COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 15, 2014

புல்லாங்குழலும் கால் பந்தும்

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ? 

- பாரதி

பாரதி நிச்சயமாக சின்னஞ்சிறு கதைகள் பேசும் ஜெயலலிதாவைப் பற்றி எழுதி இருக்க மாட்டான். அதேநேரம், தமிழக மக்கள், ஜெயலலிதா சொல்லும் குட்டிக்கதைகள் கேட்டு மெய்மறந்து வீழ்வார்கள் என்று ஜெயலலிதா நினைத்தால், அந்த நினைப்பில் மண் விழும்.

இலவச வேட்டி சேலைத் திட்டத்தால் 1.73 கோடி பெண்களும் 1.72 கோடி ஆண்களும், ஆக மொத்தம் 3.45 கோடி மக்கள் பயன் பெறுகிறார்கள் எனப் பெருமிதத்துடன் ஜெயலலிதா சொன்னார். அப்போதுதான், சின்னஞ்சிறு கதை ஒன்று சொன்னார். அவர் சொன்ன கதையை அவர் சொன்ன விதத்தில் வார்த்தை மாறாமல் வரி பிறழாமல் முதலில் பார்ப்போம்.

‘பொது நலன் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன. புல்லாங்குழல் முத்தமிடப்படுகிறது. கால் பந்து காலால் உதைக்கப்படுகிறது. தான் வாங்கிய காற்றை யாருக்கும் தராமல் தானே வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல்  முத்தமிடப்படுகிறது.   
  
சுயநலமுள்ள மனிதர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். பொது நலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரே நலம்தான் உள்ளது. அது தமிழக மக்களின் நலம். அதனால்தான் மக்கள் எப்போதும் என் பக்கம் உள்ளார்கள். நானும் மக்கள் பக்கம் உள்ளேன்.’
ஜெயலலிதா, புல்லாங்குழலாய் தம்மை மக்கள் போற்றிப் புகழ்வார்கள், கருணாநிதி விஜயகாந்த் போன்றோரைக் கால் பந்து போல் உதைப்பார்கள் என நினைக்கிறார்.

உண்மையில், தமிழ்நாட்டு மக்களைக் கால் பந்து போல் கழகங்கள் மாறி மாறி உதைத்துக் கொண்டிருக்கிறார்கள். (காங்கிரஸ் கதை தமிழகத்தில் முடிந்த கதை என்பதால் அதன் ஆட்சிக் காலம் பற்றிப் பேச வேண்டியதில்லை). நேற்று கருணாநிதி துவங்கிய பல விசயங்களை, குறிப்பாக வசதி படைத்தவர்களுக்கு ஆதரவான சாமான்ய மக்களுக்கு எதிரான பல விசயங்களை, ஜெயலலிதா இன்று தொடர்கிறார். அதேபோல், நேற்று கருணாநிதியும், ஜெயலலிதா துவங்கியதைத்தான் தொடர்ந்தார்.

இரண்டு பேருமே, தமிழ்நாட்டு மக்கள், உழைத்துப் பிழைத்து சொந்த வருமானத்தில் வாழ முடியாது என நம்பினார்கள். நம்புகிறார்கள். முதலாளித்துவம், கவுரவமாக வாழ மக்களுக்கு வருமானம் தராது என்பதால்தான், முதலாளிகளுக்கு மேட்டுக்குடியினருக்கு, தமிழக வளங்களை கருவூலத்தைச் சூறையாட மக்கள் உழைப்பைச் சுரண்ட வாய்ப்பு தந்தவர்கள், மக்கள் சீற்றத்தைத் தணிக்க கட்டணம்/விலை இல்லா, மலிவு கட்டணத்தில்/விலையில் பொருட்கள், சேவைகள் வழங்குகிறார்கள். நிலம், வீடு, வருமானம், கவுரவம், சுதந்திரம், ஜனநாயகம் தவிர்த்து, சின்னச்சின்ன விஷயங்களை அரண்மனை உப்பரிகையிலிருந்து வீசி எறிய, மக்கள் பொறுக்கிக் கொள்வார்கள் என ஜெயலலிதா நினைக்கிறார்.

மக்களுக்குப் பாத்யதைப்பட்டதில், ஒரு சிறு பகுதி, எந்த விதத்தில் எப்படி மக்களிடம் வந்தாலும், மக்கள் அதைப் பெற்றுக் கொள்ளட்டும். பெற்றுக் கொள்கிற மக்களை நாம் கவுரவக் குறைவாகப் பார்ப்பதில்லை. தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் அரிசி, வேட்டி சேலை போன்றவை கூட வாங்க முடியாத நிலையில் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

ஆனால் தமிழ்நாட்டு மக்களை வெறும் பயனாளிகளாக மாற்றும் முயற்சிக்கும், வறியவர் சார்பு மத்திய அரசு விரோத முகமூடி அணியும் ஜெயலலிதா அரசிற்கும் எதிராக, மக்களைத் திரட்ட வேண்டும் என்கிறோம். கருணாநிதி, விஜயகாந்த் இன்றளவில், இன்றைய நிலையில் ஜெயலலிதாவிற்கு வலு சேர்க்கிறார்கள். காங்கிரசும் பாஜகவும் போட்டியாளர்கள் அல்ல. பாஜக வருங்காலக் கூட்டாளியாகும் உள்ளாற்றல் கொண்டது.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களை கால் பந்தாக உதைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. தலித்துகள், இஸ்லாமியர்கள், அணு உலை எதிர்ப்போர், உண்மையான ஜனநாயக சக்திகள், உழைப்பாளிகள் அனைவரும் கால்பந்தாக உதைக்கப்படுகிறார்கள். மக்களின் செவியையும் சிந்தையையும் குளிர வைப்பவர் ஜெயலலிதா என உண்மையான இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற சக்தி எவரும், கருத முடியாது.

கொலை வாளினை எடடா பெரும் கொடியோர் செயல் அறவே என எழுதிய  பாரதிதாசனின் பின்வரும் கவிதை வரிகளை தமிழ்நாட்டின் போராட்ட இயக்கங்கள் தம் பதாகைகளில் பொறிக்கட்டும்.

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ

Search