி நிற்கும் அவலத்தைக்
காண்கிறோம்.
மார்க்சுக்கு
முன்பே வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் இருந்தன. கைகளில் செங்கொடிகளோடும் உதடுகளில்
பொது உடைமை முழக்கத்தோடும் பிறந்த
பாட்டாளி வர்க்கம், 16 மணி நேர 14 மணி
நேர வேலை நாளுக்கு எதிராகப்
போராடி, 12 மணிநேர 10 நேர வேலை நாள்
கொண்டு வந்தது. சிகாகோ தொழிலாளர்களின்
வீரமும் தியாகமும் 8 மணி நேர வேலை
நாள் கொண்டு வந்தது.
வேலை நேரக் குறைப்பு, அதன்
அளவிலேயே சம்பள உயர்வு இல்லையா?
12 மணி நேரத்திற்கு ரூ.120 சம்பாதித்தவர் 10 மணி
நேரத்திற்கு ரூ.120 சம்பாதித்தால், அவர்
20% சம்பள உயர்வு பெறுகிறார் அல்லவா?
மட்டுமின்றி, அவர் தமக்கான நேரத்தையும்
சற்று கூடுதலாகப் பெறுகிறார் அல்லவா? நேரத்தின் மீதான
கட்டுப்பாட்டை மனிதர்கள் மேலும் மேலும் கூடுதலாக
இழக்கும்போது, அவர்கள் சுமை சுமக்கும்
மிருகங்களை விட இழிவான நிலைக்கு
தள்ளப்படுவதாக, மார்க்ஸ், முதலாளித்துவ சமூகம் மீது குற்றம்
சுமத்தவில்லையா?
இன்று,
விசைத்தறி அரங்கில், 4 தறி ஓட்டியவர்கள் 10 தறி
12 தறி ஓட்டுகிறார்கள். அவர்களுக்கு சம்பளமே 12 மணி நேர வேலைக்குத்தான்
தரப்படுகிறது. தமிழ்நாட்டின் பல லட்சக்கணக்கான ஆண்
பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலையை
இழந்து நிற்கிறோம். கொடுமையிலும் கொடுமையாக, இந்த பறி கொடுத்த
நிலை, நம் வாழ்வின் இயல்பான
பகுதியாக நமக்குப் பழகிப் போய்விட்டது.
8 மணி நேர வேலையைத் தொலைத்ததில்,
தமிழ்நாடு, மிகப் பெரிய ஜனநாயகப்
பறிப்புக்கு ஆளாகி உள்ளது. முதலாளித்துவ
சமூகத்தில் 1) உழைப்பு சக்தியை விற்கும்
தொழிலாளர்கள் மத்தியில் போட்டி 2) உழைப்பு சக்தியை வாங்கும்
முதலாளிகள் மத்தியில் போட்டி 3) உழைப்பு சக்தியை வாங்கும்
முதலாளிகளுக்கும் உழைப்பு சக்தியை விற்கும்
தொழிலாளிக்கும் இடையில் போட்டி என்ற
மூன்று போட்டிகள் இருப்பதாக மார்க்சியம் சொல்கிறது. தொழிலாளர்கள் முதலாளிகளுடனான சண்டையில், தமக்கு இடையிலான போட்டியை
முடிவுகட்டுவது அல்லது கட்டுப்படுத்துவது என்பதே
கூட்டு பேர உரிமையாகும். தமிழ்நாட்டில்
கூட்டு பேரம், இன்று என்ன
நிலையில் உள்ளது? 1.45 லட்சம் பணியாளர்கள் கொண்ட
அரசு போக்குவரத்து கழகங்களில், பணி ஓய்வு பெறுபவர்களுக்கு,
பணிக்கொடை, ஓய்வூதியம், விடுப்பு பாக்கிகள் என்ற பணி ஓய்வு
காலப் பயன்கள் கூடக் கிடைப்பதில்லை.
நீதிமன்றம் சென்று, தவணை முறையில்
வாங்க பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது.
பொருள்
உற்பத்தியில் ஒரு சிறு சதவீதம்
சங்கம் அமைக்கும் வாய்ப்புள்ள தொழிலாளர்கள், 90% அமைப்புசாரா நிரந்தரமற்ற தொழிலாளர்கள் என மறு கட்டமைப்பு
நடந்து, தொழிற்சங்க இயக்க எல்லைகளுக்கு வெளியே
90% உழைக்கும் மக்கள் உள்ளனர்.
கூட்டுபேர
உரிமை குற்றுயிரும் குலையிருமாக உள்ளது. இது, ஜனநாயகத்தின்
மீதான பெரும் தாக்குதல் ஆகும்.
தொழிற்சங்க இயக்கத்திற்கு, ரோஜா மலர்களால் பாதை
போடப்படவில்லை. வழி எங்கும் கற்களும்
முட்களும் கண்ணாடித் துகள்களும் உள்ளன.
புரட்சிகர
தொழிற்சங்கமாகச் செயல்படுவது எப்படி?
இந்தியாவில்
ஜனநாயக விழுமியங்கள்/மாண்புகள் இயல்பானவை அல்ல என்றும் அவை
உருவாக்கப்பட்டு பேணி வளர்க்கப்பட வேண்டும்
என்றும் அம்பேத்கர் சொன்னார். மய்ய தொழிற்சங்கம் மூலம்
இணைப்பு சங்கங்களை ஜனநாயகப்படுத்துவதும் அவற்றில் உள்ள உறுப்பினர்களை அரசியல்படுத்துவதுமே,
புரட்சிகர தொழிற்சங்க செயல்பாடு.
நாம் ஆலைத் தொழிலாளர்களை, கிராமப்புற
வறியவர்கள் மத்தியில் பணியாற்ற வைத்துள்ளோம். இப்போது, அனைத்தும் தழுவிய விவசாய நெருக்கடி
என்ற பின்னணியில், நமது பிரிக்கால் தொழிற்சங்கத்தை
விவசாயிகளுக்கு ஆதரவான வேலை நிறுத்தத்தில்
ஈடுபட வைத்தோம். தண்டனையாய் 8 நாட்கள் சம்பளம் பிடிக்கப்பட்டது.
கால வரையற்ற பட்டினிப் போராட்டம்,
சட்டமன்ற முற்றுகை எனத் தொழிலாளர் போராட்டத்தில்
தொழிலாளர் வர்க்க முத்திரையுடன் உயிர்த்துடிப்பு
ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளோம்.
பிரிக்காலில்,
இரண்டு தோழர்கள் டிசம்பர் 3, 2015 முதல் ஆயுள் தண்டனை
பெற்று சிறையில் உள்ளனர். உச்சநீதிமன்ற வழக்கு தேதி ஆகஸ்ட்
25க்கும் அப்பால் தள்ளிப் போய்
உள்ளது. 25 பேர் விடுதலைக்கு எதிராக
மேல் முறையீடு ஒன்றை, நிர்வாகம் தாக்கல்
செய்துள்ளது. 80க்கும் மேற்பட்டோர் வேலை
நீக்க வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றிலும் நிர்வாகம்
புதிய புதிய வம்புகள் செய்கிறது.
சங்கத்தின் முதன்மை நிர்வாகிகள் சிலர்,
பிளாண்ட் மாற்றம், ஷிப்ட் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் உள்ளிட்ட 100 பேருக்கும் மேலான தொழிலாளர்களை ஒரு
பிளாண்டிலிருந்து வேறு பிளாண்டுக்கு மாற்றி
நிர்வாகம் பந்தாடி உள்ளது. பெண்கள்
பிளாண்ட் மாற்றம் செய்யப்பட்டதால் தொழிலாளர்கள்
மிகுந்த சோதனைக்கு உள்ளாகி உள்ளனர். 2018 துவக்கத்தில்
அடுத்த ஒப்பந்தம் நமது சங்கத்தோடு போடக்
கூடாது என நிர்வாகம் காய்
நகர்த்துகிறது.
இந்த நேரம், தொழிலாளர்கள், வேலை
நிறுத்தப் போராட்டம் என்றால், எவரும் வேலைக்குப் போகாத
நிலை உருவாக வேண்டும் என்கின்றனர்.
நமது சங்கத்தில் 900 தொழிலாளர்கள் உள்ளனர்; நமது சங்கத்தில் இல்லாத
தொழிலாளர்கள் 400 பேர் உள்ளனர். அந்த
400 பேர் வேலைக்கு சென்றாலும், நாம் வேலை நிறுத்தம்
செய்யத் தயாராய் இருக்க வேண்டும்
என அவர்களிடம் சொல்கிறோம். காலமும் கடலலையும் எவருக்கும்
காத்திருப்பதில்லை. அதேபோல், போட்டி நிறைந்த சந்தை
யில், 800/900 பேரின் வேலை நிறுத்தத்தைச்
சில நாட்கள் தாங்குவதே கூட
நிர்வாகத்திற்கு பேரிழப்பு. மொத்த ஆலையும் மூட
முடிந்தால் மட்டுமே போராட்டம், வெற்றிக்கு
உத்தரவாதத்துடன் போராட்டம் என்ற கருத்துக்கள் போராட்டமே
நடத்தாமல் இருப்பதைத்தான் உறுதி செய்யும் என
அழுத்தம் திருத்தமாய்த் தொழிலாளர்களிடம் சொல்கிறோம். முதலாளிகளை, முதலாளித்துவத்தை சளைக்காமல் எதிர்ப்பது போல், தொழிலாளர்கள் மத்தியில்
உள்ள பலவீனமான கருத்துக்களுக்கு எதிராகவும் தயங்காமல் போராடுகிறோம். வேறு இடங்களில், சங்கம்
கையை விட்டுப் போனாலும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக நின்றுள்ளோம். சட்டங்கள் பிற்போக்காய் திருத்தப்படுகிற நீர்த்துப் போக வைக்கப்படுகிற சூழலில்,
நாம், முற்போக்கான சட்டத் திருத்தங்களுக்காக விடாப்பிடியான
போராட்டங்கள் நடத்தி வருகிறோம். நமது
கருத்துக்கள், நமது போராட்ட வடிவங்கள்,
சங்கம் தொழிலாளர்கள் தொடர்பான நமது மாறுபட்ட அணுகுமுறை
ஆகியவற்றால், நாம் புரட்சிகரத் தொழிற்
சங்கமாகச் செயல்படப் பார்க்கிறோம்.
விவசாய
நெருக்கடி
சில பத்தாண்டுகால உலகமயச் செயல்பாடுகள், உலகமயப்
பயனாளிகளான சிலரை, நாம் பெரிதும்
முன்னேறுவோம் என நினைத்த சில
பிரிவினரை, இன்று பாதிப்புக்குள்ளானவர்களாக்கி உள்ளது. மராத்தா, படேல்,
ஜாட்கள் ஆகியாரின் இட ஒதுக்கீடு போராட்டம்,
அவர்களும், தம் வாழ்வில் முன்னேற்றம்
இல்லை என உணர்வதைக் காட்டுகிறது.
விவசாய சமூகத்தின் மேல் நிலைப் பிரிவுகளும்
கூடப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு அரை மணி
நேரமும் ஒரு விவசாயி தற்கொலை
செய்து கொள்கிறார்.
2003ல் விவசாயக் குடும்பத்தின்
சராசரி கடன்
ரூ.12,885 என இருந்தது 2013ல்
ரூ.47,000 என 373% உயர்ந்துள்ளது.
நாட்டின் 83% விவசாயக் குடும்பங்கள் ஒரு ஹெக்டருக்கு கீழ்
நிலம் வைத்துள்ளனர்.
இன்னமும் 7% விவசாயக் குடும்பங்கள் கைவசம் 46% நிலமும் 2% விவசாயக் குடும்பங்களிடம் 24% நிலமும் உள்ளன.
விவசாயம் அடிவாங்க, விளை நிலங்கள் குறைய,
ஏழை சிறுகுறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் சிக்கி உள்ளனர்.
விவசாயக் கடன் தள்ளுபடியே கூடாது
என நிதி அமைச்சர் அருண்
ஜேட்லியும், ரிசர்வ் வங்கி ஆளுநர்
உர்ஜித் படேலும் சொல்லும் போது,
பெருமுதலாளிகளுக்கு தரப்பட்ட வாராக் கடன்கள் மோடி
ஆட்சிக்கு வந்த போது ரூ.1,73,800
கோடி என இருந்தது, 2017ல்
ரூ.8 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.
ரிசர்வ் வங்கி இந்த வாராக்
கடன்களில் 50% தள்ளுபடி செய்துவிடலாம் (ஹேர்கட் - முடி வெட்டுதல் செய்யலாம்)
என்கிறது.
மூர்க்கமாக முன்னேறிப் பாயும் மூலதனத்துடன், அரசு
உதவியுடன் முன்னேறும் மூலதனத்துடன், சிறுவீத விவசாயம் போட்டியிடுவது
முடியாத செயலாகும்.
இந்த காலகட்டத்தில், அனைத்து கடன்களிலிருந்து விடுதலை,
செலவுக்கு மேல் 50% கூடுதலாய்க் கொள்முதல் விலை என்ற இரண்டு
மய்யக் கோரிக்கைகளுடன் (கிசான் முக்தி மோர்ச்சா)
விவசாயிகள் விடுதலை பயணம் ஒன்று
நடைபெறுகிறது.
இந்தப்
பின்னணியில், விவசாயிகள் மத்தியில் இன்று எழுகிற இயக்கங்களில்
குலாக், பணக்கார விவசாயிகள் தலைமை
இருக்கிற போதும், ஆழமடைந்துவரும் முற்றிவரும்
நெருக்கடி என்ற கோணத்தில், நாம்
இந்த விவசாயப் போராட்டங்களை ஆதரிக்கிறோம். அதேநேரம், விவசாய கிராமப்புற தொழிலாளர்களின்,
ஏழை விவசாயிகளின் நில உரிமை, குடிமனை
உரிமை, வேலை, கூலி, கவுரவம்,
நல்வாழ்க்கை என்ற கோணத்திலிருந்து, நமது
கிராமப்புற இயக்கங்களை வலுப்படுத்தவும் வேண்டி உள்ளது.
இந்த விவசாய நெருக்கடி, உணவுப்
பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கிறது, பெரும்
எண்ணிக்கையில் கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றி
கூலி குறைய காரணமாய் இருக்கிறது.
இந்த சாரமான செய்திகளை, விவசாய
நெருக்கடி பற்றி அதிகரித்த கரிசனம்
காட்டுகிற தொழிலாளர்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல
வேண்டியுள்ளது.
டிரம்ப்
தேசத்தின் மேலை உலகத்தின் சூழல்
ஆகஸ்ட்
2015ல் குடியரசுத் தலைவர் ஆகும் டிரம்ப்பின்
முயற்சிக்கு, அந்த பிரச்சார இயக்கத்திற்கு
தலைமை தாங்கிய ஸ்டீவ் பேனன்,
பேனன் த பார்பரியன் என
அழைக்கப்பட்டவர், 2016 டிரம்ப் வெற்றிக்குப் பிறகு,
தலைமை போர்த்தந்திர ஆலோசகராக நியமிக்கப்பட்டவர், ஆகஸ்ட் 2016ல் தம் பதவியை
விட்டு ஓடும் நிலை உருவானது.
இப்போது
டிரம்ப், போர்கள் வேண்டாம் எனச்
சொல்வதில்லை. இப்போது டிரம்ப், நிதி
மூலதனத்தோடு நிழல் சண்டை கூட
வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார். ஸ்டீவ் பேனன்,
தாங்கள் எதற்காக டிரம்பை குடியரசுத்
தலைவர் ஆக்கப் போராடினோமோ, வென்றோமோ,
அந்த லட்சியம் முடிந்துவிட்டது என்றும் கேபிடல் ஹில்
மீடியா மற்றும் கார்ப்பரேட் அமெரிக்காவுக்கு
எதிரான சண்டை தொடரப்பட வேண்டும்
என்றும் சொல்கிறார். டிரம்ப் இராணுவ தொழிலிடம்
நிதி மூல தனத்திடம் சமாதானமாகி
விட்டார். குடியரசுக் கட்சியுடனும் சமாதானமாகி வருகிறார். அய்க்கிய அமெரிக்காவின் பாஸ்டனின் நிறவெறிக்கு இனவெறிக்கு எதிராக 40,000 பேர் திரண்டு டிரம்பைத்
திணறடிக்கிறார்கள். குறைந்தபட்ச சம்பளம், மிதமிஞ்சிய வருமான வேறுபாடுகள் களைதல்,
வேலை நேரக் குறைப்பு என்ற
கோரிக்கைகளும், சிக்கன நடவடிக்கை எதிர்ப்பும்
மேலை உலகில் வலுவாகவே எழுந்துள்ளன.
எல்லாம் வலதுசாரிமயம் எனக் கதை முடியவில்லை.
மோடியும்
வெல்லப்பட முடியாதவர் அல்ல
மோடியின்
பலங்களும் எதிர்க்கட்சிகளின் பலவீனங்களும் நாடறிந்தவை. ஆனால், நாம் மோடியின்
பலவீனங்கள் மீது கவனம் செலுத்த
வேண்டும்.
மோடியால்,
விவசாய நெருக்கடியை நிச்சயமாய்த் தீர்க்க முடியாது. ரிசர்வ்
வங்கியின் ரகுராம் ராஜன் சொன்னது
போல், விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேறுமாறு மட்டுமே
சொல்ல முடியும். நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில்
மோடி மேற்கொள்ளப் பார்க்கும் பெரும் தொழில் குழும
ஆதரவு மாற்றங்கள், வேலை உறுதித் திட்டத்தை
நீர்த்துப் போக வைப்பது ஆகியவை
கிராமப்புற விவசாய சமூகத்தின் பல்வேறு
பிரிவினரின் எதிர்ப்பை நிச்சயம் தேடித் தரும்.
மோடி சிக்கிக் கொண்டுள்ள அடுத்த பெரிய பிரச்சனை,
அவர் சொன்னபடி அவரால் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான
வேலை வாய்ப்புக்களை உருவாக்கித் தர முடியாததே ஆகும்.
இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பு, 2017 ஜனவரி முதல் ஏப்ரல்
வரை 15 லட்சம் வேலைகள் ஒழிந்துள்ளதாகத்
தெரிவிக்கிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தொழில்
40 லட்சம் பேருக்கு வேலை தரும் ரூ.9,75,000
கோடி மதிப்புள்ள தொழில். இங்கு 2021க்குள்,
சாஃப்ட்வேர் டெக்னிஷியன், குவாலிட்டி அனலிசிஸ் இன்ஜினியர், மேனுவல் டெக்னிசியன், சிஸ்டம்
மேனேஜர், அய்டி ஆபரேஷன் மேனேஜர்,
சிஸ்டம் ஆப்பரேட்டர், கஸ்டமர் செர்வீசஸ் எக்சியூட்டிவ்,
டெக்னிக்கல் சப்போர்ட் வேலை பார்ப்பவர்கள், டேட்டா
ஆபரேட்டர், மெயின்டனன்ஸ்
வேலைகள் என 6.21 லட்சம் வேலைகள்
ஒழியும் என்கிறார்கள். தானியங்கி முறையும், செயற்கை நுண்ணறிவும், பேரிடியாய்
விழும் எனப்படுகிறது. மோடி வெற்று வசனம்
பேசுகிறார். இளைஞர்கள் வேலை தேடாதீர்கள், வேலை
அளிப்பவராக மாறுங்கள் என்கிறார்.
பன்மைத்துவம்,
இந்தியாவின் மரபணுவில் உள்ளது. ஒற்றை இந்தியா
முயற்சிகளில் தற்காலிக வெற்றிகள் பெற முடிந்த மோடியால்,
இந்த வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. இசுலாத்திற்கு
எதிரான, தலித்துக ளுக்கு எதிரான சங்
பரிவாரின் போர், இந்தி திணிப்பு,
மாநில உரிமைகள் பறிப்பு, மேல் சாதி பார்ப்பனீய
ஆதிக்கம், கடும் நெருக்கடியை, பலத்த
எதிர்ப்புக்களை நிச்சயம் உருவாக்கும்.
கருப்புப்
பண எதிர்ப்பு நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள்
மதிப்பகற்றி, ரூ.3 லட்சம் கோடி
கருப்புப் பணத்தைக் கைப்பற்றியதாக மோடி தனது 56 இன்ச்
மார்பைத் தட்டி தம்பட்டம் அடிக்கிறார்.
ஆனால் ரிசர்வ் வங்கியோ, திரும்ப
வந்த பணத்தை இன்னமும் எண்ணி
முடிக்கவில்லை என்கிறது. சுப்ரதா ராயின் சஹாரா
நிறுவனம் முதலீட்டாளர் பணத்தைத் திரும்பத் தர வேண்டும் என
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 5 ஆண்டுகள் முடிகிறது. சஹாரா நிறுவனம், செக்யூரிட்டி
எக்ஸ்சேஞ்கள் பீரோவிடம் ஒப்படைத்த தொகை ரூ.14,489 கோடி.
31.03.2017 வரை ரூ.85.02 கோடி மட்டுமே முதலீட்டாளர்களால்
திரும்ப வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மோடியால், உச்சநீதிமன்றத்தால், முதலீடாகப் போடப்பட்ட கருப்புப் பணம் பல ஆயிரம்
கோடியை யாருடையது என இன்று வரை
கண்டுபிடிக்க முடியவில்லை ஆகவே, மிகப் பெரிய
தேர்தல் வெற்றிகள், மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கள்,
மிகப் பெரிய ஏமாற்றங்கள், மிகப்
பெரிய போராட்டங்கள், மிகப் பெரிய தோல்விகள்
என முடியவே நிறைய வாய்ப்புள்ளன.
பழனிச்சாமி
அரசு வெளியேற வேண்டும்
ஜெயலலிதா
பெயரால் ஆட்சி செய்பவர்கள், ஜெயலலிதா
சொன்னபடி, அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு
மோசடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை
ரத்து செய்து, பழைய ஓய்வூதியம்
கொண்டு வரவில்லை. மக்கள் விரோத துரோக
அரசை வெளியேற்றும் போராட்டங்களில், தொழிலாளி வர்க்கம் முன்னணிப் பங்காற்ற வேண்டும். தருணத்தைக் கைப்பற்ற ஏஅய்சிசிடியு தோழர்கள் தயாராக வேண்டும்.
தமிழ்நாட்டில்
சமீபத்தில் ஒரு மய்யத் தொழில்
சங்கத்தினர் முதலமைச்சரைச் சந்தித்துள்ளனர். எம்ஜிஆர் நூற்றாண்டு கொண்டாடும் நேரம், எம்ஜிஆர் கொண்டு
வந்த சட்டப் படி, குறைந்தபட்சம்
அரசு நிறுவனங்களில் 2 தொடர் வருடங்களில் 480 நாட்கள்
வேலை செய்தவர்களை நிரந்தரம் செய்யுமாறு கோரினர். முதல்வர் நாங்கள்தான் 58 நாட்கள் ஆனால் ஊஸ்ட்
(வெளியேற்றி) செய்து விடுகிறோமே என்றாராம்!
விவரமின்மையா, எகத்தாளமா, எது என நமக்குத்
தெரியவில்லை. ஆனால், தொழிலாளர் விரோத
பழனிச்சாமி அரசாங்கம் ஊஸ்ட் செய்யப்பட வேண்டும்!
வெளியேற்றப்பட வேண்டும்!