மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை இழிவுபடுத்துவது சாதி ஆதிக்கத் திமிரே!
என்.கே.நடராஜன்
நக்கீரன் அலுவலகம் அதிமுகவினரால்
தாக்கப்பட்டது கண்டனத்துக்கு உரியது. நக்கீரனில் வெளியான செய்தி, சம்பவங்கள்
உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சி நமக்குத்
தேவையில்லை. ஆனால், மாட்டுக்கறி சாப்பிடுவது குறித்த ஒரு விவாதம் முன்னுக்கு
வந்துள்ளது. மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள்
கீழானவர்கள் என்றக் கருத்து மேல்சாதி ஆதிக்க
(பார்ப்பனிய கருத்து) கருத்தாகும். இப்போது நடைமுறையில் பார்ப்பனர்கள் சிலர் உட்பட
எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் மாட்டுக்
கறி சாப்பிடுகிறார்கள். மாட்டுக்கறி சாப்பிடுவதும், சாப்பிடாததும் அவரவர் விருப்பம்.
மனிதனின் உணவுப் பழக்கவழக்கங்கள்
மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. ஆரம்பத்தில் காய்கனிகளைப் பச்சையாகச் சாப்பிட்டவன்
சமைத்து சாப்பிட ஆரம்பித்தான். பின்பு புலால்
உணவுக்கு மாறினான். வரலாற்றில் பல்வேறு
கட்டங்களிலும் உணவுப் பழக்கங்கள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. இந்தியாவிலும் உணவுப் பழக்கவழக்கங்கள் மாற்றத்துக்கு
உட்பட்டு வந்திருக்கின்றன. ஆரம்ப காலத்தில்
பார்ப்பனர்களும் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள்
என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உண்டு. இந்துத்துவாவின் ஆதி ஆசானாகிய மனு ஒரு
பாசுரத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“மஹோஷம் லா மாபுஜம்
வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்
ஸத்க்ரியா சேவனம்
ஸவாது போஜனம் சூன்ருதம் வச்”
(பொருள்: ஒரு பெரிய எருதையேனும்
அது கிடைக்காதவிடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்று சுரோத்யரினுக்கு
(வேதம் அறிந்த பார்ப்பனன்) விருந்து கொடுக்க
வேண்டும். இன்சொற்களால் அவனை
மகிழ்விக்க வேண்டும்).
அன்றைய காலத்தில் மாட்டுக் கறி விருந்து
மிகச் சிறந்த விருந்தாக இருந்ததற்கு இது
ஆதாரம். பிற்காலத்தில் புத்தர், மகாவீரர்
தங்கள் பிரச்சாரத்தில் புலால் உணவு மறுப்புக்
கொள்கையை முன்வைத்தார்கள். அன்றைய காலகட்டத்தில் விவசாயப் பொருளாதாரம் மய்யமான இடத்திற்கு வந்திருந்தது. விவசாயத்தில் மாட்டைப் பயன்படுத்துவது வழக்கமாகி
விட்டிருந்தது. மாட்டைச் சாப்பிட்டால் நிலத்தில் உழ மாடு கிடைக்காமல் போய்விடும். இந்த அவசியம் கருதி மாட்டைச் சாப்பிடுவது
வழக்கொழிந்தது. புத்தர் மகாவீரரின் பிரச்சாரமும் மக்கள் மத்தியில் எடுபட்டது. பழக்கவழக்கங்களும், பண்பாடும் உற்பத்தி உறவோடு தொடர்புடையது. அதனால்தான் மாட்டுக்கறி சாப்பிடுவது ஒரு கட்டத்தில்
நிறுத்தப்பட்டது. பின்னர் இந்து மதமும் புலால்
உணவு மறுப்பை உள்வாங்கிக் கொண்டது. மாடு புனிதப்படுத்தப்பட்டது. மாட்டு மூத்திரம் கூட புனிதப்படுத்தப்பட்டது. மனுவின் காலத்தில் மாட்டுக்கறி சாப்பிடுவது புனிதமாக
இருந்தது. பிந்தைய காலத்தில் மாட்டுக்கறி
சாப்பிடுவது தீட்டாக மாறியது. மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாயினர்.
இன்றைய நவீன காலத்தில் எல்லாச் சாதிகளைச் சார்ந்தவர்களும் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள். இப்போது பல ஏழை மேல்சாதிக்
குடும்பங்களுக்கு மாட்டுக்கறி, குறைந்தவிலை
புலால் உணவு என்றாகிவிட்டது. பணக்காரர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவததால் மாட்டுக்கறி
விலை ஏறிவிட்டது என சாதாரண ஏழை
மக்களிடம் பேச்சு கூட எழுந்திருக்கிறது.
நடைமுறையில் காலாவதியாகின்ற ஒன்று, கருத்துத் தளத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கான பொருளாயத அடித்தளம் நிலவத்தான்
செய்கிறது. குலக் ஆதிக்க செல்வாக்கு, சாதி
ஆதிக்கம் ஆகியவை நீடிப்பதில் இருந்து
கருத்துத் தளத்திலும் செல்வாக்கு நீடிக்கிறது. அதனால்தான் மாட்டுக்கறி சாப்பிடுவது கீழானது என்ற கோணத்தில் எழுதுவதும், அதற்கு
எதிரான அஇஅதிமுக அடக்குமுறையும் சாதி
ஆதிக்கத்தின் கருத்தியல் செல்வாக்கே.
தமிழகத்தில் பரமக்குடியில் தலித் மக்கள்
மீதான துப்பாக்கி சூட்டின் தொடர்ச்சியாகவே, ஜெயலலிதாவையும் மாட்டுக்கறியையும்
எப்படி தொடர்புப்படுத்தலாம் என்று சாதி
ஆதிக்க உணர்வுடன் கேட்டு அஇஅதிமுகவினர் வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.