தலையங்கம்
கார்ப்பரேட்
கொள்ளைக்கு பலியாக்கப்பட்ட விவசாய நிலங்கள்
தமிழக மக்களின் வேலைவாய்ப்பு, நல்வாழ்வு ஆகியவை பற்றி பழனிச்சாமி
அரசாங்கத்தின் அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, அதிகாரிகளோ அக்கறை கொண்டவர்கள் இல்லை.
ஆனால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பின்தங்கி
விட்டது, மிக மோசமான கமிஷன்,
கட்டிங் கலாச்சாரத்தால், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தொழில்கள்,
ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்குச்
சென்று விடுகின்றன, பெரிய செலவில் நடத்தப்பட்ட
முதலீட்டாளர் மாநாட்டில் சொல்லப்பட்ட முதலீடுகள் என்ன ஆயின என்று
ஸ்டாலினும் ராமதாசும் இன்னும் சிலரும் மாறி
மாறி கேட்கிற கேள்விகளுக்கு பதில்
சொல்லியாக வேண்டும் என்று நினைத்தார்களா? அல்லது
நெடுவாசல், கதிராமங்கலம், ஹைட்ரோகார்பன், ஓஎன்ஜிசி என்று ஓயாத போராட்டங்கள்
நடக்கும்போது, கூடவே பெட்ரோகெமிக்கல் திட்டம்
வேண்டாம் என்று கோரும் போராட்டமும்
நடக்கட்டும் அல்லது மக்கள் கவனம்
அவற்றை விட்டுவிட்டு இதற்கு மாறட்டும் என்று
நினைத்தார்களா? காவிரி டெல்டா மாவட்டங்கள்
பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கப்பட
வேண்டும் என்ற தமிழக விவசாயிகள்
கோரிக்கையை தவறாகப் புரிந்துகொண்டார்களா? கடலூரிலும் நாகப்பட்டினத்திலும்
23,000 ஹெக்டேர் நிலம் பெட்ரோலியம், கெமிக்கல்ஸ்
மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் முதலீட்டு மண்டலமாக மாற்றப்பட்டுவிட்டது. விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கும்
இந்த இரண்டு மாவட்டங்களின் 45 கிராமங்கள்
இந்த மண்டலத்துக்குள் அடங்கும். தமிழ்நாட்டின் வீட்டு வசதி மற்றும்
நகர்ப்புற வளர்ச்சித் துறை இதற்கான அரசாணையை
வெளியிட்டுவிட்டது. தமிழ்நாடு நகரம் மற்றும் கிராமம்
திட்டமிடல் சட்டத்தின் கீழ் இப்படிச் செய்யப்பட்டுள்ளது.
‘தவவாழ்வு’ வாழ்ந்த
ஜெயலலிதா ஆட்சியில் 2012ல் இந்தத் திட்டம்
முன்வைக்கப்பட்டது. பெட்ரோலியம், கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் முதலீட்டு
மண்டலத்தில் 7.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்
எனச் சொல்லப்பட்டது. தமிழக விவசாயிகளுக்காக இப்போது
கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அய்முகூ ஆட்சியின், விவசாயிகள்
பிரச்சனைகளுக்காக முழுஅடைப்பு வரை சென்ற திமுகவும்
பங்கேற்றிருந்த ஆட்சியின் அமைச்சரவை 2012லேயே இந்தத் திட்டத்துக்கு
ஒப்புதல் தந்தது. அந்த நேரம்,
மத்தியில் இந்தத் துறைக்கு அமைச்சராக
இருந்தவர் மாண்புகள் பலமிகு மு.க.அழகிரி. அதாவது, அஇஅதிமுக,
திமுக, காங்கிரஸ் என்ற மூன்று கட்சிகளும்
சேர்ந்து, ‘கருத்தொற்றுமை’
கண்டு, கடலூர், நாகப்பட்டினம் விவசாயிகளின்
வாழ்வாதாரத்துக்கு, தமிழ்நாட்டின் விவசாயத்துக்கு குழிபறிக்கும் ஒரு திட்டத்தை முன்னகர்த்தின.
இன்று காங்கிரஸ் இல்லை, திமுக இல்லை.
மாநிலத்தில் அஇஅதிமுக, காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாக்கப்
போவதாகச் சொல்லும் பாஜக மத்தியில் ஆட்சியில்
உள்ளன. ஆயினும் தமிழக விவசாயிகள்
உயிர்குடிக்கும் அந்தத் திட்டத்துக்கு மட்டும்
எந்த சிக்கலும் சங்கடமும் இல்லை. வர்தா புயல்,
வறட்சி என எந்த இக்கட்டிலும்
மாநிலம் கேட்ட நிதியை தராத
மோடி அரசு, விவசாயிகள் கடன்
தள்ளுபடி மாநில அரசுதான் செய்ய
வேண்டும் என்று சொல்லி, போராடும்
விவசாயிகளை மேலும் மேலும் அலட்சியம்
செய்து, அவர்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தும்
பாஜகவின் மத்திய அரசுதான், அரசு
- தனியார் பங்கேற்பு புரிதலில் இந்தத் திட்டத்துக்கான உள்கட்டுமான
வசதிகள் உருவாக்க ரூ.1,146 கோடி தரப் போகிறது.
இந்த முதலீட்டு மண்டலங்களை அமைப்பதில் தடைகள் ஏற்பட்டால் அவற்றை
அமைச்சகம் சமாளிக்கும் என்று மத்திய இணை
அமைச்சர் சொல்கிறார்.
திட்டத்துக்கு
எழுந்துள்ள எதிர்ப்பு பற்றி கேட்டபோது, துறை
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தனக்கு
இந்த மண்டலம் பற்றி தெரியாது
என்றும் முதலமைச்சருடன் பேசி ‘அடுத்த கட்ட
நடவடிக்கை’ எடுப்பதாகவும்
சொல்கிறார். மத்திய இணைஅமைச்சர் சொல்லியிருப்பதற்கு
ஏற்ப, முதலமைச்சருடன் பேசி மாநில அமைச்சர்
நடவடிக்கை எடுப்பார் என்று நாம் நிச்சயம்
நம்பலாம்.
இந்தத்
திட்டத்தை செயல்படுத்துகிற நாகார்ஜ÷னா எண்ணெய் கார்ப்பரேசன்
நிறுவ னம், நாகார்ஜ÷னா பெர்டிலைசர்ஸ் அண்டு
கெமிக்கல்ஸ் நிறுவனமும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகமும்
இணைந்து உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக இதுவரை
ரூ.6,090 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதற்கு முந்தைய அஇஅதிமுக
அரசு தமிழக விவசாயத்துக்கு கேடு
விளைவிக்கும் இந்தத் திட்டத்துக்காக பெரும்செலவு
செய்துள்ளது.
45 விவசாய
கிராமங்களின் விவசாயத்தை அழிக்க தமிழக அரசு
ஆணையிட்டுள்ளபோது, கடலூர் சிப்காட்டில் இயங்கி
வருகிற ரசாயன ஆலை ஒன்றின்
கழிவு உப்பனாற்றில் விடப்படுவதாக செம்மாங்குப்பம் மக்கள் புகார் எழுப்புகின்றனர்.
நீர் மாசுபாடு, கண் எரிச்சல், அரிப்பு
போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகச் சொல்கின்றனர். இதுபோன்ற பிரச்சனைகள் எழக் கூடாது என்பதற்காகவே
மொத்த பகுதியையும் விவசாயம் அல்லாத மண்டலமாக அறிவிக்கிறார்கள்.
அங்கு நீர், நிலம் என
எதுவும் மக்களுக்குச் சொந்தமாக இருக்காது. அனைத்தும் கார்ப்பரேட்டுகள் வசம் இருக்கும்.
வீட்டு
வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில்
திட்டமிடாப் பகுதிகளில் விவசாயப் பயன்பாட்டில் இருந்து விவசாயமில்லா பயன்பாட்டிற்கு
நிலப் பயன்பாட்டினை மாற்றம் செய்வதற்கான நடை
முறையை அறிமுகப்படுத்துதல் என்று ஒரு துணைத்
தலைப்பு இருக்கிறது. இதற்கான விதிமுறைகள் வரையறுக்கப்பட்டு
அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அந்தத் தலைப்பில் சொல்லப்படுகிறது.
அப்படியானால், தமிழ்நாட்டில் விவசாயம் அல்லாத மண்டலத்தை உருவாக்குவதில்
இந்தத் துறை கவனம் செலுத்துகிறது.
துறையின் கொள்கை குறிப்பு சொல்கிற
திட்டங்களில், இந்த விவசாய விரோதத்
திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முன்னுரிமை
தருகிறது. (இப்படி ஏதாவது ஒரு
திட்டத்தில்தான் ஓ.பன்னீர்செல் வம்
கிணறு வெட்டியிருப்பாரோ? அதிலும் போராட்ட பூதம்
புறப்பட்டுவிட்டது).
மத்திய
அரசின் நிர்ப்பந்தத்தாலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளதாக
ராமதாஸ் சொல்கிறார். இந்த விசயத்தில் அப்படி
இருக்க வாய்ப்பு குறைவு. துறை அமைச்சர்
சொல்வதுதான் நிஜம். புதிய அமைச்சர்களுக்கு
இந்தத் திட்டம் பற்றி சரிவர
தெரியவில்லை.இப்போது மொத்தமாக ஒரு
‘கணக்கு’
போட்டிருப்பார்கள்.
அதனால் அரசாணை போட்டிருப்பார்கள்.
வயிற்றுக்குச்
சோறு கேட்டு சாமான்ய மக்கள்
காத்திருக்கும்போது, எங்கள் வாகனங்களுக்கும் தொழில்
செயல்பாடுகளுக்கும் எரி பொருள்தான் முக்கியம்,
கார்ப்பரேட்டுகள் லாபம் பார்க்க உகந்த
சூழல் ஏற்படுத்துவதே எங்கள் லட்சியம் என்கிறார்கள்
ஆட்சியாளர்கள். புதுக்கோட்டையிலும் தஞ்சையிலும் பற்றி யெரியும் விவசாயப்
போராட்டத் தீ நாகைக்கும் கடலூருக்கும்
பரவி ஆட்சியாளர்களை சுட்டெரிக்கத்தான் போகிறது.
(மாலெ தீப்பொறி2017 ஆகஸ்ட் 01 - 15)