COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 1, 2014

குன்னத்தூர் தலித் மக்கள் மீது தாக்குதல் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நியாயம் வேண்டும்!

மாலெ கட்சியின் உண்மையறியும் குழு அறிக்கை

விழுப்புரம் மாவட்டம் ம.குன்னத்தூர் கிராமத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக மாலெ கட்சியின் உண்மையறியும் குழு நவம்பர் 21 அன்று பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்தது.

மாலெ கட்சி மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுப்பிரமணியன், புதுவை எஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் சங்கரன், விழுப்புரம் மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் மா.வெங்கடே சன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் செண்பகவள்ளி, கணேசன், கலியமூர்த்தி, சுசீலா மற்றும் வழக்குரைஞர் அந்தோணிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய அதிமுக எம்பி ஆனந்தன் சொந்த கிராமம் நத்தாமூர் அருகில் உள்ள ம.குன்னத்தூர் கிராமம். தாழ்த்தப்பட்ட மக்களின் 250 வீடுகள், வன்னியரின் 3,000 வீடுகள் இங்கு உள்ளன. இப்பகுதியில் உள்ள மலைகளில் கல், ஜல்லி, கிராவல் உடைக்கும் வேலையை சேலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்  குடும்பம் குடும்பமாக செய்து வருகிறார்கள்.

இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதியில் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. ஆனால் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தெருக்களில் வீடுகளில் 5 அடி பள்ளம் எடுத்து குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் பிடித்து வருகிறார்கள்.

சேலத்தைச் சார்ந்த தொழிலாளர்களில் தற்போது ஒரு குடும்பம் (வன்னியர் குடும்பம்) மட்டும் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து 3/4 கி.மீ தூரத்தில் உள்ளது. அந்தப் பகுதி வேறு ஊராட்சிக்கு உட்பட்டது. அங்கு தண்ணீருக்கு கைப்பம்பு உள்ளது. இருப்பினும் ம.குன்னத்தூரின் தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதியிலிருக்கும் குடிநீர் குழாயிலிருந்து இந்த ஒரு குடும்பத்துக்காக பைப் லைனில் 17.11.2013 இணைப்பு செய்ய ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியின் கணவர் ராஜா (திமுக) முயற்சி செய்தார். தலித் மக்கள் பகுதியில் ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை இருக்கிற நிலையில் ஏற்கனவே கைப்பம்பு மூலம் தண்ணீர் பெறும் ஒரு குடும்பத்துக்காக தலித் மக்கள் பகுதியில் இருந்து தண்ணீர் விடுவதற்கு தலித் பிரிவைச் சேர்ந்த சக்திவேல் எதிர்ப்பு தெரிவித்தார். இதையொட்டி அவரிடம் பேசலாம் என்று சொல்லி நவம்பர் 17 அன்று அவரை வன்னியர் பகுதிக்கு வரச்செய்து பேசிக் கொண்டிருக்கும் போதே வன்னியர் பிரிவினர் சூழ்ந்துகொண்டு அவரை தாக்கியுள்ளனர்.

தாக்கப்பட்ட சக்திவேல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்றார். தாக்கியவர்கள் தரப்பிலும் வன்னியர் 4 பேர் தாங்கள் தாக்கப்பட்டதாகச் சொல்லி மருத்துவமனையில் சேர அதே மருத்துவமனைக்கு வந்தபோது அங்கு மீண்டும் சக்திவேல் மற்றும் வன்னியர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. மருத்துவமனை உள்ள பகுதி உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் உட்பட்ட இடம். ஆனால் குன்னத்தூர் பகுதி திருநாவலூர் காவல்நிலையம் உட்பட்ட பகுதி.

உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் மருத்துவமனையில் மோதல் ஏற்படுவதை அறிந்து சக்திவேலை விழுப்புரம் மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைத்தார்.

இதற்கிடையில், பாமக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெகன், மருத்துவமனைக்குச் சென்ற வன்னியர் இரண்டு பேரை தலித் மக்கள் கடத்தி விட்டதாக குன்னத்தூரில் புரளி பரப்ப, அவர்கள் தரப்பில் தலித் ஒருவரை பிடித்துச் சென்று, கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட வன்னியர் விடுவிக்கப்பட்டால்தான் அவரை விடுவிக்க முடியும் என்று சொல்ல பதட்டச் சூழல் உருவானது.

இரண்டு தரப்புகளிலும் மக்கள் திரள, பதட்டத்தை தவிர்க்க வந்த காவல்துறையினர் கண்முன்னர் வன்னியர்கள் தலித் மக்கள் வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்தினர். 20க்கும் மேற்பட்ட தலித் மக்கள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

எஸ்பி மனோகரன் வந்த பிறகு வன்னியரிடம் பிடிபட்ட தலித் 2 மணி நேரம் கழித்துத்தான் மீட்கப்பட்டார். காவல்துறையினர் தாக்குதல் நடத்திய வன்னியர், தாக்கப் பட்ட தலித்துகள் என இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு தலித் மாணவர்கள் பள்ளிக்குக் கூட செல்ல முடியாத சூழல் உள்ளது. டிஎஸ்பி தனது வாகனத்தில் தலித் மாணவர்களை ஏற்றி வந்து தலித்துகள் பகுதியில் ஒரு நாள் விட்டுச் சென்றுள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியின் கணவர் ராஜாவின் அப்பா குப்பகவுண்டர் என்பவருக்கு சுமார் 75 ஏக்கர் நிலம் உள்ளது. சுற்றியுள்ள கிராமங்களில் இவர்கள் குடும்ப ஆதிக்கம்தான். இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பல்வேறு முறை கேடுகள் உள்ளன. தற்போது ஒரு மாதமாக கூலி தரப்படவில்லை. இங்கு தலித்துகளுக்கு எப்போதாவதுதான் வேலை வழங்கப்படுகிறது.

தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து வட்டாட்சியர் சமாதானக் கூட்டம் ஏற்பாடு செய்துவிட்டு திட்டமிட்டு புறக்கணித்தார்; துணை வட்டாட்சியர் தலைமையில் அந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வன்னியர் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தலித்துகள் யாரும் ஊரில் இல்லாததால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இவ்வளவு பிரச்சனைக்குப் பிறகும் அரசு நிர்வாகம் பகுதியில் முறையாக குடிநீர் வசதி செய்யவில்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு (உளுந்தூர்பேட்டை தொகுதி) பகுதிக்கு வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினரும் பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை.

எஸ்சி/எஸ்டி ஆணையத்தின் குழு ஒன்று ம.குன்னத்தூர் கிராமத்தில் விசாரணை செய்தது. எஸ்பி மனோகரன், டிஎஸ்பி பாண்டியன், மாவட்ட ஆட்சியர் சம்பத் மற்றும் பல அதிகாரிகள் உடன் இருந்தனர். பாதிக்கப்பட்ட தலித் மாணவர், இளைஞர், பெண்கள் அனைவரும் டிஎஸ்பி பாண்டியன் கண் முன்னே தங்களை வன்னியர்கள் தாக்கியதாகவும் அவர் அமைதியாக வண்டியில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தார் எனவும், டிஎஸ்பி பாண்டியன் மற்றும் வட்டாட்சியர் லலிதா தொடர்ந்து தலித்துகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் எனவும் கூறினர்.

குன்னத்தூரில் தலித் மக்கள் பகுதியில் ஓரளவு விழிப்புணர்வுடன் செயல்படுகிற, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிவா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டால், நாங்கள் அனைத்து பிரச்சனைகளையும் முடித்துக் கொள்கிறோம் என்று வன்னியர் தரப்பில் சொல்வதாக செய்தியும் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கட்டுப் படுத்த, சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாப்பதாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லும் ஜெயலலிதா அரசாங்கம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே குன்னத்தூர் தாக்குதலும் காட்டுகிறது. பதானி தோலா, லக்ஷ்மண்பூர் படுகொலைச் சம்பவங்க ளில் இவர்கள்தான் கொலையாளிகள் என்று இந்திய சட்டங்களால் அடையாளம் சொல்லப் படாததுபோல், பரமக்குடி, தருமபுரி, மரக்காணம் என ஜெயலலிதா ஆட்சி நடத்தும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தலித் மக்கள் மீது நடத்தப்படும் எந்த தாக்குதல் சம்பவத்திலும் இதுவரை குற்றவாளிகள் என்று யாரும் அடையாளம் காணப்பட்டு தண்டனைக்கு உள்ளாக் கப்படவில்லை.

கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டு வன்னியர் ஒரு புறம் தலித் மக்களை தாக்க மறுபுறம் அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு தலித் மக்கள் நிலைமையை இன்னும் பாதகமானதாக்குகிறது.

மாலெ கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகள்

தமிழ்நாடு முழுவதும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் உடனடியாக கைது செய்யப் பட்டு  கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

குன்னத்தூரில் சாதி மோதலை தூண்டக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ராஜமாணிக்கத்தை பிடித்து சித்திரவதை செய்த குன்னத்தூர் வன்னியர்கள் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும்.

குன்னத்தூர் பகுதி தலித் மாணவர்கள் அச்சமின்றி பள்ளி சென்று வரும் சூழலை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.குன்னத்தூர் பகுதி தலித் மக்களுக்கு குடி நீர் மற்றும் அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

Search