COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 15, 2014

அய்முகூ ஆட்சியாளர்களை வரலாறு மன்னிக்காது - ஜி.ரமேஷ்

தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் மூன்றாவது முறையாக ஜனவரி 3 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன், வரலாறு தன்னிடம் கனிவு காட்டும் என்றார். வரலாறு மட்டுமல்ல, சர்வதேச மற்றும் தேசிய பூகோளம், பொருளாதாரம், கணிதம், அறிவியல், சமூகவியல், மொழியியல் என எதுவும் மன்மோகனையும் அவரது தலைமையிலான அய்முகூ ஆட்சிகளையும் மன்னிக்காது.

சாமான்ய மக்கள் ஓட்டாண்டிகளாக்கப்பட்டு, அவர்களிடம் இருந்ததும் பறிக்கப்பட்டு, அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சேர்க்க உறுதுணையாய் இன்று வரை நின்றவரை, யாரும் மன்னிக்க முடியாது. நாட்டின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபை, ஏகாதிபத்திய எதிர்ப்பு வரலாற்றை களங்கப்படுத்தியவரை யாரும் மன்னிக்க முடியாது.

மன்மோகனின் பணிஓய்வு அறிவிப்பு வெளியான பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்னும் பின்னும், சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் தங்கள் சீற்றத்தை போதுமான அளவு தெளிவாக வெளிப்படுத்தியபோதும், கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் மளமளவென நிறைவேறுகின்றன. திடீரென ஜெயந்தி நடராஜன் சுற்றுச் சூழல் அமைச்சரானார். பின் திடீரென பதவி விலகினார். திடீரென வீரப்பமொய்லி அந்த அமைச்சக பொறுப்பேற்றார். திடீரென போஸ்கோவுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. மான்ய விலை சிலிண்டர் ஒன்பதா பன்னிரண்டா என்று மத்திய அரசிடம் பேரம்பேசும் வீரப்பமொய்லி, கூடுதல் பதவி ஏற்ற 17 நாட்களில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டார்.

மறுபக்கம், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாத சுரங்க ஒதுக்கீடுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்யச் சொன்னது. ரூ.2 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற வாதம் வந்தபோது, எவ்வளவு பெரிய முதலீடு என்றாலும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் முதலீடு செய்தது அவர்கள் பிரச்சனை, அதன் விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்றது.

“நிலக்கரி ஒதுக்கீட்டில்  தவறு நடந்துள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நல்ல நம்பிக்கையியோடுதான் நாங்கள் முடிவுகள் எடுக்கிறோம். ஆனால், எப்படியோ அது தவறாகப் போய்விடுகிறது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசு இன்னும் சிறந்த முறையைக் கடைபிடித்திருக்கலாம்.” என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின் சார்பாக ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் கூலம் இ.வாஹனவதி இப்போது சொல்கிறார்.

1993 முதல் 2009 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட 195 நிலக்கரி வயல்கள் தொடர்பாக மத்திய புலனாய்வு துறை விசாரணை செய்கிறது. இவற்றில், மன்மோகன் நிலக்கரி அமைச்சகத்துக்கு பொறுப்பேற்றிருந்த காலத்தில் மட்டும் 160 சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய புலனாய்வு துறையும் 1993 - 2005 காலகட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிலக்கரி வயல்கள் மற்றும் 2006 - 2009 கால கட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிலக்கரி வயல்கள் ஆகியவை மீதான தனித்தனி முதற்கட்ட  விசாரணை குழு அமைத்து விசாரணை செய்கிறது. சுரங்க ஒதுக்கீடு தொடர்பான காணாமல்போன கோப்புகள் பற்றியும் மத்திய புலனாய்வு துறை விசாரணை செய்கிறது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் தார்தா, நவீன் ஜின்டால், முன்னாள் நிலக்கரி அமைச்சர் தாசரி நாராயண ராவ், ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார்மங்கலம் பிர்லா ஆகியோர் முக்கிய குற்றவாளிகள்.
இத்தனை நாட்களும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடே நடக்கவில்லை, ரூ.1.86 லட்சம் கோடி ஊழல் என தலைமை தணிக்கை அதிகாரி விநோத்ராய் சொன்னதெல்லாம் பொய், என்று திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தனர் அய்முகூ அரசின் அமைச்சர்களும் அதிகாரிகளும் அட்வகேட் ஜெனரல்களும். 

இப்போது, அட்டர்னி ஜெனரல் வாஹனவதி மத்திய அரசு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு விசயத்தில் இன்னும் சிறப்பான முறையைக் கடைப்பிடித்திருக்கலாம் என்று சொல்லி மொத்த ஊழல் நடவடிக்கையையும் திசைதிருப்பப் பார்க்கிறார்.  எல்லாவற்றையும் சிறந்த முறையில் செய்திருக்க முடியும், ஆனால், 1991-92 கால கட்டத்தில் மின் உற்பத்தியின் தேவை அதிகமாக இருந்தது, நாட்டின் நலன் கருதியே நாங்கள் அதைச் செய்தோம்.

இது தொடர்பாக ஒரு தேசியக் கொள்கையை வகுத்திருக்க வேண்டும், பின்னர் பார்க்கும்போதுதான் தெரிகிறது, தவறு நடந்துள்ளது என்று, அந்தத் தவறுகள் சரி செய்யப்பட வேண்டியுள்ளது. நீதிபதிகள் கருத்தை நான் ஒப்புக் கொள்கிறேன் என்று சொல்லி அடுத்த கட்ட சரிக்கட்டல் நடவடிக்கை எடுக்க அச்சாரம் போட்டுள்ளார் அட்டர்னி ஜெனரல்.

முதல் நாள், முறையான அனுமதி பெறாமல் வெறும் ஒதுக்கீடுக் கடிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு இருக்கும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மிகக் கடுமையாகக் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுநாள், நாங்கள் நல்ல முடிவுதான் எடுத்தோம் ஆனால், ஏதோ கொஞ்சம் தவறுகள் நடந்துள்ளது என்று சொல்லும் அட்டர்னி ஜெனரலைப் பார்த்து அதாவது மத்திய அரசைப் பார்த்து, “உங்களுடைய நோக்கம் சரியானதுதான். ஆனால், நீங்கள் செய்ததிலும் செயல்பட்டவிதத்திலும் ஏதோ தவறு ஏற்பட்டுள்ளது. நீங்கள் அதை இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்திருக்க முடியும். ஆனால், அது மேலதிகாரிகள் செய்ய வேண்டியது” என்று கூறுகிறார்கள். அப்படி யென்றால், முதல் நாள் அவர்கள் காட்டிய கடுமை அரசாங்கத்தைக் கொஞ்சம் இறங்கி வர வைத்து அனுசரித்துப்போகச் செய்வதற்குதானோ என்று கேள்வி எழுகிறது.

அது மட்டுமல்லாமல் பிரச்சனையின் பிரதான விசயம் ஊழல், கொள்ளை, அரசு கஜானாவிற்கு பல லட்சம் கோடி இழப்பு என்பதில் இருந்து, முறைப்படி அனுமதி, உரிமம் பெறு, பிறகு அடி கொள்ளை என்று திசை மாற்றப்படுகிறது.

 நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களான டாடா, பிர்லா, ஜின்டால், வேதாந்தா குழுமங்களுக்குத்தான் கடந்த பல ஆண்டுகளாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் வரிப்பணத்தையே வங்கிகள் மூலம் தங்கள் பணமாக்கிக் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் டாடா, வேதாந்தா வகையறாக்கள் சுரங்கத்தில் முதலீடு செய்துவிட்டு சும்மா இருப்பார்களா?

நாங்கள் ரூபாய் இரண்டு லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளோம். உரிமம் ரத்து செய்யப்பட்டால் எங்களுக்கு பெரிய இழப்பு,  நாட்டிற்கும் இழப்பு என்று கூவ ஆரம்பித்துவிட்டார்கள். இந்திய தொழில் கூட்டமைப்பு, முறையான அனுமதி, தடையில்லாச் சான்றிதழ் தரப்படாததற்கு நிறுவனங்கள் என்ன செய்யும், அரசாங்கம்தான் உரிய அனுமதியை கொடுத்திருக்க வேண்டும், அது அரசாங்கத்தின் வேலை என்கிறது. இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைமை இயக்குநர்  சந்திரஜித் பானர்ஜி, நாங்கள், நிறுவனங்கள், சுரங்கத்திற்கு ஒதுக்கீடு பெற்று தடையில்லா சான்றிதழ் மற்றும் உரிமத்திற்கு மனு செய்துவிட்டோம், வேலையையும் ஆரம்பித்துவிட் டோம், அந்த மனுவை அனுமதிக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு, அரசாங்கங்கள் அனுமதி தராமல் இருந்ததற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும் என்று கேட்கிறார்.

சாதாரண உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீஸ் கடைசி நேரம் வரை பதில் கொடுக்காமல் வைத்துக் கொண்டு, பின்னர் பந்தலுக்கு வந்து உங்களுக்கு அனுமதி இல்லை என்று அப்புறப்படுத்திவிடுவார்கள். அனுமதியோ மறுப்போ முதலிலேயே ஏன் தரவில்லை என்று சாமானியன் கேட்க முடியாது. ஆனால், அம்பானி, பானர்ஜி கும்பல்கள் அனுமதியே இல்லாவிட்டாலும் நாங்கள் சுரங்கம் தோண்டுவோம், நீ மறுக்காமல் அனுமதி தரவேண்டியது உன் வேலை என்கிறது அரசிடம்.

சுரங்க ஒதுக்கீட்டு உரிமங்களை ரத்து செய்தால், பல மில்லியன் டாலர் நஷ்டமாகும். அப்புறம் எந்தவொரு நிறுவனமும் இந்தியாவில் தொழில் தொடங்க வராது, பார்த்துக் கொள்ளுங்கள் என்று வேறு மிரட்டுகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். சுரங்க உரிமங்கள் ரத்து செய்யப்பட்டால் உண்மையில் பாதிக்கப்படப்போவது வங்கிகள்தான். கார்ப்பரேட் கொள்ளையர்கள் தங்கள் சொந்த பணத்தையா சுரங்கத்தில் போட்டிருக்கிறார்கள்? வங்கியில் இருந்து வட்டியில்லாமல் வாங்கிய பணத்தையல்லவா? ஆனாலும், புதிய நிறுவனங்களுக்கு முறைப்படி நியாயமான வகையில் ஓதுக்கீடு செய்தால், ஏற்கனவே நிறுவனங்கள் சுரங்கத் தொழிலுக்கு வாங்கிய வங்கிக் கடன்களை புதிய நிறுவனங்களிடம் மாற்றி விடலாம். அதன் மூலம் வங்கிகள் தப்பிக்கலாம் என்று கார்ப்பரேட் நிர்வாக ஆலோசனை அமைப்பான இன்கவர்ன் ரிசர்ச் சர்வீஸ்ஸின் நிறுவனர் ஸ்ரீராம் சுப்பிரமணியன் சொல்கிறார். நடக்குமா அது? டாடாவும், பிர்லாவும் ஜின்டாலும் தம் கைக்கு வந்ததைத் திருப்பித்தர தயாராக இருப்பார்களா?

அய்முகூ அரசும் அடுத்து வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில்  மரணஅடி வாங்காமல் இருக்க, காங்கிரஸ் தன் கையில் உள்ள ஊழல் கறையை மறைக்க, ஏதேதோ செய்து பார்க்கிறது. ஊழல்களை ஒப்புக்கொள்வது இப்போது காங்கிரஸ் ஸ்டைல். ஆனால், ஊழலுக்கு நாங்கள் காரணமல்ல, நாங்கள் செய்யவும் இல்லை, எந்தவொரு ஊழல்களிலும் எங்கள் கட்சிக்கோ, கட்சித் தலைமைக்கோ, எங்கள் அமைச்சர்களுக்கோ எவ்வித தொடர்பும் கிடையாது, நாங்கள் எல்லாரும் பரிசுத்தவான்கள் என்று  சொல்லி அதிகாரிகளை பலிகடா ஆக்குகிறது. ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு விசயத்தில், நீதிபதியின் விசாரணை அறிக்கையை  நிராகரித்த மஹாராஷ்டிரா காங்கிரஸ் அரசு, பின்னர் இளவரசர் ராகுல் காந்தி சொல்லிவிட்டார் என்று அறிக்கையை பகுதி அளவில் ஏற்றுக் கொண்டது.

ஆனால், அந்த அறிக்கையில் முன்னாள் முதல்வர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை நிராகரித்துவிட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டிலும் நடந்துள்ள ‘சின்ன’ தவறுகளுக்கு அதிகாரிகள் மீது பழிசுமத்த ஆயத்தம் ஆகிவிட்டது அய்முகூ அரசு. அடுத்து அலைக்கற்றை விற்பனையில் செய்ததுபோல் மறு ஏலம் மாய்மாலங்கள் செய்து நிலக்கரி சுரங்கங்களைத் திரும்பவும் டாடா, பிர்லா, வேதாந்தாக்களிடம் தாரைவார்த்து விடும்.

அதற்கேற்பவே அடுத்தடுத்து காய்கள் நகர்த்தப்படுகின்றன. ஜனவரி 12 அன்று நிலவரப்படி கிட்டத்தட்ட 60 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு பெற்றுள்ள நிறுவனங்கள் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்று மத்திய குற்றப் புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளதாம். 195 சுரங்க ஒதுக்கீடுகளில்  16 வழக்குகளில் மட்டுமே குற்றம் புரிந்துள்ளதற்கான முகாந்திரம் உள்ளதாம்.

தொலைந்து போன கோப்புகள் தொடர்பாக தொடக்கநிலை விசாரணை நடக்கிறதாம். அதேநேரம், நிலக்கரிக் சுரங்க ஊழல்கள் சம்பந்தமான தேவையான எல்லா கோப்புகளும் மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை வசம் வந்து விட்டது அதனால், விசாரணையை முடித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை சொல்லும் என்று கூறப்படுகிறது.

1993 - 2005 காலகட்டத்தில் தரப்பட்ட 41 ஒதுக்கீடுகளை ரத்து செய்யப்போவ தாகவும் இன்னும் 61 ஒதுக்கீடுகள் இன்னும் 6 வாரங்களுக்குள் குறைபாடுகளை சரிசெய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்
போவதாகவும் மத்திய அரசு கூறுகிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உச்சநீதி மன்றம் ஒதுக்கீடுகளை ரத்து செய்ததுபோல், சுரங்க வயல் ஒதுக்கீடு பிரச்சனையும் நடப்பதற்கு முன் மத்திய அரசு முந்திக் கொண்டு தானே சில ஒதுக்கீடுகளை ரத்து செய்துவிட்டது. அத்துடன் மற்றவற்றை விட்டுவிடுங்கள் என்றும் உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு செய்தி சொல்கிறது.

தொடர் விபத்துக்கள் ரயில் பயணிகளை அச்சுறுத்தும்போது, ரயில்வேயில் புறநகர் பாதை, அதிவேக ரயில் திட்டங்கள், சரக்கு வழித் திட்டங்கள் ஆகியவற்றில் 100 சதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 1000 கோடி டாலர் முதலீடு வரும் என்று சொல்லப்படுகிறது.

 இந்த முதலீட்டு வருகைக்காக பயணிகள் பாதுகாப்பை தனியார் கருணைக்கு விட்டுவிடுவதுடன் நாட்டின் செல்வத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அய்முகூ ஆட்சியாளர்கள் வழிவகுக்கிறார்கள்.

அப்பழுக்கில்லாத துரோகம். அனைத்தும்தழுவிய வஞ்சகம்.காங்கிரசும் பாஜகவும் மாற்றி மாற்றி ஊழல் பற்றி பேசுகின்றன. ஆனால் கார்ப்பரேட் கொள்ளையர்களைக் காப்பாற்றுவதில் இரண்டு பேருக்குமே போட்டி. சுரங்க ஊழலுக்கு பிரதமரை பதவி விலகச் சொல்லும் பாஜக, மற்றொரு சுரங்க ஊழலால் வெளியேற்றப்பட்ட எடியூரப்பாவுக்கு மீண்டும் சிவப்பு கம்பளம் விரிக்கிறது. திமுக, அஇஅ திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாடி என எல்லா மாநிலக் கட்சிகளும் ஊழலிலும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதிலும் தேசியக் கட்சிகளுக்கு தாங்கள்   சளைத்தவர்கள் இல்லை என்று ஜல்லிக்கட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Search