COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, January 13, 2013

4

நகல் ஆவணம்

தொழிலாளர் வர்க்க இயக்கம் மீதான தீர்மானம்:பின்புலம், கடமைகள், வாய்ப்புக்கள்

(2013, ஏப்ரல் 2 - 6 தேதிகளில் ராஞ்சியில் நடக்கவுள்ள இகக மாலெ (விடுதலை) 9ஆவது கட்சி காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள நகல் தீர்மானம் தரப்படுகிறது. வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)

1. உலகெங்கும், நவதாராளவாத இரைத் தேடலில் இறங்கியுள்ள ஆட்கொல்லி முதலாளித்துவம் உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது என்கிற பெயரால் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தனது பல முனைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. நம் நாட்டில் இது பல பழைய புதிய வடிவங்களை எடுத்துள்ளது: வேலை பறிப்புகள், ஆட்குறைப்பு, விருப்ப ஓய்வுத் திட்டங்கள் என்ற பெயர்களால் கட்டாய ஓய்வு, ஊதிய முடக்கம், அதிகரித்த வேலைச்சுமை மற்றும் அதிகரித்த வேலை நேரம், எண்ணிக்கைக் குறைப்பு நிரந்தரத் தன்மை வாய்ந்த அல்லது ஜீவநதித் தன்மை வாய்ந்த வேலைகளை வெளியில் தருவது, தற்காலிகமயப்படுத்துவது, சங்கங்களை உடைப்பது மற்றும் தொழில்துறை ஜனநாயகம் மறுப்பு என இந்தப் பட்டியல் முடிவில்லாமல் நீள்கிறது.

2. இந்திய அரசும் நீதித்துறையும், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி என்ற பெயரால், ஒரு முழுவரிசை தொழிலாளர் விரோத சட்டங்கள் விதிகள், தொழிலாளர் விரோத நீதிமன்றத் தீர்ப்புக்கள், புதிய தொழில்மய்யங்களில் சங்கமில்லா மண்டலங்களை உருவாக்குவது, அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் தொழிலாளர் போராட்டங்கள் மீது மிக மோசமான ஒடுக்குமுறை போன்ற நடவடிக்கைகள் மூலம் அதிகரித்த சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு துணை போகின்றன. பெருந்தொழில் குழும ஊடகங்கள் எப்போதும் பெருமுதலாளித்துவத்திற்கு இசைவாகவே பாடுகின்றன. மதப்பற்று தன்மையுடன் தேசத்தின் வளமைக்கு வேலை நிறுத்தங்களும் தொழிற்சங்கங்களும் ஆகப்பெரிய தடைகள் என சித்தரிக்கின்றன.

3. இந்தியாவின் தொழிலாளர்களும் ஊழியர்களும், பின்னோக்கித் தள்ளப்படும்போதும் இத்தகைய ஒன்றிணைந்த தாக்குதல்களை தொழிற்சாலை/பணியிடம், தொழில் மற்றும் தேசிய மட்டங்களில் விடாப்பிடியான உறுதியுடன் எதிர்க்கின்றனர். சமீப வருடங்களில், நமது உழைக்கும் மக்களில் ஏகப்பெரும்பான் மையாக இருக்கிற, பெரும்பான்மையாக பெண்களைக் கொண்டிருக்கிற, அமைப்பாக்கப்படாத மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு புதிய போர்க்குணமிக்க விழிப்புணர்வைக்காண முடிகிறது. இதே காலகட்டத்தில், எழுகிற இந்தியா இன்கார்ப்பரேட்டட்காட்சிப் பொருளாக முன்வைக்கப்படும் ஆட்டோமொபைல் தொழிலில், நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் முன்னுதாரணத்தன்மை வாய்ந்த ஒன்றுபட்ட போராட்டங்கள் நடந்துள்ளன. மத்திய தொழிற்சங்கங்களால் கூட்டாகக் கட்டமைக்கப்பட்ட மிகவும் வெற்றிகரமான தொழில்துறை போராட்ட நடவடிக்கைகளும் அரசியல் இயக்கங்களும் நடைபெற்றன. பரவும் நவதாராளவாத நெருக்கடி முன்கொண்டு வந்துள்ள கடுமையான சவால்கள் மற்றும் பெரிய வாய்ப்புக்கள் என்ற பாதையில், கிரீஸ், ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா மற்றும் இதர நாடுகளின் தொழிலாளர்கள் ஏற்கனவே போட்டுள்ள பயணப் பாதையில், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் இந்தியப் படைப்பிரிவும் உறுதியாக அடியெடுத்து முன்னேறுகிறது.

இந்தியாவின் வளர்ச்சிக் கதை: ஆதாயம் அடைந்தவர்களும் இழந்தவர்களும்

4. 1990களின் நடுப்பகுதி மற்றும் 2000 களின் குறுகிய காலங்களில் உழைப்பின் உற்பத்தித் திறனால் உந்தப்பட்டு உயர்ந்த தொழில் துறை வளர்ச்சி ஏற்பட்டது. அது இப்போது வடிந்துவிட்டது. ஆனால் வளர்ச்சியின் பயன்கள் உழைப்பாளிகளுக்கு மறுக்கப்பட்டது. உற்பத்தித் துறையில் கூட்டப்பட்ட நிகர மதிப்பில் கூலியின் பங்கு 1980களில் 30%க்கு பக்கத்தில் இருந்தது. 1990களில் 20%க்கு அக்கம் பக்கமாகக் குறைந்தது. 2008, 2009 வாக்கில் எப்போதும் இல்லாத தாழ்ந்த மட்டத்திற்கு 10% என விழுந்தது. கூட்டப்பட்ட நிகர மதிப்பில் லாபத்தின் பங்கு 1980கள் நெடுக 20%க்கு அக்கம்பக்கமாக இருந்தது. 1990களில் 30%தைத் தாண்டியது. 2008ல் நம்ப முடியாத 60% என உயர்ந்தது. இதில் வியப்படைய ஏதும் இல்லை. இதே கதைதான் சேவைத் துறையிலும் நடந்தது. இங்கு 1980களில் கூலியின் பங்கு 70%க்கு மேல் என இருந்தது. 2009ல் 50%க்கும் குறைந்தது. 1990களில் 30% என இருந்த லாபத்தின் பங்கு 2004, 2005க்கும் பிறகு 50%க்கும் மேல் என உயர்ந்தது.

5. உண்மைச் சம்பளம் தேங்கி சரிந்த போது, கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தின் உயர் நிர்வாகத்தினரும் தங்களுக்கு கொழுத்த சம்பள உயர்வுகளையும் அதனோடு சேர்ந்து வந்த முன்னுரிமைகளையும் வாரி வழங்கிக் கொண்டனர். 1990களில் நிர்வாகப் பணியாளர்களின் ஊதியங்கள் தொழிலாளர்களின் கூலியைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரு மடங்கு கூடுதலாக இருந்தது. அதன் பிறகு ஒரு வேகமான விகிதத்தில் வளர்ந்து 2008 வாக்கில் தொழிலாளர்களின் கூலிகளைக் காட்டிலும் 4.3 மடங்கு கூடியது. தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆபாசமான அளவுக்கு அதி உயர்ந்த சம்பளங்கள் பெறுகிறார்கள். சிலர் நாளொன்றுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் பெறுகிறார்கள். 2011 - 2012ல் நவீன் ஜிண்டால் பெற்ற சம்பளம் ரூ.73.42 கோடி. சன் நெட் ஒர்க்கின் கலாநிதியும், காவேரி கலாநிதியும் ஆளுக்கு ரூ.57.1 கோடி சம்பளம் பெற்றனர். ஹீரோ மோட்டார் கார்ப்பரேசனின் பவன் முஞ்சாலும், பிரிஜ் மோகன் முஞ்சாலும் ஆளுக்கு ரூ.34.55 கோடி சம்பளம் பெற்றனர். மெட்ராஸ் சிமெண்ட்சின் பி.ஆர்.ராஜா ரூ.29.34 கோடி சம்பளம் பெற்றபோது மாருதி சுசுகியின் சின்சோ நாகசாகி ரூ.28.12 கோடி சம்பளம் பெற்றார்.

6. விண்ணை நோக்கி உயரும் இந்த லாபங்கள் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் பிரும்மாமண்டமான வரிச் சலுகைகள் மற்றும் இதர சலுகைகளால் மேலும் வலுவூட்டப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் பெரும் தொழில் குழுமங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு ரூ.25 லட்சம் கோடி வரை வரும். 70%க்கும் மேலான இந்தியர்கள் ஒரு நாளில் ரூ.20 கூட செலவழிக்க முடியாத நிலையில், இந்த வரி விலக்குதான் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் இதுவரையில் நிகழ்த்தப்பட்டதிலேயே பிரும்மாண்டமான ஊழலாகும். இந்த கொழுத்த வரி விலக்குகளோடு, வசதிபடைத்தவர்களுக்கு கிடைக்கின்ற போதுமான ஓட்டைகள் மூலம் அவர்கள் அந்நிய வங்கிகளில் சட்ட விரோதமாக செல்வத்தை குவித்தும் சேர்த்தும் வைக்கின்றனர். பல வழிகளில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குகின்றனர்.

தொழிலாளர் வர்க்கம்: மாறும் சேர்க்கை

7. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்புக் கலவையில் மாற்றம் நிகழும்போது அதே விகிதாச்சாரத்தில் இல்லாவிட்டாலும், தொழிலாளி வர்க்கத்தின் சேர்க்கையிலும் ஒரு நிலையான மாற்றம் நிகழ்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிற்கு இப்போது விவசாயம் 15% பங்களிப்பு செய்கிறது. ஆனால் தங்களின் பொருளாதாரரீதியான பிழைத்திருத்தலுக்கு, மக்கள் தொகையின் கிட்டத்தட்ட 60% பேர் விவசாயத்தையே சார்ந்திருக்கிறார்கள். மொத்த தேசிய உற்பத்தி மதிப்பில் 59% பங்களிப்பு செய்கிற சேவைத் துறை இப்போது இந்தியப் பொருளாதாரத்தின் மேலோங்கிய பகுதியாக உள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்தத் துறையில் வேலை வாய்ப்பு ஆண்டுக்கு சராசரி 3.5% என்ற அளவில் வளர்ந்துள்ளது. ஆனாலும் மொத்த வேலை வாய்ப்பில் 1972 - 1973ல் இத்துறையின் பங்கு 15% என இருந்தது. 2009 - 2010ல் 26% என்ற அளவுக்கு மட்டுமே உயர்ந்தது.

8. முதன்மைத்துறை அல்லது விவசாயத் துறை வேலை வாய்ப்பு சீராக சரிந்து கொண்டி ருக்கிறது. சுரங்கம், பொருளுற்பத்தி, மின்சாரம், நீர், எரிவாயு மற்றும் கட்டுமானத்தை உள்ளடக்கிய இரண்டாம் நிலைத் துறையில் கட்டுமானத்தில் மட்டுமே வேலைவாய்ப்பில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நிலைத் துறை அல்லது சேவைத் துறையில், முதன்மையாக நிதி சேவைகள் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து என்ற மூன்று பிரிவுகளில்தான் வேலை வாய்ப்பு வளர்ச்சி மய்யங்கொண்டுள்ளது.

9. நாம் கிராமப்புற நகர்ப்புற பகுதிகளை ஒப்பிட்டுப் பார்த்தால், கிராமப்புற பொருளாதாரத்தைக் காட்டிலும் நகர்ப்புறப் பகுதிகளில் தான் வேலை வாய்ப்பு வளர்ச்சி கூடுதலாக உள்ளது. கிராமப்புற வேலை வாய்ப்பில் தேக்கம் என்பது, முதன்மையாக விவசாய வேலை வாய்ப்பில் சரிவு என்பதால் ஏற்படுகிறது. கிராமப்புறப் பகுதிகளில் விவசாயம் சாராத வேலை வாய்ப்பு தொடர்ச்சியாக வளர்ந்துள்ள போதும், இந்தத் தேக்கம் தொடர்கிறது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் மதிப்பீடுகளின் படி 1972 - 1973ல் கிராமப்புற விவசாயம் சாராத நடவடிக்கைகளில் 2,85,10,000 தொழிலாளர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1987 - 1988ல் 5,61,10,000 எனவும் 2004 - 2005ல் 9,35,30,000 ஆக உயர்ந்தது. இந்த நிறுவனத்தின் ஆய்வுப்படி இந்த எண்ணிக்கை 2009 - 2010ல் 10,75,10,000 ஆனது.

10. ஒட்டுமொத்த வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற கோணத்தில் இருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேலையில்லா வளர்ச்சி என்று விவரித்தாக வேண்டும். இது பொருளாதார தாராளமயமாக்கத்தின் தற்போதைய கட்டத்தில் மிகவும் குறிப்பாக உண்மையாகிறது. தாராளவாதத்திற்கு முந்தைய கட்டத்தில், 1972 - 1973 முதல் 1983 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு 4.7% என உயர்ந்தபோது வேலைவாய்ப்பு வளர்ச்சி 2.4% இருந்தது. 1983 – 1984 முதல் 1993 - 1994 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5% என உயர்ந்தபோது வேலை வாய்ப்பு வளர்ச்சி 2% என சரிந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6.3% என உயர்ந்தபோது வேலை வாய்ப்பு வளர்ச்சி 1.8% என மேலும் சரிந்தது. 2004 - 2005ல் இருந்து 2009 – 2010 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு வளர்ச்சி 9% என்ற அளவிற்கு உயர்ந்தபோது வேலை வாய்ப்பு வளர்ச்சி கிட்டத்தட்ட நின்று இதுவரை இல்லாத அளவிற்கு 0.22% எனக் குறைந்தது.

11. வேலை வாய்ப்பு வளர்ச்சி சரியும் விகிதம் என்ற இந்த ஒட்டுமொத்த வகை மாதிரியில் சில குறிப்பிட்ட இயல்புகள் தெளிவாகத் தெரிகின்றன. முதலாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் விவசாயத்தின் முக்கியத்துவம் கூர்மையாக சரிந்த பிறகும் அதுதான் இந்தியாவில் தொடர்ந்து அதிகம் பேருக்கு வேலை தருகிறது. விவசாயத்தில் வேலை செய்பவர்கள் அணிவரிசையில் ஒரு பெரிய மாற்றம் நிகழத்தக்க அளவுக்கு விவசாயம் சாராத துறைகள் போதுமான வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. இரண்டாவதாக, வேலை வாய்ப்பு வளர்ச்சியின் பெரும்பகுதி, குறைந்த வருவாய் மற்றும் மோசமான பணி நிலைமைகளால் குறிக்கப்படுகிற அமைப்பாக் கப்படாத முறைசாரா துறைகளில் இருந்தே வருகிறது. மூன்றாவதாக அமைப்பாக்கப்பட்ட துறையில் வேலை வாய்ப்பு வளர்ச்சி பெரும் அளவிற்கு தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற வகையினங்களிலேயே ஏற்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் ஒவ்வோர் ஆண்டும் உழைப்புப் பட்டாளத்தில் 1,30,00,000 தொழிலாளர்கள் இணைகிறார்கள். இவர்களில் 80 லட்சம் பேர் குறைந்த சம்பளம் தரும் அமைப்பாக்கப்படாத துறைகளில் இணைகிறார்கள். 50 லட்சம் பேர் வேலை கிடைக் காதவர்கள் அல்லது தற்காலிகத் தொழிலாளர் கள் வரிசையில் சேர்கிறார்கள்.

தொழிலாளி வர்க்கத்தின் மீது தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்கள்:

12. கூலி உழைப்பை தீவிரமாகச் சுரண்டுவது பல வழிகளில் நடைபெறுகிறது. மிகச் சமீபத்திய அதிவேக தொழிலகங்களில் எந்திரங்கள் புகுத்துவதன் மூலம் ஒப்பீட்டுரீதியான உபரி மதிப்புச் சுரண்டல் தீவிரப்படுத்தப்படுகிறது. தொழிலாளர் உழைப்பிலிருந்து முழு முற்றூடான உபரி மதிப்பை பிழிந்தெடுப்பதற்காக, தொழிலாளர்களுக்கு தற்சமயம் இருக்கிற இடைவேளை நேரத்தை குறைப்பது, கறாராகக் கண்காணிப்பது போன்றவற்றின் மூலம் திறன்வாய்ந்த வேலை மணி நேரமும் பல விதங்களில் விரிவுபடுத்தப்படுகிறது. சம்பளத் தொகை குறைப்பதற்காக நிரந்தர வேலைகளிலும் மிகவும் பரவலாக தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இது சட்ட விரோதமானது என்ற போதும், ஒரு மிகப் பரந்த வளருகிற தொழிற்துறை சேமப்பட்டாளம் இருப்பதனால் சுலபமாகச் சாத்தியமாகிறது. இது பொதுவான கூலி மட்டத்தை தாழ்த்தியே வைக்கவும் கூட பயன்படுகிறது. உண்மை சம்பளத்தை அரித்துப்போக வைக்க அல்லது தேங்கி நிற்க வைக்க அதிகரித்த அளவில் ஊதிய குழுக்கள், இரு தரப்பு முத்தரப்பு ஒப்பந்தங்கள் தாமதப்படுத்தப்படுகின்றன. சீர்குலைக்கப்படுகின்றன. கவிழ்க்கப்படுகின்றன.

13. ஒட்டுமொத்தமாக இல்லாவிடினும், கட்டம் கட்டமாக/பின்கதவு வழியாக, பொதுத்துறை நிறுவனங்கள் அரை – அரசாங்க நிறுவனங்கள், முன்னெப்போதைக் காட்டிலும் பரந்த அளவிலும் துரிதமாகவும் தனியார்மயப்படுத்தப்படுகின்றன. இது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி தள்ளுகிறது. அத்துடன் உடனடி வேலை இழப்புகள், குறைக்கப்பட்ட சம்பளம், மோசமான பணி நிலைமைகள் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்கிறது.

14. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போக, ஹரியானாவின் குர்கான் – மனேசர் பகுதி உத்தர்கண்டின் ருத்ரப்பூர் மற்றும் பிற பகுதிகள் சென்னையின் திருபெரும்புதூர் பகுதி போன்றவை தொழிற்சங்கம் – இல்லா மண்டலங்களாகமாற்றப்படுகின்றன. தொழிற்சங்கங்களின் பதிவும் மறுக்கப்படுகிறது. தொழிற்சங்கங்கள் அமைக்கவிடாமல் தொழிற்சங்கங்களில் சேர விடாமல் தொழிலாளர்கள் தடுக்கப்படுகின்றனர். நீண்டகாலமாக நிலை நாட்டப்பட்ட தொழிற்சங்க கலாச்சாரம் இருக்கிற அமைப்பாக்கப்பட்ட துறையிலும் கூட, பல நேரங்களில் நிர்வாகங்கள் பரந்த தொழிலாளர்கள் ஆதரவு பெற்ற போர்க்குணமிக்க சங்கத்திற்கு அங்கீகாரம் தர மறுக்கின்றன. நிர்வாகங்களுக்கு சாதகமாக அவற்றின் சட்டைப் பைகளில் உள்ள சங்கங்களுக்கு அங்கீகாரம் தருகின்றன.

15. கடுமையாகப் போராடி வென்ற தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு தொழிற் துறை ஜனநாயகம் முடக்கப்படுகிறது. இது, தனது வர்க்க எதிரி கட்டமைக்கப்பட்ட எதிர்ப்பில் எழவிடாமல் அதனை அழுத்திவைக்க, மூலதனத்தால் ஆகப் பரவலாக பயன்படுத்தப்படுகிற அரசியல் ஆயுதமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளும் இவற்றோடு தொடர்புடைய உழைப்பின் கவுரவம் என்ற பிரச்சனையும், இன்றைய தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் மிகவும் முக்கிய கரிசனங்களாக எழுந்துள்ளன.

தொழிலாளர்கள் எதிர்ப்பின் வெடிப்பு புள்ளிகள்:

16. சமீப காலங்களில், அடிக்கடி மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகளின் கூட்டு தேசிய இயக்கங்களை காண முடிகிறது. காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்கிற மத்திய தொழிற்சங்கங்கள் உட்பட பரந்த தொழிலாளர்களின் நிர்ப்பந்தத்தால் இந்த இயக்கங்களில் சேர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மத்திய அளவிலோ அல்லது துறைவாரி அடிப்படையிலோ கூட்டு நடவடிக்கைகளில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் சேர்வது தற்போதைய கட்டத்தின் குறிப்பான இயல்பாகும். இத்தகைய மிகப் பரந்த தொழிற்சங்க ஒற்றுமை வர்க்கப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தவும், தீவிரப்படுத்தவும், தாராளமய தனியார்மயக் கொள்கைகளை பின்னோக்கித் தள்ளும் ஒன்றுபட்ட தொழிலாளர் வர்க்க உறுதியை சக்திவாய்ந்த விதத்தில் அறுதியிடவும் ஒரு சாதகமான மேடையாகப் பயன்படுத்தப் படலாம். பயன்படுத்தப்பட்டாக வேண்டும்.

17. இந்தியாவில் ஒன்றோடொன்று பிரிக்க முடியாமல் இணைந்துள்ள ஆட்டோ மற்றும் ஆட்டோ உதிரிபாகத் தொழில்கள் வர்க்கப் போராட்டத்தின் ஆகக்கூடுதல் இயங்காற்றல் நிறைந்த வெடிப்புப் புள்ளிகளாக எழுந்துள்ளன. மகிந்த்ரா (நாசிக்), சன்பீம் ஆட்டோ (குர்கான்), போஷ் சேசி (புனே), ஹோண்டா மோட்டார் சைக்கிள் (மனேசர்), ரிக்கோ ஆட்டோ (குர்கான்), பிரிக்கால் (கோவை), வோல்வோ (போஸ்கோம், கர்நாடகா), எம்ஆர்எஃப் டயர் (சென்னை), ஜெனரல் மோட்டார்ஸ் (ஹலோல், குஜராத்), மாருதி சுசுகி (மனேசர்), போஷ் (பெங்களூரு), டன்லப் (ஹூப்ளி, சென்னை), கெப்பாரோ, ஹூண்டாய் (திருபெரும்புதூர்) என 2007 முதல் 2012 வரை கிட்டத்தட்ட நன்கறியப்பட்ட அனைத்து ஆட்டோ யூனிட்களிலும் தொழிலாளர் வெடிப்புகள் நிகழ்ந்தன.

18. ஆட்டோமொபைல் தொழிலில் ஒட்டுமொத்த உற்பத்தியிலும், தொழிலாளியின் சராசரி தனிப்பட்ட உற்பத்தித் திறனிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. 2004 - 2005ல் எல்லா வகை வாகனங்களின் உற்பத்தி 85 லட்சம் என இருந்தது. 2011 - 2012ல் 2 கோடியே 4 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த இரண்டு தொழில்களிலும் மலிவான ஒப்பந்த தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் நிரந்தரத் தொழிலாளர்களை விட கூடுதல் எண்ணிக்கையில் இருக்கின்றனர்! 2000 - 2001ல் இருந்து 2009 - 2010 காலம் நெடுக உண்மைச் சம்பளம் (பண வீக்கத்தைக் கணக்கில் கொண்ட பிறகு) தொடர்ந்து சரிந்து வருகிறது. 2000 - 2001ல் ஓர் ஆட்டோ தொழிலாளி 8 மணி நேர ஷிப்டில் தம்முடைய பிழைத்திருத்தலுக்காக வும், தம்முடைய குடும்பத்திற்காகவும் 2 மணி 12 நிமிடங்கள் செலவழித்தார். மிச்சமுள்ள 5 மணி 48 நிமிடங்கள் முதலாளிக்கு (வங்கிகள், நிலச் சொந்தக்காரர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் அது போன்றோர்) உபரியை உருவாக்குவதற்காகச் செலவழித்தார். 2009 - 2010ல்தம்முடைய பிழைத்திருத்தலுக்காகவும், தம்முடைய குடும்பத்திற்காகவும் 1 மணி 12 நிமிடங்கள் செலவழித்து முதலாளிக்காக 6 மணி 48 நிமிடங்கள் செலவழித்தார்.

19. டெல்லிக்கு வெளியே உள்ள குர்கான் - மனேசர் - பவால் மண்டலத்தில் இந்தியாவின் ஆட்டோ உற்பத்தியில் 60% நடை பெறுகிறது. இங்குள்ள 10 லட்சம் தொழிலாளர்களில் 80% பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.சங்கத்தை உடைப்பது, வேலை நீக்கம் செய்வது, அடித்து உதைப்பது (2006 குர்கானில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட முழு முற்றூடாக அமைதி காத்த ஹோண்டா தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட காவல்துறை மிருகத்தனத்தை நினைவுபடுத்திக் கொள்க) கொலைக் குற்றம் உட்பட குற்றவியல் வழக்கு களை ஜோடிப்பது அன்றாட நிகழ்வாகி விட்டது. ஜெர்மன் ஆட்டோ உதிரிபாக தயாரிப்பாளரான போஷ் நிறுவனம், ஒரு சங்கத்தை உருவாக்கும் முயற்சியை, மூன்று முறை எதிர்த்துள்ளது. மற்ற எல்லா தொழிற்சாலைகளிலும் கூட கிட்டத்தட்ட இதே கதைதான்.

20. இயல்பாக இந்த இரட்டைதொழில்களில் பரந்த தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள உண்மையான தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது, சட்டத்திற்குப் புறம்பாகவும் நம்ப முடியாத மிகக்குறைந்த கூலியிலும் ரெகுலர் பணிகளில் அமர்த்தப் பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பயிற்சியாளர்களை முறைப்படுத்துவது ஆகியவை அடிப்படைக் கோரிக்கைகளாக எழுந்துள்ளன. அந்தந்தத் துறை மற்றும் பிளாண்ட் மட்டத்தில் கவுரவம், தங்கள் போர்க்குணமிக்க தோழர்கள் பழிவாங்கப்படுதல் ஆகிய பிரச்சினைகளில் தொழிலாளர்கள் அடிக்கடி வேலை நிறுத்தங்களிலும் இதர வடிவங்களிலான எதிர்ப்புக்க ளிலும் ஈடுபடுகின்றனர். பன்னாட்டு நிறுவன நிர்வாகத் தந்திரங்கள், தொழிலாளர் எதிர்ப்பின் எழுந்து வருகிற முகம் மற்றும் அரசின் பாத்திரம் போன்ற, வர்க்கப் போராட்டத்தின் புதிய இயல்புகள் இந்தியாவின், இரண்டு மிகவும் முக்கியமான நவீனதொழில் மய்யங்களில் சில பிரதிநிதித்துவ இயக்கங்களில் கண்கவர் வண்ணங்களில் வெளிப்பட்டன.

மாருதி, பிரிக்கால் போராட்டங்களின் படிப்பினைகள்:

21. மனேசர் மாருதி சுசுகி தொழிற்சாலை, அவப்புகழ் பெற்ற காப் பஞ்சாயத்துக்கள் மேலோங்கி உள்ள பழமைவாத இந்தி இதயபூமியில் உள்ளது. சில காலமாக, இந்தத் தொழிற்சாலை, தொழிற்துறை மோதலில் முன்னேறிய களமாக உள்ளது. பல தொழிலாளர்கள் இளைஞர்கள். கிட்டத்தட்ட கல்வியறிவு உடையவர்கள். பலர் தொலைதூரத்திலிருந்து வருபவர்கள். கடந்த காலம் போல் இல்லாமல், இப்போதைய நடைமுறைப்படி, நிறுவனம் வீட்டுவசதி செய்வதில்லை. உள்ளூர் நில உடைமையாளர்கள் வழங்கும் அறைகளே தொழிலாளர் விடுதிகளாகி உள்ளன. சங்கமாகும் உரிமைக்கான நீண்ட, அமைதியான போராட்டத்திற்குப் பின், அனைத்து வகை தொழிலாளர்களையும் உள்ளடக்கிய மாருதி சுசுகி ஊழியர்கள் சங்கம் (எம்எஸ்ஈயு) மார்ச் 2012ல் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை, மாருதி நிர்வாகம், சட்டத்திற்குப் புறம்பாக, இந்தச் சங்கம் எந்த மய்யத் தொழிற்சங்கத்துடனும் இணையக் கூடாது என வற்புறுத்துகிறது. ஜ÷ன் 2012ல், 13 நாட்கள் நீண்ட ஒரு வேலை நிறுத்தத்திற்குப் பின், நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்ட 11 தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க ஒப்புக் கொண்டது.

22. மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில், ஜூலை 18, 2012 மோதல், ஒரு மேற்பார்வையாளர் ஒரு தலித் தொழிலாளியை சாதியைச் சொல்லி ஏச, அவரும் தக்க பதில் சொன்ன நிகழ்வால் பற்ற வைக்கப்பட்டது. இத்தகைய சிறுமைப்படுத்துதல், விதிவிலக்காக நடந்ததல்ல. தொழிலாளர்களின் மன உறுதியை உடைக்க, இவ்வாறுச் செய்யுமாறு, இப்போது மேற்பார்வையாளர்களுக்கும் மேலாளர்களுக்கும் பயிற்சி தரப்பட்டுள்ளது. இதனை அடுத்து, ஒரு புறம் தொழிலாளர்கள் மறுபுறம் நிர்வாகம் மற்றும் குண்டர்களுக்கு (பவுன்சர்கள்) இடையிலான மோதலில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். ஒரு மனிதவளத் துறை மேலாளர் மரணடைந்தார். நிர்வாகமும் அரசின் வெவ்வேறு அதிகாரங்களும் உடனடியாகச் செயலில் இறங்கின. கண்மண் தெரியாத கைதுகள் நடந்தன. மொத்த பகுதியிலும் ஒரு காவல்துறை - குண்டர்கள் பயங்கரத்தின் ஆட்சி கட்டவிழ்த்து விடப்பட்டது.

23. காப் பஞ்சாயத்துக்களில் அமைப்பாகி உள்ள குலக் - நிலப்பிரபுத்துவ சக்திகள், வேலை நிறுத்த சங்கத்தை ஒடுக்கியாக வேண்டும் என முடிவு செய்தன. அவர்கள் தம்மிடம் வாடகைக் கிருந்த குடித்தனக்காரர்களை வெளியேற நிர்ப்பந்தித்தனர். இது தொழிலாளர்களுக்கு கூடுதலாய் பிரச்சனை தந்தது. இதற்கிடையில் மொத்தத் தொழிற்சாலையும் இரும்புத் திரைக்குள் இருக்கும் ஒரு தனியிடமாக மாற்றப்பட்டது. தொழிற்சாலைக்குள் நுழைய விரும்பும் ஒவ்வொரு தொழிலாளியும் எழுத்து பூர்வமான ஒரு நன்னடத்தை வாக்குறுதி தர வேண்டும் என வற்புறுத்தப்பட்டு, ஓர் அறிவிக் கப்படாத கதவடைப்பு திணிக்கப்பட்டது.

24. இந்தப் பின்னணியில்தான், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கழகம் (எஸ்அய்ஏஎம்) ஆட்டோ உதிரிபாக உற்பத்தியாளர் கழகம் (ஏசிஎம்ஏ) ஆகியவை, ‘நெளிவுசுளிவானதொழிலாளர் சட்டங்கள் வேண்டும் எனவும், உற்பத்தி குறையும் நேரங்களில் நிரந்தரத் தொழிலாளர்களையும் வேலைக்கு வரவேண்டாம் (லே ஆஃப்) எனச் சொல்லும் உரிமை வேண்டும் எனவும் கோரினர்! தொழில் உறவு நிபுணர்கள்இந்த நிலைப்பாட்டை தொழிலாளர் நலன்களிலிருந்து ஆதரிப்பதாகச் சொன்னார்கள்; இந்தியாவின் பழைய தொழிலாளர் சட்டங்கள், உற்பத்தி குறையும் போது கூட தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய வேலை அளிப்பவர்களுக்கு அனுமதி தராததால்தான், வேலை அளிப்பவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணியில் அமர்த்த நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என வாதாடினர்! ஆட்டோ நிறுவனங்கள், ‘சங்கத் தொந்தரவுஇல்லாத உற்பத்தி வேண்டி தம் நடவடிக்கைகளை குஜராத்திற்கு மாற்றப் போவதாகச் சொன்னார்கள். (அதாவது, நரேந்திர மோடி, தொந்தரவு தருபவர்களைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை, அவர்களுக்கு இருந்தது)

25. தொழிலாளர்கள் தம் பங்கிற்கு ஒரு நீண்டகால தர்ணா நடத்தினர். டெல்லியிலிருந்து பல்கலைக் கழக மாணவர்கள் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டங்களை, கோவை பிரிக்கால், குர்கான் ஹோண்டா தொழிலாளர்கள் நடத்தினார்கள். ஆனால், காவல்துறையினரின், முன்னாள் ராணுவத்தினரின் கவனமான கண்காணிப்பின் கீழ்தான் உற்பத்தி ஒருவழியாக துவங்கப்பட்டது. சிறப்பு அதிரடிப்படை 24 மணி நேரமும் தொழிற்சாலையைக் காவல் காக்கிறது. ஒவ்வொரு தொழிலாளியின் ஒவ்வோர் அசைவும் பாதுகாப்பு கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது.

26. இதை ஒத்த கதை, கோயம்புத்தூரின் பிரிக்கால் ஆட்டோ உதிரிபாகத் தொழிற்சாலையில் வேறுவிதமாய் நடந்தேறியது. இங்கு மார்ச் 2007ல் ஓர் உறுதியான போராட்டம் துவங்கியது. ஏகப்பெரும்பான்மைத் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற புதிதாக அமைக்கப்பட்ட சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கைதான் எழுப்பப்

பட்டது. நிரந்தரத் தொழிலாளர்கள், துணை யூனிட் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இணைந்து போராடினார்கள். ஏஅய்சிசிடியுவுடன் இணைக்கப்பட்ட சங்கத்திற்கு மாவோயிஸ்ட் சங்கம் என முத்திரை குத்தப்பட்டது. நிர்வாகம், மாநில அரசாங்கத்தின் முழுஆதரவுடன், சம்பள உயர்வு மறுப்பு, சம்பளப் பிடித்தங்கள், வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தங்கள், சர்வீஸ் கால வெட்டு, குற்றவியல் வழக்குகள் போடுவது எனப் பல தண்டனைகளைத் திணித்தது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மார்ச் 2007 முதல் வேலை நிறுத்தம் தொடர்ந்தது.

27. செப்டம்பர் 2009ல் மனித வளத்துறை துணைத் தலைவர் மரணத்தை முழுமையாகப் பயன்படுத்தி தொழிலாளர்களைத் தனிமைப் படுத்தி நசுக்க முயன்றனர். மொத்த சங்கத் தலைமை மீது, பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட முன்னணி தொழிலாளர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டன. சிலர் சிறையில் 100 நாட்கள் வரை கூட இருந்தனர். ஆனாலும் அவர்கள், தமது போராட்டம் பற்றி ஒரு போதும் ஒரு தற்காப்பு நிலையோ மன்னிப்பு கோரும் நிலையோ எடுக்கவில்லை. போராட்டம் நீதிமன்றங்களிலும், நீதிமன்றத்திற்கு வெளியிலும் தொடர்ந்தது.

28. நமது கட்சியும் தொழிற்சங்கமும், தொழிலாளர்கள் மத்தியில் விரிவாகவும் தீவிரமாகவும் வேலை செய்தன. போராட்டத்திற்கு ஆதரவாகக் குடும்பத்தினரையும் உள்ளூர் மக்களையும் அணிதிரட்டுமாறு உற்சாகப்படுத்தின. பல நிகழ்ச்சிகள் மற்றும் விவாத அமர்வுகள் மூலம் அரசியல் உணர்வு மட்டத்தை உயர்த்த தொடர்ச்சியான படைப் பாற்றல்மிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. பிரிக்கால் தொழிலாளர்களின் செயலூக்கமான பங்குடன் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி விரிவுபடுத்தப்பட்டது. வழக்கமாக இது போன்ற நேரங்களில், தொழிலாளர்களைத் தம்போராட்டங்களில் சோர்வுறச் செய்து இறுதியில் பணிய வைப்பது என நிர்வாக - அரசாங்க அச்சு செய்வதை, நமது ஒன்றிணைந்த முயற்சிகள் சாத்தியமாகாமல் தோல்வியுறச் செய்தன. தொழிலாளர்கள் தம் நிலையில் உறுதியாக நின்றனர். குற்றம் மேல் குற்றம் சுமத்தப்பட்ட சங்கம், அங்கீகாரம் வெல்ல, தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமையை வென்றனர்.

29. அமைப்பு முறை விடாப்பிடியாய், தொழிலாளர் சட்டங்களை உயர்த்திப் பிடிக்க மறுக்கும்போது, வெளிப்படையான மீறல்கள் விதியாக மாற அனுமதிக்கும்போது, குறைகளைத் தீர்வு காணப்படுவதற்கான வழிகள் அடைக்கப்படும்போது, சங்க செயல்பாடு முடக்கப்படும்போது, ஜனநாயக விரோதமான, கவுரவக் குறைவான சுரண்டும் தன்மை வாய்ந்த வேலை நிலைமைகளை எதிர்க்கும் தொழிலாளர்களைக் கையாளும்போது, வழக்கமாக நிர்வாகங்கள் குண்டர்களை அமர்த்துதல் பழிவாங்குதல் மற்றும் ஊழல் நிறைந்த வழிமுறைகளை மேற்கொள்ளும்போது, வெடிப்புகளும் வன்முறை நிறைந்த மோதல்களும் தவிர்க்க முடியாதவை. கிராசியானோ (நொய்டா), ரிஜென்சி செராமிக் (ஏனாம், புதுச்சேரி) போன்ற நிகழ்வுகளில் தொழில்துறை மேலாளர்கள் உயிரிழந்தது, ரிக்கோ தொழிற்சாலையில் (குர்கான்) நிறுவன அதிகாரிகளாலும் கூலிக்கமர்த்தப்பட்ட குண்டர்களாலும், ஒரு தொழிலாளி தொழிற்சாலையின் உருக்குக்கலனில் வீசிக் கொல்லப்பட்டது போன்றவை, மேலே குறிப்பிட்ட விசயங்களைப் போதுமான அளவு நிரூபிக்கும். (ரிக்கோ தொழிற்சாலை நிகழ்வில் இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை). அதே நேரம், பெரும் தொழில் குழுமத் துறையும் அரசாங்கங்களும், இது போன்ற நிகழ்ச்சிகளைச் சாக்காக்கி, தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்தம் செய்யச் சொல்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள், நடந்து வரும் மீறல்களைச் சட்டபூர்வமாக்க முயற்சிக்கிறார்கள். சட்டபூர்வ தடை ஏதுமில்லாமல், தொழிலாளர்களைச் சுரண்டும் சுதந்திரம் கோருகிறார்கள்.

30. இத்தகையதொரு சூழலில், தொழிலாளர் வர்க்கம், தொழில்துறை ஜனநாயகம், சம வேலைக்கு சம ஊதியம், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கவுரவத்திற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். அது, தொழிற்சாலைகள் தாண்டி மக்களின் ஜனநாயகப் பிரிவினரை அணிதிரட்டுகிற ஓர் அரசியல் எதிர்ப்பை வளர்த்தெடுக்கும், தொழிலாளி வர்க்கத்தை ஓர் அரசியல் சக்தியாக நிலைநாட்டும் சவாலை எதிர்கொண்டுள்ளது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள்:

31. நவதாராளவாத சீர்திருத்தத்தின் 20 ஆண்டுகால ஓட்டம், உற்பத்தி இயக்கப்போக்குகளின் - உதாரணமாய் உழைப்புத் திரட்சியிலிருந்து ஆட்டோமேட்டட் உற்பத்தி என்ற மூலதன திரட்சி நோக்கிய மாற்றங்கள் - தொழிலாளி வர்க்க சேர்க்கையின் - உதாரணமாய் உழைப்பு மிகப்பெரும் அளவில் தற்காலிகமயமாவது - போன்ற மாற்றங்களால் குறிக்கப்படுகிறது. வெவ்வேறு தொழில்துறைகள் மற்றும் தொழிலாளர்கள் வகையினங்களின் ஒப்பீட்டுரீதியான முக்கியத்துவமும் கூட சில மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. அதேபோல் ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சனைகளின் இயல்பும் மாறியுள்ளது. இந்தப் பின்புலத்தில் தொழிலாளர் வர்க்க இயக்கம் தன்னை மறுகட்டமைப்பு செய்து கொள்ள வேண்டும்; முதலாளித்துவத்தால் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்த, அன்றாட, தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கையான தடைச் சுவர்களைத் தகர்க்க பொருத்தமான வழிகளையும் முறைகளையும் உருவாக்க வேண்டும்.

32. ஏற்கனவே பார்த்தது போல், இந்தியாவில் சீர்திருத்தத்திற்குப் பிந்தைய தொழில்வளர்ச்சி, குறைந்த சம்பளம் பெறுகிற ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெண் தொழிலாளர்கள் ஆகியோரால் உந்திச் செலுத்தப்படுகிறது. தொழிற்சாலைத் துறையில் 1999 - 2000ல் மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 20% என இருந்தது 2008 - 2009ல் 32%ஆக உயர்ந்தது. அமைப்பாக்கப்பட்ட பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளில் மேலும் மேலும் கூடுதலான வேலைகள், மனம் போன போக்கில், கருவான தன்மை இல்லா தவை ஜீவநதித் தன்மை இல்லாதவை என வகையினப்படுத்தப்பட்டு ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. ஒப்பந்த தொழிலாளர் நீக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் உண்மையில் ஒப்பந்த தொழிலாளர் முறையை நீடிக்க வைக்கவே உதவியுள்ளது. ஆனால் பிரதானமாக ஆபத்தான வேலைகளில் குறைந்த சம்பளத்தில் பணிக்க மர்த்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மவுனமாக தம் துன்பங்களை சகித்துக் கொள்வதில்லை. நிரந்தரத் தொழிலாளர்களோடு கூட்டுப் போராட்டங்கள் நடத்துவதோடு, அவர்கள், சுதந்திரமாக தமது சொந்த இயக்கத்தையும் நடத்துகின்றனர். சமீபத்தில் நடந்த மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஏப்ரல் 2012ல் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனில் நடந்த 44 நாட்கள் வேலை நிறுத்தமாகும். சில ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களோடு சம்பள சமத்துவம் பெற தங்கள் வேலைகளை முறைப்படுத்திக் கொள்ள பல ஆண்டுகளாக நடத்தி வருகிற போராட்டத்தின் ஓர் உச்ச நடவடிக்கையாகவே, இப்போராட்டம் அமைந்திருந்தது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்களை திரட்ட தொழிற்சங்கங்கள் தரப்பிலிருந்து எந்த முயற்சியும் இல்லாததால் இவர்கள் மீண்டும் ஒரு முறை தோற்கடிக்கப்பட்டார்கள்; ஆனால் அதற்கு முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்களின் உள்உறைந்து கொண்டிருக்கும் மகத்தான ஆற்றலையும் தாங்கும் திறனையும் வெளிப்படுத்தினார்கள்.

33. கல்வி, மருத்துவம் போன்ற பொதுச் சேவையின் கேந்திரமான துறைகள் வேலை வாய்ப்பின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. ஆனால் இங்குள்ள பணிகளின் தன்மை, அதிகரித்த அளவில் பாதுகாப்பற்றவையாகின் றன. துவக்கப் பள்ளிகளிலிருந்து கல்லூரிகள் வரை ஒப்பந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை பெருமளவிற்கு அதிகரித்துள்ளது. நிரந்தரத் ஆசிரியர்களின் பதவிகள் சீராக நீக்கப்படுகின்றன. அல்லது காலியாக விடப்படுகின்றன. மிகவும் பெரிதாகப் பேசப்படுகின்ற தேசிய ஊரக சுகாதார இயக்கம் இப்போது நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது; இந்த இயக்கம் முதன்மையாக ஆஷா என்ற சான்று பெற்ற சமூக சுகாதார செயல்வீரர்களின் அங்கீகரிக்கப்படாத பங்களிப்பால்தான் இயங்குகிறது. இவர்களுக்கு ஒரு சிறு தொகை மதிப்பூதியமாகத் தரப்படுகிறது. இவர்களுக்கு முறையான வேலை வாய்ப்போடு சேர்ந்து வருகிற பாதுகாப்போ அங்கீகாரமோ இல்லை.

34. ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் ஆஷா போன்ற தொகுப்பூதியம் பெறுபவர்கள், அமைப்பாக, மேலான சம்பளம் மற்றும் முன்னேறிய வேலை நிலைமைகளை பெறப் போராட மகத்தான உறுதியை வெளிப்படுத்தியுள்ளனர். நாடெங்கும் உள்ள தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் ஆஷா ஊழியர்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள் உத்வேகம் தருகிற எழுகிற அம்சங்களாக உள்ளன.

இடம்பெயரும் தொழிலாளர்கள்

35. இடம்பெயரும் தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு, நீண்ட நேரம், பாதுகாப்பற்ற, ஆபத்தான வேலைநிலைமைகளில் வேலை செய்கிறார்கள். மாநிலங்களுக்கிடையில் இடம்பெயரும் தொழிலாளர்கள் சட்டம் அதன் மீறலில்தான் கடைபிடிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தும் சொந்த சமூகத்தில் இருந்தும் நீண்ட தொலைவு தள்ளிச் செல்கிற அவர்கள், இனவெறி தப்பெண்ணங்கள் மற்றும் சிவ சேனாவும் அதில் இருந்து பிரிந்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் போட்டி போட்டுக் கொண்டு கட்டவிழ்த்துவிடும் கொடிய இடம் பெயரும் தொழிலாளர் விரோத தாக்குதல்களில் அடிக்கடி காணப்படுகிற, பளிச்சென தெரிகிற மதவெறி பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்துவிதமான இழிவு, துன்புறுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அசாமில் நடந்த கோக்ராஜ்கர் வன்முறையைத் தொடர்ந்து பெங்களூரு, அய்தராபாத், சென்னை போன்ற நகரங்களில் வேலை செய்கிற அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பீதியுற்ற தொழிலாளர்கள் மத்தியில் கெடுநோக்கம் கொண்ட குறுஞ்செய்தியால் உருவாக்கப்பட்ட வீடு திரும்பும் சம்பவம், இந்தியாவில் உள்ள சில பத்து லட்சம் இடம்பெயரும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையை வரையறுக்கிற, தாக்குதலுக்குள்ளாகும் தன்மையை, பாதுகாப்பின்மையை காட்டுகிறது. இடம்பெயரும் தொழிலாளர்கள் மீதான கொடுமைகளை எதிர்கொள்ள அட்டவணை சாதியினர்/ பழங்குடியினர்க்கு எதிரான வன்கொடுமை சட்டம் போன்ற ஒரு சட்டத்துக்காக நாம் போராட வேண்டும்.

36. இடம்பெயரும் தொழிலாளர்களின் இந்த நிலைமை மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் தொழிலாளர்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. உயர்சம்பளம் மற்றும் மேலான வாய்ப்புக்கள் தேடி தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள். வெளிநாடுகளில் தங்கிவிட்ட மருத்துவர்கள், ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் போன்ற இந்திய தொழில்முறையாளர்கள் பல பத்தாண்டு கால போராட்டங்களின் மூலம் தங்கள் உரிமைகளை வென்றெடுத்துள்ளனர். வடஅமெரிக்காவின், அய்ரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கண்டுணரத்தக்க இருத்தலை பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் வேலை செய்கிற நீலஉடை தொழிலாளர்கள், இனவெறி பாகுபாடு மற்றும் தாக்குதல்கள், சில நேரங்களில் அரை கொத்தடிமை நிலைமைகள் போன்றவற்றால் குறிக்கப்படுகிற மிகக்கடுமையான யதார்த்தத்தை எதிர்கொள்கிறார்கள். வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்கள் அனுப்புகிற பணம், அந்நிய முதலீட்டை விட மிகக்கூடுதல். ஆயினும் அந்நிய முதலீட்டை ஈர்க்க அசாதாரண நடவடிக்கைகள் எடுக்கும் இந்திய அரசாங்கம், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் சந்திக்கும் பாதுகாப்பின்மை தொடர்பாக பாராமுகமாகவே இருக்கிறது.

கட்டுமானத் தொழிலாளர்கள்

37. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நில வர்த்தக வளர்ச்சியால், விவசாயத்துக்கு அடுத்து இப்போது பெரும் அளவில் வேலை வாய்ப்புள்ள துறை கட்டுமானம்தான். தொழிலா ளர்களுக்கு மத்திய நலச்சட்டம் ஒன்று உள்ளது. ஆனால் அதன் அமலாக்கம் மிகவும் மோசமானது; அரைமனதிலானது; அரைகுறையானது. பல மாநிலங்களிலும் சங்கங்கள் அமைப்பதில் நாம் ஒரு முன்னேற்றம் பெற்றுள்ளோம். அந்த அடிப்படையில் கட்டுமான தொழிலாளர்களின் அனைத்திந்திய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். செங்கல் சூளைகள் கல்உடைக்கும் யூனிட்டுகள் போன்ற துணை பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் வண்ணம் பூசுதல், குழாய் வேலைகள், மின்சாதன பராமரிப்பு, இரும்பு தொடர்பான வேலைகளில் உள்ள தொழிலாளர்களையும் ஒரே சங்கத்தில் அமைப்பாக்குகிறோம். இந்தத் துறையில் தவிர்க்க முடியாத ஆபத்து ஒன்று உள்ளது. தொழிலாளர்கள் தொழிற்சங்க செயல்வீரர்களை நலத்திட்ட முகவர்களாக கருதிவிட தலைப்படுகின்றனர். தொழிலாளர்களை பயனாளிகளாக அல்லாமல் உள்ளாற்றல் கொண்ட போராளிகளாக அணுகும் பெரிய பிரச்சனையில் தீர்வு காண வேண்டியுள்ளது.

38. ஆடைகள், காலணி, வைரம் தீட்டுதல், குழந்தை உழைப்பு பெரிதும் பயன்படுத்தப் படும் தீப்பெட்டி தயாரிப்பு, ஆயத்த ஆடை போன்ற உழைப்புத் தீவிரம் கொண்ட உற்பத்தி/அசம்ப்ளி போன்ற பெரும்பாலும் அமைப்பாக்கப்படாத அல்லது பலவீனமாக அமைப்பாக்கப்பட்ட வேலைகள் வியர்வைக் கூட வேலை நிலைமைகளிலேயே இயங்குகின்றன. ஆடைத் துறையை எடுத்துக்கொண்டால், சர்வதேச பல்இழை உடன்பாடு 2004ல் காலாவதியாகிப் போன பிறகு தீவிரமடைந்த சர்வதேச போட்டி, வேலை நிலைமைகள் மற்றும் வேலை வாய்ப்பின் தன்மை ஆகிய வற்றை மேலும் சீரழிவுக்கு இட்டுச்சென்றது. கூலி குறைந்தது. பாதுகாப்பின்மை அதிகரித்தது. இந்திய தொழில் பங்களாதேச்ஷுடன், சீனா உட்பட்ட பிற ஆசிய நாடுகளுடன் கடுமையான போட்டியை சந்திக்கிறது. மொத்த சுமையும் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுகிறது.

பெண் தொழிலாளர்கள்

39. ஆஷா மற்றும் அங்கன்வாடி போன்ற பெண்கள் மட்டுமே இருக்கிற துறைகள் தவிர, வீட்டு வேலை, பீடி, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் போன்ற துறைகளிலும் பெண்களே மேலோங்கி உள்ளனர். பிற பல்வேறு துறைகளிலும் அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். பல துறைகளில் மலிவான மற்றும் அடங்கிப் போகிறஉழைப்புக்கான தேடல் வேலை வாய்ப்பை அதிகரித்த அளவில் பெண்கள்மயமாக்குவதற்கு இட்டுச் செல்கிறது. கிராமப்புற பகுதிகளில் இருந்து நடந்து கொண்டிருக்கிற, ‘நெருக்கடியால் உந்தப்பட்ட இடம்பெயர்தலிலும் கணிசமானவர்கள் பெண்களே.

40. ஆணாதிக்க பாகுபாடும் இழிவுபடுத்துதலும் பாலியல் துன்புறுத்தலும் வர்க்கச் சுரண்டலுடன் சேர்ந்துகொண்டு பெண் தொழிலாளர் வாழ்க்கையை இரட்டிப்பு துன்பத்துக்கு ஆளாக்கியுள்ளன. அதனால்தான், அங்கன்வாடி முதல் விமானப் போக்குவரத்து வரை எல்லா இடங்களிலும் அவர்கள் போராட்டங்களில் எழுகிறார்கள். முற்போக்கு பெண்கள் கழகமும் ஏஅய்சிசிடியுவும், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் கூட்டாக, எழுந்து வருகிற பெண் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கு அமைப்பாக, போராட, அனைத்து சாத்தியமான வழிகளிலும் ஊக்குவிக்க வேண்டும். உதவ வேண்டும். பெண் தொழிலாளர் நிலைமைகள் பற்றி ஓர் அனைத்தும் தழுவிய ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கவும் அதன் பரிந்துரைகளை குறிப்பிட்ட காலக் கெடுவில் அமலாக்கவும் அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.

அமைப்பாக்கப்பட்ட துறையில் ஆட்குறைப்பு

41. இந்தியாவில் உள்ள தொழிலாளர்களில் அமைப்பாக்கப்பட்ட துறையில் 5%க்கும் குறைவானவர்களே வேலை செய்கிறார்கள்.எண்ணிக்கை ரீதியாகப் பார்த்தால் இது 3 கோடிக்கும் குறைவு. ஆனால் தொழிற்சங்க மாதலின் அளவு, அந்தப் போக்கில் போராட்ட அனுபவங்கள், வென்றெடுத்த உரிமைகள் என்ற பொருளில் அமைப்பாக்கப்பட்ட துறை தொழிலாளர்களே இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் கரு. நவதாராளவாத சீர்திருத்தங்கள், அமைப்பாக்கப்பட்ட துறையின் முக்கிய பிரிவுகளில் உள்ள தொழிலாளர்கள் மீது ஒரு நீடித்த தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. அவர்கள் ஆட்குறைப்பு மற்றும் அவுட்சோர்சிங்என்ற இரட்டை அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள். புரட்சிகர தொழிற்சங்க இயக்கம், அமைப்பாக்கப்படாத துறை தொழிலாளர்களை அமைப்பாக்க முயற்சி செய்துகொண்டிருக்கும்போது, நவதாராளவாதத் தாக்குதல் அமைப்பாக்கப்பட்ட துறையை அமைப்புக் குலைவுக்கு உள்ளாக்கப் பார்க்கிறது. ரயில்வே, தொலைதொடர்பு, உருக்கு, நிலக்கரி, வங்கி மற்றும் காப்பீடு போன்ற அமைப்பாக்கப்பட்ட துறையின் முக்கிய தூண்களைப் பார்த்தால் இந்த இயக்கப்போக்கை புரிந்துகொள்ள முடியும்.

42. ரயில்வே தொழிலாளர்களின் வாழ்க்கையை ரயில்வேயின் சக்கரங்கள் பதம் பார்க்கின்றன. துப்புரவு, உணவு, சிக்னல் வேலைகள், ரயில் தண்டவாளங்கள், ரயில் பெட்டிகள் பராமரிப்பு, உபகரணங்கள் உற்பத்தி போன்ற வேலைகள் விடாப்பிடியாக தனியார்மயம் மற்றும் அவுட்சோர்சிங்குக்கு உள்ளாக்கப்பட்டதன் போக்கில், ரயில்வேயில் இருந்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை இன்று சுமார் 10 லட்சமாக குறைந்துவிட்டது. 2.4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கையை நான்கு கட்டங்களில் 4 லட்சமாக குறைக்க வேண்டும் என்ற முன்வைப்பும் உள்ளது. ஆனால், ரயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. சராசரி வேகம் இரண்டு மடங்கு அதிகரிக்கப் பட்டுவிட்டது. இது ரயில்வே கட்டமைப்பு மீதும் தொழிலாளர்கள் மீதும் அளவுகடந்த சுமையை ஏற்படுத் தியுள்ளது. இது இன்னும் கூடுதலான விபத்துக்களுக்கும் சேவை சீர்கேட்டுக்கும் இட்டுச் செல்கிறது.

43. நிலக்கரி மற்றும் தொலைதொடர்பு போன்ற துறைகளிலும் இதே போன்ற நிலைமைகளே உள்ளன. 1973ல் நிலக்கரி துறை தேசியமயமாக்கப்பட்ட போது, 6 கோடி டன் நிலக்கரி உற்பத்தியில் 7.2 லட்சம் தொழிலாளர்கள் பணியில் இருந்தார்கள். இப்போது 3.5 லட்சம் தொழிலாளர்கள் 43.4 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்கிறார்கள். இதில் 52% பல்வேறு ஒப்பந்தக்காரர்களுக்கு அவுட்சோர்சிங் செய்யப்பட்டு, அவர்கள் வேலைக்கமர்த்தியுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. தொலைதொடர்புகதையும் இதே போன்றதுதான். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்று 6.5 கோடி கம்பியில்லா சேவை வாடிக்கையாளர்களுக்கும் 2.79 கோடி நிலையான இணைப்பு வாடிக்கையாளர்களுக்கும் சேவை செய்கிறது. ஆனால் அதன் தொழிலாளர் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைந்துவிட்டது. 1983ல் 50:1000 என்றி ருந்த தொழிலாளர் - தொலைபேசி இணைப்பு விகிதம், 2003ல் 10:1000 என்று குறைந்து இன்று 3:1000 என்றுள்ளது!

44. வங்கி மற்றும் காப்பீடு என நிதித்துறை ஊழியர்கள், நவதாராளவாத சீர்திருத்தங்கள் நடக்கிற கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் இந்த முக்கிய துறைகளை தனியாருக்கு திறந்துவிடும் முயற்சியை வெற்றிகரமாக எதிர்த்துள்ளார்கள். ஆனால், சக்திவாய்ந்த அந்நிய வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் நுழைவுக்குப் பிறகு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் தொடர் இழப்புக்கு ஆளாயின. காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா, 2008 மற்றும் வங்கி சட்டங்கள் திருத்த மசோதா 2011 ஆகியவை நிறைவேற்றப்பட்ட பிறகு, தனியார்மயமாக்கத் தாக்குதல், வலுவாக வேகம் பிடித்தது. இப்போது, ஓய்வூதியம் – வைப்புநிதித் துறையிலும் 49% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கப் பார்க்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றல் மற்றும் வளர்ச்சி கழக மசோதா 2011 உள்ளது. நிதி மேலாளர்கள் தங்கள் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்ய இது சுதந்திரம் தரும். இது, பெரு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய உழைக்கும் மக்கள் கடினப்பட்டு உழைத்து சேர்த்த கோடிக்கணக்கான பணத்தில் களிப்புடன் விளையாடி, பங்குச் சந்தை ஊக வணிகத்தின் மூலம் மிகப்பெரிய லாபம் அறுவடை செய்யும், கிட்டத்தட்ட தலைகீழ் அந்நிய நேரடி முதலீடுபோன்றது.

45. பொதுத்துறை மற்றும் அரசு ஊழியர் மத்தியிலான நமது வேலை இன்னமும் எல்லைக் குட்பட்டதாகவே உள்ளது. ரயில்வேயில் மூன்று ரயில்வே மண்டலங்களிலும் ஓர் உற்பத்தி கூடத்திலும் நாம் நமது சங்கங்கள் துவக்கியுள்ளோம். பிற இடங்களில் பிரதான நீரோட்ட சங்கங்களுக்குள் தொடர்ந்து வேலை செய்கிறோம். நிலக்கரி மற்றும் எஃகு துறைகளில் நமது சங்கங்கள் உள்ளன. ஆனால், அவ்வப்போது நடக்கிற போராட்டங்களில் பெரிய உள்ளாற்றலை வெளிப்படுத்தினாலும், நமது சங்கங்கள் ஒரு சில யூனிட்டுகளில் மட்டும் சுருங்கியுள்ளது. துரிதமான விரிவாக்கம் மற்றும் கூடுதல் பாத்திரம் ஆகியவற்றுக்கான உள்ளாற்றல் இன்னும் யதார்த்தமாக்கப்படவில்லை. வங்கி, காப்பீடு மற்றும் தொலைதொடர்பு துறைகளில் நமது தோழர்கள் பிரதான நீரோட்ட இடதுசாரி தலைமையிலான சங்கங்களில் வேலை செய்கிறார்கள். பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மாநில அரசு ஊழியர் போராட்டங்களில் நமக்கு முதன்மையான இருத்தல் உள்ளது. உத்தர்கண்டிலும் நமக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது. பல்வேறு பிற மாநிலங்களில் சில செல்வாக்கு பகுதிகள் உள்ளன. ஆனால், இந்த அரங்கில் ஒரு நாடு தழுவிய ஒருங்கிணைப்பை வளர்த்தெடுக்கும் கருத்து முன்செல்லவில்லை.

46. பொதுத்துறையில் நமது வேலை, பொதுத்துறை ஊழியர்களில் இப்போது பாதிக்கும் மேல் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர் மத்தியில் அதிகபட்ச கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும். அதிகரித்து வருகிற எண்ணிக்கை, கருவான தன்மை வாய்ந்த வேலைகளை செய்வதில் முக்கிய பங்கு என இருந்த போதும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருதரப்பு கமிட்டிகளின் எல்லைகளுக்கு அப்பால் நிறுத்தப்படுகிறார்கள். தொழிலில் உள்ள சங்க அங்கீகார தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நிர்வாகம் - ஒப்பந்தக்காரர் அச்சின் தினசரி தாக்குதலை சந்திக்கின்றனர். நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உடனடி நலன் களை பாதுகாக்கும் அதே நேரம், தனியார்மயம் மற்றும் அரசு - தனியார் கூட்டுக்கு எதிராக தீர்மானகரமான போராட்டம் நடத்த வேண்டும். ஊழல், அநீதி மற்றும் தொழிலாளர் ஜனநாயக உரிமைகள் மறுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தொழிலாளர்கள் குரலை துணிச்சலாக உயர்த்த வேண்டும்.

நலிந்த மற்றும் மூடப்பட்ட ஆலைகள்

47. சில தொழில்கள்தான் உண்மையில் நலிவடைகின்றன. பெரும்பாலானவற்றின் மீது தந்திரமான முதலாளிகள் மற்றும் அவர்களுடன் கூட்டு சேர்கிற அரசாங்கங்கள் ஆகியவற்றால் நலிவு திணிக்கப்படுகிறது. இந்தியாவின் தொழில் பரப்பு மூடப்பட்ட ஆலைகளால் அடர்த்தியாக சூழப்பட்டுள்ளபோது, நலிவுற்ற, மூடப்பட்ட ஆலைகளின் முன்னாள் இந்நாள் தொழிலாளர்களே தங்கள் அளவில் ஒரு வகையினமாக மாறியுள்ளனர். அவர்களுடைய துன்பங்களுக்கு எல்லைகளே இல்லை. ஆனால், ஜவுளி, சணல், என்ஜினியரிங் போன்ற சூரிய மறைவு தொழில்களில், தங்களுக்குச் சேரவேண்டிய நிலம், வைப்புநிதி, பணிக்கொடை போன்ற புதிய பிரச்சனைகளில் போராட்டங்கள் நடத்துவதன் மூலம், தங்கள் போர்க்குணமிக்க பாத்திரத்தை மறுகண்டுபிடிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் தங்கள் கூலி மற்றும் பிற பாக்கிகள் பெறாமல் இருக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டு விட்டார்கள். அவர்களுக்கு சட்டரீதியாக சேர வேண்டியதை பெறுவதற்கான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

48. தீர்மானகரமான போராட்டங்கள் இருந்தால் மூடப்பட்ட ஆலைகளின் முன்னாள் தொழிலாளர்கள் கூட, தங்களுக்குச் சேர வேண்டியவற்றில் ஓரளவாவது பெற முடியும் என்று அனுபவங்கள் காட்டுகின்றன. உதாரணமாக, மும்பையின் ஜவுளித் தொழிலாளர்கள் 1982ல் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க வேலை நிறுத்தத்தை அடுத்து இழந்த நிலத்தை 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அமைப்பாகி ஒன்று திரண்டு, நீதிமன்றங்களில் போராட்டங்கள் உட்பட பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களை நடத்தினார்கள். இறுதியில் மகாராஷ்டிரா அரசாங்கம் 1,20,000 தொழிலாளர்களுக்கு நிலம் தருவதாக வாக்குறுதியளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அவர்களில் 6948 பேர் ஏற்கனவே மும்பையின் மய்யப் பகுதியில் உள்ள இடங்களைப் பெற்றுவிட்டார்கள். ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் அவர்களுக்கு ஏறக்குறைய ரூ.5 லட்சத்துக்கு தரப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாவில் உள்ள கவுரிபூர் சணல் ஆலை தொழிலாளர்கள் அவர்களுக்குச் சேர வேண்டிய வைப்பு நிதி மற்றும் ஒய்வூதிய பாக்கிகளை நீதிமன்ற போராட்டங்கள், ஆலைப் பகுதியில் பிரச்சாரம், கிளர்ச்சி என பல ஆண்டுகால விடாப்பிடியான போராட்டங்கள் மூலம் பெற்றிருக்கிறார்கள். இப்போது பணிக்கொடை, தொழிலாளர்கள் அனைவரையும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் இணைப்பது போன்ற பிரச்சனைகளில் போராட்டம் தொடர்கிறது.

பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் மற்றும் கம்யூனிச லட்சியம்

49. தங்கள் வர்க்க எதிரி மற்றும் அரசுக் கெதிரானப் போராட்டத்தில் தொழிலாளர்கள் மட்டும் தனியாக இல்லை. உழைக்கும் மக்களின் பிற அனைத்து பிரிவினர், குறிப்பாக விவசாயிகள், பழங்குடி மக்கள், மற்றும் இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அறிவாளிப் பிரிவினர் மற்றும் பிற பிரிவினரும் தங்கள் உரிமைகள், நிலம், வாழ்வாதாரம், சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்க, நாளும் அதிகரித்து வரும் பெருநிறுவன - அரசு தாக்குதலுக்கு எதிராக போராட்டங்களில் எழுகிறார்கள். பெருநிறுவன, நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய சக்திகளின் மக்கள் விரோத அச்சுக்கு பெருமுதலாளித்துவம் தலைமை தாங்குகிறது. அனைத்து உழைக்கும் மக்களின் போராடும் கூட்டணிக்கு பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்க வேண்டும். தனது ஒரு கரத்தை போராடுகிற விவசாய மக்கள் நோக்கியும், இன்னொருகரத்தை அனைத்து பிரிவு மக்களின் ஜனநாயக போராட்டங்கள் நோக்கியும் நீட்ட வேண்டும்.

50. ‘கடுமையான சூழல்’, ‘தற்காப்புப்போராட்டங்களின் காலம்என்ற பெயரில், சீர்திருத்தவாத, பிற்போக்கு தொழிற்சங்கஙகளும் இன்னும் பிற அமைப்புக்களும் பரப்புகிற தற்காப்பு கண்ணோட்டத்தை எதிர்கொள்ளாமல் இதைச் செய்ய முடியாது. இயங்கியல் ரீதியாக ஒவ்வொரு தற்காப்பிலும் ஒரு தாக்குதல் அம்சம் இருக்கிறது. ஒவ்வொரு தாக்குதலிலும் ஒரு தற்காப்பு அம்சம் இருக்கிறது. மூலதனத்தின் புதிய தாக்குதல்கள், மூலதனத்தின் பலவீனத்தில் இருந்து, அதன் கடுமையான பிரச்சனைகளில் இருந்து எழுகின்றனவே தவிர, அதன் பலத்தில் இருந்து இல்லை, எனவே கடுமையாக தாக்குவதற்கு இதுவே நேரம் என்ற உண்மை பற்றி தொழிலாளர்களுக்கு ஒளியூட்ட வேண்டும். உழைக்கும் மக்களின் பரந்த, போர்க்குணமிக்க ஒற்றுமை ஒரு மகத்தான எதிர்ப்பை உருவாக்கும், பாட்டாளி வர்க்கமல்லாத பிரிவினர் மத்தியில் இருந்து புதிய கூட்டாளிகளை அணிதிரட்டிக் கொள்ளும், இறுதி வெற்றி நாளை அருகில் கொண்டுவரும் நேரம் இதுவே என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் உருவாக்குவதுதான் மிகவும் முன்னேறிய வர்க்கத்தின் மிகவும் முக்கியமான கடமையாகும்.

51. இந்த உயர்ந்த அரசியல் உணர்வுக்கு, பாத்திரத்துக்கு தொழிலாளர் வர்க்கத்தை உயர்த்துவது, அதன் முன்னேறிய புரட்சிகர பிரிவான கம்யூனிஸ்ட் கட்சியின் கடமையாகும். ஆனால் அரசியல் உணர்வை வளர்ப்பதென்பது, மேலிருந்து செயற்கையாக ஒருவித செயலூக்கத்தை திணிக்கவோ, அருவமான விதத்தில் அரசியல் கல்வி தரவோ முயற்சி செய்வது - அல்ல. அனைத்துக்கும் மேலாக, தொழிலாளர் வர்க்கம் அதன் யதார்த்த வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் போக்கில், மூலதனத்தின் ஆட்சியை தூக்கியெறியும் வரலாற்றுக் கடமை என்ற உணர்வான அதன் சுயஉணர்வை படிப்படியாக உயர்த்துவதில், தொழிலாளர் வர்க்கத்துக்கு உதவுவதை அது கோருகிறது. இந்த இலக்கை நோக்கி நமது தொழிற்சங்க மய்யம் அதன் அரசியல் பாத்திரத்தை விரிவுபடுத்த வேண்டும். உதாரணமாக, தொழிலாளர், விவசாயிகள், பெண்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தொழிற்பகுதிகளில் உள்ள கட்சி கமிட்டிகள் தொழிலாளர் வர்க்கத்தை அரசியல்படுத்துவதுபோன்ற சொற்றொடர்களுக்கு அப்பால் கண்டிப்பாகச் சென்று, நமது அனைத்து வெகுமக்கள் இயக்கங்களின் உதவியுடன், ஆலை/தொழில் மட்டத்திலான, பகுதி அடிப்படையிலான அரசியல் நடவடிக்கைகளை கட்சி கட்டுதலுடன் இணைக்கும், கீழிறிங்கிச் செய்யும் வேலைநடையை நடைமுறையில் வளர்த்தெடுக்க வேண்டும்.

52. கருத்தியல் அழுத்தம் என்ற பொருளில் கட்சி, தொழிற்சங்க வேலையை வழிநடத்தும், வலுப்படுத்தும் அதே நேரம், இடதுசாரி இயக்கத்தில் ஆழப்பரவியுள்ள போக்கான, தொழிலாளர் வர்க்க இயக்கத்தை வெறும் தொழிற்சங்கப் போராட்டமாக சுருக்கிவிடுவதை தீர்மானகரமாக எதிர்கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டும்நூலில், ‘ஜனநாயத்துக்கான முன்னணி போராளியாக தொழிலாளர் வர்க்கம்என்ற முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பு கொண்ட அத்தியாயத்தில், ‘தொழிலாளர் வர்க்கத்தின் தொழிற்சங்கவாத அரசியல், மிகத்துல்லியமாக, தொழிலாளர் வர்க்கத்தின் முதலாளித்துவ அரசியலேஎன்று லெனின் எழுதினார். புரட்சிகர அரசியல் மற்றும் கட்சி கட்டுதல் என்ற உணர்வுபூர்வமான கூறுக்கு அவர் அழுத்தம் வைத்தார். வெகுமக்கள் இயக்கத்தின் தன்னெழுச்சி எந்த அளவுக்கு விரிவாக பரவியுள்ளதோ, அந்த அளவுக்கு அதிகமாக கம்யூனிஸ்டுகளின் தத்துவ, அரசியல், அமைப்பு என்ற பொருளிலான உணர்வுபூர்வமான பாத்திரம் இருக்க வேண்டும் என்று அவர் அறுதியிட்டுச் சொன்னார். அதிகரித்த அளவில் கொந்தளிப்பான தேசிய மற்றும் சர்வதேச சூழலில், தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர கட்சி, இந்த லெனினிய போதனையை அதன் உண்மையான பொருளில் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

Search