COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 15, 2014

மக்கள் பிரச்சனைகள் மீதான போராட்டம்தான் ஒரே பொருத்தப்பாடு

2011ல் முதலமைச்சராக பதவியேற்றபோது, ஜெயலலிதாவுக்கு நிரந்தர முதலமைச்சர் கனவு மட்டும் இருந்தது. அதனால் வந்த சில நாட்களில் லட்சியம் 2023 திட்டம் முன்வைத்து அடுத்த இரண்டு தொடர் ஆட்சி காலங்கள் பதவியில் தொடரும் தனது லட்சியத்தை வெளிப்படுத்தினார். இப்போது அவருக்கு பிரதமர் கனவுக்கான புறநிலை கனிந்திருப்பதாக அஇஅதிமுககாரர்கள் சொல்கிறார்கள்.

முதலாளித்துவ கட்சிகள் பலவீனமானவை. ஏனென்றால் அவை நாட்டின் பெரும்பான்மை நலன்களுக்கு எதிரானவை. எதிரானவை என்பதை மூடிமறைக்கவும் முடியாதவை. அந்த பலவீனமான கட்சிகள் தங்களுக்குள் போட்டி போடுகின்றன. பலவீனமானவற்றுள் மிகவும் பலவீனமான காங்கிரஸ் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பதில் போட்டி.

முதலாளித்துவத்தில் பாட்டாளி வர்க்கம் மட்டும் அல்ல, முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்ளும்.
போட்டியில் மோடி எதிர் ஜெயலலிதா என்று வந்துவிடுமா?

துரதிர்ஷ்டவசமாக த.பாண்டியனும் சோ ராமசாமியும் கிட்டத்தட்ட ஒரே விதமான கருத்தை வெளியிடுகிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரசை ஜெயலலிதா மட்டுமே எதிர்ப்பதாகவும், இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர் துயர்தீர்க்க ஜெயலலிதா மட்டுமே ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுப்பதாகவும் அதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவை ஆதரிப்பதாகவும், இககமாவும் இதே கருத்து கொண்டுள்ளதாகவும், இகக, இககமா, அஇஅதிமுக மத்தியில் புரிதல் இருப்பதாகவும் மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கம் அமையும் என்றும் சொல்கிறார்.

ஜெயலலிதா பிரதமர் என்பதை மட்டும்தான் அவர் சொல்லவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் விசயத்தில் அவர் கட்சி சொன்னதற்கேற்ப நடக்க வேண்டியிருந்தது. நிதிஷ் கூட இன்று அவர்களுக்கு மதச்சார்பற்ற தலைவர். அங்கும் போட்டி அதிகம்.

சோ, ஆம் ஆத்மி கட்சியை ஒரு கை பார்த்துவிட்டு மோடி பிரதமர் ஆகவில்லை என்றால் ஜெயலலிதாவை, பாஜக பிரதமர் ஆக்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்க காந்தியவாதி தமிழருவி மணியன் பெருமுயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஆர்எஸ்எஸ்காரரான சோ ராமசாமி, பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொல்வதை தவிர்க்கிறார். இப்போது ஜெயலலிதா பாஜக பக்கம் போனால் தமிழ்நாட்டில் கரை காண முடியாது என்று ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகரான சோவுக்கு தெரியும். ஆயினும் ஜெயலலிதாவும் பாஜக சக்திதான் என்பதை பாஜகவுக்கு நினைவுபடுத்துகிறார். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்று முன்வைக்காமல், ஜெயலலிதா இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதாவை ஆதரித்துக் கொள்ளலாம் என்கிறார். ஆனால், ஒரு விசயம் தெளிவு. மோடி பிரதமர் ஆகமுடியும் என்று ஆர்எஸ்எஸ் சக்திகளுக்குக் கூட நம்பிக்கை இல்லை.

மோடி பிரதமராவது பற்றிய தனது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய சோ ராமசாமி, கம்யூனிசத்தின் பொருத்தப்பாடின்மை  பற்றியும் கருத்து தெரிவித்திருக்கிறார். சோவியத் சரிவு, சீன சந்தை பொருளாதாரம், மேற்கு வங்கம் என்று கூறியது கூறுகிறார். தமிழ்நாட்டில் இகக, இககமா கட்சிகள்தான் இன்று ஜெயலலிதாவுக்கு மதச்சார்பற்ற முகம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று, மோடியால் முடியாமல் போனால், ஜெயலலிதா மதவாத பாஜகவின் ஆதரவுடன் பிரதமராக வேண்டும் என்பது சோ ராமசாமியின் கணக்கு.

ஜெயலலிதா நாளை என்ன செய்வார் என்று சோ ராமசாமி ஒளிவுமறைவின்றி சொல்லியுள்ளார். நாளை அவர் பாஜக பக்கம் சாய்வார். நாளை அது ஜெயலலிதாவை பாஜக ஆதரவுடன் பிரதமர் ஆக்குவது என்பது வெளியே சொல்லப்படுவது. மோடி பிரதமராவதில் சிக்கல் ஏற்பட்டால் ஜெயலலிதா மோடி பக்கம் நிற்க வேண்டும் என்பது சொல்லாமல் புரிந்து கொள்ளப்படுவது. தமிழ்நாட்டு பாஜகவுக்கும் பதட்டம் வேண்டாம், ஜெயலலிதா நம் பக்கம் என்ற ஆறுதலும் இதில் உள்நிற்கிறது.

தேமுதிகவை தன் பக்கம் ஈர்க்க காங்கிரசும் பாஜகவும் திமுகவும் முயற்சிகள் மேற் கொண்டிருக்கும்போது, இந்திய அரசியல் பற்றி பேசியுள்ள சோ ராமசாமி தேமுதிக பற்றி பேசவில்லை. விஜயகாந்த் தனது கட்சியினருக்கு எந்த கட்சியையும் விமர்சித்து பேச வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.

சோ ராமசாமியும் அது போன்ற ஒன்றை பின்பற்றியிருக்கிறார். ஏனென்றால், மோடி பிரதமராவது பற்றி நம்பிக்கையின்மை இருப்பது போலவே பாஜகவுக்கு தமிழக அரசியலில் உள்ள இடம் பற்றியும் பாஜகவினருக்கே நம்பிக்கையின்மை தான் இருக்கிறது. பாஜக இங்குள்ள எந்த கட்சியுடனும் கூட்டணி அமைத்தாலும் அமைக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கடந்த காலம், நிகழ்காலம் எதிர்காலம் எதுவும் இல்லை.
சென்ற முறை காங்கிரசின் ஆதரவு கனிமொழிக்குப் போனதால் கைதவறிப் போன மாநிலங்களவை இடம், இப்போது விஜயகாந்த் கதவை தட்டுகிறது.

கருணாநிதி தாமாக முன்வந்து திமுகவுக்கு இருக்கிற ஒரே மாநிலங்களவை இடத்தை தேமுதிகவுக்கு தருகிறேன் என்கிறார். தொல்.திருமாவும் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான அஇஅதிமுகவும் திமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை எனும்போது சிறிய கட்சிகள் ஏன் அந்த முடிவெடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அதாவது, அவர்களுக்கு தெரியாததா விஜயகாந்துக்கு தெரியும் என்று கேட்கிறார்.

விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பார் என்பதைவிட இடதுசாரிகள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. இகக, இககமா கட்சிகள் சோ ராமசாமிக்கு புரட்சியின் பொருத்தப்பாடு பற்றி பதில் சொல்ல வேண்டும்; ஜெயலலிதா நாளை என்ன செய்வார் என்று சோ ராமசாமி சொல்லி உள்ளதைப்பற்றி தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

முதல் பிரச்சனையில் பதில் சொல்ல வேண்டுமானால், ஜெயலலிதா பக்கம் திரும்பாமல் சொல்ல வேண்டும். இரண்டாவது பிரச்சனையில், ஜெயலலிதா ஆட்சி பற்றி அதிகாரபூர்வ இடதுசாரி கட்சிகள் இத்தனை நாட்கள் சொல்லி வந்த அனைத்துக்கும் பொருத்தப்பாடு இல்லை எனச் சொல்ல வேண்டும்.

என்றும் பொருத்தப்பாடு இருக்கிற ஒரே விசயம் மக்கள் பிரச்சனைகள் மீதான போராட்டங்கள்தான். மக்கள் பிரச்சனைகளை அரசியல் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டு வருவதுதான். 2014க்கு தயாராகும் தமிழ்நாட்டின் கட்சிகளில் எவையும் இன்று தமிழக உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி, இந்தப் பிரச்சனைகளில் உன் நிலை என்ன என்று சொல், உன்னுடன் கூட்டணி அமைக்கிறேன் என்று வேறு எந்த கட்சியிடமும் கேட்கவில்லை. எத்தனை சீட்டு, என்ன வெற்றி வாய்ப்பு என்று மட்டுமே கணக்குகள் போடப்படுகின்றன.

ஆனால், வாக்கு கேட்டு வரும்போது, எங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் உங்கள் பதில் என்ன என்று சீற்றத்தில் இருக்கும் தமிழக மக்கள் அவர்களை கேட்பார்கள். அந்த கேள்விகளுக்கு முறையான பதில் சொல்ல முடியாமல் திராவிட கட்சிகள், முதலாளித்துவ ஆளும்கட்சிகள் திணறும்போது, அதிகாரபூர்வ இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு திணறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உகந்ததில்லையா?

Search