COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 30, 2013

9

நகல் ஆவணம்

மாணவர் - இளைஞர் இயக்க
கடமைகள் மற்றும் திசைவழி மீதான நகல் தீர்மானம்

(2013, ஏப்ரல் 2 - 6 தேதிகளில் ராஞ்சியில் நடக்கவுள்ள இகக மாலெ (விடுதலை) 9ஆவது கட்சி காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள நகல் தீர்மானம் தரப்படுகிறது. வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)

1. ஆழமடைந்து வரும் பொருளாதார சமூக நெருக்கடி, ஆளும் மேட்டுக் குடியினரின் நம்பகத்தன்மையும் ஆளும் தகுதியும் துரிதமாகச் சரிவது ஆகியவற்றின் முன்னிலையில், நாம் நாடெங்கும் மீண்டும் ஒருமுறை, ஒரு சக்திவாய்ந்த மாணவர் இளைஞர் இயக்கத்தின் உற்சாகமான அறிகுறிகளைக் காண்கிறோம். ஊழல், பெரும்தொழில் குழுமச் சூறையாடல், ஆளும் மேட்டுக்குடியினர்க்கும் பெருநிறுவனங்களுக்கும் இடையிலான வளரும் கூட்டு ஆகியவற்றிற்கு எதிராக 2011ல் வீசத் துவங்கிய காற்று, டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்முறைக்கும், மிருகத்தனமான தாக்குதலுக்கும் ஆளாகி, பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணமடைந்த 23 வயது துணை மருத்துவ மாணவிக்கு நியாயம் கோரிய பெரும்புயலாக, டிசம்பர் 2012ல் நாட்டின் தலைநகரில் வெடித்தது. மாணவர் இளைஞர் இயக்கத்தில் புரட்சிகர ஜனநாயகத்தின் முன்னணி மேடைகளான, அகில இந்திய மாணவர் கழகமும் புரட்சிகர இளைஞர் கழகமும், பெருநிறுவனச் சூறையாடல், பாலியல் வன்முறைக்கு எதிரான, பெண்கள் சுதந்திரத்துக்கான போராட்டங்களில் மாணவர் இளைஞர் சமூகத்தை அணிதிரட்டுவதில் ஒரு கேந்திரமான பங்காற்றுகின்றன.

2. தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர்ப்புகை, மிருகத்தனமான தடியடி ஆகியவற்றையெல் லாம் மீறி, பால் வன்முறைப் பிரச்சனையில், இளம் பெண்களும் ஆண்களும் சம பங்கேற்ற டெல்லி இளைஞர் எழுச்சி, இந்த வகைப்பட்ட முதல் நிகழ்வாகும். ஆளும் மேட்டுக்குடியினர், இளைஞர்கள் மற்றும் அவர்கள் விருப்பங்கள்பற்றி நிறைய பேசும்போது, பிற்போக்கு அரசியல் சக்திகள், தமது குறுங்குழுவாத ஜனநாயக விரோத அரசியல் நிகழ்ச்சிநிரலுக்குச் சேவை செய்ய இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்ள மூர்க்கமாக முயற்சிக்கும்போது, ஜனநாயகத்தின் கேந்திரமான பிரச்சனைகள் மீது இளைஞர் சக்தி சுதந்திரமாக அறுதியிட்டு எழுவது மகத்தான புரட்சிகர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளர்ச்சியாகும்.

3. லத்தீன் அமெரிக்காவிலிருந்து அய்ரோப்பா வரை, வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்று இயக்கம் முதல் அரபு வசந்தம் வரை, நவதாராளவாதம் ஏகாதிபத்தியம் மற்றும் எதேச்சதிகாரத்திற்கு எதிராகக் காணப்படுகிற ஓர் உலகளாவிய விழிப்புணர்ச்சியில், ஒரு சக்தி வாய்ந்த இளைஞர் முத்திரை பதிந்திருப்பதைக் காண முடியும். இந்த சர்வதேச பின்னணியில் காணும்போது, இளைஞர் கலக நாட்கள் முடிந்துவிட்டன, இளைஞர்களது எதிர்ப்பார்ப்புக்களுக்கும் கனவுகளுக்கும் இறுதி பதில் முதலாளித்துவ நுகர்வுவாதம்தான் என்ற முதலாளித்துவ பொய்க்கு, இந்திய இளைஞர்களின் வளரும் ஜனநாயக அறுதியிடல், பலத்த அடி தந்துள்ளது.

4. விவசாயப் புரட்சிக்கு ஆதரவாகவும், ஒரு புதிய ஜனநாயக இந்தியாவைக் கட்டும் புரட்சிகர கனவால் உந்தப்பட்டும், சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் கலகத்தை நக்சல்பாரி குறிக்கிறது. ஆளும் வர்க்கங்கள் அதனை நசுக்கிவிட்டதாகக் கருதியபோது, ஊழல் மற்றும் சுயேச்சதிகாரத்திற்கு எதிரான 1974 இயக்க வடிவத்தில், இளைஞர் எழுச்சியின் இரண்டாவது அலை வந்தது. இந்த வரிசைத் தொடரில், நிகழ்ந்து கொண்டிருக்கிற மாணவர் இளைஞர் இயக்கத்தை, மூன்றாவது மைல் கல்லாகக் குறிப்பிடலாம். இப்போது நடக்கிற இயக்கத்துக்கு, தீவிரமான சமூக மாற்றம் அல்லது அரசியல் மாற்றம் என்ற வெளிப்படையான எந்த நிகழ்ச்சிநிரலும் இதுவரை இல்லை என்றபோதும், நிலப்பிரபுத்துவ – ஆணாதிக்கத் தளைகள், பெருநிறுவன – ஏகாதிபத்தியச் சூறையாடல், எதேச்சதிகாரம், அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கெதிரான ஒரு சக்திவாய்ந்த எழுச்சியாக வளரும் உள்ளாற்றல் இதற்கு நிச்சயமாக உண்டு.

5. இந்த எல்லா இளைஞர் கலகங்களும், ஒரு துடிப்பான இளைஞர் இயக்கத்தின் சாரமான அம்சங்களை அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன: அ) பரந்த சமூக அரசியல் பிரச்சனைகளில், குறிப்பாக, ஜனநாயகம், சுதந்திரம், நீதி, சமூக மாற்றம் என்ற கேந்திரமான நிகழ்ச்சிநிரலில் இளைஞர்களின் கூருணர்வு

ஆ) சாதி, நம்பிக்கை, மொழி, கலாச்சாரம், சமூக அந்தஸ்து அல்லது பின்னணி என்ற தடைகளைத் தாண்டி ஒரு போராட்ட அய்க்கியம் கட்டும் இளைஞர்களின் ஆற்றல்

இ) வெல்லப்பட முடியாத எதிர்ப்புணர்வு மற்றும் எந்த அநியாயமான ஒடுக்குமுறை அதிகாரத்திற்கும் பணிய மறுப்பது. மிகவும் வித்தியாசமான சூழல்களைச் சந்திக்கும் இளைஞர்களின் குறிப்பான நிலைமைகள் தேவைகள் மற்றும் விருப்பங்களை அங்கீகரிக்கும் அதே நேரம், நாம், இளைஞர் இயக்கத்தின் பரந்த இயல்பைக் காணத் தவறக் கூடாது.

6. இந்தியாவின் அதிகாரபூர்வ விவாதத்தில் இளைஞர்கள் ஒரு மக்கள் தொகை வகையினமாக மட்டுமே பேசப்படுகின்றனர். இந்தியாவில் இளைய பிரிவினர் மக்கள் தொகையில் ஒரு வளரும் அணிவரிசை, மக்கள் தொகையில் இது எவ்வளவு நல்ல விஷயம் என்ற ஏராளமான வெற்றுப் பேச்சுக்கள் தாண்டி, அவர்கள் அடிப்படைத் தேவைகள், விருப்பங்கள் மற்றும் உரிமைகள் உண்மையில் எப்போதுமே அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் 25 வயதுக்குக் கீழானவர்கள், மூன்றில் இரண்டு இந்தியர்கள் 35 வயதுக்குக் கீழானவர்கள், அதன் தொடர்ச்சியாக, உலகிலேயே பெரிய இளைஞர் அணிவரிசை இந்தியாவில்தான் உள்ளது, என்பவை வெறுமனே, வியந்து பார்க்கப்படும் புள்ளியியல் சாதனையாகக் கருதப்படக் கூடாது. நாடு, இளைஞர்களில் எவ்வளவு முதலீடு செய்யப் போகிறது, தமது திறமையையும் மிகப்பெரும் ஆற்றலையும் கண்டறிந்து வெளிப்படுத்த இளைஞர்களுக்கு எத்தகைய வாய்ப்புக்கள் கிடைக்கப் போகின்றன என்பவையே உண்மையான கேள்விகள்.

7. இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான வளர்ச்சிக்கு மய்யமான நிகழ்ச்சி நிரல், கல்வி ஆரோக்கியம் வேலை வாய்ப்பு, தொலை தூரப் பகுதிகள் மற்றும் வாய்ப்புக்கள் குறைவான சமூகக் கலாச்சார பொருளாதார பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கை, தேர்வு சுதந்திரம், அச்சத்திலிருந்து சுதந்திரம் ஆகியவையே. ஆனால், பெரும்தொழில் குழுமங்களால் - செலுத்தப்படுகிற, ஏகாதிபத்தியத்தால் - கட்டளையிடப்படுகிற வளர்ச்சிப் போர்த்தந்திரத்தில், இவையே, மிகவும் கவனிக்கப்படாத பகுதிகளாகும். விளைவாக, வேலையில்லா மக்களின் ஒரு பிரும்மாண்டமான பட்டாளம் உள்ளது; இந்திய உழைப்புச் சந்தைக்கு தாராளமாக மலிவு உழைப்பு அளிக்கப்படுகிறது; உலக மூலதனத்தின் தேவைகளுக்கு ஏற்ப அயல்நாடுகளுக்கு தொடர்ச்சியான உறுதி செய்யப்பட்ட திறன்வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழில் முறையாளர்களின் வெளியேற்றம் (மூளை வெளியேற்றம்) நிகழ்கிறது.

8. அனைவர்க்கும் தரமான கல்வியை உறுதிசெய்தல், கல்வியை துரிதமான அனைத்தும் தழுவிய மானுட வளர்ச்சிக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்குப் பதிலாக, இந்திய ஆளும்வர்க்கங்கள் சாத்தியமான எல்லா வழிகளிலும், சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை மறுஉறுதி செய்யும், மறுஉற்பத்தி செய்யும் ஒரு கருவியாகவே பயன்படுத்துகின்றனர். நாம் தரமான துவக்கக் கல்வி அல்லது உயர்கல்வி பற்றி, குறிப்பாக, மருத்துவ விஞ்ஞானங்கள் போன்ற சிறப்பு துறைகள், வேறுவேறு தொழில்நுட்பத் துறை வாய்ப்புக்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், அங்கே, கல்வி வர்த்தகமயமும் தனியார்மயமுமே ஆணையில் உள்ளன. அரசாங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்களில், எப்போதும் ஆசிரியர்களும் கல்வி வசதிகளும் போதுமான அளவுக்கு இருப்பதில்லை; ஆனால் தனியார் கல்வி நிலையங்கள் நாடெங்கும் காளான்கள் போல் முளைத்துள்ளன. இவ்வாறாக, இந்தத் துறையில் ஓர் அராஜகம் நிலவ அனுமதிக்கப்படுகிறது. இந்த வர்த்தகமய தனியார்மயப் போக்கை, இந்தியாவில் அந்நியப் பல்கலைக் கழகங்கள் நுழைவது, மேலும் பலப்படுத்தும்; உயர்கல்வி மேட்டுக்குடியினருக்கு மாத்திரம் என்றாகும். மாணவர் - இளைஞர் இயக்கம் இந்தப் போக்கைப் பின்தள்ள கடுமையாகப் போராட வேண்டும். பொதுப்பள்ளி முறை மூலம் அனைவரும் தரமான கல்வி பெறும் உரிமை, கிராமப்புற, தொழிலாளர் வர்க்க, கீழ் நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்ட மாணவர்க்கு எட்டக்கூடிய அளவில் உயர்கல்வி நிறுத்தப்பட கடுமையாகப் போராட வேண்டும்.

9. உயர்கல்வியிலிருந்து ஏராளமான மாணவர்களை வெளியே நிற்க வைக்க முயற்சிக்கும் அதே நேரம், வளாக ஜனநாயகத்தை முடக்க, மாணவர்கள் தாங்கள் விரும்பும் மாணவர் சங்கங்களைத் தேர்வு செய்யும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்க, ஆளும் வர்க்கங்கள் தம்மால் ஆனதை எல்லாம் செய்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் முறையான தேர்தல்கள் நடப்பதில்லை. உதாரணமாக, பாட்னா பல்கலைக் கழகத்தில் 30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேர்தல் நடக்கிறது. தனது ஜனநாயகச் சூழலுக்காக நன்கறியப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் போன்ற வளாகத்திலேயே, லிங்டோ கமிட்டி அநியாயமான ஜனநாயக விரோத தடைகள் விதித்ததால், நான்கு வருடங்களுக்கு தேர்தல்கள் நடக்கவில்லை. வளாக ஜனநாயகத்தை மீட்பதற்கான, விரிவுபடுத்துவதற்கான மாணவர் இயக்கத்தில் அகில இந்திய மாணவர் கழகம் முன்னணியில் உள்ளது.

10. நமது அரசியலமைப்புச் சட்டத்தில், வேலை உரிமை அடிப்படை உரிமையாக்கப் படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மிகவும் பெருமையாக, உலகிலேயே பெரிய வேலை உறுதித் திட்டம் என்று பெரிதாகப் பேசப்படும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம், வேலை உறுதி என்ற கருத்தாக்கத்தையே கேலி செய்கிறது. ஓரிரு மாநிலங்களில் தேர்தலில் வெல்ல வேலையில்லாக் காலப்படி எப்போதாவது வழங்கப்படுகிறது. ஆனால் வேலை கிடைக்காதவர்கள் படைவரிசைக்கு, எந்த சமூகப் பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கவுரவமான வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கக் கோருவது, வேலை இல்லாக் காலங்களுக்கு போதுமான வேலை இல்லாக் காலப்படி கோருவது, இளைஞர் இயக்கத்தின் ஒரு கேந்திரமான கடமை.

11. உயர் கல்வியும் தொழில்துறை பயிற்சி கல்வி முறைகளும் பல லட்சக்கணக்கானவர்களுக்கு மேலும் மேலும் கட்டுப்படியாகாதவையாக, நுழைய முடியாதவையாக, மாறி உள்ளதால், அவர்கள் கிடைக்கிற வேலைகளுக்குச் செல்கிறார்கள். இந்த வேலைகள் ஒப்பந்த வேலைகளாக உள்ளன. கடுமையான வேலைப்பளு, கூடுதல் வேலை நேரம், குறைவான சம்பளம் என்றே உள்ளன. இந்த இளம் தொழிலாளர்களுக்கு, வேலை வாய்ப்பை முறை செய்தல், சம்பளம் மற்றும் பணி நிலைமைகள் முன்னேற்றம் ஆகியவையே மய்யமான கரிசனங்களாகும். இந்த மய்யமான கரிசனம் மீது, சம்மந்தப்பட்ட தொழிற்சங்கங்களோடு நெருக்கமாக ஒத்துழைத்து இளைஞர் இயக்கம் கவனம் செலுத்த வேண்டும்.

12. மாணவர் - இளைஞர் இயக்கத்தின் முக்கிய கரிசனங்களாக வெகுமக்கள் கல்வி, பொது மருத்துவம், சுகாதாரம், குடிமை வசதிகள், எரிசக்தி, பொது போக்குவரத்து, சுற்றுச்சூழல் நீதி, பேரிடர் நிர்வாகம் ஆகியவையும் முக்கியமாக இடம்பெற வேண்டும். இப்போது போதுமான மற்றும் உரிய உள்கட்டுமானம் இல்லாமல் அல்லது குறைந்தபட்ச குடிமை வசதிகள் கூட இல்லாமல் திட்டமிடப்படாத விதத்தில் நகர்மயமாதல் நிகழும் ஒரு முரணான சூழலின் ஊடே சென்று கொண்டிருக்கிறோம். நவதாராளவாத அரசு, இந்த ஓட்டைகளை அடைப்பதற்கு பொறுப்பெடுக்காமல், ஒவ்வொரு அத்தியாவசிய பணியையும் தனியார்மயப்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறது. ஆகவே, உள்கட்டுமானம், அடிப்படை சேவைகள், குடிமை வசதிகள் பொறுத்தவரை, கிராமப்புறப் பகுதிகள் கூடுதலாக புறக்கணிக்கப்படுகின்றன. அடிப்படை வசதிகள், கட்டுப்படியாகும் வீட்டுவசதி, செயல்படும் சேவைகள் ஆகியவற்றிற்கான போராட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விசயங்களில் இளைஞர் இயக்கம் உரிய விதத்தில் பதில் வினையாற்ற வேண்டும்.

13. நக்சல்பாரி மரபால் ஊக்கம் பெற்ற மாணவர் - இளைஞர் இயக்கம் எப்போதுமே தீவிரமான சமூக மாற்றக் கனவால் உந்தப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களோடு அவர்களது போராட்டங்களோடு கிராமப்புற வறியவர்களோடு அவர்களது போராட்டங்களோடு ஒன்றிணைவது, எப்போதுமே புரட்சிகர இளைஞர் முன்னணிகளை வழிநடத்தும் கோட்பாடாக இருந்துள்ளது. இந்த அடிப்படை புரட்சிகரக் கோட்பாட்டை முன்னணி செயல்வீரர்கள் எப்போதும் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களில் ஏகப் பெரும்பான்மையினரோடு தொடர்புடைய ஒரு முழுவரிசை உடனடி மற்றும் கேந்திரமான விஷயங்களை முன்னெடுத்திட இயக்கத்தின் அடித்தளத்தை விரிவுபடுத்த முயற்சிக்கிற அதேவேளை, மேலே குறிப்பிட்ட அடிப்படை கடமையையும் கணக்கில் கொள்ள வேண்டும். தற்போதைய கட்டத்தில், மாணவர் - இளைஞர் இயக்கம் பெரும்தொழில் குழும நிலப்பறி, சுரங்க சூறையாடலுக்கு எதிரான விவசாயிகள் ஆதிவாசிகள் எதிர்ப்போடும் தொழில்துறை ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்க உரிமைகளுக் கான தொழிலாளர் வர்க்க இயக்கத்தோடும் துணிந்து நின்றாக வேண்டும்.

14. இளைஞர்களின் அறுதியிடலின் பிரும்மாண்டமான உள்ளாற்றலுக்கு அஞ்சி, ஆளும் வர்க்கங்கள் விடாமல் இளைஞர்களை சாதி, மத, மொழி, பிராந்திய வழிகளில் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து வேலை தேடி வருகிற இளைஞர்கள் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களை முறை சார்ந்த விதத்தில் குறிவைத்து தாக்குகிற குறுகிய தேசிய வெறி அரசியலின் மோசமான ஒரு வகையை மகாராஷ்டிரா கண்டது. அசாமில் கோக்ராஜ்கர் வன்முறையை அடுத்து நடந்த கெடு நோக்கம் கொண்ட குறுந்செய்தி பிரச்சாரமும் அதன் விளைவாக தோன்றிய பீதியும் வடகிழக்கு பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவிக்கின்ற தாக்குதலுக்குள்ளாகும் தன்மையை, பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தின. இந்தியாவில் பல பகுதிகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் நிலப்பிரபுத்துவ வன்முறையை, சமூக பாகுபடுத்துதலை, சிறுமைப்படுத்துதலை தொடர்ந்து சந்திக்கின்றனர். தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான விடுதிகளில் உள்ள மோசமான நிலைமைகள், சில மாநிலங்களில் பழங்குடி சிறுமிகள் முறைப்படுத்தப்பட்ட விதத்தில் பாலியல்ரீதியாக பயன்படுத்தப்படுவது பற்றிய செய்திகள், பொறியியல் கல்லூரிகளில் தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் மனிதத்தன்மையற்ற ராகிங், சமீபத்தில் ரன்வீர் சேனா தலைவர் கொல்லப்பட்டதை ஒட்டி பீகாரில் தலித் மாணவர் விடுதிகளில் நடந்த தாக்குதல்கள் ஆகியவை, பின்தங்கிய சமூகப் பின்னணி கொண்ட மாணவர்கள், கல்வி முறைக்குள்ளும், சமூகத்திலும் அனுபவிக்கிற துன்பங்கள், அவர்கள் எதிர்கொள்கிற தப்பெண்ணங்கள் பற்றிய சித்திரம் தருகின்றன. புரட்சிகர மாணவர் - இளைஞர் இயக்கம் இந்தியாவின் எந்தப் பகுதியில் நிலப்பிரபுத்துவ, மதவாத இனவெறி, குறுங்குழுவாத வன்முறை நிகழ்ந்தாலும் அதற்கெதிராக துணிந்து நிற்க வேண்டும். வேலை வாய்ப்புக்களில் தலித் மற்றும் பழங்குடியினர்க்கான ஒதுக்கீடு பூர்த்தி செய்யப்படுவதே இல்லை. தாராளமய யுகத்தில், வேலை வாய்ப்பிலும், கல்வியிலும், தலித், பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய சாதியினர்க்கான இடஒதுக்கீடுகளை வலுவிழக்கச் செய்ய முறைப்படுத்தப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக அகில இந்திய மாணவர் கழகம் சில முக்கியமான, வெற்றிகரமானப் போராட்டங்கள் நடத்தியுள்ளது. தகுதி என்ற பெயரில் தொடுக்கப்படும் கருத்தியல்ரீதியான தாக்குதல்களுக்கு எதிராகவும், அதுபோன்ற இடஒதுக்கீடுகளை சீர்குலைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும், மாணவர் இயக்கம் தலித், பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய சாதியினர்க்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.

15. நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய மற்றும் பழங்குடி சமூகத்து இளைஞர்கள், விடாப்பிடியாய் அரசு வழிநடத்துகிற, வேட்டை நடவடிக்கைகளைச் சந்திக்கின்றனர். இவர்களுக்கு முறையே பயங்கரவாதிகள், மாவோயிஸ்ட்கள் என முத்திரை குத்தப்படுகிறது. இவர்களில் பலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு சிறைகளில் வாடுகின்றனர். சிலர் போலி மோதல் படுகொலைகளுக்கும், காவல் -மரணத்திற்கும் ஆளாகின்றனர். கொடூரமான ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் அமலில் இருக்கிற காஷ்மீர், மணிப்பூர் போன்ற பகுதிகளில் அல்லது ஒடுக்குமுறை பசுமை வேட்டை அமலில் இருக்கிற பகுதிகளில், பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் ஒரு போர்நிகர் சூழலை சந்திக்கிறார்கள். சமீபத்திய பல நிகழ்வுகளில் காணப்படுவதுபோல், அரசு ஒடுக்குமுறையின் நீண்ட கரம், தேசத் துரோக குற்றச்சாட்டுக்கள் அல்லது குற்றவியல் சட்டத்தின் வேறுவேறு சரத்துக்களின் துணையுடன் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்க முனைகிறது. ஆகவே, சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் காப்பது மாணவர் - இளைஞர் இயக்க நிகழ்ச்சிநிரலில் தொடர்ந்து உயர்ந்த இடத்தில் இருந்தாக வேண்டும்.

16. டெல்லி கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவத்துக்கு எதிரான சமீபத்திய எழுச்சியில் இளம்பெண்களோடு சேர்ந்து இளம் ஆண்களும் மிகப்பெரிய அளவில் பங்கேற்றது, பாலியல் தாக்குதல் மற்றும் ஆணாதிக்க வன்முறை எதிர்ப்பு, இளைஞர் இயக்கத்தின் முக்கிய நிகழ்ச்சிநிரல் என்பதை அங்கீகரிக்கும் தேவையை முன்னிறுத்தியுள்ளது. சில பாலியல் வன்புணர்ச்சியாளர்களுக்கு முன்னுதாரணமிக்க தண்டனை கோருவதோ, அல்லது பெண்களின் கவுரவத்தை பாதுகாக்க இளம்ஆண்கள் மத்தியில் வீரஉணர்வை ஊட்டுவதோ அல்ல நாம் செய்ய வேண்டியது. மாறாக, ஆணாதிக்க குப்பை முழுவதையும் வேரோடும் வேரடி மண்ணோடும் நிராகரிக்க வேண்டும். இதற்கு, வெகுமக்கள் மனப்பரப்பு மற்றும் பிரதான நீரோட்ட சமூக விழுமியங்கள் ஆகியவற்றின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிற நிலப்பிரபுத்துவ - ஆணாதிக்க ஒழுங்கிற்கு எதிராக ஒரு கலகமே தேவைப்படுகிறது; ஒவ்வொரு அரங்கிலும் பெண்களை சமமான மனிதர்களாக நடத்த ஆண்களுக்கு ஆற்றல்தரும் ஒரு மிகப்பெரிய அணுகுமுறை மாற்றம் தேவைப்படுகிறது. அழுகிப்போன பழைய அமைப்பு முறைக்கும், ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்ற நாம் போற்றுகிற விழுமியங்களுக்கும் கனவுகளுக்கும் இடையிலான போராட்டம், பெண்கள் பிரச்சனைகள் என்று தளர்வாக விவரிக்கப்படுகிற ஓர் ஒட்டுமொத்த பிரச்சனைகள் மீது, கூர்மையாகவும், மிகவும் தீவிரத்து டனும், தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை, மாணவர் -இளைஞர் இயக்கம், இளைஞர் நிகழ்ச்சிநிரலின் மய்யப் பகுதியாகக் கொள்ள வேண்டும். முற்போக்கு ஜனநாயக விழுமியங்களை துணிச்சலுடன் உயர்த்திப் பிடிக்க வேண்டும்; பிற்போக்கு கருத்துக்களையும், நடைமுறைகளையும் நிராகரிக்க வேண்டும்; தனிநபர் சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில் தார்மீக காவல் அல்லது சாதி, சமூக அச்சுறுத்தல்களை எதிர்த்திட வேண்டும்.

17. ஒரு சக்திவாய்ந்த மாணவர் - இளைஞர் இயக்கத்துக்கு, மாணவர் – இளைஞர் மத்தியில் சக்திவாய்ந்த வெகுமக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகர அமைப்புக்கள் அவசியம் வேண்டும். இந்த விசயத்தில், அகில இந்திய மாணவர் கழகமும், புரட்சிகர இளைஞர் கழகமும் சமீப வருடங்களில் ஓரளவு ஸ்திரமான, அமைப்பாக்கப்பட்ட விரிவாக்கத்தை சாதித்துள்ளன. ஆனால், இன்றைய சூழலின் உள்ளாற்றலுக்கு நியாயம் வழங்க வேண்டுமானால், இன்னும் பெரிய தகர்த்து முன்னேறுதல்கள் தேவை. அகில இந்திய மாணவர் கழகம் இன்னமும் வெகுசில வளாகங்களில்தான் உள்ளது. புரட்சிகர இளைஞர் கழகமும் சில நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் என்றே சுருங்கியுள்ளது. ஆனால், நாம் இப்போது நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிற மாணவர் – இளைஞர் விழிப்புணர்வும் அறுதியிடலும் இன்னும் பெரிய, உண்மையிலேயே தேசப்பற்று கொண்ட ஒரு நிகழ்வுப்போக்கு. நமது சொந்த அனுபவமும் மிகப்பெரிய உள்ளாற்றலை, அகில இந்திய மாணவர் கழக, புரட்சிகர இளைஞர் கழக அமைப்பு வலைப்பின்னல், சிறிய நகரங்களுக்கும் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் பரவ வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திக் காட்டுகிறது.

18. முடிவாக, இன்றைய இளைஞர் இயக்கத்துக்கு குறிப்பான பொருத்தப் பாடுடைய தோழர் வினோத் மிஸ்ராவின் அறைகூவலை நினைவுகூர்வோம்: சமூக அரசியல் முக்கியத்துவம் உள்ள கேந்திரமான பிரச்சனைகள் எப்போதுமே சட்டமன்றங்கள் அல்லது நாடாளுமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள் தீர்க்கப்படுவது இல்லை. எல்லா முக்கிய பிரச்சனைகளும் நாடாளுமன்ற எல்லைகள் தாண்டி வீதிகளில் நடக்கும் இயக்கங்கள் மூலமே தீர்க்கப்படுகின்றன. சில நேரங்களில் செவிசாய்க்காத நிறுவனங்கள் மீது குண்டு வீசப்படுதலும் நடைபெறுகிறது. இவ்வாறுதான் வரலாற்றில் எல்லா பெரிய இயக்கங்களும் முன்னேறுகின்றன. மாணவர் – இளைஞர் இயக்கத்தின் சக்தி, ஒவ்வோர் ஊழல் அமைச்சரையும், அதிகாரியையும் (நிலப்பிரபுத்துவ, மதவெறி அட்டூழியங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் போன்ற குற்றம் புரிபவர்களை நாம் சேர்ந்துக் கொள்வோம்) அச்சத்தில் நடுநடுங்க வைக்க வேண்டும்”.

Search