COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 30, 2013

8

கட்டுரை

உயர்கல்வியில் லாப நோக்கம் கொண்ட நிறுவனங்கள்

அடிப்படையை மாற்றப் பார்க்கும் ஆட்சியாளர்கள்

ஜி.ரமேஷ்

சமீபத்தில் டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட 12ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் உயர் கல்வியின் தரத்தை உயர்த்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்கு வழி செய்யாமல், உயர்கல்வியை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட திட்டமிட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை இப்போதுள்ள 1 கோடியே 27 லட்சம் என்பதில் இருந்து திட்டத்தின் முடிவில் 1 கோடியே 85 லட்சமாக உயர வேண்டும் என்கிறது. பற்றாக்குறை இருக்கிற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் லாப நோக்கம் கொண்ட நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறது. இந்த நிறுவனங்களுக்கு உள்கட்டுமான வசதி அந்தஸ்து தரப்பட்டு, அதற்கேற்ற நிதியுதவி மற்றும் வரிவிலக்குகள் அளிக்கலாம், இந்த நிறுவனங்கள் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறது. தொகுத்துச் சொன்னால், கல்வி தனியார்மயத்தை முழுமைப்படுத்துவது. ஆட்சி முறையையே மாற்ற வேண்டும் என்று பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி இதைத்தான் சொன்னாரோ?

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வீ.ராமசுப்பிரமணியன், ‘தரமமான கல்வி குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தகுதித் தேர்வை அரசு நடத்துகிறது. 7,14,526 பேர் எழுதிய முதல் தகுதித் தேர்வில் 2,448 பேர்தான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்டத் தேர்வில் 6,43,095 பேர் எழுதினார்கள். அதிலும் 19,261 பேர்தான் தேர்சி பெற்றார்கள். அதிலும் பெரும்பாலானோர் கல்வியியலில் இளம்கலை (பிஎட்) முடித்தவர்கள் என்றால், நம் கல்வியின் தரம் எவ்வாறு உள்ளது? ஓரே இரவில் உருவாகிவிடும் கல்வி நிறுவனங்களால்தான் கல்வித் தரம் சீரழிந்துள்ளதுஎன்று கூறியுள்ளார்.

அதே நீதிபதி, உயிரியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆங்கில ஆசிரியராக வேலைக்குச் சேர்க்கப்பட வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில், ‘வேலை வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ள நம் நாட்டில் மக்கள் வேலைக்காக எல்லாவித படிப்பையும் படித்து தகுதிச் சான்றிதழ்கள் வாங்கி வைத்துள்ளார்கள். இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பில் (பிஎஸ்சி) இயற்பியல் பாடத்தில் அல்லது வேதியியல் பாடத்தில் சேர்ந்த மாணவர்கள் ஆங்கில இலக்கியம் படித்தால் வேலை கிடைக்கும் என்பதற்காக இரண்டாம் ஆண்டிலோ அல்லது மூன்றாம் ஆண்டிலோ இளங்கலை ஆங்கிலப் பாடத்திற்கு (பிஏ.இங்கிலிஷ் லிட்) மாறி விடுகிறார்கள். சிலர் முதுகலையில் இதுபோல் முதலில் படித்ததற்கு சம்பந்தமே இல்லாத பாடத்தைப் படிக்கிறார்கள். திறந்தவெளிப் பல்கலை கழகத்தின் மூலம் நேரடியாக முதுகலைப் பட்டம் பெறுகிறார்கள். தொலைதூரக் கல்வித் திட்டத்தின் வாயிலாக பொறியாளர்கள் ஆகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பல்கலைக் கழகங்கள் வணிக நோக்கத்துடன் ஒரு வரைமுறையே இல்லாமல் இஷ்டம்போல் பாடப் பிரிவுகளை உருவாக்கியுள்ளதுதான்என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இரண்டு வழக்குகளிலும் அரசின் கொள்கையும், கல்வித் துறையின் செயல்பாடு களும்தான் இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுவிட்டு வழக்குகளைத் தள்ளுபடி செய்தது துரதிஷ்டவசமானது.

இன்றைக்கு மத்திய மாநில அரசுகள் கல்வியை வியாபாரமாக்கி, புற்றீசல்கள் போல் தனியார் நிறுவனங்களை, கார்ப்பரேட் நிறுவனங்களை பல்கலைக் கழகங்கள் முதல் பாப்பா பள்ளிக் கூடங்கள் வரை திறக்க அனுமதி அளித்து அவர்கள் கொள்ளை லாபம் பார்க்க வழி செய்துவிடுகிறார்கள். பின்னர், எதைப் படித்தால் என்ன வேலைக்குப் போகலாம் என்று அவர்கள் செய்யும் பகட்டான விளம்பரங்களைப் பார்த்து, வேலைக்கான கனவோடு பல ஆயிரங்கள் செலவழித்து படித்து விட்டு பல கோடிபேர் வெளிவரும்போது போதிய அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக தகுதித் தேர்வு என்ற பெயரில் தட்டிக் கழிக்கிறார்கள். அதுமட்டுமல்ல இந்தத் தகுதித் தேர்வுகளின் மூலம் இட ஓதுக்கீட்டையே ஒழித்துவிடப் போகிறார்கள்.

சமீபத்தில், கர்நாடகா மாநிலச் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் எவ்வித விவாதமும் இன்றி சத்தமே இல்லாமல் கர்நாடகா தனியார் பல்கலைக்கழக மசோதாவை, நாற்காலிக்காக சண்டை போடுபவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றியுள்ளார்கள். கர்நாடகத்தில் 13 புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் வர உள்ளன. அந்த மசோதாவில் இந்தப் பல்கலைக் கழகங்களை முறைப்படுத்துவதற்கான எவ்வித வரையறையும் கிடையாது. உயர்கல்வி கற்க விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், அதற்கு ஏற்றாற்போல் பல்கலைக் கழகங்களில் எண்ணிக்கை இல்லை என்பதனால் அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களை பல்கலைக் கழகங்களைத் தொடங்க அனுமதிக்கின்றன.

இன்றைய பல்கலைக் கழகங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்போதே பல மாநிலங்களில் புரட்சிகர வரலாறுகளை மறைத்து, திருத்தி எழுதி அதைப் பாடத் திட்டங்களாக வைக்கும் அவல நிலையைப் பார்க்கிறோம். இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் இன்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே இடஒதுக்கீட்டில் இடம் பெற்றதால் பேராசிரியர்களால், சக மாணவர்களால் இழிவுபடுத்தப்பட்ட தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். உயர்கல்வியைப் பொறுத்தவரை 12ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் இந்திய மக்களிடம், மாணவர்களிடம் இருப்பதையும் பறித்து விடும்.

உயர்கல்வி தனியார் கட்டுப்பாட்டில் விடப்பட்டால் கல்விக்கான செலவு அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. தரமான கல்வியும் கேள்விக்குறியாகும். தனியார் பல்கலைக் கழகங்கள் மாணவர்கள் சேர்ப்பில் அரசு தலையிடுவதை நிச்சமாக அனுமதிக்காது. அரசாங்கப் பங்கு (Government Quota) அர்த்தமில்லாமல் போகும். மாணவர்கள் சேர்ப்பில் மட்டுமல்ல, பாடத்திட்டங்களிலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் செயல்படுவார்கள். இன்றைய உலகமய, நவதாராளவாத சூழ்நிலைக்கு ஏற்ப கார்ப்பரேட் கொள்ளைக்குத் தகுந்த மாதிரியான பாடத் திட்டங்களே அமல்படுத்தபடும். அந்தப் பல்கலைக் கழகங்களின் கீழ் அடிப்படைக் கட்டுமானங்களும் இல்லாத பல தனியார் கல்லூரிகள் பெருகும். மாணவர்கள் தாங்கள் விருப்பப்படும் பாடத்தினை எடுத்து படிக்க முடியாது. வட்டார வாதங்களும் கல்லூரி நிர்வாகங்களின் சொந்தக் கலாச்சார முறைகளும் மாணவர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தும். இதன் மூலம் பல்வகைப்பட்ட அறிவுத் திறன் மாணவர்களுக்கு கிடைப்பதற்குப் பதிலாக அவர்களின் அறிவு வளர்ச்சி அடக்கப்படும். இதன் விளைவாக வருங்காலங்களில் பல்கலைக் கழக வளாகங்கள் பாசிஸ்டுகளின் கூடாரங்களாகும். கலாச்சார காவல் தலைவிரித்தாடும். கல்வியின் முக்கிய அம்சமே எதையும் விமர்சனபூர்வமாகவும் பகுத்தறிவோடும் பார்க்க கற்றுக் கொடுத்தலே. அந்த அறிவு மூலதனம் காணாமல் போகும்.

டில்லி வீதிகளிலும் நாட்டின் பல இடங்களிலும் ஊழலுக்கு எதிராக, பாலியல் வன்முறைக்கு எதிராகத் திரண்ட இளைஞர் கூட்டத்தைக் கண்டு மிரண்டுபோன ஆட்சியாளர்கள் அடிப்படையையே மாற்றப் பார்க்கிறார்கள்.

Search