COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 15, 2014

குமரியில் குடிமனை கோரி கருத்தரங்கு

அமைப்புசாரா, அரை நகர்ப்புற ஏழைப் பெண்கள் வீடில்லாமல் தாங்கள் படும் வேதனைகளை தெரிவித்து அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி வீட்டுமனையும், வீடும் வழங்கப்பட வேண்டும் என ஒருமித்து குரல் எழுப்பினர்.

டிசம்பர் 28 அன்று இகக(மாலெ) நாகர்கோவிலில் நடத்திய கருத்தரங்கில் 900 பேர், கிட்டத்தட்ட அனைவரும் பெண்கள் பங்கேற்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஜனவரி 26 முதல் காலவரையற்ற தொடர் கிளர்ச்சிகள் நடத்தப்படும் என கருத்தரங்கு முடிவு செய்தது.

கூட்டத்தில் பேசிய பலரும் அதிமுக அரசாங்கம் வீட்டுமனை மற்றும் வீட்டிற்கான மக்களின் பாத்தியப்பட்ட உரிமையை நிராகரித்துவிட்டு, பொது நிலங்களை சூறையாடுபவர்களையும்  நிலம் அபகரிப்பவர்களையும் ரியல் எஸ்டேட் கொள்ளையர்களையும் பாதுகாத்து வருகிறது என்று குற்றம் சாட்டினர்.

கூட்டத்தில் மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநில கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் சங்கரபாண்டியன், அந்தோணிமுத்து, மேரி ஸ்டெல்லா உரையாற்றினர். கருத்தரங்கை அடுத்து, ஜனவரி 6 அன்று முற்போக்கு பெண்கள் கழகத்தின் தலைமையில் வீடற்ற பெண்கள் ஆட்சியரை சந்தித்து வீட்டுமனை கோரி மனு அளித்தனர்.

Search