COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 7, 2013

7

நகல் ஆவணம்

நகல் பொதுத் திட்டம்

(2013, ஏப்ரல் 2 - 6 தேதிகளில் ராஞ்சியில் நடக்கவுள்ள இகக மாலெ (விடுதலை) 9ஆவது கட்சி காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள நகல் தீர்மானம் தரப்படுகிறது. வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)

முன்னுரை

தனது உன்னதமான வர்க்க லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கும், இந்திய பாட்டாளி வர்க்கத்தின், அதிஉயர்ந்த அரசியல் அமைப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகும். அது மக்களின் முன்னேறிய பிரிவினரை தன்னகத்தே கொண்டுள்ளது. நிலப்பிரபுத்துவ தளைகளில் இருந்தும் பெருமூலதனம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் சூறையாடல் மற்றும் ஆதிக்கத்தில் இருந்தும் விடுதலை பெறுவதற்கான இந்திய மக்களின் தேடலில், பால், சாதி, நம்பிக்கை, மொழி, தேசிய இனம் ஆகியவற்றுக்கு அப்பால், சுதந்திர குடிமக்களாக சம உரிமைகளை, துரித முன்னேற்றத்தை அடைவதற்கான இந்திய மக்களின் தேடலில், அவர்களின் தலைமைக்கருவாக செயல்படுகிறது.

இந்தியாவில், புதிய ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதை, குறைந்தபட்சத் திட்டமாகக் கொண்டுள்ளது, உயர்ந்தபட்சத் திட்டமான சோசலிச மாற்றத்தையும், கம்யூனிசத்தையும் கொண்டுவரவும், தனது இறுதி இலட்சியமான, மனிதரை மனிதர் சுரண்டும் அனைத்து வகை சுரண்டலையும் ஒழித்துக் கட்டவும், கட்சி தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது.

கட்சி தனது உலகக் கண்ணோட்டத்தை மார்க்சிய சித்தாந்தத்திலிருந்து பெறுகிறது. செயலுக்கு வழிகாட்டியாக, ஒருங்கிணைந்த முறையான மார்க்சிய - லெனினிய மற்றும் மாசேதுங் சிந்தனையை ஏற்றுக்கொள்கிறது. இந்தியப் புரட்சியின் சரியான வழியை வளர்த்தெடுக்க, கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும், சீர்திருத்தவாதம், திரிபுவாதம், அழிவுவாதம், முதலாளித்துவ தாராளவாதம், அராஜகவாதம் மற்றும் மற்ற அனைத்து அந்நியக் கருத்துக்களுக்கு எதிராக, கட்சி, சளைக்காத போராட்டத்தை நடத்துகிறது.

கட்சி, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிக்கிறது. நடைமுறைப்படுத்துகிறது. சர்வதேச உறவுகளில், எல்லா வகையான ஏகாதிபத்தியம், மேலாதிக்கம், காலனியம்/நவகாலனியம், விஸ்தரிப்புவாதம், இனவாதம், குறுகிய வெறிவாதம், ஆக்கிரமிப்பு, ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்க்கிறது. உலகின் எல்லா பகுதிகளிலுமுள்ள, எல்லா புரட்சிகர கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளுடனான, அமைப்புக்களுடனான ஒற்றுமையைக் கட்சி பெரிதும் மதிக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தேசங்களது போராட்டங்களைக் கட்சி ஆதரிக்கிறது. அத்துடன், மானுடம் முழுவதும் முழுமையாக விடுதலை அடைய வேண்டுமென்ற இறுதி லட்சியத்தை அடையும் நோக்கத்திற்காக, ஏகாதிபத்தியம் மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கெதிராக, அத்தகைய எல்லா இயக்கங்களோடும் கட்சி அய்க்கியப்படுகிறது. சகோதரத்துவ உறவுகள் குறித்த விசயங்களில் சுதந்திரம், தலையிடாமை, சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகளை கட்சி கடைபிடிக்கிறது.

கட்சி வேலை நடையில், தத்துவத்தை நடைமுறையோடு ஒன்றிணைப்பது, மக்களோடு நெருக்கமான உறவுகளை வைத்திருப்பது, விமர்சனத்தையும், சுய விமர்சனத்தையும் நடைமுறைப்படுத்துவது ஆகியவை மூன்று பிரதான கோட்பாடுகளாகும். கட்சி தன் நடைமுறையை வளர்த்தெடுப்பதற்கு எப்போதுமே யதார்த்த விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவது என்ற கொள்கையைப் பின்பற்றுவதுடன், ஆழமான ஆய்வுகளையும் காத்திரமான படிப்புகளையும் மேற்கொள்ளுகிறது.

கட்சி உறுப்பினர்கள், மக்கள் மீது அதிஉயர்ந்த நேசம் வைத்திருப்பவர்கள். அவர்கள் இந்திய சமுதாயத்தின் அனைத்து மிகச் சிறந்த புரட்சிகர மரபுகளை உயர்த்திப் பிடிப்பவர்கள். அவர்கள் உண்மை மற்றும் கம்யூனிசம் என்கிற பதாகையை உயர்த்திப் பிடிப்பதற்கு தங்கள் இன்னுயிரையும் விலையாகக் கொடுக்கும் துணிச்சல் கொண்டவர்கள்.

இந்திய சமூகம்

ஆசியாவின் எழுந்து வரும் சக்தி, தகவல் தொழில்நுட்ப வல்லரசு, டாலர் மில்லியனர்கள், டாலர் பில்லியனர்கள் (1 பில்லியன் டாலர் ரூ.5500 கோடி) எண்ணிக்கையில், உலகின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்று என்றெல்லாம், இந்தியா, அழைக்கப்பட்டாலும், இந்த பூமியிலேயே அதிகமான வறியவர்களை இந்தியா கொண்டிருக்கிறது. இந்திய பெரும் தொழில்குழும நிறுவனங்கள், உலகளாவிய வான்வெளிகளில், தங்கள் சிறகுகளை விரிக்கின்றனர். ஆனால், மனித வளர்ச்சிக் குறியீட்டு எண்ணில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது. பரிதாபத்துக்குரிய தனிநபர் சராசரி வருமானம் கொண்டுள்ளது.

விவசாயம் மக்களின் மிகப் பெரும்பான்மை யினரின் வேலைவாய்ப்புக்கும் வருமானத்திற்கும் இப்போதும் ஆதாரமாக இருக்கிறது. ஆனாலும், மேலோங்கிய அரைநிலப்பிரபுத்துவ, சிறுவீத விவசாயப் பொருளாதாரத்தால் அழுத்தப்படுகிறது. நிலப்பிரபு பாதை மூலம், முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்வது என்பதன் நீடித்த, நிரந்தரமான நெருக்கடியில் சிக்கியுள்ளது. விவசாயம், மிகவும் தாறுமாறான, வளர்ச்சி போர்த்தந்திரத்தால் சரிய விடப்பட்டுள்ளது. பெரும்பாலான மரபுவழி தொழில்கள் தேங்கி நிற்கின்றன. ஏற்றுமதிச் சந்தைகள், அயல்நாட்டு நலன்கள் அல்லது மேட்டுக்குடியினர் நுகர்வுக்கு சேவை செய்யும் துறைகளே முன்னேற முடிகிறது. நம் நாட்டின் இயற்கை வளங்கள், மனித வளங்கள், பெரும்தொழில்குழும, ஏகாதிபத்திய சூறையாடலுக்கு அதிகரித்த அளவில் ஆட்படுத்தப்படுகின்றன. வளர்ச்சியின் இஞ்ஜின்களாக ஊகவணிக நடவடிக்கைகளும், ரியல் எஸ்டேட் துறைகளும் முன்னுரிமைப்படுத்தப்படுகின்றன. இவற்றின் விளைவாக, ஒரு சிறிய உயர் பிரிவு, தங்கு தடையற்ற திரட்சியிலும், பளிச்செனத் தெரியும் படாடோப நுகர்விலும் ஈடுபடுகையில், எல்லா செல்வத்தை யும் உற்பத்தி செய்யும் ஒரு பிரும்மாண்டமான அடித்தளம், பறிகொடுத்தலின் இருண்ட பாதாளங்களில் சிக்கியுள்ள, குரூரமான வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

விவசாயம் உட்பட எல்லா துறைகளிலும் துரிதப்படுத்தப்பட்ட, அனைத்தும் தழுவிய மூலதன ஊடுருவல் நடைபெறுகிறது. இது, உற்பத்தி உறவுகளிலும், விழுமிய முறைகளிலும், விடாப்பிடியாய் நிற்கும் நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களை ஒழிக்காமல், அவற்றைப் பயன்படுத்திக் கொண்டே நடக்கிறது. அதனால் நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் புதிய வடிவங்களில் மறு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மிச்சசொச்சங்கள், பெருமூலதனத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும், மலிவான உழைப்பு சக்தியையும், மூலப்பொருட்களையும் வழங்குவது மட்டுமின்றி, மத்தியகால இருண்மைவாதம், சாதிய வெறி, மதவெறி, காட்டுமிராண்டித்தனம் ஆகியவை, வாழ்வின் எல்லா அரங்கங்களிலும் விடாப்பிடியாய் தொடர்வதையும் உறுதி செய்கின்றன. சுருங்கச் சொன்னால் தேசத்தின் பொருளாதார வாழ்வுத் தடங்கள் நாடாளுமன்ற ஜனநாயக நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது அதிகரித்து வரும் பெருந்தொழில் குழும கட்டுப்பாட்டோடு சேர்ந்து கொண்டு, நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்கள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முடக்குகின்றன; சிதைக்கின்றன; இந்திய சமூகத்தையும் ஆட்சி அமைப்பு முறையையும் ஒரு முழுமையான ஜனநாயகமயப்படுத்துதலுக்கு உட்படுத்துவதற்கு மிகப் பெரிய தடைக்கற்களாய் உள்ளன.

பொருளாதார வல்லமை வளர்ந்து வந்தாலும், ஆளும் அதிகாரத்துவ ஏகபோக முதலாளித்துவம், அரசியல்ரீதியாக, தனது தோற்றகால தரகுத் தன்மையை, தக்க வைத்துக் கொண்டுள்ளது. அது ஏகாதிபத்தியம் அல்லாத பல நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளையும், வெவ்வேறு அந்நிய நாடுகளுடன் பேரம் பேசுவதற்கான கணிசமான ஆற்றலையும் வளர்த்துக் கொண்டுள்ளது. அது அண்டை நாடுகளிலும் அதற்கு அப்பாலும் தனது பொருளாதார விரிவாக்கவாத பேரவாக்களுக்கு சேவை செய்ய, கனிம மற்றும் எண்ணெய் வளங்களுக்காகப் போட்டியிட, கணிசமான அளவு மூலதன ஏற்றுமதியில் ஈடுபடுகிறது. ஆன போதும் இவை அனைத்தும் ஏகாதிபத்தியத்தைச் சாரமாகச் சார்ந்திருப்பது என்ற வரையறைக்குள் தான் செயல்படுகின்றன. இது நுண்தளத்தில் வெவ்வேறு தொழில் நுட்ப, நிதி, விற்பனை பிணைப்புக்களாகவும் ஒட்டுமொத்த (மேக்ரோ) தளத்தில் நவதாராளவாத பொருளாதார சித்தாந்தத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வதிலும் ஏகாதிபத்திய சதிகளுக்கு கீழ்படியும் அரசுக் கொள்கையிலும் வெளிப்படுகிறது.

இது ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்குட்பட்ட பல்தள முகாமைகளும் பெரும் அந்நிய சக்திகளும் நமது உள்நாட்டு பொருளாதார அரசியல் விவகாரங்களிலும் கொள்கை விசயங்களிலும் அப்பட்டமாக தலையிடவும், ‘போர்த்தந்திர கூட்டுக்கள்என்ற போர்வையில் தமது உலகளாவிய அரசியல் விளையாட்டுக்களில் ஓர் இளநிலைக் கூட்டாளியாக செயல்படுமாறு இந்தியாவை இழுக்கவும் வழிவகை செய்கிறது. இப்படியாக தேசத்தின் சுதந்திரம் பலத்த அடிவாங்குகிறது. நமது ஆட்சியாளர்கள் ஒரு நவதாராளவாத சார்பு வாடிக்கையாளர்களாக அதிகரித்த அளவில் நடந்து கொள்ளும்போது நமது இறையாண்மை மேலும் கூடுதலாக அரித்துப் போவதற்கான உண்மையான ஆபத்து எப்போதும் நிலவுகிறது.

துரிதமான பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவது என்ற பெயரில் ஆளும் வர்க்கங்கள் பொருளாதார அரங்கில் அரசு பின்வாங்குவது என்ற போர்த்தந்திரத்தை ஆரத்தழுவியுள்ளனர். மக்களின் அடிப்படை நலன்களை உத்தரவாதப்படுத்தும் அரசின் பொறுப்பைத் துறந்துள்ளனர். பெருமூலதனம், அந்நிய நிறுவனங்களோடு நெருக்கமான கூட்டில் செயல்படும் பெரிய இந்திய நிறுவனங்கள் ஆகியவற்றால் தலைமை தாங்கப்படும் சந்தை சக்திகளிடம் பொருளாதாரத்தின் கடிவாளங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. அரசால் உதவப்பட்டு அமல்படுத்தப்படும் சந்தையால் வழி நடத்தப்படும் பொருளாதார வளர்ச்சி என்ற போர்த் தந்திரம் சிலர் கைகளில் பிரம்மாண்டமாக செல்வம் குவிவதற்கும். பணக்காரர்கள் ஏழைகளுக்கிடையிலான பிளவு பளிச்செனத் தெரியும் விதத்தில் விரிவடைவதற்கும் உழைக்கும் மக்களின் பெரும் பிரிவினர் இடம் பெயர்க்கப்படுதல், பறிமுதலுக்கு உட்படுத்தப்படுதல் மற்றும் வறுமைமயமாதலுக்கு ஆளாக்கப்படுதல் ஆகியவற்றிற்கு இட்டுச் செல்கிறது. இந்த பெருந்தொழில்குழும சார்பு, ஏகாதிபத்திய சார்பு கொள்கை ஆட்சி பெருந்தொழில்குழும ஊடகத்துறையின் ஆதிக்க பிரிவுகளின் மேல் நோக்கி நகரும் நடுத்தர வர்க்கத்தின் செல்வாக்கு மிக்க பிரிவினரின் விமர்சனமற்ற ஆதரவை பெற்றுள்ளது. அதே நேரம் விரிவடைந்து வரும் மத்திய தர வர்க்கத்தின் ஒரு பரந்த பிரிவினர், பெருந் தொழில்குழும சூறையாடல் மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கெதிரான வெகு மக்கள் போராட்டத்தை ஆதரிக்கின்றனர்; பல நேரங்களில் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் விருப்பங்களின் அறுதியிடலுக்கான போராட்டத்திற்கு ஒரு கூர்மையான முனையை வழங்குகின்றனர்.

தொகுத்துச் சொன்னால், இந்தியா ஒரு மேலோங்கிய விவசாய பின்தங்கிய முதலாளித்துவ சமூகம் என கட்சி அங்கீகரிக்கிறது. இச்சமூகம் விடாப்பிடியான நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களாலும் அப்பட்டமான காலனிய தொடர்ச்சிகளாலும் வாட்டி வதைக்கும் பேராசைமிக்க உலக மூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தாலும் முடக்கப்படுகிறது. அதே நேரம் அச்சக்திகளை மறுஉறுதி செய்கிறது.

இந்திய அரசு

இந்தியாவில் உள்ள அரசு நிலப்பிரபுக்களோடும், குலக்குகளோடும் கூட்டணி வைத்துள்ள ஏகாதிபத்திய சார்பு பெருமுதலாளித்துவத்தால் தலைமை தாங்கப்படுகிறது. உலக மூலதனத்தோடு கூட்டுசேர்ந்து, இந்திய மூலதனம் தனது கடல் கடந்த நடவடிக்கைகளை விரிவுபடுத்தத் துவங்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக திட்டத்தில் ஒரு கேந்திரமான கூட்டாளி என்ற வகையில்தான் என்றாலும், இந்திய அரசும் கூட அதிகரித்த அளவில் ஒரு பிராந்திய மேலாதிக்க சக்தியாக எழுந்து வருகிறது.

பொதுவாக இந்திய அரசின் விவகாரங்கள் ஓர் அரசியலமைப்புச் சட்ட நாடாளுமன்ற ஜனநாயக வரையறைக்கு உள்ளேயே நடத்தப்படுகிறது. இங்கு மக்களுக்கு, நாடாளமன்றத்துக்கு மாநில சட்டமன்றங்களுக்கு பல்வேறு உள்ளாட்சி, நகராட்சி அமைப்புக்களுக்கு, சுயாட்சி கவுன்சில்களுக்கு தேர்ந்தெடுக்கும் சம்பிரதாய உரிமை உண்டு. ஆனால் நிஜ வாழ்க்கையில், உள்ளூர் மட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புக்களுக்கு எந்த அதிகாரமும் பரவலாக்கப்படவில்லை. வேர்க்கால் மட்டங்களில் பங்கேற்கும் ஜனநாயகம் பற்றிய எந்தக் கருத்தாக்கத்தையும் முழுமையாக புறம் தள்ளி அதிகார வர்க்கத்தினரே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். வெவ்வேறு சமூக அடையாளங்கள் மற்றும் பிராந்திய பிரிவினைகளுக்கு இடையிலான நுட்பமான சமநிலையைப் பயன்படுத்திக் கொண்டு அரசுப் பொறியமைவு மற்றும் மேலோங்கிய ஊடகத்துறையின் பல்வேறு பிரிவுகள் மீது ஓர் அனைத்தும் தழுவிய பிடியை அனுபவித்துக் கொண்டு, பெருமூலதனம், ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவ குலக் செல்வாக்கு பிரிவினரின் அச்சு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மொத்த வலைப்பின்னல் மீதும் திறன்வாய்ந்த கட்டுப்பாடு செலுத்துகிறது.

1970களின் நடுப்பகுதியில் ஆளும் காங்கிரஸ் கட்சி பத்திரிகைச் சுதந்திரத்தை முடக்க பல குடிமை சுதந்திரங்களை, ஜனநாயக உரிமைகளை தற்காலிக நீக்கம் செய்ய, கட்டுப்படுத்த, தேர்தல்களை தாமதப்படுத்த, ஏன் முதலாளித்துவ எதிர்க்கட்சித் தலைவர்களையே கைது செய்ய ஓர் உள்நாட்டு நெருக்கடி நிலைப் பிரகடனத்தை அறிவிப்பது வரை சென்றது. அதன் பிறகு அதுபோன்ற ஒரு சூழல் திரும்ப வரவில்லை. ஆனபோதும் அரசாங்கங்கள் முக்கியமான கொள்கைப் பிரச்சனைகளில் தொலைதூர போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளிலும் கூட வழமையாக நாடாளுமன்றத்தை கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றன. இந்த முடிவுகள் நாடாளுமன்ற ஒப்புதலுக்கும் அல்லது எந்தவித வெகுமக்கள் கலந்தாலோ சித்தலுக்கும் உட்படுத்தப்படுவதில்லை. பொது வாக்கெடுப்பு நடத்துவது பற்றி பேசுவதற்கு ஏதும் இல்லை. பெருந்தொழில் மற்றும் அகில இந்திய மற்றும் வெவ்வேறு மாநில மட்ட ஆளும் வர்க்கக் கட்சிகள் ஆகியோருக்கு இடையிலான வளரும் அச்சு நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலுக்கும் பிரம்மாண்ட அளவுகளிலான மெகா ஊழல்களுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு முதலாளித்துவ ஜனநாயகம் பெரும்தொழில்குழும சீர் குலைவுக்குள்ளாவதற்கும் இட்டுச் செல்கிறது.

இந்தியாவின் சட்ட, நீதிபரிபாலன மற்றும் நிர்வாகத்துறை மேல்கட்டுமானமும் ஆயுதப் படைகளும் இப்போதும் பெருமளவுக்கு காலனிய பழங்காலத்தவையே. ஓர் அடிமை மக்களை ஒடுக்கும் நிர்வகிக்கும் நோக்கத்திற்காக, ஓர் அந்நிய சக்தியால் வடிவமைக்கப்பட்ட இந்த மேல்கட்டுமானம், ஏகப்பெரும் பான்மை இந்திய மக்களுக்கு, சுதந்திர குடிமக்கள் என்ற விதத்தில், அவர்களது அடிப்படை கவுரவத்தையும், அந்தஸ்தையும், மறுக்கிறது. ஆள்பவர் அடிமை உறவு என்ற காலனிய சகாப்த கலாச்சாரம் குடியுரிமை பற்றிய நவீன ஜனநாயக கருத்தாக்கத்தின் மீது தொடர்ந்து நிழலாய்ப் பரவிப் படர்ந்துள்ளது. ஓர் இறுக்கமான படிநிலை சாதிய சமூகம், இனக்குழுக்களின், சமூகக் குடிகளின் ஆணாதிக்கக் கட்டளைகள், தனிநபர் சுதந்திரத்தின், உரிமைகளின் அறுதியிடலை கடுமையாகச் சுருக்குகின்றன; சீர்குலைக்கின்றன. கொடூரமான சட்டங்கள், சட்டம் நீதி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட ஒடுக்குமுறை, காவல் சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் படுகொலை கள்; ‘போலி மோதல்கள்’, விசாரணையின்றி காவல், சிறுபான்மையினர் பழங்குடியினர் அரசியல் மாற்றுக் கருத்துடையோர் மீது பழி சுமத்தும் வேட்டை, வெகு மக்கள் எதிர்ப்பின் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனம், ‘கலவரப் பகுதிகள்என்று அழைக்கப்படுகிற பகுதிகளில், தண்டனை பற்றிய அச்சம் முற்றிலும் இன்றி, ஒடுக்குமுறையில் இறங்கும் சிறப்பு அதிகாரங்கள்கொண்ட ஆயுதப்படைகளின் இராணுவத் தலையீடு என, காலனி ஆட்சிக்குப் பிந்தைய இந்தியாவில், ‘சட்டத்தின் ஆட்சிஎப்போதும் மனித உரிமைகளை மீறுவதாகவே இருக்கிறது.

இந்தியா பல தேசிய இனங்கள், இன மொழிக் குழுக்கள் கொண்ட ஒரு நாடு. காலனிய எதிர்ப்பு சுதந்திரப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் ஜனநாயகப் போராட்டங்கள் ஆகியவற்றின் ஊடே வளர்த்தெடுக்கப்பட்ட சில பத்தாண்டு கால ஒற்றுமையின் பின்புலம் கொண்ட, வளர்ந்து வரும் பொருளாதார கலாச்சார உறவாடல்கள், பரஸ்பர உள்வாங்குதல் ஆகியவை, நமது சமூகத்தின் பல்தேசியஇன வண்ணக்கலவைக்கு ஓர் ஒன்றுபட்ட இந்திய முகம் தந்திருக்கின்றன. ஆனால் இந்திய அடையாளத்தின் இந்த பரிணாம வளர்ச்சிப் போக்கு, அழுத்தமாகத் தெரிகிற, மிகப்பெரும் அளவிலான நன்கு புலப்படும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளாலும், காஷ்மீரிலும் வடக்கிழக்கிலும் அப்பட்டமாகக் காணப்படுவது போன்ற, பேரினவாத, அதீதமாக மய்யப்படுத்தப்பட்ட இந்திய அரசின் அப்பட்டமான பாகுபாடு, இடைவிடாத ஒடுக்குமுறை என்ற கொள்கையாலும் பீடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வெவ்வேறு தேசிய இனங்களும் தேசிய சிறுபான்மை யினரும், வெவ்வேறு வடிவங்களிலான, வெவ்வேறு அளவுகளிலான சுயநிர்ணய உரிமைக்கான நீடித்த போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியத்தில் உள்ளனர். சில விஷயங்களில், இவை, வலுவான, மய்யத்தை விட்டு விலகிச் செல்லும் போக்குகளுக்கு இட்டுச் செல்கின்றன. சில சமயங்களில், இவை அதிகாரத்தில் இருப்பவர்கள் கைகளில் சிக்கிக் கொண்டு, குறுகிய இன மோதல்களுக்கும், அப்பாவி மக்கள் மீது ஆயுதந்தாங்கிய தாக்குதல்களுக்கும் இட்டுச் செல்கின்றன.

இந்தியா பல மதங்களை கொண்ட நாடும் ஆகும். ஆனால், மதம் மற்றும் அரசியல், அரசு விவகாரங்களை கறாராகப் பிரித்து நிறுத்துவது என்ற பொருளில் மதச்சார்பின்மையை அமல்படுத்தாமல், அரசு, மதச்சார்பின்மையை, மத நல்லிணக்கம் என்ற குறைந்தபட்ச கருத்தாக்கத்திற்குச் சுருக்கிவிட்டது. பெரும் பான்மை சமூகத்தின் சக்திவாய்ந்த மதரீதியான அணிதிரட்டல் முன்பு மதவாத வன்முறை சக்திகளுக்கு வழிவிடுகிறது. அவற்றுடன் கூட்டு சேர்ந்தும் கொள்கிறது. சமீப காலங்களில் இந்தியாவில் அரசியல் மதவாத வரலாறு, அமெரிக்கா வழி நடத்தும் இசுலாமை சாத்தான் மயமாக்குவது, இசுலாமியர்களுக்கு எதிராகப் போதிக்கப்படும் பின்பற்றப்படும் வெறுப்பு மற்றும் ஒடுக்குமுறை அரசியல் ஆகியவற்றால் மறுஉறுதி செய்யப்படுகிறது. மூர்க்கத்தனமான பெரும்பான்மை மதவாதம் இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் கலாச்சார பன்மைவாதத்தின் இருத்தலுக்கே ஒரு பாசிச ஆபத்தாகி உள்ளது. ஆகவே மதச்சார்பின்மையை அடைவது இந்திய ஜனநாயகப் புரட்சியில் ஒரு கேந்திர கடமையாக உள்ளது.

பார்ப்பனிய மற்றும் புதிய பார்ப்பனிய கருத்தியல் மற்றும் கலாச்சாரத்தால் நியாயப்படுத்தப்படும் சாதிய ஒடுக்குமுறையும் பாகுபாடும் இந்திய சமூகத்திலும் அரசிலும் நிலவுகிற மற்றுமொரு வெறுக்கத்தக்க அம்சம். ஆகவே, சமூக ஒடுக்குமுறையை நீக்குவதும் சாதிகளை அழித்தொழிப்பதும் மற்றுமொரு கேந்திரமான புரட்சிகர இலக்காகும். இந்திய அரசு பெண்கள் சமத்துவம் மற்றும் அதிகாரம் வழங்குதல் பற்றி நிறையப் பேசும்போதே அனைத்துவிதமான ஆணாதிக்க கட்டமைப்புக்களையும் சக்திகளையும் பாதுகாத்து முன்னகர்த் துகிறது. மத அடிப்படைவாதம், மதவெறி, சாதியம், பால்ரீதியாக சிறுமைப்படுத்துதல், இனரீதியாக தனித்து நிறுத்துதல், மொழி மற்றும் பிராந்திய வெறி நிகழ்வுப் போக்குகள் ஆகியவை இந்திய ஆட்சி அமைப்பு முறையின் வெவ்வேறு தளங்களில் நிலவுகின்றன. இவை வெறுமனே கடந்துபோன நிலப்பிரபுத்துவ, காலனிய சகாப்தத்தின் காட்சிப் பொருட்கள் அல்ல. இவை நவீனஇந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். இந்திய மக்களின் வளரும் ஜனநாயக ஒற்றுமையை, விழிப்புணர்ச்சியை பலவீனப்படுத்தவும், சீர்குலைக்கவும், ஆளும் வர்க்கங்களும் அவர்களது அரசியல் கட்சிகளும், இந்தக் கருவிகளை நன்கு கணக்கிட்ட விதத்தில் பயன்படுத்துகின்றன.

புரட்சியின் கட்டம்

இந்திய சமூகம் நான்கு முக்கிய முரண்பாடு களால் இயக்கப்படுகிறது. ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான முரண்பாடு, நிலப்பிரபுத்துவ தளைகள் மற்றும் மிச்சசொச்சங்கள் மற்றும் பரந்துபட்ட மக்களுக்கிடையிலான முரண்பாடு. பெரு மூலதனத்திற்கும் இந்திய மக்களுக்கும் - குறிப்பாக தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாய சமூகம் - இடையிலான முரண்பாடு, ஆளும் வர்க்கங்களின் வெவ்வேறு பிரிவினர்களுக்கிடையிலான முரண்பாடு. முதல் மூன்று முரண்பாடுகளும் பகைத்தன்மை கொண்டவை ஆகும். கடைசியானது, பொதுவாக, பகைத் தன்மையற்றது. அது வழக்கமாக பேரம் மற்றும் சமரசங்கள் என்ற ஒரு சிக்கலான இயக்கப் போக்கில் தீர்க்கப்படுகிறது. பகை முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகிற விதத்தில் மோசமடைவதன்/தீவிரமடைவதன் மத்தியில், ஏகாதிபத்தியம், பெருமூலதனம் மற்றும் நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் ஓர் அசல் அச்சாக தம்மை நிறுத்திக் கொண்டுள்ளன. இந்தக் கூட்டின் பிணச் சுமையின் கீழ் நமது மக்கள் வாடுகின்றனர். ஆக, இந்த அச்சுக்கும் பரந்துபட்ட இந்திய மக்களுக்கும் இடையிலான பகையே, தற்கால இந்திய சமூகத்தின் பிரதான முரண்பாடாக அமைகிறது. இந்த முரண்பாட்டை கிரகித்துக் கொண்டு தீர்ப்பதன் மூலமே நிலவுகிற ஒடுக்குமுறை சமூக அமைப்பைத் தூக்கி எறிய முடியும்.

இது நமது புரட்சியின் கட்டத்தைத் தீர்மானிக்கிறது. அது, விவசாயப் புரட்சியை அச்சாணியாகக் கொண்ட மக்கள் ஜனநாயகப் புரட்சியின் கட்டம். ஜனநாயகப் புரட்சியின் முதன்மையான நோக்கம், எல்லா நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களையும் துடைத்தெறிவது, ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டுவது, பெருமூலதனத்தைக் கட்டுப்படுத்துவது நெறிப்படுத்துவது, மொத்த ஆட்சிமுறை கருவியை, பொறியமைவை ஜனநாயகப்படுத்து வது என இருக்கும். ஆகவே வெற்றிகரமான ஜனநாயகப் புரட்சி, சோசலிசம் நோக்கிய ஒரு துணிச்சலான அடியைக் குறிக்கும். குறுக்கீடுகள் அற்ற சோசலிச மாற்றத்திற்கான பொருளாயத அடித்தளத்தைப் பலப்படுத்தும்.

தொழிலாளர் வர்க்கத் தலைமை

தொழிலாளர் வர்க்கம்தான், இந்திய மக்களின், மிகவும் விடாப்பிடியான, புரட்சிகரமான, மிகவும் கட்டமைக்கப்பட்ட, மிகவும் முன்னேறிய பிரிவாகும். இந்த தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில்தான், ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியை, இந்தியாவில் நிறைவு செய்ய முடியும்.

ஜனநாயகப் புரட்சியை வெற்றியை நோக்கி வழி நடத்த, பாட்டாளி வர்க்கம் ஓர் ஒன்றுபட்ட சுதந்திரமான அரசியல் சக்தியாக எழுவதும் பொதுவான ஜனநாயக இயக்கத்தின் மீது தன் மேலாதிக்கத்தை வளர்தெடுப்பதும் அவசியம். இந்த நோக்கத்தோடு பாட்டாளி வர்க்கம்,

அ. கிராமப்புறங்களில் உள்ள தனது மிகப்பெரிய படை பிரிவிற்கு, நகர்ப்புறங்களில் சிதறடிக்கப்பட்டுள்ள மிகப்பரந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் அவற்றுடன், தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டு, உழைக்கும் மக்கள் சந்திக்கிற வாழ்நிலைமைகள் மற்றும் வேலைநிலைமைகளை மேம்படுத்த போராட வேண்டும். சர்வதேச மூலதனமும் இந்தியப் பெருமுதலாளித்துவமும் திரும்பத்திரும்ப ஏற்படும் தங்கள் நெருக்கடிகளின் சுமையை இந்திய மக்களின் தோள்களில் ஏற்றும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும்.

ஆ. புரட்சிகர விவசாய போராட்டங்களைக் கட்டமைக்க வேண்டும். ஆதரிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வலுவான கோட்டைகளை நிறுவ வேண்டும்.

இ. இந்திய வெகுமக்களின் அனைத்து வகை ஜனநாயக, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை கட்டமைக்க வேண்டும். ஆதரிக்க வேண்டும்.

ஈ. பெண் விடுதலை இயக்கத்தை கட்டமைக்க வேண்டும். ஆதரிக்க வேண்டும். ஒன்றுபட வேண்டும்.

உ. தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீதான எல்லாவிதமான ஒடுக்கு முறைகளையும் ஒழிப்பதற்கான, அவர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் தப்பெண்ணங்களுக்கு எதிரான, சாதி முறையையே அழித்தொழிப்பதற்கான போராட்டங்களை, கட்டமைக்க வேண்டும். ஆதரிக்க வேண்டும். ஒன்றுபட வேண்டும்.

ஊ. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான, மதச் சிறுபான்மையினரின் மத கலாச்சார சுதந்திரத்திற்கான, பழங்குடியினரின் பூர்வகுடியினரின் கவுரவம், சமத்துவம் மற்றும் நீதிக்கான போராட்டங்களை, கட்டமைக்க வேண்டும். ஆதரிக்க வேண்டும். ஒன்றுபட வேண்டும்.

எ. அறிவாளிப் பிரிவினரின் முற்போக்கு, ஜனநாயக விருப்பங்களை, முன்முயற்சிகளை ஆதரிக்க வேண்டும். முன்னேற்ற வேண்டும்.

ஏ. பெரும் தொழில் குழும ஆதிக்கத்தில் உள்ள பிற்போக்கு ஊடகத்திற்குப் பதிலாக ஒரு ஜனநாயக ஊடக வலைப்பின்னலை வளர்த்தெடுக்கிற, தப்பித்தல் தன்மை வாய்ந்த கேளிக்கை என்ற மேலோங்கிய பிரதான நீரோட்டத்திற்கு சவால்விட, மக்கள் கலாச்சாரத்தின் தொடுவான எல்லைகளை விரிவுபடுத்துகிற ஒவ்வொரு முயற்சியையும் ஆதரிக்க வேண்டும்.

அய். தெற்கு ஆசியாவின் எந்தப் பகுதியிலும் நடைபெறும் முற்போக்கான மக்கள் போராட்டங்களை ஆதரிக்க வேண்டும்; அவற்றோடு ஒருமைப்பாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும்.

ஒ. தமது உரிமைகள் மற்றும் கவுரவத்திற்கான, நிறவெறி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, இந்திய வம்சாவழியினர் இதர தெற்காசிய வழிவந்த மக்களின் முற்போக்கு போராட்டங்களோடும் முன்முயற்சிகளோடும் ஒன்றுபட வேண்டும்; அவற்றை ஆதரிக்க வேண்டும்.

ஓ. சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் ஒன்றுபட வேண்டும். ஏகாதிபத்தியம் மற்றும் பிற்போக்கிற்கு எதிரான, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான உலக மக்கள் போராட்டங்களை ஆதரிக்க வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் ரீதியான தாக்கும் சக்தியை கூர்மைப்படுத்த, உறுதிப்படுத்த, பெருமூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தாக்குதலை எதிர்த்திட, அனைத்து இடதுசாரி சக்திகள் மத்தியிலும் செயலில் ஒற்றுமையை வளர்த்தெடுக்க கட்சி சிறப்பு அழுத்தம் வைக்கிறது. அனைத்து இடதுசாரி ஜனநாயக சக்திகளின் பரந்துபட்ட அய்க்கியத்தை கட்டி எழுப்ப அனைத்து முன்முயற்சிகளும் எடுக்கும் அதே நேரம், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சமூக ஜனநாயக நீரோட்டம், இடது சாகசவாதப் போக்குகள் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு சளைக்காத போராட்டத்தின் மூலம் ஒரேயொரு கட்சியின் பதாகையின் கீழ் அனைத்து இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளையும் ஒன்றிணைக்கும் வரலாற்று லட்சியத்துக்கு கட்சி கடப்பாடு கொண்டுள்ளது.

மக்கள் ஜனநாயக முன்னணி

இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் ஆளும் வர்க்கங்களின் ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட்டத்தில் எழுந்துள்ளனர். அவர்களின் இந்த விழிப்புணர்ச்சி பல வடிவங்களில் வெளிப்பட்டுள்ளது. மக்கள் பல நேரங்களில், பலதரப்பட்ட கட்சிகளாலும், கட்சிசாராத சக்திகளாலும் கூட வழிநடத்தப்பட்டுள்ளனர். சில சமயங்களில், ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளாலும் கூட வழி நடத்தப்பட்டுள்ளனர். மக்களுடைய அத்தகைய இயக்கங்களை ஆதரிப்பதோடு மட்டுமின்றி, அத்தகைய இயக்கங்களை மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற இலக்கை நோக்கி திசைவழிப்படுத்த எப்போதும் கட்சி பாடுபட்டு வருகிறது.

தொழிலாளர் வர்க்கத்தால் வழிநடத்தப்படும் மக்கள் ஜனநாயகப் புரட்சியில், பிரதான சக்தியாக இருப்பது விவசாய சமூகமாகும். கட்சி, கிராமப்புற பாட்டாளிகளையும், வறிய விவசாயிகளையும், முழுமையாக சார்ந்து நிற்கிறது. மத்திய தர விவசாயிகள் மற்றும் இதர மத்தியதரப் பிரிவுகளுடன் உறுதியாக அய்க்கியப்படுகிறது. பணக்கார விவசாயிகளில் ஒரு பிரிவினரை தன் பக்கம் வென்றெடுக்க முயல்கிறது. அதே சமயம், மற்றவர்களை நடுநிலைப்படுத்துவதன் மூலம், புரட்சியின் எதிரிகளோடு, பெரும்பான்மை சேராமல் தடுக்க முயற்சி செய்கிறது. கட்சியின் நகர்ப்புற அடித்தளத்தில் பிரதானப் பகுதியாக நகர்ப்புற வறியவர்களும் உழைக்கும் மக்களும் உள்ளனர். நடுத்தர வர்க்கங்களின் சில பிரிவினர் முக்கியக் கூட்டாளியாக உள்ளனர். சிறு வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மற்ற சிறிய மற்றும் நடுத்தர முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ அறிவாளிப் பிரிவினர் வழக்கமாக, ஊசலாட்டம் கொண்ட ஸ்திரமற்ற கூட்டாளிகளாக உள்ளனர்.

ஜனநாயகப் புரட்சியை அதன் இறுதி வரை கொண்டு செல்வதற்கு, தொழிலாளர், விவசாயி கூட்டை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ், இந்த எல்லா வர்க்கங்களையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் ஜனநாயக முன்னணி உருவாக்கப்படுவது அவசியமாகும். இந்த நோக்கத்திற்காக கட்சி, பலவகைப்பட்ட வர்க்க/பிரிவு அமைப்புக்களோடும், பலவர்க்க அய்க்கிய முன்னணி அமைப்புக்களோடும் ஒத்துழைத்து வேலை செய்கிறது; அவற்றுக்குள் வேலை செய்கிறது; அவற்றை வளர்த்தெடுக்கிறது. எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் சூழலின் தேவைகளுக்கேற்பவும், கட்சி, பிரச்சனை அடிப்படையிலான கூட்டு நடவடிக்கைகளில் ஒரு முழுவரிசை, போராடுகிற ஜனநாயக சக்திகளோடு கரம் கோர்க்கத் தயாராக உள்ளது. குறுகிய காலத்திற்கானதாயினும் பொருத்தமான பொதுத் திட்டங்களின் அடிப்படையில் கூட்டணிகளில் நுழையவும் தயாராக உள்ளது.

புரட்சிகர இயக்கப் போக்கு

இந்தியா போன்ற ஒரு பரந்த, சிக்கல்கள் நிறைந்த நாட்டில், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, சாத்தியமான ஒவ்வொரு வேலை அரங்கிலும் வேலை செய்வதில், நாடாளுமன்றம் அல்லாத மற்றும் நாடாளுமன்ற வடிவங்களில், வெவ்வேறு வடிவங்களில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு துரிதமாக மாறிச் செல்வதில், குறிப்பாக, தேர்ச்சி பெற்ற ஒன்றாக இருக்க வேண்டும். ஆகவே எல்லா அவசியமான போராட்ட மற்றும் அமைப்பு வடிவங்களையும், உயிரார்ந்த விதத்தில் இணைப்பதன் மூலம், ஓர் அனைத்தும் தழுவிய புரட்சிகர நடைமுறையை வளர்த்தெடுக்க கட்சி பாடுபடுகிறது.

சாதாரணமான நிலைமைகளில் இந்திய ஆட்சி அமைப்புமுறை கம்யூனிஸ்ட்டுகளை வெளிப்படையான, சட்டபூர்வமான நாடாளுமன்ற வழிமுறைகளில் செயல்பட அனுமதிக்கிறது. நாடாளுமன்ற அரங்கில், கட்சியின் அடிப்படையான அய்க்கிய முன்னணி வழிக்கு பொருத்தமான, உரிய தேர்தல் செயல் தந்திரங்களை வளர்த்துக் கொண்டே, நீண்ட காலத்துக்கு ஒரு புரட்சிகர எதிர்க்கட்சிப் பாத்திரமாற்ற கட்சி தயாராக இருக்க வேண்டும். தேர்தல் போராட்டத்தின் போக்கில் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளாட்சி அமைப்புகளில் மாநில சட்டமன்றங்களில் கூட பெரும்பான்மை பெற சாத்தியமுண்டு. நீண்டகால மற்றும் தீவிரமான அரசியல் போராட்டங்கள் மூலமாக, வர்க்க சக்திகளின் சமநிலையில் ஒரு சாய்வு ஏற்படுத்தும் அதே நேரம், வாக்காளர்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை உறுதிபடுத்தும் அளவுக்கு கட்சி, வலிமையானதாக இருக்கும் பட்சம், இது போன்ற சந்தர்ப்பங்களை சுதந்திரமாகவோ அல்லது ஒத்த கருத்து கொண்ட சக்திகளுடன் கூட்டு சேர்ந்தோ, பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறது.

எப்படியிருப்பினும், அதுபோன்ற உள்ளாட்சி அமைப்புக்களோடும்/ அரசாங்கங்களோடும், கட்சி கொண்டிருக்கும் உறவும் பாத்திரமும் பின்வரும் அடிப்படை கோட்பாடுகளால் வழிநடத்தப்படும்.

அ. கட்சி எப்போதும் என்ன நேரும் போதும், சுதந்திரமான அமைப்பு செயல்பாட்டையும் அரசியல் முன்முயற்சியையும் தக்கவைத்துக் கொண்டே ஆக வேண்டும்.

ஆ. உள்ளாட்சி அமைப்புக்கள்/அரசாங்கங்கள் கொண்டுள்ள அதிகாரம், தீவிரமான ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், மக்கள் உணர்வை, ஒரு புதிய ஜனநாயக மாற்றை உருவாக்குவதை நோக்கி, திசைவழிப்படுத்துவதற்கும், முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

இ. மய்ய அதிகாரம் வரையிலான அடுத்தடுத்த உயர்நிலை கட்ட அதிகாரங்கள் பொறுத்தவரை, அது போன்ற உள்ளாட்சி அமைப்புக்கள்/அரசாங்கங்கள், பரந்ததொரு புரட்சிகர எதிரணியில், பிரிக்க முடியாத அங்கமாக செயல்பட வேண்டும்.

ஈ. கட்சியும் அதனால் தலைமை தாங்கப்படும் உள்ளாட்சி அமைப்புக்களும் அரசாங்கங்களும் ஜனநாயக சக்திகளின், ஜனநாயக உணர்வின், ஜனநாயக இயக்கங்களின் சுதந்திரமான வளர்ச்சி, எந்த சூழ்நிலையிலும் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்தியாவின் காலனிய எதிர்ப்புப் போராட்டம், கம்யூனிச இயக்கம் மற்றும் வளர்ந்து வரும் பெரும் தொழில் குழும எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றின் வரலாற்றில், வேர்க்கால் மட்டங்களில் பல்வேறு வகை மக்கள் கமிட்டிகள், தொழிற்சாலைகள் மற்றும்/அல்லது தொழிலாளர் குடியிருப்புக்களில், தொழிலாளர்கள், குடிமக்கள் கவுன்சில்கள் முதல் மக்கள் தன்னாட்சியின் வேறுவேறு வடிவங்கள் வரை வேறு வேறு வடிவங்களில் அளவுகளில், மக்கள் அதிகாரம், அவை குறுகிய காலமே இருந்தவை எனினும், எழுந்த நிகழ்வுகள் பல உண்டு. மக்கள் நலன்களையும், உரிமைகளையும் காப்பதற்கான வெகுமக்கள் போராட்டங்களின் போக்கில், அதுபோன்ற உள்ளூர் அதிகாரங்கள் எழுகிற சாத்தியப்பாட்டை அடையவும் ஊக்கப்படுத்தவும் கட்சி விழைகிறது.

விதிவிலக்கான தேசிய மற்றும் சர்வதேசிய சூழல்களில் - உதாரணமாய் ஒரு தீர்மான கரமான வெகுமக்கள் எழுச்சி நிலைமைகளில் - சமூக, அரசியல் சக்திகளின் சமனிலை, ஒப்பீட்டுரீதியில், அமைதியான வழியில், புரட்சிகர சக்திகளிடம், மய்ய அதிகாரம் மாற்றப்படுவதைக் கூட அனுமதிக்கும் சாத்தியப்பாட்டை கட்சி ஒதுக்கிவிடவில்லை. ஆனால், ஜனநாயக நிறுவனங்கள் சாராம்சத்தில் நொறுங்கிவிடக் கூடிய மற்றும் குறுகிய அடித்தளங்களைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், வெகுசன சக்திகளின் சிறிய வெற்றிகளை, ஓரளவான சீர்திருத்தங்களை அடைவதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் கூட, மக்களுடைய போர்க்குணத்தின் பலம் தேவைப்படுகிற ஒரு நாட்டில், பாட்டாளி வர்க்கக் கட்சி, அனைத்து சாத்தியமான எதிர்ப்புரட்சி தாக்குதல்கள் முன்னிலையிலும், இறுதியில் தீர்மானகரமான வெற்றியை அடைவது மற்றும் தக்கவைப்பது என்பதன் மூலம் புரட்சியை நிறைவேற்ற தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே, கட்சியின் ஆயுதக் கிடங்கில், ஒரு மக்கள் ஜனநாயக முன்னணியும், ஒரு மக்கள் ராணுவமும் புரட்சியின் இரண்டு மிகவும் அடிப்படையான அங்கங்களாக இருக்கும்.

மக்கள் ஜனநாயக அரசு

பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கூட்டின் ஆட்சியை தூக்கியெறியும் வெற்றிகரமான புரட்சி, தொழிலாளர்கள், விவசாயிகள், இதர புரட்சிகர வர்க்கங்கள் மற்றும் ஜனநாயகப் பிரிவினரின் ஓர் ஆட்சியை, அதாவது, மக்கள் ஜனநாயக அரசைக் கொண்டு வரும். அந்த அரசு பின்வரும் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும். சோசலிச உள்ளாற்றலை முன்னேற்றும் புதிய ஜனநாயக திசைவழியை உயர்த்திப் பிடிக்கும்.

1. அரசின் கட்டமைப்பை, நடவடிக்கைகளை முற்றூடாக ஜனநாயகப்படுத்துவது

அ. அனைத்தும்தழுவிய, சமமான, நேரடியான, வாக்குரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளின் ஒவ்வொரு மட்டத்திற்கும், அரசியல் அதிகார உரிமை அளிக்கப்படும். நிர்வாக வலைப்பின்னல், வெகுமக்கள் மேற்பார்வைக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்படும்.

ஆ. பொறுப்பை நிறைவேற்றுவதை உறுதி செய்ய, அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் குடிமை சேவை அதிகாரிகளையும் திரும்ப அழைக்கும் உரிமையை மக்கள் பெற்றிருப்பார்கள்.

இ. மக்களின், பல்வேறு ஜனநாயக கட்சிகளின், அமைப்புகளின், முழுமையான, தனிப்பட்ட மற்றும் கூட்டு ஜனநாயக உரிமைகள், உறுதிப்படுத்தப்படும்.

ஈ. அரசு பயங்கரவாதம், காவல்துறை காட்டுமிராண்டித்தனம், மக்களது குடிமை விசயங்களில் ராணுவத்தின் தலையீடு என்ற வழிமரபு ஒழித்துக் கட்óடப்படும். காவல்துறை யும், ஆயுதப் படைகளும் மறுகட்டமைப்பு செய்யப்படும். மனித உரிமைகளை மதிப்பது மக்களுக்கும் தேசத்திற்கும் சேவை செய்வது என்ற ஒரு புதிய உணர்வு ஊட்டப்படும்.

உ. அரசியல், பொருளாதார, வாழ்வின் அனைத்து தளங்களிலும் உள்ள குற்றமயமும், ஊழலும் ஒழித்துக்கட்டப்படும். துரிதமான, முற்போக்கான, நீதி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

2. கூட்டாட்சி, ஜனநாயகம், மதச்சார்பற்ற ஆட்சி அமைப்பு முறை அடிப்படையில் தேசஒற்றுமை மறுகட்டமைப்பு செய்யப்படுவது

அ. எல்லா சிறுபான்மைக் குழுக்களிடத்தும், பாத்யதை, சமத்துவம் மற்றும் பாதுகாப்பு உணர்வினை உருவாக்கும் அதே நேரம், தேசிய இனங்களின், பிரிந்து போகும் உரிமை வரையிலான, வெவ்வேறு அளவுகளிலான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும்.

ஆ. தேச நிர்மாணத்தில், வெகுமக்களின் பரந்த பங்கெடுப்பை உறுதிபடுத்துகிற வகையில், பின்தங்கிய பகுதிகளுக்கு உரிய அழுத்தத்துடன், செயல்மிக்க விதத்தில், முடிவெடுக்கும் முறை ஜனநாயகப்படுத்தப்படும். மூல வளங்கள், கீழ் வரை பிரித்தளிக்கப்படும். வளர்ச்சி நடவடிக்கைகள் பரவலாக்கப்படும்.

3. துரிதமான, சுயசார்புடைய, நீடிக்கத்தக்க, சமச்சீரான, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது. வெகுமக்கள் வறுமை ஒழிப்பு.

அ. முழுமையான நிலச்சீர்திருத்தம் மற்றும் விவசாயத்திற்கு அனைத்தும் தழுவிய அரசு உதவி மூலம், வலுவான, ஆரோக்கியமான, விவசாய வளர்ச்சி ஏற்படுத்தப்படும்.

ஆ. விவசாய நிலம் காக்கப்படும். அனைத்து கனிம வளங்கள், எண்ணெய், எரிவாயு தேசியமயமாக்கப்படும்.

இ. தேசத்தின் இயற்கை மற்றும் மனித வளங்களை பொருத்தமாக பயன்படுத்தி அனைத்தும் தழுவிய தொழில்மயமாக்கம் உருவாக்கப்படும்.

ஈ. நாட்டின் வளரும் எரிசக்தித் தேவைகள் சுயசார்பு வழிமுறைகளில் அடையப்படும். அந்நிய சக்திகள் மீதான சார்பு குறைக்கப்படும். அணு ஆற்றல் போன்ற ஆபத்தான தேர்வுகள் தவிர்க்கப்படும். எரிசக்தி உருவாக்கத்தில் மாற்று மற்றும் புதுப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் முன்னேற்றப்படும்.

உ.தேசப் பொருளாதாரத்தின் கடிவாளங்கள் ஏகபோக - பன்னாட்டு – குற்றக்கும்பல் -நிலப்பிரபு - குலக் அச்சின் கைகளிலிருந்து அரசு மற்றும் மக்களின் வெவ்வேறு அமைப்புக்களுக்கு மாற்றப்படும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் கருப்புப் பணமும் சட்டவிரோதமான செல்வமும் கைப்பற்றப்படும்.

ஊ. பொது மக்களின் வாங்கும் சக்தியை வளர்ப்பது, விவசாய விளைபொருள்களில் பிரம்மாண்டமான அரசுக் கொள்முதலை உறுதி செய்வது, அனைவருக்கும் அடிப்படை பொருட்கள், சேவைகள் வழங்குவது ஆகியவற்றின் மூலம் சக்திவாய்ந்த உள்நாட்டு சந்தை உருவாக்கப்படும்.

எ. கொள்கை உருவாக்கம், உற்பத்தி ஆகியவற்றில், உழைக்கும் மக்களுக்கு திறன்மிக்க பாத்திரம் வழங்கப்படும். உயர்திறன் கொண்டவர்களுக்கு போதுமான அளவுக்கு உள்நாட்டு வாய்ப்புக்கள் உருவாக்குவதன் மூலம், உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதன் மூலம் இந்திய அறிவு வெளியேறுவது தடுக்கப்படும்.

ஏ. தன்னிறைவு, பொதுமக்கள் நலன், ஓர் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தோடு, உழைக்கும் மக்கள் கவுரவமான வாழ்க்கை பெறுவது ஆகியவற்றின் தேவைகளுக்குப் பொருந்துகிற வகையில் தற்போதைய முன்னுரிமைகள், மறு ஓழுங்கு செய்யப்படும். நடப்பிலுள்ள கொள்கைகள், மறுதிசைவழிப்படுத்தப்படும்.

4. அனைத்தும் தழுவிய அடிப்படை வசதிகளை, மக்கள் நலன்களை உறுதிப்படுத்துவது.

அ. அடிப்படை வசதிகளில் தனியார்மயம் மற்றும் வர்த்தகமயம் ஆகியவற்றுக்கு முடிவு கட்டப்படும். அனைவருக்கும் உணவு உரிமை, எல்லா மட்டங்களிலும் கல்வி உரிமை, வேலை உரிமை, கட்டணமில்லாத தரமான மருத்துவப் பாதுகாப்பு உரிமை, குடிநீர், வீட்டுவசதி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, விளையாட்டு, பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளுக்கான உரிமை; எல்லாக் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு; முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் துயருற்றோருக்கான பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படும்; உரிமைகள் பறிகொடுத்த, நலிந்த பிரிவினருக்கு திறன் வாய்ந்த சமூக நீதியை உறுதி செய்ய, போதுமான பயிற்சியும் வாய்ப்புக்களும் வழங்கப்படும்.

ஆ. சூழல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சமநிலை பாதுகாக்கப்படும். கொள்ளை நோய்கள், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இயற்கைப் பேரிடர்கள் மற்றும், தட்பவெப்பநிலை மாற்றத்தின் பேரழிவுமிக்க தாக்கம் ஆகியவற்றை தடுக்க, குறைக்க, நிர்வகிக்க, திறன் வாய்ந்த திட்டங்களும் வழிமுறைகளும் கொண்டு வரப்படும்.

இ. மக்களை வெளியேற்றுவதன் மூலம் வளர்ச்சிஎன்ற வறட்டுக் கருத்து கைவிடப்படும். பெருநிறுவனங்களால் வழிநடத்தப்பட்ட வளர்ச்சிபோர்த்தந்திரத்தால் அகதிகளாக்கப்பட்டவர்கள் திறன்வாய்ந்த விதத்தில் மறு வாழ்வு, மறுகுடியிருப்பு பெறுதல் உறுதி செய்யப்படும்.

5. மொத்த சமூகத்திலும், ஒரு நவீன ஜனநாயக கலாச்சார மாற்றம் கொண்டு வருவது.

அ. சீரழிந்த நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய கலாச்சாரத்திற்கு பதிலாக ஒரு ஜனநாயக முற்போக்கு சமூகக் கலாச்சார சூழல் மேம்படுத்தப்படும். அனைத்து நவீன கலாச்சார வடிவங்களையும் பிரிவுகளையும் கலைகளையும் முன்னேற்றும் அதே நேரம், நம் மக்களின் செழுமையான கலாச்சார பாரம்பரியம் ஊக்கப்படுத்தப்படும்.

ஆ. இந்திய இளைஞர்களின் பிரம்மாண்டமான, வெளியில் கொண்டு வரப்படாத உள்ளாற்றலை முன்னேற்ற, சர்வதேச விளையாட்டு மற்றும் ஆட்டங்கள் அரங்கில் இந்தியாவின் செயல்பாட்டை மேம்படுத்த, போதுமான விளையாட்டு உள்கட்டுமான மற்றும் பயிற்சி வசதிகள் உருவாக்கப்படும்.

இ. பெண்கள் மீதான எல்லாவித சமூக, பொருளாதார, பாலியல் சுரண்டல் ஒழித்துக் கட்டப்படும். வாழ்க்கையின் எல்லா அரங்குகளிலும், பெண்களின் சம அந்தஸ்தும் உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்படும். சாதிய பாகுபாடு, சாதிய ஒடுக்குமுறை ஒழிக்கப்படும். பல்வேறு சிறுபான்மை சமூகங்களின், ஆதிவாசிகளின், உரிமைகள் பாதுகாக்கப்படும். சமூகத்தின் எல்லா நலிந்த பிரிவினரும், சமூக முன்னேற்றத்துடன் இணைந்துக் கொள்ளும் வகையில் உதவிடும். அவர்கள், சம அந்தஸ்து பெறுவது உறுதி செய்யப்படும்.

6. ஒரு முற்போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு அயல்விவகார கொள்கையை முன்னிறுத்துவது.

அ. ஏகாதிபத்தியங்களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து சமனற்ற ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் ரத்து செய்யப்படும். அதேபோல், அண்டை நாடுகள் மீது, இந்திய ஆளும் வர்க்கங்கள் திணித்துள்ள, சமனற்ற ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும்.

ஆ. சோசலிச நாடுகளுடனும், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் முற்போக்கு ஆட்சிகளோடும் உறுதிமிக்க ஒற்றுமை வளர்த்தெடுக்கப்படும். பொதுவாக வளரும் நாடுகளுடன் நட்புறவு பேணப்படும். விடுதலைக்காகவும் ஏகாதிபத்திய உலகமயம், ஆதிக்கம் மற்றும் போருக்கெதிராகவும், அது ஏகாதிபத்திய போராக, அல்லது ஏகாதிபத்தியம் தூண்டிவிடும் நிழல் போராக இருந்தாலும், போராடும் மக்களோடு, ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்கவும், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தெற்காசிய ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்கவும், சிறப்பு அழுத்தம் வைக்கப்படும்.

இ. அனைத்து நாடுகளுடனும் சமாதான சகவாழ்வுக்கான, அய்ந்து கோட்பாடுகள் அடிப்படையில் ராஜதந்திர உறவுகள் நிறுவப்படும்.

மக்கள் ஜனநாயக புரட்சிக்கான இந்தத் திட்டத்துடன் இந்தியாவில், கம்யூனிசத்தைக் கொண்டுவரும் மாபெரும் புரட்சிகர நோக்கத்திற்காக பாடுபட, கட்சி, தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறது. 21ம் நூற்றாண்டின் இந்திய மக்கள், அனைத்தும் தழுவிய, முழுமையான ஜனநாயகத்தை, உண்மையான சமூக, பால், சுற்றுச் சூழல், பொருளாதார நீதியை வென்றாக வேண்டும்.

Search