COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, January 13, 2013

2

தலையங்கம்

உழைக்கும் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க

சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் வேண்டும்!

ஜெயலலிதா வருங்கால பிரதமர் கனவில் மிதக்க ஆரம்பித்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுக்கிறது. கர்நாடகத்தின் ஆளும் கட்சியான பாஜகவும் மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரசும் சேர்ந்துகொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். அதனால் மத்திய அரசில் தீர்மானிக்கும் அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே தமிழகத்தின் உரிமைகளைப் பெற முடியும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறாமல் காப்பாற்ற முடியும். அதற்காக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நமது புரட்சித் தலைவர் கட்சிக்கு வைத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருக்கு ஏற்ப தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்று மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். வாழ்க்கையில் வாய்ப்பு ஒரு முறைதான் வாய்க்கும். அதை விட்டு விடாமல் கைப்பற்ற வேண்டும்என்கிறார்.

நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்து எனது அரசு எண்ணிலடங்கா பல சாதனைகள் செய்துள்ளது. அந்தச் சாதனைகளை யெல்லாம் சொல்வதற்கு ஒரு நாள் போதாது. இருப்பினும் மின்சாரத் தட்டுப்பாடு ஒரு சிறு குறையாக உள்ளது. இதற்கு யார் காரணம்? 2006ல் நான் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியே போகும் போது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. திரும்ப 2011ல் வந்து பார்க்கும் போது தமிழகத்தை மின்குறை மாநிலமாக ஆக்கிவிட்டார் கருணாநிதி. தற்போதைய மின்வெட்டுக்குக் காரணம் கருணாநிதிதான் என்பதை நீங்கள் மக்களிடம் சென்று புரியும் படி எளிமையாகச் சொல்ல வேண்டும் என்கிறார். கரண்ட் பிரச்சனைக்கு கருணாநிதி காரணம், காவிரிப் பிரச்சினைக்கு கருணாநிதி அங்கம் வகிக்கும் மத்திய அரசு காரணம் என்றால் சா(க்)க அடிக்கிற மின்சாரக் கட்டண உயர்வுக்கு யார் காரணம்?

2012 டிசம்பரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஜெயலலிதா, மாநிலத்தின் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். நம் மாநிலம் அமைதியாக இருக்கிறது. உறுதித் தன்மையும் இங்கு உள்ளது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை ஆக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ அவற்றை நிச்சமாக எடுப்போம் என்று கூறி மன்மோகன், சிதம்பரம், அலுவாலியா வகையறாதான் தானும் என்பதைக் காட்டிவிட்டார்.

இந்த மாநாட்டின் முடிவில் 343 புதிய அறிவிப்புக்களை வெளியிட்டுப் பேசினார். அப்போது, ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மக்கள் மதிப்பு மிக்க வாழ்க்கை நடத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும் என்று அறிவுரையெல்லாம் கூறிவிட்டு, குற்றங்களைச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர் கள் மட்டுமல்ல, பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதேனும் ஒரு குற்றச் செயலை முதல் முறையாகச் செய்தாலே அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று அறிவித்தார். கூடங்குளம், இடிந்தகரையில் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகளைப் பிடித்து சிறையில் அடைத்து அவர்கள் மீது சட்டத்திற்குப் புறம்பாக குண்டர் சட்டத்தை போட்டுக் கொண்டிருப்பதை சரி செய்ய சட்டத்தை மாற்றப் பார்க்கிறார். அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எவரை வேண்டுமானாலும் பொது அமைதியைக் குலைத்ததாக ஏதேனும் ஒரு பொய் வழக்கில் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்து ஓர் ஆண்டிற்கு ஜாமீனில் வர முடியாமல் செய்துவிடலாம். இனி இம் என்றால் தடுப்புக் காவல் சட்டமும் ஏன் என்றால் குண்டர் சட்டமும் பாயும்.

தமிழகத்தில் எல்லாத் தரப்பு மக்களும் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் மடிக்கணிணி கேட்டும், விவசாயிகள் தண்ணீர் இன்றியும், விளைபொருளுக்கு விலையின்றியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்கொலை, பட்டினி சாவுகள் தமிழகத்திலும் அதிகரிக்கின்றன. சாலைப் பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவர்கள் போராட்டத்தை ஒடுக்க, பயமுறுத்த குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துகிறார். 30 நாட்களுக்கு முன்பாக முன்னறிவிப்பு செய்யாமல் நடத்தப்படும் சாலை மறியல்கள் தடை செய்யப்படுமாம். தலைவர்கள் சிலைகளுக்கு இரும்புக் கம்பி கூண்டு அமைத்து பூட்டு போட்டு சாவியை மாவட்ட ஆட்சியரோ மாவட்டக் காவல் கண்காணிப்பாளரோ வைத்துக் கொள்ள வேண்டுமாம். எவ்வளவு முக்கியமான பொறுப்பான வேலை.

343 அறிவிப்புகளில் 250க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் அரசின் ஒடுக்குமுறைக் கருவியான காவல்துறை மற்றும் சிறைத்துறைகளுக்குத்தான். எஜமானர்களாகிய மக்களின் வாழ்க்கைத் தரம், வருமானம் உயர்வதற்கான ஒன்றைக் கூட ஜெயலலிதா அறிவிக்கவில்லை. போலீஸ் அதிகாரிகளுக்கு இனோவா கார் வழங்குவது, அவர்களின் அதிகாரத்தைப் பரவலாக்குவது, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தனிச் சிறை, செங்கல்பட்டு சப்ஜெயிலை மாவட்ட சிறையாக மாற்றுவது (இங்குதான் ஈழத்தமிழர்களுக்கான சிறப்பு முகாம் உள்ளது) 10 துப்பறியும் நாய்கள், சென்னை மாநகர போலீசுக்கு 16 குதிரைகள் என நீண்டு கொண்டே போகிறது. பெயருக்கு சில அறிவிப்புகள். இலவச ஆடு, மாடுகள் பெற்றவர்களுக்கு அவற்றைப் பராமரிப்பது பற்றி மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுமாம். மாட்டையும் ஆட்டையும் வாங்கியவர்கள் அன்றாடத் தீவனத்திற்கே அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள். பட்டினியை எப்படி சமாளிப்பது என்பதற்கான பயிற்சியாக இருக்கலாம்.

டெங்கு காய்ச்சல் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்த டிசம்பர் மாதம் வரை நியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளர்களின் பணிக்காலத்தை அம்மா கனிவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்திருக்கிறாராம். அவர்களை நிரந்தரமாக பணிய மர்த்திவிட்டால் அத்தக் கூலிக்கு ஆள் கிடைக்காமல் போய்விடும் என்கிற நல்ல எண்ணம்தான் அம்மாவுக்கு. சிவகாசியைத் தொடர்ந்து சேலத்திலும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து. விபத்துக்குக் காரணம் விதி மீறல்கள். பட்டாசு ஆலைக் கூரைகளின் மீது தீயை அணைக்க தெளிப்பான்கள் அமைப்பதும், விபத்து ஏற்பட்டவுடன் உடல் வெந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்படுவதும் கட்டாயமாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். அப்படியானால், விபத்துக்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் கிடையாது. எந்த விதிகளையும் அமல்படுத்தாமல் உழைப்பவர்களின் உயிரோடு விளையாடி கோடிகளில் புரளும் வெடி வியாபாரிகள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது.

பாலியல் குற்றம் புரிவோர் மீதும் குண்டர் சட்டம் பாயும் என அவசரகதியில் 13 அறிவிப்புகளை வெளிவிட்டார் ஜெயலலிதா. அந்த அறிவிப்புகளில் ஒன்று அனைத்து பொது இடங்களிலும் வணிக வளாகங்களிலும் நிறுவனங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும். காவல் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுமா? அங்குதான் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. கூடங்குளத்தில் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடும் பெண்களிடம் பொறுக்கித்தனமாக நடந்து கொள்ளும் காவலர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை ஜெயலலிதா எடுத்ததில்லை. டெல்லியில் நடந்த பாலியல் கொடூரத்துக்குப் பின்னால் அதே வாரத்தில் தமிழகத்தில் அய்ந்திற்கும் மேற்பட்ட பாலியல் வன்முறை மற்றும் கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருவைகுண்டம் மாணவியின் குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாய் அறிவித்துவிட்டு அமைதியாகி விட்டார். ஜெயலலிதாவின் அறிவிப்பெல்லாம் நடைமுறைக்கு வருகிறதோ இல்லையோ ஒடுக்குமுறைச் சட்டங்கள் நடைமுறைக்கு சொல்லாமலே வந்துவிடுகின்றன.

கடல் வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளை தடுப்பதற்காக ஆபரேஷன் அம்லா 2 என்ற பெயரில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஓர் ஒத்திகையை தமிழ்நாடு போலீஸ், கடலோரப் பாதுகாப்புக் குழு, இந்திய கடற்படை எல்லாம் சேர்ந்து ஜனவரி 4, 5 தேதிகளில் நடத்தியுள்ளனர். இது ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படுகிறதாம். கடலில் காணாமல் போகும் தமிழக மீனவர்களைக் கண்டு பிடிக்க முடியாதவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும், கொல்லப்படும் தமிழக மீனவர்களைக் காப்பற்றத் திராணியற்றவர்கள், பயங்கர வாதிகள் ஊடுருவலைத் தடுப்பதாகச் சொல்லி, கடற்கரைப் பகுதிகளில் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கப் பார்க்கிறார்கள். இந்த ஒத்திகை கடற்கரையில் மட்டுமின்றி சென்னை, குமரி, தூத்துக்குடியில் ஊருக்குள்ளும் நடத்தப்பட்டிருக்கிறது. அம்லா என்றால் ஹிந்தியில் தாக்கு என்று அர்த்தமாம். பரமக்குடி, கூடங்குளம் துப்பாக்கிச் சூடு புகழ் காவல் துறை ஐ.ஜி. ராஜேஸ்தாஸ்தான் இந்த ஒத்திகையின் ஒருங்கிணைப்பாளர். விசாரணையே இல்லாமல் வட மாநிலத் தொழிலாளர்களை என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுத் தள்ளிய ஜெயலலிதாவின் போலீஸ் தமிழக மக்கள் மீது அடுத்து நடத்தப் போகும் தாக்குதலுக்கான ஒத்திகையே ஆபரேஷன் அம்லா என்பதாகத் தெரிகிறது.

அறவிப்பு அரசியல் நடத்துகிற ஜெயலலிதா, தன் தொலை நோக்குத் திட்டம் 2023யைச் சிறப்புடன் செயல்படுத்த நம்பிக்கையோடு உழைக்க வேண்டும். பணக்காரர்களை விட உழைக்கின்ற நீங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று தொழிலாளர்களைப் பார்த்துக் கூறினார். படிப்பு முக்கியமில்லை. கடின உழைப்பு இருந்தால் போதும் என்றும் வெயிலுக்கும் வியர்வைக்கும் அஞ்சாமல் உழைத்து கூழோ கஞ்சியோ குடித்து நிம்மதியாக உறங்கும் நீங்கள்தான் சுகவாசி, பணக்காரர்கள் சுகவாசி கிடையாது என்று கதைகள் சொல்கிறார். அவர் இந்தக் கதைகளை அம்பானிகளிடமோ, ஹூண்டாய், நோக்கியா முதலாளிகளிடமோ அல்லது அவரின் உற்ற நண்பர் விஜய் மல்லய்யாவிடமோ சொல்வாரா? குறைந்த பட்சம் கோடிக்கோடியாய் கொள்ளையடித்து வைத்திருக்கும் அவரின் மந்திரிப் பிரதானிகளிடமோ, அவரின் உடன்பிறவாச் சகோதரியிடமோ சொல்வாரா? ஜெயலலிதா, உழைப்பவர்களைப் பார்த்து காசு பணம் எதிர்பார்க்காதீர்கள். கூலி கேட்காதீர்கள். கூழோ கஞ்சியோ குடித்து விட்டுத் தூங்குங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் படிப்பு தேவையில்லை. உழைக்கச் சொல்லுங்கள் ஆலை முதலாளிகளுக்காக என்கிறார். ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம் 2023 பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கவும் உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர்கனை மேலும் ஓட்டாண்டிகளாக ஆக்குவதற்குமான திட்டம் என்பதை அவரின் அறிவிப்புகளும் கதைகளும் தெளிவாக்குகின்றன.

அரசு அதிகாரிகள் கோட்டைக்கும் கொடநாட்டிற்கும் பறந்து கொண்டிருக்க, அமைச்சர்கள் தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், கரகாட்டம் என தங்கள் பரிவாரங்களுடன் கொடநாடு சுற்றிவர, மகாராணியார் ஓய்வெடுத்துக் கொண்டே ஒவ்வொரு நாளும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.13692 வழங்கப்படும் என அறிவித்துள்ளது போக, மேலும் அளிக்க வேண்டிய நிவாரணம் குறித்து ஆராய மாநில நிதியமைச்சர் தலைமையில், 7 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அமைக்க அவர் உத்தரவிட்டுள்ளாராம். அந்தக் குழு வறட்சி நிலைமை, பயிரிழப்பு பற்றி ஆராய்ந்து மாநில அரசுக்கு பரிந்துரை செய்யுமாம். அதன் அடிப்படையில் உரிய நேரத்தில் நிவாரணம் வழங்கப்படுமாம். எவ்வளவு நாட்களுக்குள் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. அந்தக் குழுவில் விவசாயிகளோ விவசாயச் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ கிடையாது. அவரது அமைச்சர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் வளைத்துப் போட்டு இருப்பதால் அவர்களே போதும் என்று நினைத்துவிட்டார். இந்தக் குழு என்றைக்கு ஆய்வு செய்து, பரிந்துரை வழங்கி, நிவாரணம் விவசாயிகளுக்குப் போய்ச்சேர?

அடுத்து, ரூ20க்கான ஒரு பச்சரிசியும் ரூ.40க்கான சர்க்கரையும் அதோடு சேர்த்து 100 ரூபாயும் பொங்கல் பரிசாகக் கொடுக்கப் போகிறார். மத்திய அரசின் உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தினை தமிழகத்தில் இவர் அமல்படுத்திவிட்டார். பணம் உருப்படியாய் உரிய வர்களுக்குப் போய் சேருமா? இதனால் 1 கோடியே 84 லட்சம் அட்டைதாரர்கள் பயன் பெறுவர் என்கிறார் ஜெயலலிதா. அவர் கொடுக்கும் 100 ரூபாயில் பொங்கல் விடுவதற்கு அடுப்புக்கட்டியும் அடுப்பைப் பற்ற வைக்க ஓலைகளும் கூட வாங்க முடியாது.

இனி ஜெயலலிதா கோட்டைக்கு குடியரசு தினக் கொடியேற்றத்தான் வருவாராம். ஆட்சியில் இருப்பவர் அப்படி என்றால் எதிர்கட்சியினரோ எங்கே என்று கேட்கிற நிலையில் உள்ளனர். கருணாநிதி ஒப்புக்கு ஆர்ப்பாட்டங்கள் (மக்கள் பிரச்சினைகளுக்கு அல்ல) நடத்திவிட்டு ப.சியின் புத்தகத்தை வெளியிட்டு சிதம்பரத்தை பிரதமர் என்று உசுப்பேத்துகிறார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தோ அறிக்கைகள் விடுவதோடு சரி. இகக, இகக(மா) கட்சிகளுக்கு ஆளும் கட்சி அமோகமாக ஆட்சி நடத்துவதாக எண்ணம். அதிமுக தனித்துப் போட்டி என்றதும் தா.பாண்டிய னுக்கு தாங்க முடியாத சந்தோசம்.

இந்த நிலைமைகளில், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மட்டுமே டெல்லியிலிருந்து கன்னியாகுமரிவரை மக்கள் கோரிக்கைக்காக மக்களைத் திரட்டிப் போராடிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா அவர்களே உங்கள் எஜமானர்களான உழைக்கும் மக்கள் பிரச்சினைகள் பற்றி உண்மையிலேயே பேசுவதற்கு சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டுங்கள் எனக் கோரி மாலெ கட்சியால் வழி நடத்தப்படும் ஏஅய்சிசிடியு, அவிதொச, அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம், அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் பிப்ரவரி 2 முதல் 12 வரை குமரி மற்றும் கோவையில் இருந்து சென்னை கோட்டை வரை பிரச்சாரப் பயணம் மேற்கொள்கின்றன. மக்கள் விரோத நடவடிக்கைகளில் இறங்கியுள்ள ஜெயலலிதா அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவிருக்கின்றன.

Search