COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 7, 2013

4

மண்ணில் பாதி

அச்சமற்ற சுதந்திரம் வேண்டும்

டெல்லியில் ஒரு பெண் மாணவர் மிருகத்தனமான பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதை அடுத்து, டெல்லியிலும் நாடெங்கிலும், அந்தப் பெண்ணுக்கு நீதி கோரியும், கூடுதல் விளைவு தரும் சட்டங்கள், குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் கோரி பல போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்களும் மாணவர்களும் 19.12.2012 அன்று டெல்லி முதலமைச்சர் ஷீலா தீக்சித் வீடு நோக்கிச் சென்ற போது, காவல் துறை அவர்களைத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தடிகள் கொண்டு தாக்கியும் விரட்டப் பார்த்தது. அப்போது, அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக செயலாளர் தோழர் கவிதா கிருஷ்ணன், பெண்களின் மோசமான சமூக நிலைக்கு ஷீலா தீக்சித்தும் இன்றைய அரசியல் அமைப்பு முறையும் எப்படி பொறுப்பாகிறார்கள் என்பது பற்றி ஆற்றிய இந்தி உரையின் ஆங்கில வடிவம் தெஹல்கா பத்திரிகையில் வெளியானது. அதன் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது.

அச்சம் ஏதும் இல்லாத சுதந்திரம் என்பதையே நாம் பேணிப் பாதுகாத்து மதிக்க வேண்டும்

இன்று நாங்கள் முதல்வர் ஷீலா தீக்ஷித் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரினோம். கூட்டு பாலியல் வன்முறை, டெல்லி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் நடக்கவில்லை, தனியார் பேருந்தில் நடந்தது, அது எப்படி தம் பொறுப்பாகும் என அவர் கேட்கிறார்.

இரும்புத் தடிகளையும் பாலியல் வன்முறையாளர்களையும் கொண்ட ஒரு பேருந்து, விதிமுறைகள் எதுவும் இல்லாமல் பகிரங்கமாக டெல்லியில் போகுமானால், எந்த நேரமும் எங்கும் பயணிகளை ஏற்றிக் கொள்ளுமானால், ஷீலா தீக்μத் அம்மையாரே, அது வேறு யாருடைய பொறுப்புமல்ல, உங்கள் பொறுப்பே ஆகும். உயிருக்குப் போராடும் பெண்ணுக்கு நீங்களே பொறுப்பு. வேறு யார் மீதும் பழி போடாமல், அந்தப் பேருந்தில் அன்று ஏன் இரும்புத் தடி இருந்தது என, நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

வேறு ஒரு முக்கிய விஷயம் உள்ளது. ஒரு வருடம் முன்பு செய்தியாளர் சவும்யா விஸ்வநாதன் படுகொலை செய்யப்பட்டபோது, ஷீலா தீக்ஷித் சொன்னார். சவும்யா அதிகாலை 3 மணிக்கு வெளியில் இருந்தார் என்றால் அது சாகசத் தன்மைதானே? சாகசத் தன்மையோடு இருக்க, பெண்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. நாங்கள் சாகசத் தன்மையோடு இருப்போம். நாங்கள் அஜாக்கிரதையாக இருப்போம். நாங்கள் எங்கள் பாதுகாப்பிற்கு எதுவும் செய்ய மாட்டோம். நாங்கள் எப்படி உடை அணிய வேண்டும், இரவிலா அல்லது பகலிலா, எப்போது வெளியே போகலாம், எப்படி நடக்கலாம், கூட யாரை அழைத்துச் செல்ல வேண்டும் என எங்களுக்குச் சொல்லத் துணியாதீர்கள்.

நீரஜ்குமார் டெல்லியின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டபோது, பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் எல்லா பாலியல் வன்முறை சம்பவங்களையும் காவல் துறை தடுக்க முடியுமா எனக் கேட்டார். பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலான வர்கள், அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தவர்களே என்று அவர் தந்த புள்ளி விவரம் சரியானது தான். அப்படியானால், அவர்களைப் பிடிப்பது உங்களுக்கு இன்னமும் சுலபம்தானே? பாலியல் வன்முறையை நீங்கள் ஏன் தடுக்கவில்லை என்பதல்ல காவல் துறையிடம் நாங்கள் கேட்கும் கேள்வி. பாலியல் வன்முறைக் குற்றங்களில் தண்டனை வழங்குதல் 1971ல் 46% என இருந்தது 2012ல் 26% ஆனதற்கு யார் பொறுப்பு? காவல் விசாரணையில் ஒரு பெரிய இடைவெளி உள்ளது. பாலியல் குற்றத்திற்கு உள்ளான பெண்ணிடம் எப்படி நடந்து கொள்வது என்ற முறையில் காவல் துறையினருக்கு ஏதும் தெரிய வில்லை. ஒரு பெண் டெல்லியில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, காவல் நிலையம் சென்றால், அவர்கள் முதலில் புகார் தராதே என்கிறார்கள். எங்கிருந்தோ சம்பந்தமில்லாதவர் கள் காவல் நிலையத்திற்கு வந்து, பெண்ணே, புகார் தாக்கல் செய்யாதே எனப் புத்திமதி சொல் வார்கள். நீங்கள், மாணவர் அமைப்பிலிருந்து பெண்கள் அமைப்பிலிருந்து பேசுகிறேன் என்று சொல்லும் வரை, துணை காவல் ஆணையர் மட்டத்தில் பேசுவது என்பது நடக்கும் வரை, எதுவுமே செய்யாமலே இருப்பதுதான் மாமூல் நடவடிக்கை. டெல்லி முழுவதும் இப்படி நடக்கிறது. காவல்துறை எந்த விதிகள்படி இப்படி நடக்கிறார்கள்?

பத்திரிகையாளர் சந்திப்பில் நீரஜ்குமார், பெண்கள் துணைக்குக் கூட எவரும் இல்லாமல் தனியாகத் திரியக் கூடாது என்கிறார். அதிகாலை 2 மணிக்கு எங்காவது தெருவில் நடந்தால் யார் வந்து காப்பாற்றுவார்கள் என்று கேட்கிறார்.

எனது வாதம் வேறு என்றாலும் பதில் கேள்வியாக ஒன்று கேட்கிறேன். இப்போது நடந்த சம்பவம் நள்ளிரவில் அதிகாலையில் நடக்கவில்லை. அந்தப் பெண்ணோடு ஓர் ஆண் நண்பர் இருந்தார். நீரஜ்குமார் வாதம் அடிபடுகிறது. பெண்கள் நள்ளிரவில் தனியாக நடப்பதற்கு, நான் வேலையிலிருந்து தாமதமாகத் திரும்பினேன், நான் தகவல் தொழில் நுட்ப கூட வேலை பார்த்துவிட்டு வந்தேன் என்றெல்லாம் நியாயம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஒரு பெண் இரவு சும்மா தெருவில் நடக்க, சிகரெட் வாங்கச் செல்லப் போவது, பெண்கள் இழைக்கும் குற்றமா? பாவம், அந்தப் பெண்கள், சம்பாதிக்க வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது என்ற தற்காப்பு வாதங்கள் தேவை இல்லை. உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும், பகலாயிருந்தாலும் இரவாயிருந்தா லும், எப்படி ஆடை உடுத்தி இருந்தாலும், பெண்களுக்கு, சுதந்திரத்திற்கான உரிமை உண்டு என நாங்கள் நம்புகிறோம் பெண்களின், அச்சமில்லாமல் இருப்பதற்கான இந்த சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும்.

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், பெண்கள் தொடர்பாக, பாதுகாப்பு என்ற வார்த்தை மிகவும் கூடுதலாக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பெற்றோர்கள், சமூகங்கள், முதல்வர்கள், வார்டன்கள் இதைப் பயன்படுத்துவதை நாம் கேள்விப்படுகிறோம். பெண்களுக்கு பாதுகாப்பு என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பது தெரியும். அதற்கு, நீ ஒழுங்காக நடந்து கொள், நீ வீட்டிற்குள் திரும்பப் போ, நீ விரும்பிய ஆடை அணியாதே என்று பொருள். உன் சுதந்திரப்படி நீ வாழா விட்டால், நீ பாதுகாப்பாய் இருப்பதாகப் பொருளாகும். நம்மை பாதுகாப்பாக வைப்பது என்ற போர்வையில், நாம் என்ன செய்ய வேண்டும் என அனைத்து ஆணாதிக்க சட்டங்களும் நிறுவனங்களும் நமக்கு உபதேசிக்கின்றன. நாம் இந்த மொத்த கருத்தாக்கத்தையும் நிராகரிக்கிறோம். நமக்கு இவை எதுவும் வேண்டாம்.

நாங்கள் ஏன் இங்கு வந்துள்ளோம்? பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக டெல்லி காவல்துறை ஒரு விளம்பர இயக்கம் நடத்துகிறதென்றால், எங்கும் பெரிய பெரிய விளம்பரத் தட்டிகள் வைக்கிறதென்றால், அந்த விளம்பரங்களில் எந்தப் பெண்ணும் ஏன் இல்லை? ஆணாக இரு, பெண்களைக் காக்க என்னோடு இணையுங்கள் என, இந்தி திரைப்பட நடிகர் பரான் அக்தர் விளம்பரத்தில் சொல்கிறார். எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. வேறு சாதியில் மதத்தில் திருமணம் செய்து கொண்ட சகோதரியின் தலையை வெட்டிய அண்ணனின் கதை என்ன? அந்த அண்ணன் ஓர் ஆண் பாதுகாவலர் வேலையைச் செய்ய வில்லையா? அந்த ஆண் வீரம் பெண்கள் மீதான வன்முறைப் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. இதுதான் பிரச்சனையின் வேரே ஆகும். நாம் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும்.

இந்த நாட்டில் பெண்கள் இயக்கம் நீங்கலாக அரசாங்கம், காவல்துறை, அரசியல் கட்சிகள், நீதித்துறை ஆகிய அனைவரும் பெண்களின் பாதுகாப்புபற்றிப் பேசும்போது, அது பற்றிய குறிப்பான ஆணாதிக்கப் புரிதலில் இருந்தே பேசுகிறார்கள். அவர்களில் எவரும், அச்சமில்லாமல் வாழ்வதற்கான பெண்ணின் சுதந்திரம் பற்றிப் பேசுவதில்லை. கண்காணிப்பு புகைப்படம் எடுக்கும் கருவிகள், இரசாயன ரீதியாக உறுப்பறுப்பு, மரண தண்டனை ஆகியவற்றில் பதில் இல்லை. நாளும் தொடரும் வளரும் எதிர்ப்பில்தான் பதில் உள்ளது. நமது சீற்றம் நியாயமானது என்றாலும், நாம் முன் வைக்கும் சில தீர்வுகள் பற்றி நாம் யோசிக்க வேண்டும். பாலியல் வன்முறையாளர் கள் தண்டனை பெறும் விகிதம் மிகவும் தாழ்ந்த மட்டத்தில் உள்ளது எனும்போது, மரண தண்டனை எப்படி தீர்வாக முடியும்? மொத்த நடைமுறையிலும், கணக்கில் எடுக்கப்படாத ஒருவர் உண்டென்றால், அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட புகார்தாரர் தான். பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்கள் பலவீனமானவை, பிழைகள் நிறைந்தவை. உதாரணமாய், பெண் பிறப்பு உறுப்பில், வேறு எதையாவது நுழைத்தால், அது பாலியல் வன்முறை கிடையாது. இப்போதைய நிகழ்வில், மருத்துவமனையில் அந்தப்பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாளே, இவ்வழக்கு நீதிமன்றம் வரும்போது, அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் அவர்கள் இரும்புத் தடியை நுழைத்தது பாலியல் வன்முறை என்ற வரம்பில் வராது. நேற்று நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜ், ‘அந்தப் பெண் பிழைத்தாலும் நடைபிணமாக இருப்பாள்என்று சொன்னது, அருவறுப்பானது; கண்டனத்திற்குரியது. ஏன்? அவர் பிழைத்துக் கொண்டால், அவளைத் தாக்கியவர்களோடு அவர் போராடியது போல், அவள் தலை நிமிர்ந்து வாழ்வாள். அவள் போராடினாள். அவள் பாலியல் வன்முறையை எதிர்த்தாள். அவளுக்குப் பாடம் புகட்டவே, அவளைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர். ஏறத்தாழ, டெல்லியில் எல்லா பெண்களுமே, தெருக்களில், பேருந்துகளில் ஏதோ ஒரு நேரத்தில், தங்கள் கவுரவத்திற்காகப் போராட நேர்கிறது. அப்படி நாம் போராடும்போது, வம்பை விலை கொடுத்து வாங்கியதாக நமக்குச் சொல்லப்படுகிறது. நான் படித்தது சரியாக இருக்கும் பட்சம், மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு நினைவு திரும்பியவுடன், பாலியல் வன்முறையாளர்கள் பிடிபட்டனரா எனக் கேட்டுள்ளாள். போராடும் அவள் மன உறுதி உயிரோடு உள்ளது. அவள் பிணமல்ல. அவள் மன உறுதியைப் போற்றுவோம். பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் நடைப்பிணங்கள் அல்ல. அதிலிருந்து பிழைத்த, முழுமையான வலுவான போராடும் பெண்கள். நாம் அவர்கள் உணர்வைப் போற்றுவோம்.

பாலியல் வன்முறையை எதிர்ப்பதையும் அரசியலையும் கலக்காதீர்கள் என்ற கருத்தை முன்வைப்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டி உள்ளது. அரசியல் முக்கியத்துவமற்றது என நாம் புறம் தள்ள முடியாது. நாம் அரசியல் பற்றிப் பேசியாக வேண்டும். நம் நாட்டில் பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் ஒரு கலாச்சாரம் உள்ளது. கே.பி.எஸ்.கில் போன்ற உயர் பதவிகளில் உள்ளவர்கள், தூண்டும் வகையில் ஆடை அணியும் பெண்கள் பாலியல் வன்முறையைத் தாமே தேடிக் கொள்கிறார்கள் என்கிறார்கள். இதை மாற்ற வேண்டும் என் றால், நாம் பெண்களுக்கெதிரான வன்முறை என்ற பிரச்சனையை அரசியல்படுத்த வேண்டும். பெண்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி என்ன கருதுகிறார்கள் என நாம் கண்டறிய வேண்டும். அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்திற்குள் முதலைக் கண்ணீர் வடிப்பதாலோ மரண தண்டனை எனக் கூப்பாடு போட்டு விஷயத்தை முடித்துக் கொள்வதோ போதவே போதாது. பாஜக, மரண தண்டனை பற்றிப் பேசுவது வேடிக்கை யானது. ஏனெனில் பெண்கள், இந்திய கூருணர்வுகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும் எனச் சொல்லி, பாஜக வகையறா குண்டர்கள்தான் ஜீன்ஸ் பேண்ட் போட்ட பெண்களை விரட்டித் துரத்துகிறார்கள், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களோடு காதல் கொள்பவர்களை விரட்டுகிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு ஒரு மாற்று கலாச்சாரத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அச்சமின்றி சுதந்திரமாக வாழும் பெண்ணின் உரிமை கோரும் ஒரு மாற்றுக் கலாச்சாரம் வேண்டும்.

நான் இன்னும் நிறைய பேச விரும்பவில்லை. எங்கள் மீது கண்ணீர்ப் புகை வீச, தண்ணீர் பாய்ச்ச காவல்துறை தயாராய் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. நான் அறிந்தவரை டெல்லி எங்கும் இன்று எதிர்ப்புப் போராட்டம் நடக்கிறது. எங்களது சீற்றத்தை, தண்ணீர் பீய்ச்சி கழுவிவிட முடியுமா? தடியால் அடித்து அந்தச் சீற்றத்தை போக்கிவிட முடியுமா? பாலியல் வன்முறையாளர்களின் நடவடிக்கை களைப் பாதுகாக்க எல்லாம் செய்யும் அரசாங்கம், பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது தாக்குதல் தொடுக்கத் தயாராவது அவமானகரமானதில்லையா?

Search