COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, January 1, 2012

11


களம்
மாலெ கட்சி மாநில ஊழியர் கூட்டம்
தீப்பொறி சந்தா சேர்ப்பு இயக்கம்
டிசம்பர் 18 தோழர் வினோத் மிஸ்ரா நினைவு தினத்தன்று மாலெ கட்சி மாநில ஊழியர் கூட்டம் கோவையில் நடைபெற்றது. 2012 மார்ச்சில் மாநில மாநாட்டை நோக்கிய வேலைகள், தீப்பொறி இருவார இதழாக வெளிவருவது, சந்தா சேர்ப்பு இயக்கம், புதிதாக உருவாகியுள்ள மாவட்ட கமிட்டிகள் என அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்னணியில் கூட்டம் நடந்தது.
டிசம்பர் 18 அழைப்பை தோழர் ஆசைத்தம்பி வாசித்தார். அழைப்பின் மீது நடந்த விவாதத்தை தொகுத்து தோழர் குமாரசாமி பேசினார். மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் நிறைவுரையாற்றினார்.
தீப்பொறி சந்தா சேர்ப்பு இயக்கம் குறித்து கூட்டத்தில் தோழர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர்.
தோழர் பழனிவேல், சென்னை : நான் டிஅய்டிசி ஆலையில் உள்ள தொழிற்சாலை கமிட்டியின் பொறுப்பாளர். 3 ஆண்டுகளுக்கு முன், எங்கள் சங்க நிர்வாகிகள் 10 பேர் மட்டும் தீப்பொறி சந்தாதாரர்களாக இருந்தோம். 2009ல் 50 என்றும், 2010ல் 100 என்றும் சந்தாதாரர் எண்ணிக்கை மாறியது. இப்போது, டிசம்பர் 7 அன்றுதான் சந்தா சேர்ப்பு வேலைகள் துவங்கின. டிசம்பர் 10க்குள் 150 சந்தா தாண்ட முடிந்தது. டிசம்பர் 10 முதல் 15 வரை இன்னும் 102 பேரை சந்தாதாரர் ஆக்கினோம். இன்னும், 100 பேரை மாநில மாநாட்டிற்குள் சந்தாதாரர் ஆக்க முடியும்.
தோழர் பொன்ராஜ், தூத்துக்குடி: எங்களுக்கு 50 சந்தா இலக்கு. ஆனால், புதிதாக 25 சந்தா இப்போதே தருகிறோம். பழைய சந்தாதாரர்களை வீடுவீடாக சந்தித்து, இந்த மாதத்திற்குள் புதுப்பித்து விடுகிறோம். சென்னையில், கோவையில் செய்ய முடியும் என்றால், என்னால் செய்ய முடியாதா? இதை நான் சவாலாக ஏற்கிறேன். நானும் 1000 பேரை சந்தித்து சந்தா சேர்க்க முடிவு செய்துள்ளேன்.
தோழர் பாலசுப்பிரமணியம், கோவை : கோவையில் சில மாதங்களுக்கு முன் 200 சந்தா சேர்க்க முடியும் என நினைத்தோம். தீப்பொறி மாதம் இரண்டு இதழ் புதிய முறையில் சந்தா சேர்ப்பது என்ற முடிவை கேட்டுக் கொண்டு கோயம்பத்தூரில் 500 என முடிவெடுத்தோம். 11 தோழர்கள் குழுக்களை அமைத்துக் கொண்டார்கள். துறைவாரியாக, நண்பர்கள் வட்டம் பிற கட்சியினர் என ஒவ்வொருவரும் பட்டியல் எடுத்துக் கொண்டு 10 நாட்களில் 550 பேரை தீப்பொறி சந்தாதாரர் ஆக்கியுள்ளோம். மாநில மாநாட்டிற்குள் கோவை மாவட்டமும் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக 1000 இலக்கை கடப்போம்.
தோழர் மோகன், சென்னை: நான் அம்பத்தூர் பகுதியில் குடியிருப்பு பகுதி வேலைகள் செய்து வருகிறேன். கடந்த 4, 5 நாட்களில் சிறுவியாபாரிகள், வீட்டு வேலை செய்கிற பெண் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் தீப்பொறியில் வெளியாகிற செய்திகள் பற்றி பேசி 56 சந்தாக்கள் இதுவரை சேர்த்துள்ளேன். கடை, நிறுவனங்கள் நடத்தும் வர்த்தகர்கள் 22 பேர் இதில் அடக்கம். என்னால், டிசம்பர் இறுதிக்குள் 100 என்ற இலக்கை அடைய முடியும்.
தோழர் ஆசைத்தம்பி, புதுக்கோட்டை : இந்த கூட்டத்தில் தீப்பொறி இயக்கம், மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. சென்னை, குமரி, கோவை தோழர்கள் மிகவும் இயல்பாக ஒருவரை ஒருவர் முந்த போட்டியிடுகிறார்கள். மக்களிடம், மக்களுக்கான பத்திரிகையை கொண்டு சேர்ப்பதில், கம்யூனிஸ்ட் தோழர் களிடம் இருக்கிற இந்த உணர்வை நம் கட்சியால் மட்டுமே வழிநடத்த முடியும். இந்த விவாதம் எதிர்கால கட்சி வேலைகளை அளவுரீதியாகவும் பண்பு ரீதியாகவும் மாற்றியமைக்க உதவும். எங்களால் டிசம்பருக்குள் 100 சந்தாவும், ஜனவரியில் 100, மாநில மாநாட்டிற்குள் 300 என்ற எண்ணிக்கையில் சந்தாக்களை சேர்க்க முடியும் என்று உறுதியளிக்கிறேன்.
தோழர் அந்தோணிமுத்து, குமரி: கம்யூனிஸ்ட்கள் எப்போதும், வாய்ப்புக்களை கைப்பற்ற வேண்டும். புதிய மாவட்ட கமிட்டி உருவாகியுள்ள குமரியில் 1000 பேரை தீப்பொறி படிக்க வைப்பதற்கான இயக்கம் முன்னேறி வருகிறது. மாவட்டக் கமிட்டியில், 20 முதல் 250 சந்தா வரை முன்னணி தோழர்கள் தமக்குத் தாமே இலக்கு வைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். டிசம்பரில் 500, ஜனவரியில் 1000 தருவோம். மாநில மாநாட்டிற்குள் சென்னை தோழர்களை தாண்டி 2000 என போட்டியில் முன்னணியில் நிற்போம்.
தோழர் இளங்கோவன், தஞ்சை, நாகை: 6 சந்தாக்களே இருந்தன. நேற்று, இன்று நடக்கிற கூட்டங்களில் சந்தா சேர்ப்பதில் தோழர்கள் பின்பற்றும் முறைகளை விளக்கினார்கள். இதைப் பார்க்கும் போது எங்கள் மாவட்டக் கமிட்டியிலும், ஏன் இப்படி நாமும் செய்யலாம் என்ற நம்பிக்கை வலுவடைந்துவிட்டது. மாநில மாநாட்டிற்குள் எங்களாலும் 300 சந்தா சேர்க்க முடியும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
தோழர் இராமச்சந்திரன், கரூர்: தொழிலாளர் முன்னணிகளை, படித்த பிரிவினரை பார்த்து 50 சந்தா சேர்க்க முடியும்.
தொகுப்பு: எஸ்.சேகர்

Search