COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, January 13, 2013

3

கேள்விகள்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு

அடிக்கடி தவிர்க்கப்படும் கேள்விகள்

நாட்டு மக்களுக்கு வாழும் போதே நரகத்தைக் காட்ட உறுதியேற்று இருக்கிறது மத்தியில் உள்ள அய்முகூ அரசாங்கம். தீயில் கொதித்துக் கொண்டிருக்கிற எண்ணெயில் உயிருடன் போடுவது ஒரு தண்டனை என்று கதைகள் சொல்லப்படுகின்றன. அது போன்ற ஒரு தண்டனைதான் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு. நாளெல்லாம் கல்லும் மண்ணும் சுமந்து பெற்ற காசில் கொஞ்சம் சின்னமீன் வாங்கி வந்து, குழம்பு தாளிக்க அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு, எண்ணெய் குப்பியில் எண்ணெய் இல்லாததை அப்போதுதான் அறிந்து தன் குழந்தையிடம் அண்ணாச்சி கடையில போயி நம்ம அக்கவுண்ட்ல அம்பது கிராம் எண்ண வாங்கிகிட்டு வாஎன்று சொல்ல முடியாமல் போகும். உடைந்தது முதுகெலும்பு.

இந்த முதுகெலும்பு உடைப்புதான் நாட்டுக்கு நல்லது, சுபிட்சம் என்று அய்முகூ ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் பேசி வைத்துக் கொண்டு சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லி, தங்கள் தேய்ந்துபோன பதில்களால் மக்களை களைப்படைய வைக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் மக்கள் எழுப்பும் அடிப்படை கேள்விகளை, தங்கள் வருங்கால வாழ்வாதாரம் பற்றிய கரிசனங்கள் தோய்ந்த கேள்விகளை தவிர்க்கிறார்கள்.

அய்முகூ ஆட்சியாளர்கள் அடிக்கடி தவிர்க்கிற கேள்விகளும் அவற்றுக்கான மக்கள் சார்பு பதில்களும் இங்கு தரப்படுகின்றன.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு செய்ய காத்திருப்பவர்கள் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

வால் மார்ட் என்ற அமெரிக்க பகாசுர சில்லறை வர்த்தக நிறுவனம் தனது தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதற்கு பெயர் பெற்றது. சமீபத்தில் பங்களாதேμல் ஆயத்த ஆடை ஆலை ஒன்றில் 112 தொழிலாளர் தீ விபத்தில் பலியாயினர். அந்த ஆலை வால் மார்ட் பிராண்ட் ஆடைகளை தயாரித்தது தெரிய வந்தது. தனக்கும் அந்த நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லிவிட்டது வால்மார்ட். இந்தியாவுக்குள் நுழைய பலருக்கு லஞ்சம் கொடுத்த புகாருக்கு ஆளான வால் மார்ட் புழக்கடை வழியாக ஏற்கனவே இந்தியாவுக்குள் புகுந்துவிட்டது. வால் மார்ட், பானையில் ஒரு சோறு. வால் மார்ட்டுக்கு 15 நாடுகளில் 8500 கடைகள் உள்ளன. 2010ல் வால் மார்ட்டின் விற்பனை ரூ.22,29,700 கோடி. பிரான்ஸ் நாட்டின் கேர்ஃபோர், ஜெர்மனியின் மெட்ரோ, இங்கிலாந்தின் டெஸ்கோ, அமெரிக்காவின் க்ரோகோ, காஸ்ட்கோ போன்ற நிறுவனங்களும் சர்வதேச அளவில் பெரிய சந்தையைக் கையில் வைத்திருக்கிற சில்லறை வர்த்தக நிறுவனங்கள்.

மேற்கு அய்ரோப்பாவின் உணவுப் பொருள் சில்லறை வர்த்தகக் கட்டமைப்பில் வெறும் 110 நிறுவனங்கள், 32 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 16 கோடி நுகர்வோரை சென்றடையும் பொருட்களைக் கட்டுப்படுத்துகின்றன.

அமெரிக்காவில் வெறும் 5 நிறுவனங்கள் 60% உணவு விற்பனை மீது கட்டுப்பாடு கொண்டுள்ளன. 1970ல் தாங்கள் வளர்க்கும் பன்றிகளுக்கு, பன்றி இறைச்சி விற்பனையில், 48% பெற்ற உற்பத்தியாளர்கள், 2000 ஆண்டில் வெறும் 12%தான் பெற்றனர். இங்கிலாந்தில் பால் உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தரப்படும் விலை கட்டுப்படியாகவில்லை என்று குரல் எழுப்ப துவங்கியிருக்கிறார்கள். வால் மார்ட் நிறுவனம், சீனா உட்பட்ட வெளிநாடுகளில் இருந்து மலிவு விலையில் வாங்கி வந்த பொருட்களை விற்றதால், அமெரிக்காவில் 2001 - 2007 காலகட்டத்தில் 40,000 ஆலைகள் மூடப்பட்டன. அமெரிக்க கணக்கெடுப்பு ஒன்றின்படி, 1992 முதல் 2007 வரை 60,000க்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தக நிறுவனங்கள் தொலைந்து போயின.

அய்ரோப்பிய யூனியனில் விவசாயிகளுக்கு 2010ல் மட்டும் ரூ.61,200 கோடி மான்யம் வழங்கப்பட்டது. அமெரிக்காவில் 2008ல் அடுத்த அய்ந்து ஆண்டுகளுக்கு ரூ.16,94,000 கோடி விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்டது. சிறிய வர்த்தகத்தில் நுழைந்த பெரிய நிறுவனங்கள் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு நல்ல விலை தந்தால் அரசாங்கம் ஏன் மான்யம் தர வேண்டும் என்ற கேள்வி அங்கே எழுப்பப்படுகிறது. (மானியமாக அரசு தருவது வரியாக மக்கள் செலுத்துகிற பணமே).

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு வேறு எந்த நாடுகளில் உள்ளது? அந்த நாடுகளில் என்ன நல்லது நடந்தது?

1991ல் மெக்சிகோவில் நுழைந்த வால் மார்ட் இருபது ஆண்டுகளில் அங்கிருந்த சில்லறை வர்த்தக சந்தையின் 50 சதத்தை ஆக்கிரமித்துவிட்டது. அங்கு வால் மார்ட்டின் 2,765 கடைகளும் சிற்றுண்டி விடுதிகளும் உள்ளன. 2 லட்சம் பேர் சில்லறை வர்த்தகத்தை விட்டு வால் மார்ட்டில் வேலை செய்யப் போனார்கள். நிலத்தை பறிகொடுத்து விட்டு, தன் நிலத்தில் கட்டப்பட்ட பன்னாட்டு நிறுவனத்திலோ, ஷாப்பிங் மாலிலோ, அபார்ட்மென்டிலோ செக்யூரிட்டி வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட வறிய விவசாயியின் நிலை போன்றது இது. மாலை நேரத்தில் காலாற நடந்து சென்று தெருவோரத்தில் ஒரு கடையில் கொஞ்சம் பழம் வாங்கி சாப்பிட்ட மெக்சிகோ மக்கள் இப்போது அதுபோன்ற கடைகளே இல்லை என்கின்றனர். 25% விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

தாய்லாந்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டதால் 67% சிறுவர்த்தகக் கடைகள் மூடப்பட்டு விட்டன.

இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு கூடுதல் விலை பெறுவார்கள் என்பது உண்மையா?

பொய். நம்மூர் இடைத்தரகர்கள் காணாமல்போய் பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய பெரிய இடைத்தரகர்களாக வளரும். நாளடைவில் அவர்கள் வைத்தது விலை, இட்டது சட்டம் என்றாகும். இதில் நமக்கு ஏற்கனவே அனுபவங்கள் உள்ளன. நம்மூர் தக்காளியை, உருளைக் கிழங்கை வாங்குவதாக உறுதியளித்தன பெப்சிகோவும் மெக்டொனால்டும். நமது விவசாயி விளைவிக்கும் உருளைக் கிழங்கின் அளவு சிறியதாக இருப்பதாகச் சொல்லி மெக்டொனால்டு இப்போது வாங்குவதில்லை. நமது ஆட்சியாளர்கள் வாயைப் பொத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் விவசாயிகள் பெற்ற 70% வருமானம் 2005ல் 4%க்கும் கீழே வீழ்ந்துவிட்டது. விற்காமல் வீணாகிற பொருட்கள் இங்கே கொண்டு வந்து விற்கப்படும். தொழில்நுட்பம் முதல் அன்றாட பயன்பாட்டு பொருட்கள் வரை வீணாகப் போனதுதான் ஏமாற்றப்பட்ட இந்தியனுக்கு கிடைக்கும். விவசாய விளைபொருட்களை மான்ய விலையில் வாங்கி மான்ய விலையில் விற்று வறிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் கடமையில் இருந்து அரசு முழுவதுமாக விலகிவிடும். விவசாயி பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனத்திடம் கையேந்தும் நிலையும் உணவுக்கு விவசாயத்தையும் அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசு தரும் மானியத்தையும் நம்பி இருக்கிற கோடானுகோடி இந்திய வறிய மக்களின் பிணங்களுக்கு, பெரிய இடுகாடுகளுக்கு இடம் பார்க்க வேண்டிய நிலையும் உருவாகும்.

இப்போது விளைவிக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க கிட்டங்கி வசதிகள் இல்லை. சில்லறை வர்த்தகத்தில் வரும் பன்னாட்டு நிறுவனங்கள் அதைப் பார்த்துக் கொள்ளும் என்கிறார்களே, நடக்குமா?

அமெரிக்காவில் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள் வீணடிக்கிற உணவுப் பொருட்களின் மதிப்பு ஆண்டொன்றுக்கு ரூ.9,07,500 கோடி. சொந்த நாட்டிலேயே அதற்கான போதுமான உள்கட்டுமான வசதிகளை வால் மார்ட்டோ அதுபோன்ற பகாசுர சில்லறை வர்த்தக நிறுவனங்களோ உருவாக்கவில்லை. மன்மோகன் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து சுண்டுவிரலைக்கூட உயர்த்த மாட்டார். சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு விவசாயிகள் நிலத்தைப் பிடுங்கித் தரும் அய்முகூ அரசு, நிதி மோசடி செய்பவர்களுக்கு கோடிகோடியாய் வரி தள்ளுபடி தரும் அய்முகூ அரசு, அமெரிக்காவுக்கு சலாம் போடுவதை நிறுத்திவிட்டு, ஏன் போதுமான கிட்டங்கி வசதிகளை உருவாக்க முடியாது?

டாக்சிகள் வந்த பிறகு குதிரை வண்டி எண்ணிக்கை குறைந்துதான் போகும் என்கிறார் மான்டெக் சிங். குதிரை வண்டியை நம்பி வாழ்கிற மக்கள் என்ன ஆவார்கள்?

சாவார்கள். 2009 - 2010 தேசிய மாதிரி புள்ளிவிவர நிறுவனத்தின் தகவல் படி நாட்டில் 4.4 கோடி இந்தியர்கள் சில்லறை வர்த்தகத்தை நம்பியுள்ளனர். 1.25 லட்சம் சிறு வர்த்தகர்கள் உள்ளனர். இந்திய சில்லறை வர்த்தக சந்தையின் மதிப்பு ரூ.22,00,000 கோடி. இந்த வளமான சந்தையைத்தான் பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு திறந்துவிடுகிறார்கள். டாக்சிகள் வருவதும் வால் மார்ட் வருவதும் ஒன்றல்ல. இன்று வந்திருக்கிற ரிலையன்ஸ் போன்ற கடைகளே பல அண்ணாச்சி கடைகளை காணாமல் போகச் செய்துவிட்டன. சின்னமீன்கள் பெரிய மீனால் விழுங்கப்படுகின்றன. வரவிருப்பவை திமிங்கலங்கள். அவை நாட்டு மக்கள் வாழ்வை சூறையாடி விடும். வெயில் களைப்பு, திடீரென்று வந்த வயிற்று வலி, உடனடி விருந்துபசரிப்பு என சாமான்ய மக்களின் சின்னச்சின்ன அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்த காளி மார்க் சோடா இன்று இல்லை என்பதே நமக்கு எச்சரிக்கை மணி. சிறுகடைகள் காணாமல் போனால், அவற்றை நம்பி வாழும் மக்கள் இப்போதுள்ள குறைந்தபட்ச உணவு ஆதாரத்தையும் இழப்பார்கள்.

உங்கள் பணம் உங்கள் கையில் என்ற கவர்ச்சிகரமான பெயர் கொண்ட நேரடி மானிய திட்டம் பொது விநியோகத்தில் அமலாகத் துவங்குமானால், இந்திய உணவுக் கழகத்தின் கிட்டங்கிகளில் இப்போது எலி தின்று விட்டுப் போகும், அழுகிப் போகும் உணவு தானியங்கள் மேலும் அழுகிப் போகும். அவற்றை அரசின் குறைந்தபட்ச ஆதார விலையில் விற்கும் விவசாயி இனி தனியாரை சார்ந்து பிழைக்க வேண்டியிருக்கும். சில்லறை வர்த்தகத்தில் நுழையவிருக்கும் பகாசுர நிறுவனங்களுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது. உங்கள் பணம் உங்கள் கையில் திட்டமும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடும் இரட்டைக் குழல் துப்பாக்கியாய் வறிய மக்கள் மேல் பாயும். இந்திய அரசாங்கம் தனது மக்களுக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச உணவுப் பாதுகாப்பையும் ஒழித்துக் கட்டிவிடும்.

சிறுவர்த்தகத்தில் வேலை செய்யும் 4.4 கோடி பேர் என்ன ஆவார்கள்?

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு வேலை வாய்ப்புக்களை கொண்டு வரும் என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள் அய்முகூ ஆட்சியாளர்கள். இதை நாம் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்கிறோம். வால்மார்ட் நிறுவனத்தில் உலகம் முழுக்க 21 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். அதிகபட்ச சராசரியாக ஒரு கடையில் 250 பேர் என்று கூட வைத்துக் கொள்வோம். உலகம் முழுவதும் 8500 கடைகள் வைத்திருக்கிற வால் மார்ட், 4.4 கோடி பேருக்கு இந்தியாவில் மட்டும் 1,76,000 கடைகள் வைக்க வேண்டும். நடக்கிற விசயமா இது? வால் மார்ட், கேர்ஃபோர், டெஸ்கோ என்றால் அங்கு எடுபிடி வேலை செய்யக்கூட குறைந்தபட்ச கல்வி தகுதி வேண்டும் என்பார்கள். ஆக, கோடிக்கணக்கான இந்திய மக்கள் இருக்கிற வேலையை இழப்பதுதான் நடக்குமே தவிர, வேலை வாய்ப்பு உருவாகாது.

சில்லறை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்கள் வந்தால், போட்டி இருந்தால், அலைபேசி அழைப்பு 1 பைசாவுக்குக் கூட கிடைப்பது போல் மற்ற பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்குமா?

அந்தக் கடைகளுக்குள் யார் நுழைய முடியும் என்பது முதல் கேள்வி. கடைகள் சாமான்ய மக்கள் சட்டென செல்லும் தூரத்தில் இருக்காது. அங்கு செல்ல தனிநேரம் ஒதுக்க வேண்டும். உள்ளே போனால் பணம் தானாக செலவாகும். நடைபாதையோர கடைக்காரரிடம் அடித்து பேரம் பேசி 1 கிலோவுக்கு 1 கிலோ 100 கிராம் பொருளை வாங்குவது போல வாங்க முடியாது. முதலில் மலிவு போல் இருந்தாலும் நாளாக ஆக பெப்சி, கோக் கதைதான். அலைபேசி நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தப் போவதாகச் சொல்கின்றன. அலைபேசி வாங்கிவிட்டோம். சிம் கார்டு போட்டுவிட்டோம். முக்கிய சேவைகள் உட்பட எல்லோருக்கும் எண்ணை கொடுத்து விட்டோம். இனி அலைபேசி அத்தியாவசியம். கட்டணம் அதிகரித்தாலும் தவிர்க்க முடியாது. பெருங்கடைகள் விசயத்திலும் இதுதான் நடக்கும். நாம் பட்டது போதும். பெருங்கடைகளின் ஆபத்தை புரிந்துகொள்ள அந்தப் பட்டறிவு போதும்.

எந்திரமயமாக்கமும் கணிணிமயமாக்கமும் துவக்கத்தில் சில பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும் சமூகம் முன்னோக்கிச் செல்கிறது. அந்நிய நேரடி முதலீடு துவக்கத்தில் சாமான்ய மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினாலும் நாளடைவில் பலன் தருமா?

உலகமயம் வந்தால் வளமை சொட்டுச் சொட்டாக கீழே இருப்பவர்களுக்கு கசிந்து வந்து சேரும் என்று இன்னும் கூட சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். யதார்த்தத்தில் கீழே இருப்பவர்களிடம் எஞ்சிமிஞ்சி இருப்பதையும் பறித்து மேலே இருப்பவர்களுக்கு தந்துகொண்டிருக்கின்றன உலகமயக் கொள்கைகள். உலகமயம் ஒரு சிலருக்கு வளமை பலருக்கு வறுமை என்ற நிலையைத்தான் உருவாக்கியிருக்கிறது. உலகமயத்தின் உண்மை நோக்கம் லாப விகிதம் சரியாமல் பாதுகாப்பது. அந்தப் போக்கில் சிலருக்கு வளமை வந்தது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடும் லாப விகிதம் சரியாமல் பாதுகாப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டது. அதன் போக்கில் சிலருக்கு வளமை வரும். பலரிடம் இருப்பதை பறித்துக் கொண்டு அவர்கள் வாழ்வை படுகுழியில் தள்ளும். இதன் பயணப் பாதை வேறொன்றாக இருக்கவே முடியாது.

எல்லா வகையிலும் நாட்டு மக்களுக்கு துன்பம் தரும் அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வர, ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று அய்முகூ ஆட்சியாளர்கள் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள்?

சாமான்ய மக்களுக்குத்தான் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதுபோல. அன்றாட வாழ்க்கையை நடத்தவே அவர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டியுள்ளது. அய்முகூ ஆட்சியாளர்களுக்கு அது பெரிய ரிஸ்க் இல்லை. ஏனென்றால், கட்சிகள் வெவ்வேறானாலும் நவதாராளவாத கொள்கை அமலாக்கத்தில் இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளுக்குள் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு பற்றிய அறிவிப்பு வந்தவுடன் பாஜகவின் முதல் எதிர்வினை நாங்கள்தான் அதை முதலில் முன்வைத்தோம் என்பதுதான். அதை புகுத்துகிற பெருமை தங்களுக்கே என்று சொல்லிக் கொள்ளப் பார்த்தார்கள். மக்கள் கொந்தளிப்பைப் பார்த்த பிறகு எதிர்க்கிறோம் என்றார்கள்.

இந்த விசயத்தில் சஸ்பென்ஸ் நாடகம் போட்டு அது சரியாக ஓடாததால், மதவாத சக்திகள் வந்துவிடக் கூடாது என்பதால் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததாக சொத்தை நாடகம் நடத்திய கருணாநிதி தமிழ்நாட்டில் வால் மார்ட் நிறுவனத்துக்கு கட்டிடம் கட்டப்படுகிறதா என்று விசாரணை வேண்டும் என்றார். மம்தாவுக்கு இந்தப் பிரச்சனையில் டில்லி வரை அரசியல் செய்வதைத் தாண்டி மக்கள் சார்பு நோக்கம் எதுவும் இல்லை.

சமாஜ்வாதிக் கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் மக்களவையில் விவாதத்தில் எதிர்த்துவிட்டு வாக்களிப்பில் வெளிநடப்பு செய்து அய்முகூவை காப்பாற்றின. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலங்களவையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆதரவாகவே வாக்களித்தது. அந்தக் கட்சிகளின் தலைவர்களின் தலைக்கு மேலே சிபிஅய் கத்தி தொங்கியது காரணம் என்று சொல்லப்படுகிறது. உண்மை காரணம் கொள்கையில் உடன்பாடு.

ஜெயலலிதா அந்நிய நேரடி முதலீடு இருபுறமும் கூருள்ள கத்தி என்று சொல்லிவிட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்க சலுகைகள், விலக்குகள், தள்ளுபடிகள், கேள்வி கேட்காத மலிவு விலை உழைப்பு ஆகியவை தரும் புரிந்துணர்வு போட்டார்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு உட்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கிற ஆபத்தான நவதாராளவாதக் கொள்கைகளில் மாறுபாடு இல்லாத பிராந்திய கட்சிகளை விரோதித்துக் கொள்ளாமல் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கிறார்கள் இகக, இககமா நண்பர்கள்.

கடைசியாக, அய்முகூ ஆட்சியாளர்களிடம் ஒரு கேள்வி கேட்போம். அந்நிய நேரடி முதலீடு வந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் சரிவதில் இருந்து காப்பாற்ற முடியும் என்று மன்மோகன் - சிதம்பரம் – மான்டெக் சொல்கிறார்கள். மனிதக் கழிவு அகற்றுபவர்களை பணிக்கமர்த்துவது மற்றும் உலர் கழிப்பறை கட்டுவது (தடுப்பு) சட்டம் 1993ல் அமலுக்கு வந்து 19 ஆண்டுகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. மனிதக் கழிவு அகற்றும் பணியில் விஷவாயு தாக்கி நாளும் அந்தத் தொழிலாளர்கள் உயிரிழக்கிறார்கள். அவர்களுக்கு இழப்பீடு கூட முறையாக தரப்படுவதில்லை. இந்தக் கொடுமையை தடுக்க வேண்டுமானால் அந்த வேலைக்கான புதிய தொழில் நுட்பம் வேண்டும். நிதி வேண்டும். அந்நிய நேரடி முதலீடு அவசியமானது என்றால் அதை ஏன் மனிதக் கழிவகற்றும் பணியில் கொண்டு வரக்கூடாது?

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை தடுப்பது இனி சாத்தியமா?

மக்கள் போராட்டங்கள் மகத்தானவை. வரலாற்றை புரட்டிப் போட்ட வரலாறு கொண்டவை. அவற்றுக்கு மாற்றுப் பாதையோ குறுக்குச் சாலையோ கிடையாது. டில்லி மாணவர், இளைஞர் போராட்டம் சமீபத்திய சாட்சி. புதுவையையும் அது பற்றிக் கொண்டுள்ளது. யதார்த்த விவரங்கள் இப்படி இருக்கும்போது, போராட்டங்களுக்கு மக்கள் தயாராக இல்லை என்பது உண்மையாக இருக்க முடியாது. பாலியல் வன்முறை எதிர்ப்பில் நடப்பது சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை தடுப்பதிலும் நடப்பது சாத்தியமே. இது வரை நடக்கவில்லையே, உலகமயம் வந்துவிட்டது, நின்றுவிட்டது, வென்றுவிட்டதே என்று புலம்பும் குரல்களை புறந்தள்ளிவிட்டு, நவதாராளவாத கொள்கைகளை பின்னோக்கித் திருப்ப, மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துவது சாத்தியமே.

தமிழ்நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு இல்லை என்று ஜெயலலிதா சொல்கிறார். 2014க்குப் பிறகு என்ன சொல்வார் என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது. சங்கரன்கோயில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டியிருந்தபோது, கூடன்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த மக்களில் தானும் ஒருத்தி என்று சொன்ன ஜெயலலிதா, தேர்தல் முடிந்ததும், தேர்தல் பணிக்கு வந்திருந்த காவல்துறையினரை அங்கிருந்து நேராக இடிந்தகரை அனுப்பி அந்த மக்கள் மீது தாக்குதல் தொடுத்ததை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். தமிழகத்தை இருளில் தள்ளி, தனியார் மின்உற்பத்தி நிலையங்களை ஊக்குவிக்கும் ஜெயலலிதாவிடம் நிச்சயமாக மக்கள் ஆதரவு நடவடிக்கையை எதிர்ப்பார்க்க முடியாது.

அய்முகூ அரசின் மக்கள் விரோத நவதாராளவாத கொள்கைகளுக்கு எதிராக பிப்ரவரி 20 - 21 தேதிகளில் நடக்கவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் ஆட்சி மாற்றம் மட்டுமின்றி கொள்கை மாற்றமும் கோருகிறது. அதே கொள்கைகளுக்குச் சொந்தக்காரரான ஜெயலலிதா அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டில் உழைக்கும் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் வேண்டும் என்ற குரல் வலுத்து எழ வேண்டும். பிப்ரவரி 2 முதல் 12 வரை குமரியில், கோவையில் இருந்து கோட்டை வரை நடக்கவுள்ள பிரச்சாரப் பயணமும் பிப்ரவரி 12 அன்று சென்னையில் தானா தெருவில் நடக்கவுள்ள உழைக்கும் மக்கள் பொதுக் கூட்டமும் நவதாராளவாதக் கொள்கைகள் எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்.

சிறுவர்த்தகர்களும் உழைக்கும் மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இகக மாலெவுடன் அதன் வெகுமக்கள் அமைப்புக்களான ஏஅய்சிசிடியு, அய்சா, ஆர்ஒய்ஏ, அய்ப்வா ஆகியவற்றுடன் இணைய வேண்டும்.

ஏஅய்சிசிடியுவின் பிரச்சாரப் பயணம் வெல்லட்டும். மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு மக்கள் சீற்றத்தை உணர்த்தட்டும்.

Search