சுயபால் ஈர்ப்புடைய பெண்கள், ஆண்கள், இருபால் ஈர்ப்பும் உடையவர்கள், பால் மாற்றம் செய்தோர் தலை மீது, மீண்டும் இபிகோ 377 கத்தி தொங்குகிறது.
இந்தியாவில் பழையவற்றுக்கும் புதியவற்றுக்கும் இடையிலான போர் தொடர்கிறது. உலகளாவிய அளவில், வரலாற்றுரீதியாக வழக்கொழிந்துபோன முதலாளித்துவம், நடைமுறையில் ஆட்கொல்லியாய் ஒட்டுண்ணியாய் நீடிக்கிறது.
பழையவை மரணத்தை நோக்கிச் சென்றாலும் சாகாமல் இருக்க, சாவைத் தள்ளிப்போட, உயிர்த்தெழ, புதியவற்றின் மீது மூர்க்கமாகப் போர்தொடுக்கின்றன. புதியவை, கருக்கொண்டுவிட்டாலும், கருப்பையிலிருந்து இன்னமும் வெளியே வரமுடியவில்லை. மரணத்தின் பள்ளத்தாக்குகளில் இருந்து எழுகிற ஆவேசக் கூச்சல்களை, வாழ்வின் சமவெளிகளில் இருந்து எழுகிற உயிர்த் துடிப்புள்ள மானுட இசை எதிர்கொள்கிறது. அநியாயமான பழையவை வீழ்வதும் நியாயமான புதியவை வெல்வதும், துரிதப்படுத்தப்பட வேண்டும்.
இகக மாலெ இந்திய சமூகத்தை பின்வருமாறு விவரிக்கிறது. ‘இந்தியா ஒரு மேலோங்கிய விவசாய, பின்தங்கிய முதலாளித்துவ சமூகம் ஆகும்; விடாப்பிடியான நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்கள், அப்பட்டமான காலனிய எச்சங்கள் சமூகத்தை முடக்குகின்றன; இவை, சமூகத்தில் இருந்து மறுஉறுதி செய்யப்படுகின்றன; இந்தச் சமூகம் பேராசைமிக்க உலக மூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தின் கீழ் தடுமாறுகிறது’.
ஒரு பக்கம் லாபங்கள் மறுபக்கம் மக்கள் மற்றும் பூவுலகம், இவற்றுக்கிடையில் யாருக்கு முதன்மை இடம் என்ற சண்டை, பரவுகிறது, தீவிரமடைகிறது. மண்ணிலும் விண்ணிலும் சரி பாதிக்குச் சொந்தம் கொண்டாட பாத்தியதை உடைய பெண்கள் அச்சமற்ற சுதந்திரத்துக்கான பயணத்தை துவங்கிவிட்டார்கள். பிற்போக்கு பதறுகிறது. முன்னே வருபவர்களை பின்னே தள்ள வெறியாட்டம் போடுகிறது. மேல்சாதி ஆதிக்கம், பெரும்பான்மை மதவெறி, ஆணாதிக்கம், முதலாளித்துவச் சுரண்டல் ஏகாதிபத்திய தலையீடு என எல்லாமே சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
ஆணும் பெண்ணும் பருவத்திற்கேற்ப இயற்கையாக, சாதி மதம் மொழி இனம் தாண்டி காதலிப்பதற்கு எதிராக 2013ல் கூப்பாடு போடும் கூட்டம், ஆணுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஈர்ப்பு, ஆணோ, பெண்ணோ மாற்றுபால் ஈர்ப்போடு கூடவே ஏற்படும் சுயபால் ஈர்ப்பு, பால் மாறுவோர் எல்ஜிபிடி - விசயத்தில், உலகின் முடிவு நெருங்குவதாக ஊளையிடுகின்றனர்.
டில்லி உயர்நீதிமன்றத்தின் ஏ.பி.ஷா மற்றும் முரளிதர் என்ற இரண்டு நீதிபதிகள் அமர்வம் 02.07.2009 அன்று, நாஸ் பவுண்டேசன் தொடுத்த வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377, வயது வந்தோர்க்கிடையில் சம்மதத்துடன் ஏற்படும் ஒருபால் உறவுகளை நடவடிக்கைகளை குற்றமயமாக்குவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 21 பிரிவுகளுக்குப் புறம்பானது என்று தீர்ப்பு வழங்கியது.
ஆனால், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா அமர்வம், தமது 11.12.2013 தீர்ப்பின் மூலம் காலச்சக்கரத்தை பின்னோக்கி திருப்ப முயற்சித்துள்ளது. இபிகோ பிரிவு 377 அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது அல்ல என்றும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 21 மீறலைக் காண முடியவில்லை என்றும் சட்டப் பிரிவை மாற்றும் திருத்தும் நீக்கும் வேலையை நாடாளுமன்றத்துக்கு விட்டுவிட்டு நீதிமன்றம் பவ்யமாக ஒதுங்கி நிற்க வேண்டும் என்றும் சொல்லி, டில்லி நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை அனுமதித்து, நான்கு வருடங்களாக செத்திருந்த 377க்கு உயிர் கொடுத்தது.
உச்சநீதிமன்றம் சொன்ன காரணங்கள்
1. எல்ஜிபிடி பிரிவினர், துண்டுதுக்காணி சிறுபான்மையினர்;
2. காலனிய ஆட்சியில் வந்த பல சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டம் சுதந்திர இந்தியாவில் வந்த பிறகும் ஏற்கப்பட்டுள்ளன, ஆகவே அதேபோல், 1860 இபிகோ பிரிவு 377ம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது அல்ல என்ற சாதக அனுமானமே (Presumption) செய்ய வேண்டும்;
3. நீதிமன்றம் சட்டத்தில் கைவைக்கக் கூடாது, குறிப்பாக, இபிகோவில் சமீபத்தில் கூட திருத்தங்கள் செய்யப்பட்டு, 377 பிரிவு திருத்தப்படாததால், பிரிவு 377 திருத்தம் அல்லது நீக்கத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிடலாம்.
1. துண்டுதுக்காணி சிறுபான்மையினர் என்றால் அதற்கேற்ப, அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு பல மடங்கு கூடுதலாக வேண்டுமே தவிர, பாதுகாப்பே இல்லை என்று சொல்வது அரசியலமைப்புச் சட்டத்தை குழி தோண்டி புதைப்பதாகாதா?
டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது, மத்திய அரசு தந்த விவரங்கள்படி, ஒருபால் ஈர்ப்புடைய ஆண்கள் 25 லட்சம் பேர்; ஒருபால் ஈர்ப்புடைய பெண்களும் பால் மாறியோரும் பல லட்சம் பேர். அதன்முன் உள்ள ஆவணங்கள்படி, பல லட்சம்பேர் எல்ஜிபிடி பிரிவினர் எனத் தெரியும்போது, துண்டுதுக்காணி சிறுபான்மையினர் என்ற உச்சநீதிமன்றத்தின் வாதம் பொருந்தாது.
150 ஆண்டுகளாக 200 பேர் மட்டுமே குற்ற நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என ஏதோ ஓர் அரைகுறை விவரத்தைப் பிடித்துத் தொங்கி, பல லட்சம் பேர் சிறுமைப்படுத்தப்படுதல் துன்புறுதல் ஆகியவற்றையும் நாடெங்கும் சில லட்சம் பேர் காவல்துறையாலும் சமூக விரோதிகளாலும் தாக்கப்படுவதையும் பார்க்க மறுத்தது எப்படி சரியாகும்?
நடவடிக்கைக்குத்தான் தண்டனையே தவிர ஒருபால் ஈர்ப்புடையோருக்கு ஒரு பிரிவினராக தண்டனையில்லை என்பது வெற்று வாதம். மட்டுமின்றி, காவல்துறை மற்றும் இதரரின் ஒடுக்குமுறை அதிகாரத்தை 377 வழங்கவில்லை, மன்னிக்கவில்லை என்று சொல்வது, சமூகயதார்த்தத்தை காண மறுப்பதாகும்.
2 மற்றும் 3. சட்டத்தை, உயிர்த்துடிப்புள்ள வாழ்வோடு பொருத்தி வியாக்கியானம் செய்ய வேண்டும். (சிறுவர் மீதான வன்புணர்ச்சி மனிதர் அல்லாத ஜீவராசிகளுடன் புணர்ச்சி ஆகியவை தொடர்பாக விவாதம் ஏதும் இல்லை. அந்தச் செயல்களை குற்றமயமாக்கும் பிரிவு 377 பகுதிகள், கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை). 1290, 1300 வருடங்களில் ஒருபால் புணர்ச்சிக்கு எரித்துக் கொல்லும் தண்டனைதான் இங்கிலாந்தில் இருந்தது.
1533, 1563 சட்டங்கள் அதை தூக்கு தண்டனை ஆக்கின. 1861ல் இந்த விசயத்தில் மரண தண்டனை நீக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில்தான், இங்கிலாந்தின் குற்றம் மற்றும் தண்டனை தொடர்பான சட்டங்கள் இந்தியா போன்ற காலனி நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. இங்கிலாந்தின் பாலியல் குற்றங்கள் சட்டம் 1967, 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் சம்மதத்துடன் ஒருபால் உறவில் ஈடுபடுவது குற்றமல்ல என்றது.
உலகம் முழுவதும், பால் - அடையாளம் என்பவை தனிமனிதர்களின் உரிமைகள் கவுரவம் தொடர்பானவை என்ற சிந்தனை வலுப் பெறத் துவங்கியது. 1995ல் 33 அய்ரோப்பிய நாடுகள் ஒருபால் உறவு குற்ற நடவடிக்கை அல்ல என முடிவெடுத்துவிட்டன. டாஸ்மானியா நீங்கலாக ஆஸ்திரேலியாவிலும் ஒருபால் உறவு குற்றமல்ல. ஒருபால் உறவை குற்றமாக்குவது, கவுரவம், உள்ளடக்குவது, அனைவரையும் மதிப்பது என்பவற்றுக்கு பொருந்தாது என அய்நா மனித உரிமைகள் உயர்ஆணையர், 56 நாடுகள் கூட்டறிக்கை அடிப்படையில் கூறினார். அய்க்கிய அமெரிக்காவில் ஒருபாலினர் இடையில் திருமணமே சட்டபூர்வமானது என்ற நிலை வந்துவிட்டது. கனடாவும் தென்னாப் பிரிக்காவும் நவீனத்தின் பக்கம் வந்துவிட்டன.
ஒருபால் உறவு உள்ள ஆண்கள், 377 பிரிவின் காரணமாக எய்ட்ஸ் நோய் வந்தாலும், பரவாமல் தடுப்பது, சிகிச்சை ஆகியவற்றுக்குச் செல்ல தயங்குகிறார்கள். ஒருபால் உறவை அலமாரிக்குள் மூடி மறைக்க வேண்டிய தலைமறைவாக்க வேண்டிய நிலையை 377 உருவாக்குகிறது. மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒருபால் உறவை குற்றமற்ற தாக்கச் சொன்னது.
ஆகஸ்ட் 8 2008ல் இந்தத் துறையின் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மெக்சிகோவில் நடந்த எய்ட்ஸ் தொடர்பான மாநாட்டில் 377அய் நீக்க வேண்டும் என்றார். (காண்க: 09.08.2008 தேதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்). இந்திய சட்ட ஆணையத்தின் 172ஆவது அறிக்கை பிரிவு 377அய் நீக்க பரிந்துரைத்துள்ளது.
பொது மருத்துவர்களும் மனநல மருத்துவர்களும் ஒருபால் ஈர்ப்பு ஒரு நோயல்ல, ஒரு உடல், மன நலக்கேடல்ல மாறாக, அது மானுட பாலியல் விருப்பத்தின் ஒரு வெளிப்பாடே என உலகெங்கும் அறிவிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு 1992ல் ஒருபால் உறவை, தான் தயாரித்திருந்த மனநோய்கள் பட்டியலிலிருந்து நீக்கியது. மக்கள் பிரிவின் ஒரு சிறுபான்மை அவர்கள் தேர்வு செய்யாத, அவர்கள் மாற்றிக் கொள்ள முடியாத, ஓர் உள்ளார்ந்த இயல்புக்காக குற்றமயப்படுத்தப்படுவதும் சிறுமைபடுத்தப்படுவதும், சமத்துவம், சுதந்திரம், உயிர்வாழ்தல் என்ற அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானவை.
காலனிய ஆட்சிக் காலத்தின் 1894 நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013ல் நீக்கப்பட் டுள்ளது. நாடாளுமன்றம் ஒரு சட்டப்பிரிவை நீக்காமல் திருத்தாமல் இருப்பதற்கு, நாடாளு மன்றம் அதனை நீக்கத் தயாரில்லை என்று தவறாக காரணம் கற்பித்து, நீதிபதி சிங்வி 377அய் திருத்துகிற மாற்றுகிற வேலை நாடாளுமன்றத்துடையது என்று வழிவிட்டு ஒதுங்குவது ஏற்புடையதல்ல.
இது ஒரு சொத்தையான வாதமாகும். ஏனெனில் ஏஅய்ஆர் 1983 உச்சநீதிமன்றம் பக்கம் 473ல் பிரசுரமாகியுள்ள மித்து எதிர் ஸ்டேட் ஆஃப் பஞ்சாப் வழக்கில், இதே உச்ச நீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட அமர்வம், இதே இபிகோ பிரிவு 303, ஆயுள்தண்டனை கைதி கொலை செய்தால் அந்தக் குற்றத்துக்கு நிச்சயம் மரண தண்டனை என்று நிர்ணயம் செய்தது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அந்தப் பிரிவை நீக்கம் செய்துள்ளது. அந்தச் சட்டப் பிரிவு நீதிமன்றத்தின் கைகளில் தான் மரணத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் சொல்லாத விசயங்கள்
அ) பிரிவு 377 பொது வெளி, தனிவெளி வித்தியாசங்களையோ, சம்மதம், சம்மதமின்மை விசயங்களையோ, கணக்கில் கொள்ளவில்லை என்பதை உச்சநீதிமன்றம் கவனிக்கவில்லை.
ஆ) அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15, குடிமக்களை பால் அடிப்படையில் வேறு படுத்தக்கூடாது என்று சொல்லியிருப்பது, பாலியல் சாய்வு அடிப்படையில் வேறுபடுத்தக்கூடாது என்பதையும் உள்ளடக்கும் என டில்லி நீதிமன்றம் சொல்லியுள்ளது. உச்சநீதிமன்றம் இது பற்றி பேசவே இல்லை.
இ) ஆட்டக் களத்தில் போட்டியிட்ட இரண்டு அணிகள், அதாவது, முக்கிய தரப்பினர், அல்லது அணித்தலைவர்கள், நடுவர் முடிவை ஒப்புக்கொண்ட பிறகு, பார்வையாளர்கள், முடிவை மாற்றச் சொல்லி கோர முடியாது. ஆகஸ்ட் 2013ல் ஹாலிங்ஸ்வொர்த் எதிர் பெர்ரி என்ற வழக்கில் அய்க்கிய அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டில் மூன்றாம் தரப்பினருக்கு வாய்ப்பே தர முடியாது என திட்டவட்டமாகச் சொன்னது. ஒரு வேளை இந்தத் தீர்ப்பை எதிர்கொள்ளாமல் தவிர்க்கவே, அந்நிய நாடுகளின் தீர்ப்புக்கள் வேண்டாமே என்றார் நீதிபதி சிங்வி.
முக்கியமாக, டில்லி உயர்நீதிமன்றத்தில் எதிர் வழக்காடிய மத்திய அரசு, விசயம் உச்சநீதிமன்றத்துக்கு வந்த பிறகு, தனது அமைச்சர் குழு, டில்லி தீர்ப்பில் குறைகாண ஏதும் இல்லை என முடிவுக்கு வந்ததாக சொல்லிவிட்டது. அதற்குப் பிறகு, துண்டுதுக்காணி சிறுபான்மையினர் வழக்கு என பிரச்சனையை அணுகிய உச்சநீதிமன்றம், டில்லி உயர்நீதிமன்றத்தில் தரப்பினராக இல்லாத ஓரஞ்சார, பித்துப்பிடித்த, மதவாத பிற்போக்காளர்களின் மேல்முறையீட்டை எப்படி அனுமதிக்கலாம் என்பதற்கு உச்சநீதி மன்றத்திடம் எந்த பதிலும் இல்லை.
ஈ) உண்மையில், வெளியே வராமல் ஒளிந்திருப்பது மறைந்திருப்பது, இயற்கைக்கு விரோதமான உறவு என்ற பத்தாம்பசலித்தனமான கருத்தின் அடிப்படையிலான, நீதிமன்றத்தின் பொது அறம் பற்றிய கவலையே ஆகும். அலகாபாத் உயர் நீதிமன்றம் பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் இருந்தது என்ற மக்கள் நம்பிக்கைப்படி தீர்ப்பு வழங்கியது. இந்திய உச்சநீதிமன்றமும் அப்சல் குருவுக்கு மக்களின் மனசாட்சியை திருப்திப்படுத்த தூக்குதண் டனை விதித்தது. நீதிபதிகள் சிங்வியும் முகோபாத்யாயாவும் இந்த அணுகு முறையை, வெளியே சொல்லிக் கொள்ளாமல் பின்பற்றியுள்ளனர்.
டாக்டர் அம்பேத்கர், ‘அரசியல்லமைப்புச் சட்ட அறநெறி என்பது ஓர் இயற்கையான உணர்வல்ல, அது பேணி வளர்க்கப்பட வேண்டும்; நமக்கு, நம் மக்கள் அதனை இன்னமும் கற்க வேண்டும் எனப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது; சாராம்சத்தில் ஜனநாயகமற்ற இந்திய மண்ணில் ஜனநாயகம் ஒப்பனை மேல் அலங்காரமே’ என்று சொல்லியுள்ளதை நீதிபதிகள் கணக்கில் கொண்டிருந்தால் விவகாரம் வேறு விதமாக முடிந்திருக்கலாம்.
சமூக பழைமைவாத உச்சநீதிமன்ற தீர்ப்பின்பால் இகக மாலெ, இகக, இககமா, திரிணாமூல் காங்கிரஸ், அய்க்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி ஆகியவை அதிருப்தி தெரிவித்துள்ளது சமூகம் மாறுவதன் பிரதிபலிப்பே.
தமிழகத்தில் பெரியாரின் சிஷ்யர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் கழகங்கள், வைகோ போன்றவர்கள் மூலம், 377 இருந்தாக வேண்டும் என கலாச்சார தேசியம் பேசுகின்றனர்; அஇஅதிமுக, திமுக போன்றவை மவுனம் சாதிக்கின்றன. அவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் 01.01.1942ல் பெரியார் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் சொன்னதை கவனப்படுத்துவோம்.
‘ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்றும் மூன்றாமவர் யாராயினும் பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ நிர்ப்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.... இன்னும் சிறிது வெளிப்படையாய், தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால், இவை ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவதுபோலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும், அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றும்தான் சொல்ல வேண்டும்’.
அன்று காதல் பற்றி பெரியார் சொன்ன விசயங்கள் நிச்சயமாக இன்று ஒருபால் ஈர்ப்புப்பற்றி அவர் அவற்றை ஒத்த விசயங்களைத்தான் பேசியிருப்பார் என்பதை புலப்படுத்தும். பெரியாருக்கு துரோகம் செய்தவர்களிடம் இருந்து பெரியாரையும் தமிழகத்தையும் விடுவிப்போம். எல்ஜிபிடியினரை அரவணைப்போம். 377ன் மோசமான பகுதிகளுக்கு விடை கொடுப்போம்.