COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, January 1, 2012

5


சிறப்புக் கட்டுரை
தோழர்கள் சிங்காரவேலருக்கும் சீனிவாசராவுக்கும் செவ்வணக்கம்!
தோழர் சிங்கார வேலர். தமிழகத் தொழிலாளர் இயக்கத்தின், மக்கள் அரசியல் இயக்கத்தின், முன்னோடித் தோழர். சென்னை கடற்க ரையில், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு வாழ்த் திசைக்க, இந்தியாவிற்கே, மே தினத்தை அறிமுகப்படுத்தியவர். சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வோடு, அநீதியான சாதிய சமநிலையை தலைகீழாக புரட்டிப் போடப் புறப்பட்டவர். பெரியாரோடு பயணம் செய்த அதே வேளை, பெரியாரையும் தாண்டி பயணம் செய்ய வேண்டிய அவசியத்தை, எடுத்துரைத்த பொதுவுடமை முன்னவர். சாதி ஆதிக்கம் ஒழிக என ஓங்கிக் குரல் எழுப்பிய சிங்காரவேலர், வர்க்க சுரண்டலையும் ஒடுக்கு முறையையும், அவற்றிற்கு அடிப்படைக் காரணமான தனிஉடமையையும் வேரறுக்க அறைகூவல் விடுத்தவர். திராவிட இயக்கம் புறநிலைரீதியாகக் கொண்டிருந்த முற்போக்கு அம்சங்களோடு உறவாடிய அதே நேரம், அதன் எல்லைகளை, அது தடம் மாறினால் வருங்காலத்தில் சீரழியும் ஆபத்துக்கள் பற்றித் தீர்க்கதரிசனம் சொன்னவர்.
தோழர் சீனிவாசராவ். கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர். அடிமைச் சங்கிலிகளைத் தகர்த்தெறிய உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற பாட்டாளிவர்க்க சர்வதேசப் பார்வையுடன், கம்யூனிஸ்ட் அரசியலுடன், தமிழகத்தில் களம் கண்டவர். கோபதாபங்கள், உணர்ச்சிப் பெருக்கு போன்றவற்றிற்கெல்லாம் ஆளான மனித கம்யூனிஸ்ட்தான் அவர். ஆனால் ரஷ்ய சீன கம்யூனிஸ்ட்கள் போல், நக்சல்பாரி புரட்சியாளர்கள் போல், நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கு முன்னும் பின்னும், தெலுங்கானா, தெபாகா, புன்னபுர வயலார் போல், தஞ்சையில், பொன்மலையில், சுதந்திரமான செங்கொடி அரசியலுடன், கிராமப்புற வறியவர்கள், தொழிலாளர்கள் போராட்ட இயக்கங்களைக் கட்டியெழுப்பிய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை, தோழர் சீனிவாசராவ் மூலம் உருவகப்படுத்துகிறோம்.
அன்றைய கம்யூனிஸ்ட்கள், முதலாளித்துவ அரசியல் - எதிர் -பாட்டாளிவர்க்க நிலையில் இருந்து போராடும் கம்யூனிஸ்ட் அரசியல் என்ற நிலையெடுத்தனர். தலித் நிலமற்ற வறியவர்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருந்து வந்த குத்தகை விவசாயிகள் என்ற பிரிவினரை, துணிந்து அணிதிரட்டி, சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும் முடிவு கட்டிய, நிலப்பிரபுத்துவத்துக்கும், காங்கிரசுக்கும் சவால்விட்ட, பொருளுள்ள நிலச் சீர்திருத்தங்கள், குடிமனை உரிமைகள் போன்றவற்றிற்குப் போராடி வெற்றிகளையும் ஈட்டிய, நமது கம்யூனிஸ்ட் பாரம்பரிய வேர்களைக் கண்டறிந்து, சமகால தேவைகளுக்கு ஏற்ப மீட்க, தோழர் சீனிவாசராவ் நமக்கு அடையாளச் சின்னமாக இருப்பார்.
சிங்காரவேலர், சீனிவாசராவ் மரபுகளை உயர்த்திப் பிடித்து, தமிழ்நாட்டுத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தை ஆற்றலுள்ள அரசியல் சக்தியாகக் கட்டியெழுப்புவதற்கு உறுதியேற்க, அதற்கான பாதை வகுக்க, வழிவகைகள் காண ஏஅய்சிசிடியு, குமரி மாவட்டம் குளச்சலில் 2012 ஜனவரி 28, 29 தேதிகளில் தனது ஏழாவது மாநாட்டை நடத்துகிறது.
சூழலில் பொதிந்துள்ள வாய்ப்புகள்
ஏகாதிபத்திய புலியை காகிதப் புலியாக்க, நியுயார்க்கில் லண்டனில் பாரிசில் ஏதன்சில் போராட்டங்கள் நடக்கின்றன. வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம், சுரண்டல் ஒடுக்குமுறை இல்லாத ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் பற்றிய ஒரு முற்போக்கான கனவை, லட்சியப் பார்வையை, விவாதப் பொருளாக்கியுள்ளது. துனிμயா எகிப்து மக்களின் எதிர்ப்புக் குரல்கள், ஸ்கோவிலும் எதிரொலிக்கின்றன.
நைல் வோல்கா மீது அமர்ந்து வந்த எதிர்ப்பு அலைகள், கங்கை மீதும் மகாநதி மீதும் கூட பயணம் செய்கின்றன. இந்திய நீதித் துறை, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பெரு நிறுவனப் பேராசை அமெரிக்காவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது போல், இந்தியாவிலும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது.
ரிலையன்சின், கிருஷ்ணா கோதாவரி படுகை எண்ணை வயல்கள் சம்பந்தமாக, இந்தியாவின் 26வது கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராயின் அறிக்கை, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள உற்பத்தி பங்கீடு ஒப்பந்தங்கள், ‘மீண்டும், பெருநிறுவனங்களுக்கும் கொள்கை உருவாக்குபவர்களுக்கும் இடையிலான தீய அச்சை அம்பலப்படுத்தியுள்ளனஎனச் சொல்கிறார். பெட்ரோலிய அமைச்சக செயல்பாட்டை விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும், ‘ஒப்பந்தங்களுக்கு தங்கத்தால் முலாம் பூசி லாப பெட்ரோலியத்தை முழுமையாக கபளீகரம் செய்ததற்காகரிலையன்சுக்கு தண்டனை வழங்க வேண்டும் என, சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. காங்கிரஸ் பாஜக கட்சிகள், முறையே 2ஜி, சுரங்க ஊழல்களால், பெருநிறுவன கொள்ளையரின்கட்சிகளாய் அம்மணமாய் நிற்கின்றன.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா, துவக்கத்தில் இருந்தே மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்ளத் துவங்கிவிட்டார். அவரது கட்டணம்/விலையில்லா சலுகைகள், பால் விலை பேருந்து கட்டண உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு அறிவிப்பு ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் சீற்றத்தில் இருந்து, அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சசிகலா கும்பலை கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டேன் என்று அவர் சொன்னாலும், இவ்வளவு நாட்கள் பரமக்குடி படுகொலை வரை அந்த கும்பல் ஆட்சி அதிகாரத்தின் மீது செலுத்திய செல்வாக்கு, அவற்றிற்கு இடம் கொடுத்தது தொடர்பான கேள்விகள், ஜெயலலிதாவை விரட்டுகின்றன. பல்வேறு பிரச்சனைகளில் தமிழக மக்கள் போராடுகிறார்கள். கட்சிகள் பின்னே ஓடுகின்றன.
தமிழகம் நகர்மயமாகிறது, தொழில்மயமாகிறது. உழைக்கும் மக்கள் வாழ்வோ, துன்பமயமாகிறது. ஜெயலலிதாவின் விஷன் 2025 தொலைநோக்குப் பார்வை 2025) மக்களுக்கு விஷம் 2025 ஆகவே உள்ளது. பெருமுதலாளிகளை கிராமப்புற மேட்டுக்குடியினரைக் கொழுக்க வைக்கும் அரசின் கொள்கைகளுக்கு, பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து எதிர்ப்புக்களைக் கட்டமைக்க இயக்கமாக்க, ஏராளமான வாய்ப்புக்களைச் சூழல் தாராளமாக வழங்கும் பின்னணியில், ஏஅய்சிசிடியுவின் ஏழாவது மாநாடு நடைபெறுகிறது.
காத்திருக்கும் கடமைகளை காண்பதற்கு முன், கடந்து வந்த பாதையைப் பார்த்துவிடுவோம்.
கடந்துவந்த பாதை முற்றுகையிடப்பட்டவர்களின் முற்றுகை
மாருதி, ஹூண்டாய், எம்ஆர்எஃப், ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டங்களின் சமகாலத்தில்தான், ஏஅய்சிசிடியு வழிநடத்தும் பிரிக்கால் போராட்டமும் தொடங்கியது. 750 யூனிட் தொழிலாளர்களின் வேலை நீக்கம், 98 தொழிலாளர்கள் 8 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை சிறைவாசம், 105 தொழிலாளர்கள் வேலை நீக்கம், 73 தொழிலாளர்கள் மீது வேலை நீக்கக் கொலைவாள் தொங்கும் அபாயம், சிறுபான்மையினரோடு அடம் பிடித்து ஒப்பந்தம் போட்டு ஊதிய உயர்வை முடக்கிய நிர்வாகத்தின் மூர்க்கம், நக்சலைட் - மாவோயிஸ்ட் முத்திரை குத்தி தலைமையை அப்புறப்படுத்த பின்னப்பட்ட கொலை வழக்கு சதிவலை, காலம் தாழ்த்து வதன் மூலம் ஒற்றுமையை வர்க்க உணர்வை அரித்துப் போக வைக்கும் முயற்சி இவை எல்லாவற்றையும் முறியடிக்க, மூலதனத்தின் ஒவ்வொரு வியூகத்திற்கும் பாட்டாளி வர்க்கத்தின் சொந்தமான அதே நேரம் மாற்று வியூகம் அமைத்து, அங்கீகாரம் பெற்றுள்ளது ஏஅய்சிசிடியு சங்கம். இப்போது, ஏஅய்சிசிடியு, இதுதான் 2012ல் தமிழக தொழிலாளர் வர்க்கம் கண்ட உன்னத ஒப்பந்தம் என்ற வகையில் பிரிக்காலில் ஓர் ஒப்பந்தம் போட, பேச்சுவார்த்தைகள் என்ற போராட்டத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறது.
மக்கள் போராட்டங்களின் தலைவர்களாக எழ, பிரிக்கால் தொழிலாளர்கள் அக்கம்பக்கமாக முயன்று கொண்டுள்ளனர். இயன்றதை மட்டுமே செய்வது, புலம்புவது, தற்காப்பு நிலையில் இருந்து தயங்கி மயங்கிச் செயல்படுவது என்ற இன்றைய தொழிற்சங்க இயக்க பண்புகளை பிரிக்கால் போராட்டம் ஆக்கபூர்வமாக மறுதலித்துள்ளது. தொழிற்சங்கப் போராட்டத்தைத் திறன்வாய்ந்த வகையில் நடத்துவது, அதே நேரம் தொழிலாளி வர்க்க அரசியலிலும் ஊன்றி நிற்பது என்ற இரண்டையும் இணைப்பதில் ஏஅய்சிசிடியு முன்மாதிரி படைத்துள்ளது.
தொழிற்சங்க இயக்கத்திற்கு ஒரு புதிய உந்துதல்
தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி, ஆயிரக்கணக் கானவர்களை ஈடுபடுத்தி, லட்சக்கணக்கானவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. கோவை ஊரக காவல் கண்காணிப்பாளரும், மாநில காவல் தலைவரும் அனுமதி மறுத்தபோது, நீதிமன்றத்தில் போராடி அனுமதி பெற்று, தமிழக தொழிலாளர் வர்க்க பிரச்சனைகளை சட்டமன்றம் விவாதிக்க வேண்டும் என கோவையில் இருந்து சென்னை வரை நடைபயணம் நடத்தினோம். 2010ன் ஆகப்பெரிய மேதின பேரணியை நாமே நடத்தினோம். பெரும்பான்மை தொழிலாளர் ஆதரவு பெற்ற சங்கத்திற்கு தொழிற்சங்க அங்கீகாரம், பயிற்சியாளர் நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காத்தல் ஆகிய கோரிக்கைகளை, தமிழகத் தொழிற்சங்க நிகழ்ச்சிநிரலில் முன்நிறுத்த ஏஅய்சிசிடியு பெரும் பங்காற்றியது.
ஏஅய்சிசிடியுதான் நோக்கியாவுக்கு ஒரு ரூபாய் குத்தகைக்கு ஒரு ஏக்கர் நிலம் என்பதை அம்பலப்படுத்தியது. பெருமுதலாளிகளுக்கு நிலம், நீர், மின்சாரம், வரி ஆகியவற்றில் என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டன, எவ்வளவு வேலைவாய்ப்புக்கள் எத்தகைய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டன என்பதை எடுத்துச் சொல்லி, வெள்ளையறிக்கை வெளியிடக் கோரினோம்.
சட்டதிருத்த மசோதா எல்ஏபில் 47/2008க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற, மத்திய அரசை நேரில் சந்தித்து நிர்ப்பந்தம் கொடுத்தோம். வீட்டுமனை, குடியிருப்பு கோரிக்கைகளை முன்நிறுத்தினோம். தொடரும் விபத்துக்கள் பற்றி பொதுத் தணிக்கை வேண்டுமென வலியுறுத்துகிறோம். பெண் தொழிலாளர்கள் பற்றி சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோருகிறோம்.
மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையை, புதிய சட்டமன்றம் கட்டத் துவங்கிய காலத்திலிருந்தே நிகழ்ச்சிநிரலாக்க முயல்கிறோம். கோஆப்டெக்சில் தற்காலிகத் தொழிலாளர்கள் நிரந்தரம், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமைதூக்குவோர் வாக்குரிமை, பொருளுள்ள நிரந்தரம் ஆகியவற்றை முன்னிறுத்துகிறோம். பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதை - எதிர் - மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதை என்ற விவாதத்தை முன்னிறுத்த முயற்சிக்கிறோம். திமுக ஆட்சி யின்போது அஇஅதிமுகவோடு நடைபோடப் பார்ப்பது, அஇஅதிமுக ஆட்சி நடக்கும்போது திமுக அல்லது தேமுதிகவோடு ஒட்டிக் கொள் வது என்ற வால் பிடிக்கும் வர்க்க சரணாகதிப் பாதையை நிராகரிப்பதில் ஏஅய்சிசிடியு தொடர்ந்து பங்காற்றுகிறது.
மக்கள் விரோத திமுகவின் படுதோல்வியில், நிச்சயமாய் ஏஅய்சிசிடியு நடத்திய போராட்டங்களுக்கும் பங்குண்டு. நகர்ப்புற நாட்டுப்புற தொழிலாளர்களுக்கிடையில், ஓர் உயிரோட்டமான பிணைப்பு ஏற்பட விடாப்பிடியாய் முயற்சிக்கிறோம்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் பயனாளிகள் அல்ல போராளிகள் அவர்கள் மத்தியிலான வேலைகள் குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கை பிரகடனங்களுக்கு, நடைமுறையில் உயிர் தர, திருப்பெரும்புதூரை ஒரு பாட்டாளி வர்க்கப் போர்க்களமாக வரித்துக் கொள்ள, தொடர் முயற்சிகள் எடுக்கிறோம்.
காத்திருக்கும் கடமைகள்
தமிழகத்தில், விபரீதமான ஏற்றத் தாழ்வான, தொழில்மயமாக்கமும் நகர்மயமாக்கமும் நடைபெறுகின்றன. தீவிரமடைந்து வரும் விவசாய நெருக்கடி என்ற பின்னணியில், இந்த மாற்றங்கள் நடைபெறுகின்றன. தொழிலாளர்கள் என்பவர்கள் யார் யார், தொழிலாளிவர்க்கத்தின் சேர்க்கை எப்படி ஆகியவற்றில், பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
தமிழ்நாட்டில், திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் போன்ற பகுதிகளில், நவீன தொழில்நுட்பம் பன்னாட்டு இந்நாட்டு பெரு மூலதன நுழைவு கொண்ட பொருளுற்பத்தி என்ற வகைப்பட்ட தொழில்மயமாக்கம் நடந்துள்ளது. இங்கு அமைப்பாக்கப்பட்ட தொழிலில் அக்கம்பக்கமாக நிரந்தரமற்ற பயிற்சியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கூட்டு பேர உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளில், மத்திய மாநில பொதுத் துறைகளில் உள்ளாட்சி அமைப்புகளில் அக்கம்பக்கமாக தனியார் துறையைப் போலவே அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் உள்ளனர். பெல் என்எல்சி ன்வாரியம் ஆகியவற்றில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அமைப்பாகி போராடி சில வெற்றிகளை பெற்றுள்ளனர். டாஸ்மாக், சாலைப் பணியாளர்கள், மக்கள்நல பணியாளர்கள், ஒடுக்குமுறைகளைத் தாண்டி, திரும்பத் திரும்பப் போராடுகின்றனர். தொகுப்பூதிய கவுரவ ஊதிய விஷயங்கள் தொடர்கதை.
கட்டமைக்கப்பட்ட சேவைத் துறைகள் முறைசாரா சேவைத் தொழில்கள் ஆகியவையே வளரும் வேலை வாய்ப்புக்களைக் கொண்டுள்ளன. காஞ்சி, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் தாண்டி நடைபெறும் நகர்மயம், மரபுவழி பொருளுற்பத்தித் தொழில்மயம் இல்லாமலே மற்ற மாவட்டங்களில் நடக்கின்றது. தொழில்மயமாக்கத்தில் புதிய சேர்க்கை, கடலோர மாவட்ட மின்நிலையங்கள், இங்கெல்லாம் கூட்டு பேர உரிமையில்லை.
பாரம்பரியமான அமைப்புசாரா தொழில்களாக பீடி, தோல், தோல்பொருட்கள் விசைத்தறி, கைத்தறி, கட்டுமானம் போன்றவை உள்ளன. கட்டுமானத் தொழிலில் மட்டுமே ஒப்பீட்டுரீதியாக கூலி கொஞ்சம் சுமார். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள், சில சில்லறை நலப்பயன்கள் தருவதோடு நிற்கின்றன.
தமிழ்நாடு, இங்கு சமூகம் உருவாக்கிய செல்வங்களோடு ஒப்பிடுகையில், இன்னமும் குறைவான குறைந்தபட்ச கூலியே நிர்ணயம் செய்துள்ளது. கூலி முறை என்ற பிரசுரத்தில் எங்கெல்ஸ் சில தொழில்களில் ஆகக்குறைவான கூலியும், சிலவற்றில் மேலான வாழ்க்கைத் தரம் தரும் கூலியும் உள்ளன என சுட்டிக் காட்டியபின் சொல்வது, கவனிக்கத்தக்கது. ‘ஏன்? மிகவும் சுலபமாக சொல்வதென்றால், ஒரு பிரிவினருக்கு, ஒரு விதியாக அவர்களது கூலியால் அளவிடப்படும் ஓர் ஒப்பீட்டு ரீதியான உயர் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க, ஒரு சக்திவாய்ந்த அமைப்பு உதவுகிறது. மற்றொரு பிரிவினர் அமைப்பற்றவர்கள், பலவீனமானவர்கள், அவர்கள், அவர்களது வேலையளிப்பவர்களின் தவிர்க்கமுடியாத மனம் போன போக்கிலான அத்துமீறல்களுக்கு அடிபணிய வேண்டியுள்ளது; அவர்களது வாழ்க்கைத் தரம் படிப்படியாகக் குறைக்கப்படுகிறது. அவர்கள் மேலும் மேலும் குறைவான கூலியோடு வாழக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் இதுவே போதுமானது என ஏற்றுக்கொள்ளும் மட்டத்திற்கு இயற்கையாக கூலி வீழ்கிறது.’ தமிழ்நாட்டின் ஏகப்பெரும்பான்மை விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் கூலி, இப்படித்தான் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இங்கேதான், கருணாநிதியும் ஜெயலலிதாவும் கட்டணம்/விலையில்லா சலுகைகள் என அறிவிப்பதன் பின்னால் உள்ள மர்ம முடிச்சை அம்பலப்படுத்தி அறுத்தெறிய வேண்டியுள்ளது.
கூலி, தமிழக உழைக்கும் மக்களின் அடிப்படை பிரச்சினை. கூலியை உயர்த்த அமைப்பாவதும் அந்த வகையில் வலுப்பெறுவதும், கூலிப் பிரச்சினையை, அரசியல் தளத்திற்கு, அதாவது, ஒரு மாற்றுக் கொள்கை எனச் சவால் விடும் தளத்திற்கு, உயர்த்த வேண்டியுள்ளது. அமைப்புசாரா தொழிலாளி பயனாளி அல்ல. போராளி என்ற பாட்டாளி வர்க்க முழக்கம் உயிர்த்துடிப்பு பெறும் வகையில் அவர்களை அமைப்பாக்க வேண்டியுள்ளது.
அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்க்கு அக்கம்பக்கமாக உள்ள அமைப்புசாரா தொழிலாளர் பிரச்சினையில், சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாடு பொருத்தப்பட வேண்டும். சமவேலைக்கு சமஊதியம், அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். தொழிற்சங்க அங்கீகார உரிமை சட்டபூர்வமாக்கப்பட வேண்டும். வரைமுறையற்ற, தொகுப்பூதிய, கவுரவ ஊதிய, பயிற்சி, தற்காலிக, ஒப்பந்த முறைகள் என்ற மூலதனத்தின் கட்டுப்பாடற்ற சுதந்திரங்களில், உழைக்கும் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்பவர்கள், மக்கள் நலனிலிருந்து தலையிட நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.
சமூகப் பாதுகாப்பு, சமூக கவுரவம் என்ற தளங்களிலிருந்து, குடியிருக்க வீடு, தரமான கட்டணமற்ற மருத்துவம், போக்குவரத்து, கல்வி ஆகியவை தொழிலாளர் இயக்கத்தில் அடிப்படை கோரிக்கைகளாக்கப்பட வேண்டும். பணியிட கவுரவம் பாதுகாப்பு ஆகியவை சட்டபூர்வமாகவும் எதார்த்தத்திலும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
ஏஅய்சிசிடியு, இன்று தமிழகத்தில் அறியப்பட்ட ஒரு போராடும் தொழிற்சங்கமாகும். பொருளாதார சில்லறை சீர்திருத்தங்களும் நிவாரணங்களும் முதலாளித்துவ அரசுகளுக்கு மலிவானவை, ஒப்பீட்டுரீதியில் சுலபமா னவை. லாபத்தை குறிக்கோளாகக் கொண்ட முதலாளித்துவ தனியுடைமை சமூகத்தைதலைகீழாக வீழ்த்தி மக்கள் தேவைகளைநிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பொது உடைமை சமூகத்தை படைக்க வேண்டும் என்ற புரட்சிகரமான பயணத்திற்கு
தொழிலாளி வர்க்கத்தை ஈர்க்க வேண்டும், இந்த நீண்டகாலப் பணி நமது அன்றாட வேலைகளில் பிரதிபலிக்க வேண்டும். உடனடியாய், வாழ்வுரிமை ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியல் தன்மைகொண்ட சீர்திருத்தத்தங்களுக்காகப் போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டங்கள், கிராமப்புற வறியவர், விவசாயத் தொழிலாளர் போராட்டங்கள் மீதும், தாக்கம் செலுத்தும்.
இந்தப் பரந்த பார்வையுடன் கூடிய, புரட்சியைத் தொழிலாகக் கொண்ட ஒரு தலைவர் குழாம், புரட்சிக்காக நேரம் ஒதுக்கும் ஓர் ஊழியர் வரிசை, புரட்சியை நேசிக்கும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் ஒரு செயல்வீரர் பட்டாளம் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப ஏஅய்சிசிடியு ஏழாவது மாநாடு பொருளுள்ள விவாதங்கள் நடத்தி விளைவுகளை நோக்கிய முடிவுகள் எடுக்கட்டும்.

Search