அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 19 அன்று சென்னையில் நடைபெற்றது. மண்டப வாயிலில், டெல்லி செங்கோட்டை மற்றும் இந்திய நாடாளுமன்ற கட்டிடங்களின் முகப்புக்கள், கண்கவர் அலங்கார வளைவுகளாக வைக்கப்பட்டன. அஇஅதிமுகவினர், உபி, பஞ்சாப், குஜராத், கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம், இதுவரை பிரதமராகும் வாய்ப்பு கிடைத்திருந்தது; தமிழ்நாட்டிலிருந்து ஜெயலலிதா பிரதமராகும் நேரம் இப்போது வந்துவிட்டது என்றார்கள்.
தமிழகத்திற்கு எதிரான பலவீனமான, திறமையற்ற, மத்திய அரசு எனச் சாடிய அஇஅதிமுக, மத்திய அரசுக்கு தானே தமிழகத்தில் முதன்மையான எதிர்க்கட்சி என மீண்டும் ஒரு முறை காட்டிக் கொண்டது. புதிய அவதாரத்திற்கு அஇஅதிமுகவும் ஜெயலலிதாவும் தயார் என டிசம்பர் 19 பொதுக்குழு பறைசாற்றியது.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தலா மூன்று முறை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டை எக்ஸ்பிரஸ் ஏறி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட்டார்கள் என்றும், இப்போது, மத்திய அதிகாரத்தைப் பிடிக்க, மத்தியிலும் ஆளும் கட்சியாக, டெல்லி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் டிரெய்ன் தயார் என அறிவிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும், நாடாளுமன்றத் தேர்தல்களில் அஇஅதிமுக வெற்றியே உறுதி செய்யும் எனச் சொன்ன ஜெயலலிதா, இரட்டை இலை, அமைதி, வளமை, முன்னேற்றம் (PEACE, PROSPERITY, PROGRESS) என்ற மூன்று P-க்களை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் வழங்கும் என்றார்.
ஜெயலலிதா அஇஅதிமுகதான் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் என்றும், அந்த வண்டியை தமிழ்நாட்டின் புதுச்சேரியின் மக்கள் பச்சைக்கொடி காட்டி அனுப்பி வைப்பார்கள் எனவும், தாமே வண்டியின் ஓட்டுநர் எனவும், கட்சித் தொண்டர்கள் அந்த எக்ஸ்பிரஸ் டிரெயின் வண்டியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற பயணிகளும், பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் டெல்லி செல்வதை உறுதி செய்வார்கள் என்றும் மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் சொன்னார்.
ஜெயலலிதாவிற்கோ அஇஅதிமுகவிற்கோ பிரதமர் கனவு காணும் உரிமை உண்டு. ஆனால் ஜெயலலிதா ஓட்டுநராக இருக்கும் வண்டியில் அதிகபட்சம் 40 இடங்கள்தான் உண்டு. டெல்லி அதிகாரத்தை நோக்கி, தமது டிரெயின்தான் முதலில் போகும் எனவும், அதில்தான் கூடுதல் பயணிகள் இருப்பார்கள் எனவும் பாஜக சொல்கிறது. தம்முடைய ஓட்டுநர் நரேந்திர மோடிதான், இந்தியாவிலேயே வலுவான தலைவர் எனவும், அவரால்தான் தீர்மானகரமான அரசாளுகை வழங்க முடியும் எனவும் பாஜக அடித்துப் பேசுகிறது.
இகக, இககமா கட்சிகள் 40க்கு 40 என அம்மா சொல்லும்போது, அந்த 40ல் தமக்கு ஏதாவது ஒரு மூலையிலாவது இடம் கிடைக்காதா எனத் தவிக்கின்றனர். தங்களுக்கு அந்த வண்டியில் இடம் கிடைத்துவிட்டால், அந்த வண்டிக்கு தம் கைவசம் தயாராயுள்ள முற்போக்கு ஜனநாயக மதச்சார்பற்ற என்ற பட்டங்களைக் கட்டிவிடத் தயாராகின்றனர். (ஏற்காடு இடைத்தேர்தலில் ஏற்கனவே ஒத்திகை பார்த்துவிட்டனர்)
தமிழகத்தில் இருந்து தனியாக காங்கிரஸ் பாஜக டிரெயின்கள் புறப்படுவது மிகமிகக் கடினம். டிரெயின்கள் ஓட ஏதாவது ஒட்டு டிரெய்னை கோத்துக் கொள்ள முடியுமா எனப் பார்க்கின்றனர். ஒவ்வொரு நேரத்திலும் அரசியலில் வித்தியாசமான ஒரு கோமாளி வருவார். இம்முறை தமிழருவி மணியன், அந்த வேலையை எடுத்துக் கொண்டு பாஜக வண்டியில் , மதிமுக தேமுதிக பாமக ஒட்டு வண்டிகளைக் கோர்க்கப் பார்க்கிறார். தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதி நாளொரு தடுமாற்றமும் பொழுதொரு குழப்பமுமாய், எப்படியும் தம் வண்டியும் ஓடும் என்கிறார். எல்லா வண்டிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி செங்கோட்டை நோக்கியே ஓடுகின்றன.
இந்த வண்டிகளில் பயணம் போகக் கூடியவர்கள் அனைவருமே மக்கள் வாக்குகளில்தான் வெற்றி பெறுவார்கள். ஆனால், அவர்களின் ஆட்சிகள் மக்களுக்கானதாக அமையுமா?
தமிழ்நாட்டிற்கு தாம் தந்த, எத்தகைய அமைதியை வளமையை முன்னேற்றத்தை, இந்தியாவிற்கு ஜெயலலிதா தரப் போகிறார்?. பழைய திரைப்படப் பாடல் ஒன்று சாந்தமுலேகா சௌக்கியமுலேது என்ற தெலுங்கு வரிகளை ஒலிக்கும். அமைதி இல்லை. சுகம் இல்லை.
பரமக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட தலித்துகள், தர்மபுரியில் தாக்குதலுக்குள்ளான தலித்துகள், மரக்காணத்தில் குறிவைக்கப்பட்ட தலித்துகள் நிம்மதியாக இல்லை. கவுரவத்துடன் சமத்துவத்துடன் வாழ நினைக்கும் தலித்துகளுக்கு அமைதியும் இல்லை. நிம்மதியும் இல்லை.
தமிழ்நாட்டின் இசுலாமிய சிறுபான்மையினர் ஒரு வழியாக தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டுவிட்டனர். மக்கள் தொகைக்குப் பொருந்தாத அளவுக்குச் சிறைகளில் உள்ளனர். பெங்களூருவில் குண்டு வெடித்தால், நெல்லை மேலப்பாளையத்தில், கோவையில் இசுலாமியர்கள் கைது செய்யப்படுவார்கள். பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு முன்பு இசுலாமிய என்ற அடைமொழியைச் சேர்த்து அய்க்கிய அமெரிக்கா உலகின் மீது திணித்ததை, இந்தியா ஆரத் தழுவிக் கொண்டது.
திண்பொருள் மென்பொருள் சேர்ந்து இருப்பதுபோல், வன்மையான இந்துத்துவாவும் மென்மையான இந்துத்துவாவும் இணைந்தே செயல்படுகின்றன. இசுலாமியர்க்கெதிரான பழி சுமத்தும் வேட்டையில், தமிழகம், இந்திய ஒருமைப்பாட்டின் மீது சத்தியம் செய்து செயல்படுகிறது.
நல்ல வேலைகளும் வருமானமும் தராமல், நீதி நெறிகள் அறங்கள்படி நடக்காமல், தமிழ் சமூகம் ஏராளமான குற்றவாளிகளை உருவாக்குகிறது. 2011ல் தாம் ஆட்சிக்கு வந்தவுடன் குற்றவாளிகள் எல்லாம் வெளி மாநிலங்களுக்கு ஓடிவிட்டதாக ஜெயலலிதா பெருமை பேசினார்.
ஓராண்டு ஈராண்டு சாதனைப் பட்டியலில், ஜெயலலிதா, தேசிய குற்ற பீரோ பதிவுகளில் தமிழகம் முந்திக் கொண்டு முன்னேறுகிறது என்பதைச் சேர்க்காமல் விட்டுவிட்டார். முப்பொழுதும், தமிழகமெங்கும் கொலை கொள்ளை வழிப்பறி நடக்கின்றன. சாதனைக்குரியவை என்று சொல்லப்பட்ட இரண்டாண்டுகள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் 3,231 கொலைகள் நடந்துள்ளன.
விரும்பியவரைக் காதலிக்க முடியாது, அச்சமற்ற சுதந்திரத்துடன் வாழ முடியாது என ஆதிக்க சக்திகளால் 19ஆம் நூற்றாண்டுக்குத் தள்ளப்படும் பெண்களுக்கு நிம்மதி உண்டா? அமைதி உண்டா? நாசகரமான கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என விடாப்பிடியாகப் போராடுவதற்காக லட்சக்கணக்கான வழக்குகளைச் சந்திக்கும் மக்களுக்கு என்ன அமைதி நிம்மதி இருக்கிறது?
தாது மணல் ஆற்று மணல் மாஃபியாக்கள், முதலாளித்துவ அரசியலோடு, ரியல் எஸ்டேட்டோடு தொடர்புடைய, பஞ்சாயத்து உள்ளிட்ட பொதுப் பணத்தை சூறையாடும் குற்றக்கும்பல்கள் சுதந்திரமாக உலாவும்போது, முன்னாள் டிஜிபி வீட்டின் முன் முருங்கைக் கீரை பறித்தவரைப் பிடித்து உள்ளே போட, மீசையை முறுக்கிக் கொண்டு பத்து பேர் கொண்ட தனிப்படையை அமைத்தது தமிழக காவல்துறை. டாஸ்மாக் கடைகளால் பதின்பருவத்திலிருந்து மூத்த வயது வரை குடிப்பழக்கத்திற்கு ஆளாகி சீரழிந்து அமைதியையும் மக்கள் இழப்பது, கழகங்களால் தமிழகத்துக்கு தரப்பட்ட கொடையாகும்.
அமைதியை மீட்க, ஜெயலலிதாவிற்கு ஒருவர் அற்புதமான முன்னுதாரணமாக இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல்நிலைய எல்லைக்குள் குற்றமய நடவடிக்கைகள் அதிகரிக்க தீய ஆவிகளே காரணம் எனக் கருதிய ஆய்வாளர் மாரிமுத்து, தீய ஆவிகளை விரட்டி அமைதியைக் கொண்டு வர, ‘சிவாச்சாரியார்களைக்’ கொண்டு வந்து ‘கணபதி ஹோமத்தை’ காவல் நிலையத்திற்குள் நடத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு அமைதி திரும்ப, இந்தியாவெங்கும் அமைதி திரும்ப, எத்தனை கணபதி ஹோமங்கள் எத்தனை சிவாச்சாரியார்கள் தேவை எனக் கணக்கெடுக்கும் வேலையை ஜெயலலிதா தினமணி, தினமலர் நாளேடுகளுக்குத் தரலாம்.
வளமை, முன்னேற்றம். இந்த வார்த்தைகள், இந்தியா ஒளி வீசுகிறது எனச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்ட பாஜகவை, நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு, 150 நாட்கள் வேலை ஓராண்டில் உறுதி செய்யப்பட்டதா?
ரூ.148 நாள் கூலி உறுதி செய்யப்பட்டதா? வீடற்றவர்களுக்கு வீட்டுமனை தரப்பட்டதா? கல்வி மருத்துவம் போக்குவரத்து கட்டுப்படியாகிறதா? தொடர்ச்சியாய் மின்சாரம் இருக்கிறதா? முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்தவர்களிலிருந்து லயோலா கல்லூரி மாணவர்கள் வரை, ஜனநாயகம் இருப்பதாக ஒப்புக்கொள்வார்களா? ஒப்பந்த, பயிற்சி தொழிலாளர்கள், தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும் தொழிலாளர்களிடம், வளமை முன்னேற்றம் அமைதி எனப் பேசினால், அவர்கள் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை ஊற்றுவதாக இருக்காதா?
ஆனால் ஜெயலலிதா ஆட்சியில், ஹுண்டாய் போன்ற பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளுக்கு, ஆதிக்க சாதியினருக்கு, கிராமப்புற மேட்டுக்குடியினருக்கு, நிதி சூதாட்ட ஒட்டுண்ணிகளுக்கு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகளுக்கு சாந்தம் சௌக்கியம் முன்னேற்றம் எல்லாமே உண்டு. ஜெயலலிதா, தமிழ்நாட்டைப்படுத்துகிறபாடு, இந்தியாவிற்கு நிச்சயம் வேண்டாம்.
ஜெயலலிதா, நாளை மோடி - பாஜக - தலைமையிலான தேஜமுன்னணிக்கு ஆதரவு தர மாட்டார் என இகக, இககமாவால் சொல்ல முடியுமா? நாளை அமையப்போகும் புதிய மத்திய அரசில், பெரும்தொழில் குழும எதிர்ப்பு மக்கள் சார்பு கொள்கைகள் இருக்க வேண்டும் என ஜெயலலிதா வாதாடுவாரா? இகக, இககமா இந்தப் பிரச்சனைகளில் ஜெயலலிதா பற்றி தமிழக மக்களுக்கு உறுதி கூறுவது இருக்கட்டும்; நமது இடதுசாரி அணிகளுக்கு அம்மா பற்றி தயக்கமின்றி உறுதி கூற முடியுமா?
தோழர் டி.கே. ரங்கராஜன் போன்றவர்கள் ஜெயலலிதாவிற்கு மதச்சார்பற்ற மக்கள் சார்பு நவதாராளவாத எதிர்ப்பாளி முகமூடிகளை அணிவிக்காமல் இருப்பது நல்லது. ஜெயலலிதா சாமர்த்தியமானவர். அவர் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டிஸ்கர், டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றிக் கருத்து சொல்லவில்லை.
தோழர்கள் எவ்வளவு முயன்றாலும், ஜெயலலிதாவையும் நாசகரமான நவதாராளவாதக் கொள்கைகளையும் பிரித்து நிறுத்த முடியாது.
முதலாளித்துவப் பொருளாதாரம், முதலாளித்துவ அரசியல், இந்துத்துவா, சாதி ஆதிக்கம் என்பவை அஇஅதிமுகவின் அடிப்படைப் பண்புகள். இவற்றை எதிர்த்து சுதந்திரமாக இடதுசாரி ஜனநாயக சக்திகள் போராடுவதன் மூலம்தான், தமிழக மக்களுக்கு இந்திய மக்களுக்கு, அமைதி வளமை முன்னேற்றம் கிடைக்கும். ஜெயலலிதாவின் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தேச விரோதமானது, மக்கள் விரோதமானது.
தோழர்கள் தொற்றிக் கொண்டு இடம் பிடிக்கப் பார்க்காமல் இருப்பது நல்லது. டெல்லியில், ஓர் ஆம் ஆத்மி கட்சிக்கு இடம் உண்டென்றால், தமிழக மக்கள், தமக்காகப் போராடும் இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு வாய்ப்பு தராமலா போய்விடுவார்கள்?