COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 1, 2014

மோடி நிகழ்வுப்போக்கு: தேவை ஒரு சக்திவாய்ந்த இடதுசாரி பதில் - திபங்கர் பட்டாச்சார்யா

நரேந்திர மோடியை அதிகாரபூர்வமாக பிரதமர் வேட்பாளராக அறிவித்த பிறகு பாஜக எதிர்கொண்ட முதல் முக்கிய சோதனை மத்தியபிரதேசம், சட்டிஸ்கர், ராஜஸ்தான் மற்றும் டில்லி மாநில சட்டமன்ற தேர்தல்கள் தான்.

இந்தத் தேர்தல்களில் பாஜக சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. மத்தியபிரதேசம் மற்றும் சட்டிஸ்கரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பெரும் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரசிடம் இருந்து ராஜஸ்தானை தட்டிப் பறித்துள்ளது; முதல் முறையாக தேர்தலில் நின்ற ஆம் ஆத்மி கட்சி டில்லியில் தெளிவான பெரும்பான்மை பெறுவதை தடுத்துள்ளது.

ராஜஸ்தானிலும் மத்தியபிரதேசத்திலும் பாஜக பெற்றுள்ள வெற்றிகள் எதிர்பார்த்ததை விட அழுத்தமானதாக இருந்தது; மற்ற இரண்டு மாநிலங்களிலும் கட்சி பெற்ற வாக்குகள் தாக்கம் செலுத்தும் விதம் இருந்தாலும், கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர் மற்றும் அறிவிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று சொல்ல முடியுமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

மோடியின் உயர்தோற்ற பிரச்சாரமும் தீவிரமான உரைவீச்சும் சட்டிஸ்கரிலும் டில்லியிலும் எந்தத் தாக்கமும் உருவாக்கவில்லை என வாதிட முடியும். ஆனால், இந்த இரண்டு மாநிலங்களில் மோடி விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் பாஜக இன்னும் மோசமான வாக்குகள் பெற்றிருக்கும் என்று மோடி ஆதரவாளர்களும் சொல்ல முடியும்.

மோடி உண்மையில் தேர்தல்ரீதியாக எவ்வளவு தாக்கம் உருவாக்குகிறார் என்பதை தேர்தல் ஆய்வாளர்களும் ஊடக ஆய்வாளர்களும் பார்த்துக் கொள்ளட்டும்; பிரதமர் - மோடி என்ற பிரச்சாரத்தின் அரசியல் உள்ளடக்கம் மற்றும் திறன்மிக்க விதத்தில் எதிர்கொள்ள வேண்டியுள்ள சங் போர்த்தந்திரத்தின் வெவ்வேறு பரிமாணங்கள் பற்றி நாம் கவனம் குவிக்க வேண்டும்.

பாஜகவில் மெத்த அனுபவம்மிக்க தலைவரான அத்வானி உட்பட, சில மூத்த பாஜக தலைவர்கள் தெரிவித்த அதிருப்தி கருத்துக்கள் இருந்தபோதும், மொத்த சங் பரிவாரத்தின் கேள்விக்குட்படுத்தப்படாத தலைவராக மோடி எழுந்துள்ளார். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதால் செயலூக்கம் பெற்று, மதவெறி துருவச் சேர்க்கை சூழலை உருவாக்கவும் இசுலாமியர் எதிர்ப்பு வெறியை தூண்டிவிடவும் ஒவ்வொரு சங் அமைப்பும் மிகைநேரப் பணியாற்றுகிறது.

முசாபர்நகர், இந்த விஷத்தனமான மதவெறி போர்த்தந்திரத்தின் மிகவும் கவலையளிக்கும் விளைவாகும்; ராஜஸ்தானிலும் கிராமப்புற டில்லியின் சில பகுதிகளிலும் சமீபத்திய தேர்தல்களின் வாக்கு விவரங்களில் தெளிவாக தெரிவதுபோல், இது கணிசமான ஜாட் மக்கள் தொகை இருக்கும் பகுதிகளில் பாஜகவுக்கு செழிப்பான தேர்தல் விளைவை அறுவடை செய்யத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.

1980களின் இறுதிப் பகுதியிலும் 1990களின் துவக்கத்திலும் மதவெறி அணிதிரட்டல் போர்த்தந்திரத்தை, பாஜக, பிரதானமாக அயோத்யாவைச் சுற்றி கட்டியெழுப்பியது. சங் குண்டர்கள் பாப்ரி மசூதியை தகர்த்த பிறகு, ராமர் கோயில் பிரச்சனை, முன்பிருந்த உணர்வெழுச்சி தன்மையை இழந்துவிட்டிருக்கலாம்.

இப்போது பாஜகவின் மதவெறி பிரச்சாரம், சமகாலத்திய இசுலாமியர் விரோத தப்பெண்ணங்கள் மற்றும் அய்க்கிய அமெரிக்காவால் தூண்டப்படும் இசுலாமிய பயம் காட்டும் அரசியல் ஆகியவற்றைச் சுற்றியே அமைந்துள்ளது. ‘காதல் ஜிஹாத்’ பற்றிய பிரச்சாரம், பங்களாதேஷில் இருந்து குடியேறுபவர்கள் வருகை பற்றிய பயம் காட்டுவது, பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவது, இசுலாமிய மக்கள் தொகை பெருக்கம் என்ற புனைவு, பயங்கரவாதத்தின் பெயரால் இசுலாத்தை சாத்தான்மயமாக்குவது போன்றவை, பாஜகவின் தற்போதைய மதவெறி பிரச்சாரத்தின் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

போலி மதச்சார்பின்மை, இசுலாமியர்களை திருப்திப்படுத்துவது, வாக்கு வங்கி அரசியல் என்று பாஜக அழைப்பதற்கு எதிரான விடாப் பிடியான பிரச்சாரத் தாக்குதல் இவற்றுடன் சேர்ந்து கொள்கிறது. காங்கிரசின் மென்மையான மதவாதம் மற்றும் பல பாஜக அல்லாத கட்சிகள் மதச்சார்பின்மை பெயரால் கடை பிடிக்கும் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றிலிருந்தும் பாஜக பிரச்சாரம் வலுப்பெறுகிறது.

மதச்சார்பின்மையை மலினமானதாக்குவதும் மதிப்பிழக்கச் செய்வதும் போலி மதச்சார்பின்மைக்கு எதிரான பாஜகவின் தொடர் தூற்றலுக்கு கூடுதல் வலுசேர்ப்பதில்தான் எப்போதும் முடியும்.


நமது ஒன்பதாவது கட்சி காங்கிரசில் நாம் சரியாக குறிப்பிட்டதுபோல், மோடி - பிரதமர் என்ற பிரச்சாரம் சங் பரிவார் அமைப்புக்களுடன் நின்றுவிடவில்லை. அது மொத்த கார்ப்பரேட் துறையாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மோடிக்கான கார்ப்பரேட் கூக்குரல் சில காலமாகவே கட்டமைக்கப்பட்டு வருகிறது; முதலீட்டாளர்களின் அடுத்தடுத்த ‘துடிப்பான குஜராத்’ மாநாடுகளில் அது வளர்ந்து வருவதை நம்மால் கேட்க முடிகிறது. கார்ப்பரேட் விருப்பம், மேலோங்கிய ஊடக கருத்தை எப்போதும் வடிவமைக்கிறது; பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் 2014 மக்களவை தேர்தல்களை அய்க்கிய அமெரிக்க அதிபர் தேர்தல்கள்போல் காட்டுகின்றன; மோடி ஏற்கனவே ஊடகத்தின் பெரும் கவனத்தை பெற்றிருக்கும்போது, அவருடைய பேரணிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடியிடம் இருந்து ஓர் இரட்டை பரிசை எதிர்பார்க்கின்றன: எந்த நல்வாழ்வு நடவடிக்கைச் சுமையும் இல்லாமல் கார்ப்பரேட் நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவாக, பொருளாதார கொள்கை சமநிலையை தீர்மானகரமாக மாற்றுவார் என்றும், கார்ப்பரேட்களுக்கு அளிக்கப்படும் விதிவிலக்குகள் மற்றும் கார்ப்பரேட் சூறையாடலுக்கு எதிரான போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவார் என்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.


தற்போதைய சூழல், மோடிக்கான இந்த கார்ப்பரேட் - மதவெறி கூக்குரலை இன்னும் பரவலாக எதிரொலிக்கச் செய்கிறது. பெருவாரியான மக்கள் பிரிவினரை பாதிக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம்; இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிலான ஓர் ஊழல் அரசாங்கம் என்று பரவலாக மதிப்பிடப்படும் ஓர் அரசாங்கத்தை கொண்டுள்ளோம்.

காங்கிரஸ் கட்சி, கடுமையான நம்பகத்தன்மை மற்றும் தலைமை நெருக்கடியால் அதிகரிக்கப்பட்டுள்ள, ஒரு கடுமையான சரிவு கட்டத்தின் ஊடே சென்று கொண்டிருக்கிறது. அதனால், செயல்படக்கூடிய ஓர் அரசாங்கம், முடிவெடுக்கக் கூடிய ஒரு தலைமை ஆகியவற்றை மக்கள் தேட வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, மோடி ஆதரவு முகாம், மக்களின் அனைத்து துன்பங்களுக்கும் ஒரேபதில் மோடி என்று அவரை விற்கப் பார்க்கிறது.

காங்கிரசின் இருப்புகள் இதுவரை இல்லாத அளவு குறைவாக இருப்பதை அறிந்துகொண்ட மோடி தனது உரை வீச்சு மூர்க்கத்தை அதிகரித்துள்ளார். மன்மோகன் சிங் அரசாங்கம் வெளியேற்றப்பட வேண்டும் என்று மட்டுமின்றி, ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை’ உருவாக்க அழைப்பு விடுக்கிறார். ‘அச்சம், பசி, ஊழல்’ ஆகியவற்றை போக்குவோம் என்பது  பாஜகவின் முழக்கமாக இருந்த காலம் இருந்தது; மோடி, காங்கிரஸ் தான் அனைத்து தீங்குகளுக்கும் வேர் என்று வண்ணம் பூசி காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு பிரதானமாக பாஜகவின் ஆதாயமாக மாறும் என்று அவர் நம்புகிறார்.

பிராந்திய கட்சிகளுக்கு இந்தியாவில் கணிசமான அரசியல் வெளி உள்ளது; பாஜகவுக்கு இன்னும் பல மாநிலங்களில் தேர்தல்ரீதியான இருத்தல் இல்லை. ஆனால், பல பிராந்திய கட்சிகளுடன் அரசியல் நடத்த முடியும் என்று பாஜகவுக்கு தெரியும். சில காலத்துக்கு முன் தேஜமுவில் அது 20க்கும் மேற்பட்ட கட்சிகளை கொண்டிருந்தது. இப்போது மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றால், தேஜமு கடந்த காலத்தில் கிடப்பில் போட்டுவிட்ட நிகழ்ச்சிநிரலை மீண்டும் திறந்து பார்க்கிறார்.

ஜம்முவில் ஒரு பேரணியில் பேசியபோது அரசியல் சாசன பிரிவு 370 பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சொல்கிறார். பாஜக, தான் வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கையை முக்கியத்துவம் வாய்ந்த விதத்தில் உயர்த்த முடிந்தால், அது கூட்டாளிகளை மீண்டும் ஈர்க்க முடியும் என்று, ஒரு தேசிய அளவிலான கூட்டணியை மீண்டும் உருவாக்க முடியும் என்று - அதுவும் கடந்த காலத்தைப் போலல்லாது, பாஜகவின் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு நெருக்கமான பொருளில் - நம்புகிறது.

பாஜக தற்போது மேலெழுந்து வரும் கட்டத்தை, முந்தைய கட்டத்தில் இருந்து வேறுபடுத்தும் இன்னும் சில முக்கிய காரணிகள் உள்ளன. 1980 மற்றும் 1990களில் அத்வானியும் வாஜ்பாயியும் பாஜகவை கட்டி வழிநடத்தியபோது, அது சாரத்தில் ஓர் எதிர் கட்சியாக இருந்தது. உண்மையில், இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து, ராஜீவ் காந்திக்கு பொங்கி வழிந்த தேசியவாத அனுதா பத்தின் பின்னணியில், பாஜக நாடாளுமன்றத்தில் வெறும் 2 இடங்களே பெற்றது. ஷா பானு தீர்ப்பில் காங்கிரஸ் செய்த சமரசம், ராஜீவ் காந்தி மீதான ஊழல் புகாருடன் இணைந்து கொண்டு, பாஜக முன்நகர இடமளித்தது; பாஜகவும், தேசிய அரசியல் அரங்கில் பெரிய அளவில் அறுதியிட்டுக்கொள்ள, ராமன் என்ற உணர்வெழுச்சிமிக்க இதிகாச தோற்றத்தை பயன்படுத்தியது.

காந்தி பயன்படுத்திய நல்லாட்சி தந்த மன்னன் என்ற பிம்பமல்லாமல் போர் வீரன் ராமன் என்ற பிம்பத்தை பயன்படுத்தியது. 1998ல் அது மத்தியில் ஆட்சிக்கு வந்தபோதும் அரசதிகாரத்தின் மீது அதற்கு பெரிய அளவிலான பிடிமானம் எதுவும் இல்லை; அது பிரதானமாக ஓர் எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடிப்பதாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த பத்தாண்டுகளில், பாஜக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி இருக்கையில் அமர நேர்ந்திருந்தாலும், குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் சட்டிஸ்கரில் மாநில ஆட்சியில் இருந்தது. பீகார் போன்ற ஒரு பெரிய மாநிலத்தில் எட்டு ஆண்டுகள் ஆட்சியை பங்கிட்டுக் கொண்டது. குஜராத்தில் கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையிலான பிரித்து நிறுத்தும் கோடு கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது; மோடி, அரசு எந்திரத்தை ஓர் தனிநபர் அமைப்புபோல் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். ஆட்சி நடத்தும் ஒரு கட்சியாக பாஜக உறுதிப்படுவது கட்சியின் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. இந்த உறுதிபடுத்துதல் அரசு அதிகாரத்தை முறைப்படுத்தப்பட்ட விதத்தில் தவறாக பயன்படுத்தியதன் மூலம் பெருமளவில் எட்டப்பட்டது.

மனிதப் படுகொலை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த தொடர் போலி மோதல் படுகொலைகள் ஆகியவற்றில், குஜராத் காவல் துறையை மோடி ஒரு தனிப்படைபோல் நடத்தியது, அத்துமீறி ஊடுருவி கண்காணிப்பது, வேவு பார்ப்பது ஆகியவை அவரது அரசாங்கத்தால் தொடர்ந்து நடத்தப்படுவது, சர்தார் வல்லபபாய் படேலின் வழிமரபை போற்றுவது என்ற பெயரில் தன்னை முன்செலுத்திக் கொள்ளும் மோடியின் திட்டத்தை நிறைவேற்றுவதில் கட்சியும் அரசாங்கமும் முழுமையாக ஒன்றிணைந்து இருப்பது ஆகிய அனைத்தும், அதிகாரத்தை தனித்து நிறுத்துவது தொடர்பான அரசியல் சாசன விதிகளை, குறுகிய கட்சிக் கட்டுப்பாட்டில் இருந்து பிரிக்கப்பட்ட, அரசு பொறுப்பேற்றல் மற்றும் சுதந்திர செயல்பாடு பற்றிய கோட்பாடுகளை முற்றிலும் புறந்தள்ளி, ஒரு கொடுங்கோன்மை தலைவரைச் சுற்றிய ஒரு சிறிய கும்பலின் கையில் அனைத்து அதிகாரமும் குவிந்திருக்கும் பாசிச போக்கை காட்டுகின்றன.


நாட்டு விடுதலை இயக்கத்தில், பழங்குடி மக்கள் கலகங்களில் துவங்கிய பல்விதமான தேசிய    விழிப்புணர்வு போராட்டங்களில், 1857 முதல் விடுதலைப் போரில், சங் பரிவாரத்துக்கு எந்த வேரும் இல்லை என்று மோடிக்கு தெரியும். எனவே, வரலாற்றை தன்வயமாக்கி, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் திட்டத்துக்கு அதை பயன்படுத்த அவர் வெறித்தனமாக முயற்சி செய்கிறார்.

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்ததினம், மோடி தன்னை முன்செலுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வாக குஜராத்தில் மாறியது; இப்போது அதே போன்ற ஒன்று சர்தார் படேல் வழிமரபு தொடர்பாகவும் நடத்தப்படுகிறது. மோடி பகத்சிங் வழிமரபுடன் கூட விளையாடப் பார்த்தார்; ஆனால் பகத்சிங்கின் புகழ்மிக்க புரட்சிகர ஏகாதிபத்திய எதிர்ப்பு வரலாறும், மதச்சார்பின்மை, சோசலிசம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின், உழைக்கும் மக்களின் உண்மையான சுதந்திரம் ஆகிய போர்த்தந்திர இலக்குகளுடன் இணைக்கப்பட்ட முற்போக்கு தேசியவாதத்தை சக்திவாய்ந்த விதத்தில் முன்னிறுத்தியதும் பகத்சிங்கை பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க விதத்தில் பொருத்தமற்றவராக ஆக்குகிறது.

மோடியின் கார்ப்பரேட் மதவெறி பாசிச வகையை எதிர்ப்பதற்கு வேண்டுமானால், பகத்சிங் இந்திய இளைஞர்களுக்கு உழைக்கும் மக்களுக்கு ஜனநாயக அறிவாளிப் பிரிவினருக்கு ஓர் உள்ளாற்றல்மிக்க ஆயுதமாக இருக்க முடியும்.

சர்தார் படேல் என்ற திருவுருவை மிகவும் சிறப்பாக கையாள, தான் பொருத்தமானவர் என்று மோடி நம்புகிறார்;  படேலின் வலுவான வலதுசாரி பார்வை, எதேச்சதிகார அணுகுமுறை, மதவாதம் என்ற பிரச்சனையில் திட்ட வட்டமான நிலை எடுக்காதது, அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பது, காந்தி, நேரு மற்றும் நேரு குடும்பத்தினரால் ஆதிக்கம் செலுத்தப்படுகிற காங்கிரஸ் கடவுளர் கூடத்தில் படேலுக்கு அங்கீகாரம் இல்லை என்று கருதப்படுவது ஆகியவை இதற்கு காரணமாக அமைகின்றன.

குஜராத்தில் சுதந்திரத்துக்கு முந்தைய விவசாயிகள் இயக்கத்தில் எழுந்த படேல், இந்தியாவின் சுதந்திரத்துக்காக பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய படேல், காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக ஆர்எஸ்எஸ் ஐ தடை செய்த படேல், இந்தியா போன்ற, ஒரு கண்டத்துக்குரிய பரிமாணங்கள் கொண்ட ஒரு நாட்டை ஒன்றுபடுத்துவதன் சிக்கல்களை புரிந்து கொண்ட படேல், இந்தியா போன்ற அளவு, பன்முகத் தன்மை, சிக்கலான தன்மை கொண்ட ஒரு நாட்டை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவதற்கான வரலாற்று அல்லது கருத்தியல் பலம் இல்லாத சங் பரிவாரத்துக்காக உருவாக்கப்பட்டவர் அல்ல. ஆனால், இந்தியாவின் வளமையான இயற்கை செல்வாதாரங்களின் மீது கண் வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்போல், இந்திய வரலாற்றின் வெவ்வேறு அம்சங்களை பறித்துவிட மோடி வெறித்தனமாக முயற்சி செய்கிறார்.

வரலாற்றில் சில வேர்களை தனது என்று சொல்லப்பார்க்கும் பாஜகவின் முயற்சி, மோடியை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக நிறுத்த அது எடுக்கும் முயற்சிகளை போன்றது. ஒவ்வொரு பேரணியிலும், கடின உழைப்பால் மட்டுமே அரசியலில் பெரிதாக சாதித்த ஒரு சாதாரண தேநீர் விற்பவர் என்று மோடி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.

ஆர்எஸ்எஸ்ஸ÷ம் அதன் அனைத்து அமைப்புக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து பிரதமர் இருக்கைக்குச் செல்லப் போகிற முதல் தலைவர் மோடியாகத்தான் இருப்பார் என்று பிரச்சாரம் செய்கின்றன.

இவ்வளவு காலமும் குஜராத்தின் செல்வச் செழிப்பை, இந்தியாவின் மிகவும் பின்தங்கிய, அனைத்தும் பறிக்கப்பட்ட பகுதிகளை ஏளனம் செய்ய பயன்படுத்திய ஒரு மனிதர் திடீரென ஒரு சாதாரண தேநீர் விற்பவராக மாறிவிட்டார்; பிற கட்சிகளின் சில இறுமாப்பு கொண்ட தலைவர்கள், தேநீர் விற்பவர்கள் பிரதமராக முடியாது என்று சொல்லி மோடியின் விளையாட்டில் சிக்கிக் கொள்கின்றனர். இந்தியாவின் நிலப்பிரபுத்துவ சக்திகள் மற்றும் கார்ப்பரேட் வட்டங்களின் முதல் விருப்பத் தேர்வான பாஜக, தேநீர் விற்பவர் என்ற மோடியின் பழமையான கடந்த காலத்தை பயன்படுத்தி வறியவர் ஆதரவு முகமூடி போட்டுக் கொள்ளப் பார்க்கிறது.

பாஜகவின் காதைத் துளைக்கும் உரைவீச்சு மற்றும் மூர்க்கத்தனமான மோடி - பிரதமர் என்ற பிரச்சாரம் ஆகியவற்றுக்கு திறன்மிக்க எதிர்ப்பை கட்டமைக்க, பாஜகவின் போர்த்தந் திரம் மற்றும் மோடி நிகழ்வுப்போக்கின் அடியோடுகின்ற பலம் மற்றும் பலவீனம் தொடர்பான அம்சங்களை புரிந்துகொள்ள வேண்டும்.

பலவீனமான, நம்பகத்தன்மையிழந்த காங்கிரஸ் மோடிக்கு பதில் தரமுடியாது என்பது தெளிவு; உண்மையில் காங்கிரஸ் தான் இன்று மோடியின் பலத்தின் மிகப்பெரிய ஆதாரம். அனைத்து விதமான சந்தேகத்துக்குரிய மற்றும் சந்தர்ப்பவாத சக்திகளுடன் ஒரு மகா கூட்டணி என்பதை முன்னிறுத்துவது பாஜகவின் பொறிக்குள் சிக்கிக்கொள்வதே ஆகும்.

மக்கள் பிரச்சனைகளை சக்திவாய்ந்த விதத்தில் முன்வைப்பது, ஊழல், கார்ப்பரேட் சூறையாடல், கடுமையான பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிரான, அய்க்கிய அமெரிக்காவின் அறிவுரைப்படியான பொருளாதார மற்றும் அயலுறவு கொள்கைகளில் இருந்து விடுத லைக்கான, ஒடுக்குமுறை சக்திகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக ஜனநாயகம் மற்றும் நீதியை உறுதியாக பாதுகாப்பதற்கான, துணிச்சலான, விடாப்பிடியான போராட்டம் மட்டுமே மூர்க்கத்தனமான பாஜகவுக்கு ஓர் உண்மையான அரசியல் சவாலை முன்னிறுத்த முடியும்.

மோடி வெறும் ஒரு பழைய ஆர்எஸ்எஸ் மனிதர் அல்ல; அவர், இருபதாண்டுகால கார்ப்பரேட் ஆதரவு, ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளின் சாரமான விளைபொருள். கொள்கைகளிலும் அரசியலிலும் வரையறை மாற்றம் கோரும் ஓர் உணர்வுமிக்க போராட்டம் மட்டுமே மோடியின் கார்ப்பரேட் மதவெறி நிகழ்ச்சிநிரலை அம்பலப்படுத்தி எதிர்கொள்ள முடியும்.

டில்லியின் குறிப்பான சூழலில் ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வெற்றி இந்த போர்த் தந்திரத்தை மெய்ப்பிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி விடாப்பிடியான கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துகிற கட்சி அல்ல; அது இதுவரை முன்வைத்துள்ள நிகழ்ச்சிநிரலை, அடிப்படையான சமூக - பொருளாதார மாற்றம் என்றல்ஷலாமல், ஆட்சி முறையை, சட்டரீதியான கட்டமைப்பு முறையை நவீனப்படுத்துவது என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

ஆனால், கட்சி உருவாக்கம், தேர்தல் போராட்டம் என்ற இயக்கப் போக்கில், ஜன் லோக்பால் என்ற ஒற்றை கருப்பொருளில் இருந்து, குடிமை வசதிகள், நகர்ப்புற வறியவர்கள் மற்றும் கீழ்நடுத்தர பிரிவினரின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது போன்ற தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு அது தனது நிகழ்ச்சிநிரலை விரிவுபடுத்த நேர்ந்தது.

காங்கிரசுக்கு எதிராக தனது பிரச்சாரத்தில் கவனம் குவித்த ஆம் ஆத்மி கட்சி, பாஜகவுக்கு எதிராகவோ, அதன் கார்ப்பரேட் - மதவெறி அரசியல்வகை, பிற்போக்கு கண்ணோட்டம், ஒடுக்குமுறை ஆட்சி ஆகியவற்றுக்கு எதிராகவோ, குறிப்பாக குரல் எழுப்பவில்லை. ஆனால், இப்போது ஆம் ஆத்மி கட்சி புறநிலையில், பாஜகவுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ளது; அது பாஜக விசயத்தில் திட்டவட்டமாக நிலை எடுக்காத ஒரு நிலையை இனியும் தொடர முடியாது.வரலாற்று ரீதியாக, நாட்டு விடுதலை போராட்டத்திலும் விடுதலைக்குப் பிந்தைய அரசியலிலும் கம்யூனிஸ்டுகளே, மேலோங்கிய காங்கிரஸ் அல்லாத நீரோட்டமாக இருந்தனர்.

இன்று காங்கிரசின் வீழ்ச்சியில் பயன்பெறும் ஆகப்பெரிய கட்சியாக பாஜக எழுந்துள்ளது என்றால், அது இடதுசாரிகளின் மிகப்பெரிய தோல்வியை காட்டுகிறது. இந்த தோல்விக்கான அடிப்படை காரணம், மேற்கு வங்கத்தில் இடதுசாரி தலைமையிலான ஆட்சி அரசியல்ரீதியாக தடம் புரண்டதும், ஆளும் வர்க்க கட்சிகளுடன் விமர்சனமற்ற வால்பிடிக்கும் கூட்டணிகள் அமைக்கும் சந்தர்ப்பவாத அரசியலும்தான் என்று இடதுசாரிகளுக்குள்ளேயே பல குரல்கள் இன்று ஒப்புக்கொள்கின்றன. இந்த ஒப்புதலை தத்துவத்திலும் நடைமுறையிலும் ஒரு மாற்று வழித்தடமாக மாற்றுவது மட்டும்தான், உழைக்கும் மக்களின் ஜனநாயக அறிவாளிப் பிரிவினரின் வெகுமக்கள் அணிதிரட்டல் மூலம் இடதுசாரி புத்தெழுச்சிக்கு இட்டுச் செல்லும்.

தற்போதைய சூழல், புரட்சிகர இடதுசாரிகளின் சக்திவாய்ந்த அறுதியிடலுக்கு போதுமான அளவு உள்ளாற்றல் கொண்டிருக்கிறது. நெருக்கடியில் இருந்தும் காங்கிரசின் சரிவில் இருந்தும் பாஜக ஆதாயம் பெற முடியும் என்றால், மாற்றமும், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் அழுகிப்போன ஆட்சி முறைகளுக்கு மாற்றும் கோரும் வெகுமக்கள் வேட்கை மீது செயலாற்றி ஆம் ஆத்மி கட்சி போன்ற ஒரு புதிய கட்சி தனது இருத்தலை உணரவைக்க முடியும் என்றால், அனைத்துத் தடைகளையும் கடந்து, சமூக மாற்றத்தின் வலுவான ஆதாரமாக இருந்து வருகிற புரட்சிகர இடதுசாரி சக்தியும், மக்களின் இன்னும் வலுவான அணிதிரட்டல் மற்றும் அறுதியிடலுக்காக, பாசிச பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக கூடுதல் திறன்மிக்க கருத்தியல் - அரசியல் தலையீட்டுக்காக, சூழலில் இருந்து வலுப்பெற வேண்டும்.

Search