COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 30, 2013

7

உலகம்

இஸ்ரேல் தேர்தல்கள்: இளைய தலைமுறை மாற்றம் கோருகிறது

மஞ்சுளா, 27.01.2013

 

ஆட்சியாளர்கள் பழைய முறையில் ஆள முடியவில்லை. பழைய முறையில் ஆளப்படுவதை மக்கள் அனுமதிப்பதில்லை. அமெரிக்க வால் ஸ்ட்ரீட் இயக்கம் போல் 2011 ஜூலையில் இஸ்ரேலின் டெல் அவிவ்வில் பொருளாதார நீதி வேண்டும்’, ‘லாபத்தை விட மக்கள் முக்கியம்’, ‘தனியார்மயம் என்ற கேள்விக்கு புரட்சியே பதில்போன்ற முழக்கங்களுடன், வீட்டு வசதி கோரி நடந்த இயக்கம் இஸ்ரேலிய ஆட்சியாளர்களுக்கு இந்தச் செய்தியை தெளிவாகச் சொன்னது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் இஸ்ரேல் மக்கள் மீண்டும் அந்தச் செய்தியை வலுவாகச் சொல்லியுள்ளனர். பாலஸ்தீன குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசுவது, புல்டோசர்கள் கொண்டு தரைமட்டமாக்குவது, குழந்தைகள் உட்பட சாதாரண குடிமக்களை கொன்று குவிப்பது, அமெரிக்கா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஆதரவு, ஈரானை வேட்டையாடப் பார்ப்பது, ஆயுத வியாபாரம் என்று தவறான, இனவெறி காரணங்களுக்காக மட்டுமே உலக அரங்கில் அறியப்படுகிற, இஸ்ரேலின் லிகுட் கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளனர்.

120 இடங்கள் கொண்ட நெஸ்ஸட்டில் (இஸ்ரேல் நாடாளுமன்றம்) 60 இடங்களில் வலதுசாரி கட்சிகளும் 60 இடங்களில் மய்ய - இடதுசாரி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.

பெஞ்சமின் நேதன்யஹு தோற்றுப்போய் விடவில்லை என்றுதான் சொல்ல முடியுமே தவிர, அவரது கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றுவிட்டது என்று சொல்வதை இஸ்ரேலிய மக்கள், குறிப்பாக நடுத்தரப் பிரிவு மக்கள் அனுமதிக்கவில்லை. காசா மீதான தொடர் தாக்குதல்கள், தேர்தலுக்கு முந்தைய 2012 நவம்பர் தாக்குதல்கள், வலதுசாரி கட்சியான இஸ்ரேல் பெய்தெய்னு கட்சியுடனான கூட்டணி போன்றவை நேதன்யஹுவுக்கு உதவவில்லை.

எதிர்காலம் ஒன்று உண்டுஎன்ற பொருள் கொண்ட யெஷ் அடிட் கட்சியைச் சார்ந்த, முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிற யேர் லபிட் நடுத்தரப் பிரிவு இஸ்ரேலியர்கள் வாக்குகள் பெற்று 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

இஸ்ரேலியர்களாக இருப்பது என்றால் என்ன என்ற கேள்வியை தனது கட்டுரைகளில் எழுப்பி வந்த எழுத்தாளர் மற்றும் தொலைக் காட்சி தொகுப்பாளரான யேர் லபிட், அது தேசியவாதியாக, மதவாதியாக இருப்பது அல்ல என்ற கருத்து கொண்ட, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஜனநாயக விருப்பங்கள் கொண்ட, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக மாற்றத்துக்கான விருப்பங்கள் கொண்ட இஸ்ரேலிய மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இடதுசாய்வு கட்சியான லேபர் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நேதன்யஹு தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால் அதில் பங்கேற்பதில்லை என லேபர் கட்சி அறிவித்துள்ளது.

31 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நேதன்யஹு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் மேற்குக் கரையில் யூதர்கள் குடியிருப்புகள் அமைக்கப்படுவதை ஆதரிக்கும், பாலஸ்தீன அரசு என்ற கருத்தையே எதிர்க்கும் வலதுசாரி கட்சியான ஜூயிஷ் ஹோம் மற்றும் மய்யவாத கட்சியான யெஷ் அடிட் கட்சிகளின் ஆதரவு தேவை. வலதுசாரி கட்சியான ஜூயிஷ் ஹோம் இருக்கும் கூட்டணியில் மய்யவாத கட்சியான யெஷ் அடிட் கட்சி இருக்க முடியாது. இந்தச் சூழலில் யேர் லபிட்தான் ஆட்சி அமைவதை தீர்மானிப்பவராக எழுந்துள்ளார். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் அவருக்கு வாக்களித்த இஸ்ரேலிய நடுத்தர மக்கள், புதிய ஆட்சி அமைவதை தீர்மானிக்கும் பொறுப்பை, வாய்ப்பை யேர் லபிட் கைகளில் ஒப்படைத்துள்ளார்கள். புதிய ஆட்சி அமைக்க வலதுசாரி மிதவாதிகள் மற்றும் இடதுசாரி மிதவாதிகளுக்கு யேர் லபிட் அழைப்பு விடுத்துள்ளார்.

நிதியமைச்சகத்தில் என் பெயர் எழுதி வைக்கப்படவில்லை என்று சொல்லியுள்ள தற்போதைய நிதியமைச்சர், நிதியமைச்சர் பதவி கூட யேர் லபிட்டுக்காக காத்திருப்பதாக சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். அயல் விவகார அமைச்சர் மோசடி குற்றச்சாட்டுகளில் பதவி விலக நேர்ந்ததை அடுத்து அந்த அமைச்சகமும் யேர் லபிட்டுக்கு தரப்படலாம் என்று அவருக்கு செய்திகள் செல்கின்றன. யேர்லபிட் நேதன்யஹுவை காப்பாற்றுவார் என்றால், நேதன்யஹ÷வுக்கு எதிராக அவருக்கு வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

பாலஸ்தீன மக்களைப் பொறுத்தவரை, நேதன்யஹுவுக்கு நெருக்கடி என்பதைத் தவிர, பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்பு களை அகற்றுவது, பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வது, பாலஸ்தீனத்துடன் அமைதி போன்ற பிரச்சனைகளில் தேர்தல் முடிவுகள் பெரிய மாற்றம் ஏதும் கொண்டு வரவில்லை. பாலஸ்தீன பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது தேர்தல் நிகழ்ச்சி நிரலில் முக்கியமான பிரச்சனையாக எழவில்லை. நேதன்யஹுவின் கூட்டணி பெற்றுள்ள இடங்கள் குறைந்திருந்தாலும் பாலஸ்தீனத்துக்கு எதிரான ஜூயிஷ் ஹோம் கட்சி கூடுதல் இடங்கள் பெற்றுள்ளது.

ராணுவத்துக்கு ஒதுக்கீட்டை அதிகரிக்க சிக்கன நடவடிக்கை மற்றும் கூடுதல் வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக, மதரீதியான கல்வி பயிலும் யூதர்கள் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு ராணுவத்தில் பணியாற்றுவதற்கு இருக்கிற விதிவிலக்குக்கு எதிராக, ஜனநாயக விருப்பம், சமூக மற்றும் பொருளாதார நீதி ஆகியவற்றுக்கு அப்பால் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையோ, நவதாராளவாதக் கொள்கை எதிர்ப்பு தன்மையோ கொண்டவை அல்ல. ஒபாமாவுக்கு எதிராக நேதன்யஹு பேசிய சில விசயங்கள் கூட நேதன்யஹுவுக்கு எதிரான வாக்குகளை அதிகரித்திருக்கக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

ஹிட்லரால் விரட்டப்பட்டு ஜெருசலேம் வந்தடைந்து, இஸ்ரேல் என்ற தங்கள் சொந்த நாட்டை உருவாக்கிக் கொண்ட யூதர்கள் இன்று பாலஸ்தீனர்கள்பால் கொண்டுள்ள இனவெறி, அவர்கள் மீது நடத்துகிற தாக்குதல் வரலாற்றின் விந்தைமுரண். அன்று யூதர்கள் தங்களுக்கென ஒரு நாடு வேண்டும் என்று கேட்டதுபோல்தான் இன்று பாலஸ்தீனர்கள் தமது நாடு தமக்குச் சொந்தம் என்கின்றனர். உள்நாட்டில் நேதன்யஹ÷ கட்சி உருவாக்கிய ஏற்றத்தாழ்வான நிலைமைகளை இனி சகித்துக் கொள்வதில்லை என எழுந்திருக்கிற இஸ்ரேல் மக்கள், ‘வலுவான பிரதமர், வலுவான இஸ்ரேல்என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்தித்த நேதன்யஹுவை நிராகரித்துள்ளனர். உலக அரங்கில் அமெரிக்காவின் அடியாளாக, பேட்டை ரவுடியாகச் செயல்படும் இஸ்ரேல் அரசுக்கு எதிராகவும் அவர்கள் எழ வேண்டும்.

இஸ்ரேலில் அரசியல் மாற்றம் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் இஸ்ரேலின் இளைய தலைமுறையினர். ராகுல் காந்தியை இளைஞர் என்று அழைக்கக் கூடாது என்று ஷோபா டே தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தலையெழுத்து, இன்னும் கூட ஸ்டாலின் திமுக இளைஞரணி தலைவராக உள்ளார். அய்முகூவைச் சேர்ந்த இந்த இளைஞர்களுக்கும்இந்தியாவின் இளைய தலைமுறையினரின் இன்றைய நிகழ்ச்சிநிரலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இஸ்ரேல் இளைய தலைமுறையினர் பழைய சக்திகளை புதுப்பிக்க வாக்களிக்கவில்லை. பட்டத்து இளவரசர்களுக்கு அங்கு இடம் இல்லை. பழைய சக்திகள் தங்கள் விருப்பப்படி இனி செயல்பட முடியாது என்பதை உறுதி செய்ய வாக்களித்துள்ளனர். இந்திய இளைய தலைமுறையினரும் மாற்றி யோசிப்பார்கள்.

Search