COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 30, 2013

2

தலையங்கம்

ஜெயலலிதா அரசாங்கத்தின் பொய்யுரைகளுக்கு முடிவு கட்டுவோம்!

தமிழ்நாட்டில் பதினாறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் மட்டும் 13 பேர். டெல்டா மாவட்டங்களில் இருந்து அய்ந்து லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வேலை தேடி வெளியேற உள்ளனர். டெல்டா மாவட்டங்களின் 70,000க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மேற்கு மாவட்ட பஞ்சாலைகளில் கொத்தடிமைகளாக அடைபட்டுக் கிடக்கின்றனர். பல லட்சக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் வந்து போகும் முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டில்தான் இந்த நிலை.

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி பொய்த்துப் போனதற்கு கர்நாடகா அரசும் மத்திய அரசு மட்டுமல்ல காரணம். மாநிலத்தை மாறி மாறி ஆளும் அதிமுகவும், திமுகவும் காரணம். இந்தக் கட்சிகள் 90 களில் இருந்து மத்திய அரசில் மாறி மாறி பங்கு வகித்தும் அதிகாரத்தில் இருந்தும், தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளும் மத்திய அதிகாரத்தில் இருந்தன. முப்பத்தெட்டு ஆண்டுகளாக தொடரும் காவிரி சச்சரவு தீர்ந்தபாடில்லை. இதில் 20 ஆண்டுகள் திமுக, அதிமுகவும் மத்திய அதிகாரத்தில் இருந்துள்ளன. இந்திய ஆட்சி முறையில் இரு அண்டை மாநில நீர்ச்சிக்கலை, நீர்ப்பங்கீட்டை இணக்கமான ஜனநாயக முறையில் விரைந்து தீர்த்து வைப்பதற்கு எந்த ஏற்பாடுமில்லை. இந்திய ஆட்சி முறையின் தோல்விக்கு இது மற்றுமொரு உதாரணம். மாநில உரிமை பேசும் திமுக, அதிமுக கட்சிகள் அதிகாரத்தில் இருந்தும் அத்தகைய ஓர் ஆட்சி முறை உருவாக்க ஏதும் செய்யவில்லை. குறைந்த பட்சம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைக் கூட அரசிதழில் வெளியிடச் செய்ய முடியவில்லை.

டிசம்பர் மாதத்தில் டெல்டா விவசாயிகள் தற்கொலைப் பிரச்சனையை திமுக நாடாளுமன்றத்தில் எழுப்பியது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். பொய்த் தகவல்கள் என்று கூறி கூச்சல் எழுப்பினர். வேட்டி கட்டிய பிரதமராகும் வாய்ப்புள்ள சிதம்பரம், டெல்டா பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வைத்துள்ள ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராசன் ஆகியோர் அமைச்சர்களாக உள்ள காங்கிரஸ் கட்சி இந்த விவாதத்தில் தலையிடவே இல்லை. விவாதம் ஒரு பன்றிக் கூச்சலோடு முடிந்து போனது. மத்திய அரசையும் திமுகவையும் ஓயாது வசைபாடிக் கொண்டிருக்கும் அதிமுகவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதைத் தவிர திமுகவுக்கு வேறு நோக்கமில்லை. மத்திய அரசை வற்புறுத்தி காவரியில் தண்ணீர் பெறுவதோ மிகப் பெரும்துயரத்தை எதிர்கொள்ளும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களைக் காப்பாற்ற, டெல்டா சமூகத்தை காப்பாற்ற துயர்துடைப்பு சிறப்புத் திட்டங்களை வலியுறுத்துவதற்கோ, சிறப்பு நிதிஒதுக்கீட்டை வலியுறுத்துவதற்கோ, அந்த விவாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அது நோக்கமுமில்லை.

நாற்பது தொகுதிகளையும் கைப்பற்றி பிரதமரை தீர்மானிக்கும் திட்டத்தில் இருக்கும் அதிமுகவுக்கு, தற்கொலை உண்மையை மூடி மறைக்கும் நோக்கத்தைத் தவிர வேறு எந்த நோக்கமுமில்லை. நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட மறுத்து வரும் மத்திய அரசை அம்பலப்படுத்தவோ, வெளியிடுமாறு வலியுறுத்தவோ விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களைக் காப்பாற்ற, டெல்டா சமூகத்தை காப்பாற்ற துயர் துடைப்பு சிறப்புத் திட்டங்களைக் கோரவோ நிதி ஒதுக்கீட்டை வலியுறுத்தவோ முன்வரவில்லை. மத்திய அரசு எதிர்ப்பில் அதிதீவிரமாக காட்டிக் கொள்ளும் அதிமுக நாடாளுமன்றத்தில் காங்கிரசை நோக்கி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. குறைந்த பட்சம் தனது முதல் எதிரி திமுகவைக் கூட அம்பலப்படுத்த முடியவில்லை. காவிரி சமூகத்திற்காக வாதாடுவதாக காட்டிக் கொள்ளும் அதிமுகவும் திமுகவும் சேர்ந்து காங்கிரசை காப்பாற்றி விட்டன.

திமுக, அதிமுக மற்றும் இதர கட்சிகளும் சேர்ந்து காவிரி துயரத்தை தீவிர விவாதப் பொருளாக்கத் தவறிவிட்டன. நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் வாக்குறுதியைப் பெறத் தவறிவிட்டன. காவிரிப் பகுதியை சுற்றிப் பார்க்க அனுப்பப்பட்ட மத்திய குழுவின் அறிக்கை, பரிந்துரைகளை வெளியிடச் சொல்லி வற்புறுத்தவில்லை. மத்திய அரசின் துரோகத்தையும் மன்மோகன் மவுனத்தையும் அம்பலப்படுத்தத் தவறி விட்டன.

விவாதம் எழுந்த பிறகாவது காவிரி ஆணையத்தின் தலைவர் பிரதமர் மன்மோகன் மத்திய அரசின் சார்பில் தண்ணீர் சிக்கலுக்கு உடனடி தீர்வு காணவும் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் உறுதியளித் திருக்க வேண்டும். நாடாளுமன்றக் குழு ஒன்றை காவிரி டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி விவசாய சமூகத்தின் துயரம் அறியவும் துயர் துடைப்பு பணிகளுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கவும் நிதி ஒதுக்கவும் முன் வந்திருக்க வேண்டும். வால்மார்ட் முதலாளிக்காக வரிந்து கட்டி செயல்படும் மன்மோகன் சிங் அரசாங்கம் நாட்டுக்கு சோறுபோடும் லட்சக்கணக்கான விவசாய சமூகத்தின் துயரத்தைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை. உச்சநீதிமன்றம் பல முறை கண்டித்தும் வலியுறுத்தியும் காவிரி ஆணையத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மறுத்து வரும் காங்கிரஸ் தனது துரோகத்தை கள்ள மவுனத்தின் மூலம் காட்டியது.

அரசாங்கம் பொய் சொல்லுமா? ‘வானம் பொய்த்தாலும் கர்நாடகம் வஞ்சித்தாலும் மத்திய அரசு துரோகம் செய்தாலும் டெல்டா விவசாயிகளை நான் காப்பாற்றுவேன்என ஜெயலலிதா உறுதி அளித்தார்! நான் பொய்க்க மாட்டேன் ஆனால் பொய்யுரைப்பேன்என்று காட்டியுள்ளார். அதிமுக அரசாங்கம் உயர்நீதி மன்றத்தில் பொய்யுரைத்திருக்கிறது. நாடாளுமன்ற விவாத்தின்போது அதிமுகவின் தம்பிதுரையும் சகாக்களும் கூறியதையே வருவாய்த் துறை இணைச் செயலாளர் மூலம் உயர்நீதி மன்றத்தில் அதிமுக அரசாங்கம் கூறியுள்ளது. காவிரியில் தண்ணீர் பற்றாக்குறை இருந்த போதிலும் குறுவை பயிர் செய்ய முடியாத நிலையிலும் விவசாயிகள் வெற்றிகரமாக விவசாயம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துள்ளதாகவும் நிவாரண நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் ஜெயலலிதா அரசு கூறியிருக்கிறது! விவசாய பாதிப்பால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்கள் அனைவருமே குடும்பப் பிரச்சனையாலும் முதுமையாலும் நோயாலும் இயற்கை மரணமடைந்திருக்கிறார்கள் என்று வாக்கு மூலம் அளித்திருக்கிறது. விவசாயம் பொய்த்துப் போனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதை தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள், ஒத்துக் கொண்டுள்ளன. அனைத்து பத்திரிகைகளும் (நமது எம்ஜிஆர் பத்திரிகை தவிர) பதிவு செய்துள்ளன. உலகம் முழுவதும் அறிந்த உண்மையை முழுக்க முழுக்கப் பொய் என்று ஜெயலலிதா அரசு கூறியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை நடந்தபோதெல்லாம் அங்குள்ள காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட மாநில அரசாங்கங்களும் அதிமுக அரசாங்கத்தைப் போலவே மறுத்தன. காவிரிப் பிரச்சனையில் காங்கிரஸ் பாஜகவின் துரோகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல அதிமுகவின் துரோகம்.

விவசாயிகள் வெற்றிகரமாக விவசாயத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜூன் 12ல் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் செப்டம்பர் 17ல் திறக்கப்பட்டது. ஆறு லட்சம் ஏக்கரில் குறுவை பொய்த்து விட்டது. குறுவை விவசாயத்தை மேற்கொள்வதற்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதற்கு அதிமுக ஆட்சி பொறுப்பேற்கத் தயாரில்லை. விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் வீதிக்கு வந்தனர். அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டன. மற்ற பல விவசாய அமைப்புகளும் இடதுசாரி கட்சிகளும் வீதிக்கு வந்தன. அதுவரை கொடநாட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா, விவசாயிகள் வீதிக்கு வந்த பின்னர்தான் இரண்டு மூன்று மாதங்கள் தாமதமாக உச்ச நீதிமன்றத்தை நாடினார். 6 லட்சம் ஏக்கர் குறுவை, 12 லட்சம் ஏக்கர் சம்பா விவசாயம் கேள்விக்குள்ளாகியிருந்த நிலையில் இரண்டு தவணையாக 70 கோடி ரூபாய் நிவாரணத்தை அறிவித்தார். வெறும் 53,000 ஏக்கர் நிலத்தில் நேரடி விதைப்பும், இரண்டரை லட்சம் ஏக்கரில் நடவு செய்யவும், 70 கோடி ரூபாய் மானியம் அளித்துள்ளதை சாதனையாக பேசிக்கொள்கிறார். இது எந்த வகையிலும் 18 லட்சம் ஏக்கர் விவசாயத்தைக் காப்பாற்ற போதுமானதல்ல. யானைப் பசிக்கு சோளப் பொறியான கதையாகிவிட்டது. ஜூன் - செப்டம்பர் மாதங்களில் விவசாயத்துக்கு 24 மணி நேர மின்சாரம் வழங்கியிருக்க வேண்டும். 18 லட்சம் பம்பு செட்டுகளைக் கொண்ட விவசாயம் 19% மின்சாரத்தையே பயன்படுத்துகிறபோது தொழில் துறை மட்டும் 42% மின்சாரத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் பெரும் பகுதியை உறிஞ்சுகின்றன. மாநிலத்தின் உணவுத் தேவையில் 40%க்கும் அதிகமாக உணவு உற்பத்தி செய்கிற டெல்டா விவசாயம் ஆபத்தில் இருக்கிறபோது பெருநிறுவனங்களுக்கு போய்க் கொண்டிருக்கும் தடையில்லா மின்சாரத்தை விவசாயத்துக்கு திருப்பியிருக்க வேண்டும். விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்காத ஜெயலலிதா அரசாங்கம் விவசாயத்தை காப்பாற்றுவேன், விவசாயிகளை எனது அரசு கைவிடாது என்று பிரகடனம் செய்தது. ஆனால் 16 விவசாயிகளின் உயிரை அவர் காப்பாற்றவில்லை. அந்த தோல்வியை ஒப்புக்கொள்ளும் நேர்மை அதிமுக ஆட்சிக்கு இல்லை. அதனால்தான் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் அதிமுக ஆட்சி பொய்யுரைத்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலையை ஒப்புக்கொண்டிருந்தால் ஆட்சிக்கு கெட்ட பெயர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியாக வேண்டும். வெளிநாட்டு முதலாளிகளுக்கு கோடிகோடியாக கொட்டிக் கொடுக்கும் அதிமுக ஆட்சிக்கு, காவல்துறைக்கு கோடி கோடியாக வாரி வழங்கும் அதிமுக ஆட்சிக்கு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மனம் இல்லை.

14 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களும் பல லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளும் வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாதம் முழுவதும் வேலை என அறிவித்திருக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர், ஏழை விவசாயக் குடும்பங்கள் அனைத்துக்கும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வேலை வழங்கியிருக்க வேண்டும். விவசாய வேலைக்கும் இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி நிறைவேற்றியிருக்க வேண்டும். இவற்றில் எதையும் செய்யவில்லை. நாள் கூலி 132 ரூபாய் என அறிவித்தபோதும் ஓர் இடத்தில் கூட இந்தக் கூலி வழங்கப்படவில்லை. வெட்ட முடியாத அளவை நிர்ணயம் செய்து கூலி குறைத்துத் தரப்படுகிறது. டெல்டா மாவட்டங்கள் தொடங்கி ராசிபுரம் உள்ளிட்டு தமிழ்நாடு முழுவதும் கூலி குறைக்கப்படுவதைக் கண்டித்து போராட்டங்கள் நடந்த போதும் ரூ.132 கூலி வழங்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வலைத்தளம் தரும் விவரப்படி திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தமிழ்நாடு முழுவதும் கடந்த எட்டு மாதங்களில் (ஜூன் - ஜனவரி) வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை. செலவிடப்பட்டுள்ள தொகையும் அதிகரிக்கவில்லை. காவிரியும் பருவமழையும் பொய்த்துப்போன நிலையில் ஜெயலலிதா அரசாங்கம் செய்திருக்க வேண்டிய எதையும் செய்யாததன் ஒட்டுமொத்த விளைவுகள்தான் 15 விவசாயிகள் தற்கொலை, 5 லட்சம் டெல்டா விவசாயத் தொழிலாளர்கள் வெளியேறும் நிலை, 70,000 டெல்டா இளம் பெண்கள் சுமங்கலித் திட்ட சிறையில்! டெல்டா சமூகத்தைக் காக்கத் தவறிய அதிமுக அரசாங்கம் பன்னீர்செல்வம் தலைமையில் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை அனுப்பி அம்மாவின் பெருமையையும் ஆட்சியின் சாதனைகளையும் பிரச்சாரம் செய்யச் சொல்லிவிட்டு கொடநாட்டில் போய் ஒளிந்து கொண்டார்.

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ், பாஜகவோடு சேராமல் தனித்துப் போட்டியிடப் போவதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்! ஆனால், விவசாய சமூகத்தை புறக்கணிக்கும் கொள்கைகளில் காங்கிரசோடும் பாஜகவோடும் சேர்ந்து நிற்கும் ஜெயலலிதா விவசாய சமூகத்தின் துயரத்தை அரசியலாக்கிக்கொள்ளப் பார்க்கிறார். அது நடக்காது. விவசாயிகளின் தற்கொலையையும் விவசாயத் தொழிலாளர்களின் துயரத்தையும் இல்லையென பொய்யுரைக்கும் கொடூரத்தை டெல்டா விவசாய சமூகம் மன்னிக்காது. அதிமுக அரசின் பொய்யை உயர்நீதிமன்றம் கூட நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் ஏன் மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது என்று கேட்டுள்ளது. அதிமுக அரசு என்ன சொல்லப் போகிறது, நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பது தெரியாது. ஆனால் விவசாய சமூகம் சும்மா விட்டுவிடக் கூடாது. நாடறிய பொய் சொல்லும் அதிமுக அரசாங்கத்தை தப்பிக்க விடக் கூடாது.

உழைக்கும் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க சிறப்பு சட்டமன்றம் கூட்ட வேண்டும் எனும் குரல் வலுத்து வரும் நிலையில் பிப்ரவரி 1 அன்று சட்டமன்ற கூட்டத் தொடர் கூட்டப் போவதாக அதிமுக அரசு அறிவித்திருக்கிறது. டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழகமே வறட்சியின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. (தற்கொலை திருநெல்வேலி மாவட்டத்தையும் தொட்டுவிட்டது). கூட இருக்கும் சட்டமன்றம், மேலோட்டமான அறிவிப்புகள், வாய்ச்சவடால் திட்டங்கள் என முடிந்து விடக் கூடாது. டெல்டா விவசாயத்தையும் விவசாய சமூகத்தையும் தமிழக விவசாயத்தையும் பாதுகாக்கும் உருப்படியான திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும், மேலே வரிசைப்படுத்தியுள்ள திட்டங்களை செயல்படுத்த வேண்டும். காவிரி சமூகத்தை மன்மோகன் - ஜெயலலிதா ஆட்சிகள் வஞ்சிக்குமானால், உழைக்கும் விவசாயிகள் சமூகம் மன்மோகன் - ஜெயலலிதா ஆட்சிகளை தண்டிக்கும். மக்கள் மத்தியில் பொங்கிவரும் மத்திய அரசு எதிர்ப்பை அதிமுகவும் அதிமுக ஆட்சி மீதான அதிருப்திகளை திமுகவும் அறுவடை செய்யப் பார்க்கின்றன. விவசாய சமூகத்தைத் தண்டிக்கும் மன்மோகன் - ஜெயலலிதா ஆட்சிகளுக்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உழைக்கும் மக்கள் மட்டுமே பாடம் புகட்ட முடியும்.

பிப்ரவரி 2 - 12 உழைக்கும் மக்கள் பிரச்சாரப் பயணத்தையும் பிப்ரவரி 20, 21ல் நடக்கவுள்ள அகில இந்திய அரசியல் வேலை நிறுத்தத்தையும் இதற்கான வெள்ளோட்டம் ஆக்குவோம்!

Search