COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 30, 2013

10

கட்டுரை

விவசாய வளர்ச்சிக் கடன் விவசாயிகளுக்கு இல்லை

ஜி.ரமேஷ்

விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) இந்திய கிராமங்களை வளர்ச்சி பெறச் செய்யும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சிறப்புச் சட்டத்தின் வாயிலாக இந்தியன் ரிசர்வ் வங்கியால் 12.07.1982ல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்தியா முழுவதும் இதன் கிளைகள் உள்ளன. விவசாயத்தை மேம்படுத்தவும் கிராமப்புறப் பொருளாதாரத்தை முன்னேற்றவும் கடன் வழங்குவதே நபார்ட் வங்கியின் பிரதான நோக்கம் என்று சொல்லப்படுகிறது. அதற்கான கொள்கைகள், திட்டங்கள் உருவாக்கி செயல்படுத்துவதற்கான அனைத்து அதிகாரமும் நபார்ட் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் 99 சதவீதப் பங்குளை ரிசர்வ் வங்கி இந்திய அரசாங்கத்திற்கு விற்றுள்ளது. குடிசைத் தொழில், சிறு தொழில், கிராமத் தொழில்களை வளர்ப்பதற்கு கடன் நிதி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் நபார்ட் வங்கி. அரசு கூட்டுறவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கிகள், மண்டல கிராம வங்கிகள், மாநில அரசுகளின் துறைகள் போன்றவற்றின் மூலம் நிதி உதவியைச் செய்கிறது நபார்ட்.

முப்பதாண்டு காலத்தில் மிகப் பெரிய அளவில் நபார்ட் தன்னுடைய சேவை செய்து வந்துள்ளது என்கின்றன புள்ளி விவரங்கள். 15 லட்சத்து 74 ஆயிரத்து 800 மில்லியன் ரூபாய் அளவிற்கு 2005 - 2006 வரை விவசாயக் கடன்கள் வழங்கியுள்ளது நபார்ட் வங்கி. மத்திய அரசு கிராமப்புற உள்கட்டுமான வளர்ச்சி நிதி (ஆர்அய்டிஎஃப்) என்ற ஒன்றை உருவாக்கி நபார்ட் வங்கி மூலம் வழங்கி வருகிறது. நீர்ப்பாசனம், கிராமப்புறச் சாலைகள், பாலங்கள், சுகாதாரம், கல்வி, மண் பாதுகாப்பு, தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களை ஆர்அய்டிஎஃப் மூலம் நபார்ட் செயல்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட இதுபோன்ற திட்டங்களுக்கு நபார்ட் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளது. (நபார்ட் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ள திட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு வட்டி 6.5%. விவசாயிகளுக்கு 7%).

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் போன்றவற்றில் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் பணத்தையெல்லாம் உள்நாட்டு, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுப்பதற்காக ஏற்கனவே மன்மோகன், மான்டேக் சிங், சிதம்பரம் வகையறாக்கள் புதிய பென்சன் திட்டம், புதிய இன்சூரன்ஸ் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த மெத்தப்படித்த மேதாவிகள் கிராமப்புற மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள நபார்ட் வங்கியின் நிதியின் மீது கை வைத்துள்ளார்கள்.

மத்திய அரசு 2011 - 2012 நிதியாண்டில் நபார்ட் வங்கியின் கிராமப்புற உள்கட்டுமான வளர்ச்சி நிதிக்காக ரூ.18000 கோடி ஒதுக்கியது. அதில் ரூ.2000 கோடி கிட்டங்கிகள் வசதிகள் செய்வதற்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டது. சர்வதேச ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்கிற நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் ஒரு புதிய குழுவிடம் இந்த கிட்டங்கிகள் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 2000 கோடி ரூபாயை ஒப்படைத்துள்ளார்கள்.

இதற்காகவே, 27.09.2011ல் நபார்ட் வங்கி, நபார்ட்டின் கொள்கைகளுக்கு மாறாக, ஒரு சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமலேயே வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கை தனியார் நிறுவனங்களையும் நபார்ட்டின் திட்டங்களில் இணைத்துக் கொள்ளலாம் என்கிறது. நபார்ட் வங்கி மூலம் கிராமப்புற உள்கட்டுமான வளர்ச்சி நிதியின் கீழ் கடன் பெறும் அரசு மற்றும் வங்கிகளுக்கு வட்டி 8 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. 23.12.2011ல் மற்றொரு சுற்றறிக்கை போடப்படுகிறது. இதுவும் ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலேயே. இரண்டாவது சுற்றறிக்கை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி 6.5% என்று கூறுகிறது. இதன் மூலம் 1.5% வட்டி தனியார் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்து சலுகை வழங்கியுள்ளார்கள். நபார்ட் வங்கி இந்தத் திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு 759 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. இதில் சுபம் லாஜிஸ்டிக் லிட் என்கிற நிறுவனம் நபார்ட் வங்கியின் மூலம் கிட்டங்கிகள் கட்டுவதற்கு என்பதற்காக 115 கோடி ரூபாய் கடன் 6.5% வட்டியில் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் நபார்ட் அல்லாமல் வேறு நிதி நிறுவனங்களின் மூலம் கடன் பெற்றிருந்தால் 10.5% வட்டியில்தான் கடன் பெற்றிருக்க முடியும். இதே நிறுவனம் அரசாங்கத்தின் வேறொரு திட்டத்தின் மூலம் 15% மானியத்தில் 18 கிட்டங்கிகள் கட்டுவதற்கு 180.87 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. கிராமின் பந்தாரன் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் கிட்டங்கிகள் கட்டுவதற்கு 15% முதல் 33.33% வரை மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

சுபம் லாஜிஸ்ட்டிக் நிறுவனம் கல்பதாரு குழுமத்தின் துணை நிறுவனமாகும். சுபம் லாஜிஸ்ட்டிக் நிறுவனம் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டாலும் இந்திய முழுவதும் இது தன் காலைப் பதித்துள்ளது. கிட்டங்கிகளைக் கட்டி உணவு தானியப் பொருள்களை பாதுகாத்து வருகிறார்களாம். விவசாயிகளின் நலனுக்காகவே தாங்கள் சேவை செய்து வருவதாக அதன் செயல் இயக்குநர் ஆதித்யா பாஃப்னா சொல்கிறார். இவரை நபார்ட் கன்சல்ட்டன்சி சர்வீஸ் பிரை வேட் லிட் என்று நபார்ட் வங்கியின் துணை அமைப்பிற்கு இயக்குநராக நியமித்துள்ளார்கள்.

ரிசர்வ் வங்கி, தனியார் நிறுவனங்களுக்கு நபார்ட் குறைந்த வட்டியில் கடன் கொடுத்ததால் ஏற்பட்ட இழப்பை கட்டச் சொல்லியுள்ளது. இதனால் நபார்ட் வரவு செலவுக் கணக்கில் 150 கோடி ரூபாய் வரை இடிக்கும். நபார்ட் சேர்மனாக இருக்கும் பிரகாஷ் பக்ஷி என்பவர்தான் ரிசர்வ் வங்கியின் அனுமதியில் லாமல் தனியார் நிறுவனங்களுக்கு கடன் வழங்கினார் என்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை நம் ஆட்சியாளர்கள் அமல்படுத்தி வால்மார்ட் போன்ற நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கிற பின்னணியில் இது போன்ற தனியார் நிறுவனங்களுக்கு உணவு தானிய கிட்டங்கிகளைக் கட்டுவதற்கு தள்ளுபடி வட்டி விகிதத்தில் கடன் கொடுக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

சமீபத்தில், விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அவ்வாறு குறைத்தால்தான் விவசாயத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றார் திருவாளர் மன்மோகன். நாட்டில் பாதி பேருக்கு மேல் விவசாயத்தை நம்பி இருக்கும் சூழ்நிலையில், விவசாயத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் சொல்கிறாரே, அப்படியென்றால் வால்மார்ட் கம்பெனியிடம் நைலான் கயிறு வாங்கி விவசாயிகளைத் தூக்கு மாட்டிக் கொள்ளச் சொல்கிறாரா என்று ஒருவர் கேட்டார். ஏற்கனவே உணவுப் பாதுகாப்புச் சட்ட மசோதா தூங்கிக் கொண்டிருக்கிறது. பொது விநியோகத்தைக் காலி செய்வதற்காகவும் மானியங்களை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்காகவும் பொருட்களை மானிய விலையில் மக்களுக்குக் கொடுத்து வந்ததை நிறுத்திவிட்டு, உங்கள் பணம் உங்கள் கையில் என்று சொல்லி மானியத்தைப் பணமாக மக்களிடம் வங்கிகள் மூலம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இனி உணவு தானியங்களை விவசாயிகளிடம் இருந்து அவர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் அரசு வாங்கி அரசு கிட்டங்கிகளில் சேமித்து வைத்து பின்னர் அவற்றை மானிய விலையில் மக்களுக்கு பொது விநியோகத்தின் மூலம் வழங்க வேண்டிய தேவையில்லை. அதனால், இனி அரசின் உணவு தானியக் கிட்டங்கிகள் தேவையும் இல்லை. அதற்காகவே நபார்ட் வங்கி மூலம் அரசுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கிட்டங்கிகள் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதனால் நபார்ட் வங்கித் திட்டத்தின் மூலம் உள்ள பணத்தை தனியார்களுக்குக் கொடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களைக் கொழுக்கச் செய்யத் திட்டமிட்டுவிட்டார்கள்.

முதலில் கிராமப்புற உள்கட்டுமான வளர்ச்சி நிதியில் கிட்டங்கிகள் கட்டுவதற்காக என ஒதுக்கப்பட்ட நிதியை நபார்ட் வங்கியின் கொள்கைக்கு மாறாக, தனியாருக்குத் தாரை வார்க்க ஆரம்பித்துள்ளவர்கள், படிப்படியாக இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புற மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியையும் தனியார் கையில் முழுவதுமாகக் கொடுத்து விடுவார்கள். மேம்பாலங்கள், சாலைகள், தண்ணீர்த் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த இனி நபார்ட் வங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும். அதன் பின்னர், அவர்கள் அந்தப் பணத்தைச் செலுத்தாவிட்டாலும் அதை வாராக் கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்வார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் சலுகைகள் பெறுவது மட்டுமின்றி, கிராமங்களில் அவர்கள் கட்டும் மேம்பாலங்கள், சாலைகள், தண்ணீர்த் தொட்டிகள் எல்லாவற்றிற்கும், இப்போது தங்க நாற்கரச் சாலைகளில், டோல்கேட் அமைத்து நம்மிடம் வசூல் செய்கிறார்களே அதே போல், வசூல் செய்வார்கள். அரசு, விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் எல்லாவற்றிலும் இருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப் போகிறது என்பதற்கான அறிவிப்பு இது. இனி நபார்ட் வங்கியின் பணம் நாட்டு மக்களின் நலனுக்கு அல்ல. அதாவது மக்கள் வரிப்பணம் மக்கள் நலனுக்கல்ல.

அரசாங்கத்தை மகிழ்விப்பவராக மத்திய தணிக்கையாளர் இருக்க முடியாது என்று சொல்லியுள்ள மத்திய தணிக்கையாளர், அய்முகூ அரசாங்கத்தின் மற்றுமொரு திருவிளையாடலை அம்பலப்படுத்தியுள்ளார். விதர்பா விவசாயிகள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்துகொண்ட பின்னணியில் 2008ல் ரூ.52,280 கோடிக்கு கடன் தள்ளுபடி செய்தது அய்முகூவின் அபார சாதனை என்று அய்முகூ ஆட்சியாளர்கள் சொன்னார்கள். அந்தக் கடன் வழங்குவதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக மத்திய தணிக்கையாளர் சொல்லியுள்ளார். தகுதியற்றவர்கள் கடன் தள்ளுபடி பெற்றுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. பிணத்தின் மீது அரசியல் மட்டுமல்ல, ஊழலும் செய்வார்கள் அய்முகூ ஆட்சியாளர்கள்.

2011 முதல் ஏப்ரல் 2012 மார்ச் வரை 90,576 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த மத்திய தணிக்கையாளர் 13.46% கணக்குகளுக்கு தள்ளுபடி பெறும் தகுதி இருந்தும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் 8.62% கணக்குகளுக்கு தகுதி இல்லாமலேயே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 34% விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் தரப்படாததால் அவர்கள் அடுத்தச் சுற்று கடன் பெறுவதும் முடக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு அய்ந்து ஆண்டுகள் ஆகியும் அது பற்றிய தணிக்கை நடத்த அய்முகூ அரசாங்கம் தயாராக இல்லை.

விதர்பாவில் மீண்டும் விவசாயிகள் தற்கொலை பற்றிய செய்திகள் வரத் துவங்கியுள்ளன. தமிழ்நாட்டு விவசாயிகள், பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தற்கொலைச் சாவுகளில் தஞ்சமடைகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் விவசாயத் தொழிலாளர்களில் 5 லட்சம் பேர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்குச் செல்லக் கூடும் என்று செய்திகள் வெளியாகின்றன.

விவசாய நெருக்கடியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நாட்டின் விவசாயத்தை மேலும் மேலும் நெருக்கடியில் தள்ளும் கொள்கைகள் ஒருபுறமும், இந்திய விவசாயிகளுக்கு சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்புகளை சீர்குலைப்பது, விவசாயிகள் பெயர் சொல்லி ஊழல் செய்வது மறுபுறமுமாக அய்முகூ அரசாங்கம் விவசாயிகளைக் கொல்லும் நடவடிக்கைகளை எடுக்கிறது. மத்திய அரசிற்கு எதிராகவும் தமிழக மக்களுக்காகவும் இருப்பதாகச் சொல்லும் ஜெயலலிதா அய்முகூ ஆட்சி ஒழிக, அவர்கள் கொள்கை வாழ்க என்கிறார்.

பின்செய்தி: கிட்டங்கிகள் கட்ட பெரு நிறுவனங்களுக்கு கடன் தரும் திட்டத்தை நபார்ட் வங்கி கைவிட்டுள்ளது.

Search