COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 7, 2013

3

அறைகூவல்

பிப்ரவரி 2 - 12 பிரச்சாரப் பயணம் வெல்லட்டும்

தீப்பொறி காட்டுத் தீயாகட்டும்

எஸ்.குமாரசாமி

கடந்த இருபதாண்டு காலம். எத்தனை மாற்றங்கள்? என்னென்ன மாற்றங்கள்? கார்ப்பரேட் பெரும் தொழில் குழும முதலாளிகள், இன்றைய ஆட்சிகளை ஆட்டிப் படைப்பவர்கள், எப்படி எல்லாம் மாறி உள்ளனர் எனக் காண, டாடாவின் கதையைப் பார்த்தாலே போதும்.

1992 - 1993ல் டாடா குழுமத்தின் மொத்த வருவாய் ரூ.9,400 கோடி. 2011 - 2012ல் மொத்த வருவாய் ரூ.4,75,722 கோடி. நரசிம்மராவ், குஜ்ரால், தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் ஆண்டபோது, அவர்கள், ராமனின் செருப்பாக ஆட்சி நாற்காலியில் இருந்தனர். வனவாசம் போகாமல், முதலாளித்துவ அரசியலை ஏவியது முதலாளித்துவப் பொருளாதாரம். 20 ஆண்டு கள் ஆட்சியில் இருந்த கொள்கைகளைத்தான், தாராளமயம் தனியார்மயம் உலகமயம் அல்லது தொகுப்பாக நவதாராளவாதம் என்கிறோம். முதலாளித்துவ உலகம் சொல்வதைச் செய். உலக மூலதனம் நுழைய வழி விடு. மூலதனத்துக்கு, இப்படி நட அப்படி நட என எந்தக் கட்டுப்பாடும் போடாதே. பொதுத் துறையை ஒழித்துக் கட்டு. நல நடவடிக்கைகளில் இருந்து அரசு பின்வாங்கு. சந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இவைதான் உலகமயம் தாராளமயம் தனியார்மயம். நவதாராளவாதம்.

இந்த 20 ஆண்டுகளில் 80 கோடி பேர் நாளொன்றுக்கு ரூ.20 கூட செலவழிக்க முடியாத வறுமையில் வாடுகின்றனர். டாடா குழும வருவாய் ரூ.9,400 கோடியில் இருந்து ரூ.4,75,722 கோடி ஆகி உள்ளது. செல்வம் மலையெனக் குவிந்துள்ளது. அதனால் வறுமை கடலெனப் பரவி உள்ளது.

டாடா கதையின் நடுவில் கொஞ்சம் பக்கங்களையும் பார்ப்போம். 2003ல் டாடா குழும மதிப்பு ரூ.45,000 கோடி என்றும், சந்தை துடிப்புடன் செயல்பட முதலீட்டாளர்கள் மகிழ டாடா வளர்ச்சி பாய்ச்சலாய் இருந்தது என்றும், ஊடகங்கள் குறிப்பிட்டன.

அக்டோபர் 4, 2003. டாடா குழும வரலாற்றில் ஒரு கருப்பு நாள். டாட்டா பவர் குரூப், நிரந்தரமாய் தற்காலிகத் தொழிலாளர் களாக இருந்த, 73 தொழிலாளர்களை நீங்கள் வேலை பார்த்த திட்டம் முடிந்துவிட்டது என வேலை நீக்கம் செய்தது. பல வருடம் வேலை பார்த்தவர்கள், சில வருடங்கள் வழக்காடினார் கள். வறுமையில் எதிர்ப்பில், ஒரு வினோதமான, இதயத்தைத் தொடும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை உருவானது. வேலை பறி போன தொழிலாளி அக்தர்கானும் அனந்த் கண்பத் டால்வியும், 04.10.2003 அன்று டாடா அலுவலகம் முன் தங்கள் மீது தீ வைத்துக் கொண்டனர். அக்தர் கானின் மனைவி அமீனா சொன்னார். வீட்டு உரிமையாளர் நேற்றுதான், 5 பெண் குழந்தைகளுடன் வாழும் எங்களை, வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்’. அனந்த் டால்வி மனைவி அஞ்சலியும் தாயும் இல்லப் பணியாளர்கள். வறுமைக்கும் வாழ்வின் துயரங்களுக்கும் அவற்றுக்குக் காரணமான டாடாவின் சுரண்டலுக்கு எதிராகத் தீக்குளித்த டால்வியும் கானும் அடுத்தடுத்த நாட்களில் இறந்தனர். அந்த 2003ல்தான் ரூ.45,000 கோடி என உயர்ந்த டாடா குழும மதிப்பு, 2012 -2013ல் ரூ.4,75,500 கோடி வருவாய் எனப் பெருகியது. வாழ்ந்தவர் யார் வீழ்ந்தவர் யார் என்பதுதான் கேள்வி. டாடாக்கள், அம்பானிக்கள், மிட்டல்கள் வாழ்ந்தார்கள். அனந்த் கண்பத் தால்வி, அக்தர்கான் போன்றோர் நாளும் வீழ்கிறார்கள். டாடாக்களுக்கு அவர் போன்ற பெரும் தொழில் குழும நிறுவனங்களுக்கு 1992 – 2002 - 2012 நெடுக, வளர்ச்சியும் முன்னேற்றமும் தான். முன்னேற்றத்தின் அமிர்தம் கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகளில் இருந்துதான் பருகப்படுகிறது என மார்க்ஸ் சொல்வது நினைவுக்கு வருகிறது. பகத்சிங்கும், யாருக்குச் சுதந்திரம், வெள்ளை எசமானர்கள் போய் பழுப்பு நிற எசமானர்களா எனக் கேள்வி கேட்டான். வளர்ச்சி முன்னேற்றம் என்ற சொற்கள் மகிழ்ச்சி தரமால் சீற்றத்தை உருவாக்குகின்றன.

சுரண்டலும், கொள்ளையும், சூறையாடலும்

செல்வக் குவிப்பு, வறுமைப் பரவல், 20 ஆண்டுகளில் எப்படி நடந்தது? 60% ஆட்டோ உற்பத்தி, தேசிய தலைநகர் பகுதியில் நடக்கிறது. 10 லட்சம் தொழிலாளர்களில் 8 லட்சம் பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். உலகில், முதலாளிகள் கூட, புதிய மதிப்பை, உழைப்புதான் உருவாக்குகிறது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பணமும் பணமும் சேர்ந்து புதிய மதிப்பு வராது. உழைப்பே மதிப்பை உருவாக்கும். ஆனால் உழைப்பு உருவாக்கும் மதிப்பில், ஒரு பகுதியை மட்டும் தொழிலாளிக்குக் கூலியாய்த் தந்து, மறு பகுதியை லாபமாக, உபரி மதிப்பாய் மூலதனம் சுரண்டிக் கொழுக்கிறது. மூலதனம் என்ற மடிந்த உழைப்பு, உயிருள்ள உழைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

10 ஆண்டுகளுக்குள், பிரிக்கால் மாருதி ஹூண்டாய் இயங்கும் ஆட்டோமொபைல் துறையில், 2000 - 2001ல் 8 மணி நேர μப்டில், ஒரு தொழிலாளி தான் வாழ, சந்ததியினரை உருவாக்க, கூலிக்காக 1 மணி 12 நிமிடங்கள் வேலை செய்தார். முதலாளியின் லாபத்திற்காக, (அதற்குள் உயர் அதிகாரிகள் சம்பளம், வட்டி எல்லாம் வரும்) 5 மணி 48 நிமிடங்கள் வேலை செய்தார். 2009 - 2010ல் சுரண்டல் தீவிரமானது. 8 மணி நேரத்தில் தொழிலாளி கூலிக்காக 1 மணி 12 நிமிடங்கள் மட்டும் வேலை செய்து, முதலாளியின் லாபத்திற்காக 6 மணி 48 நிமிடங்கள் வேலை செய்கிறார்.

வெறும் உழைப்புச் சுரண்டலால் ரூ.9,400 கோடி ரூ.45,000 கோடி ஆகி ரூ.4,75,500 கோடியாக வளருமா? தேசத்தின் கஜானாவைக் கொள்ளையடிக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடி வரி தள்ளுபடி, சலுகைகள், வாராக்கடன் தள்ளுபடியை உறிஞ்சிக் கொள்கிறார்கள். நிலக்கரியில் இருந்து அலைக்கற்றை வரை எல்லா இயற்கை வளங்களையும் சூறையாடுகிறார்கள். நமது வாக்குகள். பெரும்தொழில் குழும ஆட்சி. அமெரிக்காவில் டாலரோக்ரசி, இந்தியாவில் கார்ப்பரேட்டோக்ரசி.

வரலாற்றில் இருந்து சில பக்கங்களைத் தேடி எடுப்போம்.

மன்மோகன் அரசு 2012 இறுதியில், நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் தோற்கடிக்கப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டோடு தொடர்புடைய ஒரு சட்டத்தின் மீது வாக்கெடுப்பிற்கு முன் நாடாளுமன்ற கீழ் மேல் அவைகளில் விவாதம் நடந்தது. மக்களவை, மாநிலங்களவை இரண்டிலுமே விவாதத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மை கட்சிகள் உறுப்பினர்கள், அரசின் முடிவுக்கெதிராகவே பேசினார்கள். ஆனால் வாக்கெடுப்பு நடந்த போது, மக்களவையில், பிராந்தியக் கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, வெளி நடப்பு செய்து எதிர்க்கட்சி தீர்மானம் தோற்க உதவின. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தீர்மானம் தோற்க, வெளிநடப்பு மட்டுமே போதாது என்ற சூழலில், பகுஜன் சமாஜ் கட்சி தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து ஆட்சியைக் காப்பாற்றியது.

இந்த பிராந்தியக் கட்சிகளின் நம்பிக்கையைப் பெறுவது அவர்களுக்கு நம்பிக்கையைத் தருவது இடதுசாரிகளின் கடமை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட், பிராந்தியக் கட்சிகளுக்கும் நவதாராளவாத கருத்தியலுக்கும் தொடர்பு கிடையாது, ஏனெனில், அவர்கள் மக்களிடம் போய் வாக்குகள் வாங்க வேண்டும் எனத் தங்கள் வால்பிடி அரசியலுக்கு, திவாலா தத்துவ முலாம் பூச முயற்சிக்கிறது. வாக்கெடுப்பில், வஞ்சகத்தால், அதிகார துஷ்பிரயோகத்தால் மன்மோகன் அரசு வென்றிருக்கலாம். ஆனால் நாடாளுமன்ற அவை நடப்புக்களில், விவாதங்களில் காங்கிரஸ் தோற்றுத்தான் போனது.

இரண்டாவது தோல்வி, டிசம்பர் 22, 23 நாட்களில் நடந்தது. 23 வயது நிர்பயா டெல்லி பேருந்தில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளான பிறகு, தண்ணீர் பீய்ச்சும் பீரங்கிகளுக்கு காவல் துறையினர் தடியடிகளுக்கு அஞ்சாமல், குளிரையும் பனியையும் தங்கள் கோபச் சூட்டால் பணிய வைத்து, மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள், பாலியல் வல்லுறவு தலைநகரை, போராட்ட தலைநகராக்கினர். மெட்ரோ ரயில் நிலையங்களை மூடி, சாலை களில் நடமாட்டத்தை முடக்கி மக்கள் முற்று கையின் முன் தன் தோல்வியை காங்கிரஸ் அரசு, நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் ஒப்புக் கொண்டது.

நவம்பர் 25, 1992அய், நாம் நமது நினைவு அடுக்குகளில் இருந்து மீட்டு எடுத்தாக வேண்டும். நவதாராளவாதம் நின்றுவிட்டேன் வென்றுவிட்டேன் என்றெல்லாம் சொல்வதற்கு வாய்ப்பே இல்லாத, தாராளமயம், தனியார்மயம், உலகமயம் அறிமுகமான அந்த நேரத்தில், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய இந்தியத் தொழிலாளி வர்க்கம், குறிப்பாக இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, டெல்லி போட் கிளப்பில் ஒரு மிகப் பெரிய பேரணியை நடத்தின. அதற்குப் பிறகு டிசம்பர் 6ல் பாப்ரி மசூதி இடிக்கப்பட்டு, மதவெறி கோர தாண்டவமாடியது. இடதுசாரி கட்சிகள், நவம்பர் 25, 1992 எதிர்ப்புப் பேரணியை அடுத்தடுத்த எதிர்ப்புக்களுக்கு அரசியல் தளத்தில் உயர்த்த முயற்சிக்காமல் தவறினர்.

அதற்குப் பிறகு, ஆட்சியாளர்கள் இந்தியா கேட்டில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான ராஜ்பத் நெடுக, இங்கே மக்கள் போராட்டங்களுக்கு இடமில்லை என ஜனநாயக வெளியை, நடமாட்டத்தைக் சுருக்கினார்கள். உலகமயத்திற்கு நவதாராளவாதத்திற்கு எதிராக, இந்தியாவில் முதலில் போரைத் தொடுத்தது பாட்டாளி வர்க்கம். அந்த நாள் தான் 25.11.1992. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2012ல் டிசம்பர் 22 - 24 தேதிகளில் இந்தியாவின் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் அந்த ஜனநாயக வெளியை மீட்டெடுத்து, வல்லரசு மிதப்பில் இருக்கும் இந்திய அரசை வாலை சுருட்டிக் கொண்டு பின்வாங்க வைத்தனர்.

இன்றைக்கு இந்தியாவில் ஜனநாயகத்தை சூழ்ந்துள்ள ஆபத்து, உள்துறை அமைச்சர் ஷின்டே பேச்சில் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை, மத்திய அரசு சந்தித்திருக்க வேண்டாமா எனக் கேட்ட போது, இன்று இவர்களைச் சந்தித்தால், நாளை மகாராஷ்டிராவில், சத்திஸ்கரில் நூறு ஆதிவாசிகள் கொல்லப்படும்போது அங்கே போய், அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை வராதா எனக் கேட்கிறார்.

நவம்பர் 25, 1992 மூண்ட நெருப்பு அணைந்தது. டிசம்பர் 22 - 23 போராட்டத் தீப்பொறி எழுந்துள்ளது. நகர்ப்புற நாட்டுப்புற பாட்டாளிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகள், நிலப்பிரபுத்துவ சாதிய பிற்போக்கு சக்திகளை முறியடிக்க, பெரும் தொழில் குழும - முதலாளித்துவ அரசியல் அச்சை அடித்து நொறுக்க, மக்கள் வாழ்க்கையை மக்கள் வளங்களைக் காக்க, பிரும்மாண்டமான முறையில், பிப்ரவரி 20 - 21 வேலை நிறுத்தத்தை வெற்றி பெ வைக்க வேண்டும். மகுடங்கள் மண்ணில் உருள்வதை சிம்மாசனங்கள் தரையில் சரிவதை, மத்திய அரசுக்கு பொருத்துவதோடு நின்று விடாமல், ராவ் முதல் சிங் வரை அனைவரும் பின்பற்றி வரும் கொள்கைகளை பின்நோக்கித் திருப்ப, வழி செய்வதாக அமைய வேண்டும்.

குற்றவாளிக் கூண்டில் ஜெயலலிதா

மன்மோகன், மத்திய அரசை எதிர்க்கும் நாம், மாநில அரசை விட்டு விடலாமா? பதவியில் இருப்பது ஜெயலலிதா. எல்லா முனைகளிலும் துரோகம், மக்கள் விரோத பெரு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை அமலாக்கம் என மும்முரமும் தீவிரமும் காட்டும் ஜெயலலிதா அரசிடம் மென்மையான அணுகுமுறையை வெளிப்படுத்தும் இடதுசாரிகள், மக்களின் நம்பகமான இடதுசாரிகள் ஆக முடியாது.

மின் வெட்டு தொடரும், 2013 வரை மாற்றம் இருக்காது என்கிறார் ஜெயலலிதா. சுய உற்பத்தி 35%, 30% மத்தியத் தொகுப்பு 35% தனியாரிடமிருந்து கொள்முதல் என்பதே இப்போதைய மின் வினியோகக் கலவை. தனியார் கொள்ளைக்காக, சுய உற்பத்தி புறக்கணிக்கப்படுகிறது. ரூ.53,298 கோடி நஷ்டம் என்றால், தனியாரிடம் ஓர் யூனிட் ரூ.12 முதல் ரூ.14 வரை கொடுத்து வாங்கியது, ஒரு முக்கியக் காரணமில்லையா? மேலும் மேலும் தனியார் மின்சாரம், உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு தடையற்ற மின்சாரம் என்றால், வாக்களித்த மக்களுக்கு நித்தம் நித்தம் வேதனைதான். மின் வெட்டு பாதிப்பு நீக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும். பாதிக்கப்படும் சாமான்ய மக்களுக்கு நிவாரணம் வேண்டும்.

தமிழகத்தின் 30 மாவட்ட வேலை வாய்ப்பகங்களில் 70 லட்சம் பேர் வேலை கோரி பதிவு செய்துள்ளனர். ஆனால், இங்கு, வேலை வாய்ப்பு அலுவலர் உட்பட 400 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் இருந்தே வேலையின்மையைப் போக்குவதில் தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை ஏதும் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். மூலதன வருகை தேவைதான். ஆனால், அதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் கவுரவமான, பாதுகாப்பான, நல்ல சம்பளம் தருகிற கூடுதல் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது அரசின் கடமையாகும். தமிழகத்தில் கேலிக் கூத்தான அளவில் இருக்கிற வேலையின்மைக் காலப் படியை மாதம் ரூ.5000 என உயர்த்த வேண்டும்.

விவசாயம் பொய்த்துப் போகிறது. விவசாய சாகுபடி நிலப்பரப்பு நாளும் குறைகிறது. குறுவை சாகுபடியில் 15 லட்சம் ஏக்கர் நெல் உற்பத்தி பாழானது. கரும்பு வாழை 45 ஆயிரம் ஏக்கர் தஞ்சையில் மட்டுமே பாழ். விதர்பா விவசாயிகள் தற்கொலை தொற்றுநோய், தொலைதூர தமிழ்நாட்டைத் தொட்டுப் பார்த்து விட்டது. விவசாயிகளுக்கு விவசாயத் தொழிலாளர்களுக்கு வாய்ச் சொற்கள் தாண்டி என்ன நிவாரணம்? ரூ.132 தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கூலியைக் குறையாமல் கொடுப்பது, பேரூராட்சிப் பகுதிகளுக்குத் திட்டத்தை விரிவுபடுத்துவது என்பதை உடனடியாக உறுதி செய்வதோடு, 2013 முதல் வீட்டில் இருவர்க்கு வேலை, நாள் கூலி ரூ.200, ஆண்டில் 200 நாட்கள் வேலை என முதலில் உறுதி செய்து அதற்குப் பிறகு விஷன் 2023 பற்றி ஜெயலலிதா பேசட்டும்.

தலித் மக்களை ஒடுக்க, பகிரங்கமாக பிற்படுத்தப்பட்ட சாதியினரை தலித்துகளுக்கு எதிராக நிற்க வைக்க, ராமதாஸ் போன்ற சக்திகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உடந்தையாக இருப்பதை ஜெயலலிதா அரசு நிறுத்த வேண்டும். கிராமங்களின் பிற்படுத்தப்பட்ட சாதி பெண்கள் உழைப்புச் சந்தைக்குள் நுழைகிறார்கள். நடமாட்டம் ஒப்பீட்டு அளவிலான பொருளாதார சுதந்திரம், மற்றவர் களோடு புழக்கம், தவிர்க்க முடியாமல் சாதி தாண்டிய திருமணங்களைக் காலத்தின் கட்டாயமாக்கி உள்ளது. காலச் சக்கரத்தை, சமூகத்தில் உள்ள, போராடி வெல்லப்பட்ட முற்போக்கு ஜனநாயக விழுமியங்களை பின்நோக்கித் தள்ளப் பார்க்கும், ஆணாதிக்க தலித் விரோத சக்திகளுக்கு ஜெயலலிதா அரசு துணை நிற்பதைக் கைவிட வேண்டும்.

உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு நில வங்கி அமைத்து நிலம் தரும் ஜெயலலிதா அரசு, வீடற்றவருக்கு 3 சென்ட் நிலம் என்றதன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

மத்திய அரசு எதிர்ப்பு நாடகம் போடும் ஜெயலலிதா மதவெறி மோடியோடு கரம் கோர்ப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. ஜெயலலிதா, மத்திய அரசு பல லட்சக்கணக்கான பயிற்சி மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு கொஞ்சம் நிவாரணம் தரும் திருத்த மசோதா 47/2008க்கு விரைந்து மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமானத் தொழிலாளர் நல நிதி வசூலை 0.3% என்பதில் இருந்து 1% ஆக உயர்த்தி, நலப்பயன்களை அதிகரித்து பயனாளிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்க்கு சம வேலைக்கு சம ஊதியம், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கவுரவம் சமூகப் பாதுகாப்பு, கறாராக சட்ட அமலாக்கம், அமைப்பு சாரா தொழிலாளர்களை வறுமைக் கோட்டுப்பட்டியலில் சேர்ப்பது, தொழிற்சங்க அங்கீகார திருத்தச் சட்டம் போன்றவை தமிழக மக்கள் கோரிக்கைகள்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் கோரும் அதே நேரம் குறைந்தபட்ச மாதச் சம்பளம் ரூ.15,000 வேண்டும் என்பது ஓர் அடிப்படைக் கோரிக்கை. தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளுக்கு கோரிக்கைகளுக்குப் பஞ்சமே இல்லை. கருணாநிதி விஜய்காந்த் மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாது. இகக, இகக(மா) இன்னமும் தமிழகத்தில் கருணாநிதி தான் ஆட்சி நடத்துவது போல் தங்கள் எதிர்ப்பின் குறியை ஜெயலலிதாவிற்கு எதிராகத் திருப்பாமல் கருணாநிதிக்கு எதிராகவே அம்பு வீசுவது, அவர்கள் நம்பகத் தன்மையைப் பறிக்கும்.

இந்தப் பின்னணியில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) அதனோடு தொடர்புடைய அகில இந்திய தொழிற் சங்க மய்யக் கவுன்சில், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் ஆகிய அமைப்புக்கள் பிப்ரவரி 20 - 21 அகில இந்திய அரசியல் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டும் போதே, மாநில அரசுக்கெதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவெடுத்து உள்ளன.

ஏஅய்சிசிடியு தமிழக உழைக்கும் மக்கள் கோரிக்கைகள் மீது சிறப்பு சட்டமன்றத் தொடர் கூட்டக் கோரி பிப்ரவரி 2 முதல் குமரியில் இருந்தும், கோவையில் இருந்தும் பிரச்சாரப் பயணங்கள் துவங்குகிறது. துவக்கம் முதலே அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் பங்கு பெறும். திருச்சி முதல் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம், திருப்பெரும்புதூரில் அகில இந்திய மாணவர் கழகம் என பயணத்தில் சேர்வார்கள். பிப்ரவரி 12 அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் நிறுவன நாளில், ஜெயலலிதா அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் அதே நேரம், பிப்ரவரி 20, 21 வேலை நிறுத்த வெற்றிக்கான பிரும்மாண்டமான பொதுக் கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), அகில இந்திய தொழிற்சங்க மய்யக் கவுன்சில், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் ஆகிய அமைப்புக்கள் நடத்துகின்றன.

தமிழகத்தில் நம்பகமான இடதுசாரி மாற்று பலப்பட ஜனநாயக சக்திகளோடு ஒன்றுபட, பிப்ரவரி 2 - 12 பிரச்சாரப் பயணம் வெல்லட்டும்

Search