அகில இந்திய மாணவர் கழக இரண்டாவது மாநில மாநாடு நோக்கி
பகத்சிங் -
சந்திரசேகர் வழியில்
கே.பாரதி
23 வயதில் வெள்ளையனை வெளியேற்ற
தனது இன்னுயிரை துச்சமென மதித்து தூக்கு
மேடை ஏறினார் பகத்சிங்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்
கழகத்தில் மாணவர் பேரவைத் தலைவராக
வெற்றி பெற்று, புரட்சிகர மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் கழகத்தை
நிறுவியதில் முக்கியப் பங்காற்றிய தோழர்
சந்திரசேகர், படித்து முடித்து பீகாருக்குச்
சென்று வறிய மக்களுக்காக போராடியதால்
லாலுவின் நாடாளுமன்ற உறுப்பினர்
சகாபுதீனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பகத்சிங் - சந்திரசேகர் இருவரின் நோக்கமும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர் - இளைஞர், பெண்கள், தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வந்து
ஏகாதிபத்தியத்தை, முதலாளித்துவத்தை
வீழ்த்துவதே!
இருவரின் உடல்கள் இல்லையென்றாலும், இருவரின் இலட்சியங்களை, நெஞ்சில் ஏந்திப்
போராடுகிற எண்ணற்ற மாணவர்களைக்
கொண்டு, இந்தியாவில் போராடுகிறது அகில
இந்திய மாணவர் கழகம். தமிழகத்தில் தனது
இரண்டாவது மாநில மாநாட்டை பிப்ரவரி 4 அன்று சேலத்தில் நடத்தவிருக்கிறது.
மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டம்
2009யை கொண்டு வந்து 6 முதல் 14 வயது
வரை படிப்பவர்களுக்கு இலவசக் கல்வி
அளிக்கப்படும் என்றது. அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகள், அவர்கள் பெறும்
மானியத்திற்கு ஏற்ப 25% இடங்களை இலவச
கல்விக்காக ஒதுக்க வேண்டும். மற்ற உதவி
பெறாத பள்ளிகள் 25% இடங்களை நலிந்த
பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். தனியார்
பள்ளிகளில் 25% இடங்களை ஒதுக்கச் சொல்லும் மத்திய அரசு, அந்த 25% இடங்களுக்கான
கட்டணத்தை அரசே செலுத்தும் என்கிறது. நம் வரிப்பணத்தை வசூலித்து தனியாருக்குச்
செலுத்தி நமக்கே இலவசக் கல்வி! மத்திய அரசு
6 வயதுக்கு முன்பும், 14 வயதுக்கு பின்பும்
மாணவர்கள் கல்வி கற்கத் தேவையில்லை என்றே கருதுகிறது. ராணுவத்திற்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கும் அரசு, கல்விக்கு 10% கூட நிதி ஒதுக்கவில்லை.
அய்அய்டி, ஏய்ம்ஸ் (ஐஐப, அஐஐஙந) போன்ற
உயர்கல்வி நிறுவனங்களில் சாதி வெறி
தலையெடுத்து தாண்டவமாடி கடந்த 5 ஆண்டுகளில் 8 மாணவர்கள் தற்கொலை
செய்து கொண்டனர். அனைவருமே தலித்
சமூகத்தைச் சேர்ந்தவர்கள். டெல்லி ஏய்ம்ஸ்ஸில் வகுப்பில் மாணவர்கள் அறிமுகம், சாதி
பெயரைச் சொல்லித்தான். இரவு நேரத்தில்
விடுதி அறைகளை பூட்டி, வகுப்பறைகளில், உணவகத்தில் கேவலப்படுத்தி, வார்த்தைகள்
மூலம் அவமானப்படுத்தி, தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் சூழ்நிலையை உருவாக்கி, கல்விக் கூடங்களை, சாதி ஒடுக்குமுறைக்
கூடங்களாக மாற்றியுள்ளது மத்திய அரசு.
ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் பிற
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மாணவர்
சேர்க்கையில் 10% மதிப்பெண் தளர்வு, பொதுப்
பட்டியலில் சேர்க்கப்பட்ட கடைசி மாணவர் மதிப்பெண்ணில் இருந்து 10% மதிப்பளிக்ககூடாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மறுத்து வந்த ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம், மாணவர்
போராட்டங்களால் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டிவந்தது. இந்த இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தை எந்த மாணவர் அமைப்பும் எடுக்காத
சூழலில் அய்சா மட்டுமே 2008 முதல் பல
போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றம்
வரை சென்று இடஒதுக்கீட்டுக் கொள்கையை
நிலைநாட்டியுள்ளது. இந்திய மாணவர் போராட்ட வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு.
2ஜி ஸ்பெக்ட்ரம் (ரூ.1,76,000
கோடி) காமன்வெல்த் (ரூ.75 ஆயிரம் கோடி) ஆதர்ஷ்
(ரூ.80 ஆயிரம் கோடி) என காங்கிரஸ் கூட்டணி
தரப்பிலும், கர்நாடகாவில் எடியூரப்பா
தலைமையில் சுரங்க ஊழல் ரூ.18 ஆயிரம்
கோடி என பாஜக தரப்பிலும் நடந்துள்ளது. நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக மாணவர், இளைஞர் போராட்ட குரல் ஒலித்து திரண்டெழுந்தார்கள். அன்னா ஹசாரே, பிரதமர்
நீதிபதிகள் உள்ளடக்கிய ஜன் லோக்பால்
வேண்டும் என்றார். ஊழலின் ஊற்றுக்கண்
பெருநிறுவனங்களின் கொள்ளை பற்றியும்
பெருமுதலாளிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பற்றியும் பேச அன்னா ஹசாரே தயாராக
இல்லை. ஜன்லோக் பால் தாண்டி, மக்கள் பிரச்சனைகளை அய்சா கையிலெடுத்து வருகிறது.
AISA - RYA இந்தியா முழுக்க மாணவர், இளைஞர் பொது மக்கள் மத்தியில் ஊழலுக்கெதிரான பிரச்சாரத்தைக் கொண்டு சென்றது. டெல்லியில் ஆகஸ்ட் 9 அன்று 100 மணி நேர
தர்ணா போராட்டத்தை நடத்தியது.
தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு
11, 12 ஆவது வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்கு ரூபாய் 1000 முதல் 5 ஆயிரம் வரை உதவித் தொகை மற்றும்
அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி
அளிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். தேர்தலுக்குப் பிறகு சமச்சீர் கல்வி ரத்து என்ற
பெயரில் 2 மாத காலம் தமிழக மாணவர்கள்
புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு சென்று, படிக்க
முடியாமல் சித்ரவதைக்கு உள்ளானார்கள். பலகட்ட வீதி போராட்டத்திற்கு பிறகு உச்ச
நீதிமன்றம் அரசுக்கெதிராக தீர்ப்பளித்ததால்
தமிழக அரசின் திட்டம் தவிடு பொடியானது. ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு
சென்ற ஆட்சியில் கருணாநிதி நிர்ணயித்ததை
விட (பழைய கட்டணம் ரூபாய் 5 ஆயிரம்
முதல் 11 ஆயிரம் வரை) பல மடங்கு உயர்த்தி
24 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு
தண்டனை, கூடங்குளம் அணுமின்நிலைய
விசயத்தில் தனது மக்கள் விரோத, ஜனநாயக
விரோத போக்கை வெளிப்படுத்திய ஜெயலலிதா, மாணவர், இளைஞர், மக்கள் போராட்டங்கள் முன் பணிந்தார். ஆசியாவிலேயே
2ஆவது பெரிய நூலகத்தை சென்னை கோட்டூர்புரத்தில் இருந்து டிபிஅய் வளாகத்திற்கு
மாற்றுவதாக அறிவித்து முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு
பால், மின்சார, பேருந்துக் கட்டண உயர்வை
அறிவித்து தன் நன்றிக் கடனைத் தமிழக மக்களுக்குச் செலுத்தினார். பரமக்குடி சாதி ஆதிக்க
வெறிக்கு துணை போய் 8 தலித்துக்களை
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு
இரையாக்கினார்.
இன்று தமிழகத்தில், கல்வித் துறையில், மருத்துவம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கும், பொறியியல் ரூ.1 லட்சத்திற்கு
மேலும் விலை போகிறது. காசு இருந்தால்தான்
கல்வி என்பது தமிழக அரசால்
நிச்சயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
மொத்தம் உள்ள 54,947 பள்ளிகளில் அரசு
மற்றும் நகராட்சி நடத்தும் பள்ளிகள் 35,795. தனியார் பள்ளிகள் 10,896. அரசு நிதி உதவி
பெறும் பள்ளிகள் 8,266. அரசுப் பள்ளிகளில்
31,814 பள்ளிகளுக்கு போதுமான வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. வகுப்பறைக்கு 40 மாணவர்கள் எனக் கணக்கிட்டால் 6,43,000
மாணவர் மரத்தரடியில் படிக்கின்றனர். இந்த
ஆண்டில் 4,444 வகுப்பறைகள் கட்ட அரசு
திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 1,77,070
மாணவர் மரத்தடியில் இருந்து வகுப்பறைக்குள் நுழைவார்கள். மீதம் 4,65,240
மாணவர் மீண்டும் மரத்தடியிலேயே இருப்பார்கள்.
இந்த ஆண்டு தமிழக அரசால் கழிப்பறைகள், குடிநீர், சுற்றுச்சூழல் போன்ற உள்கட்டமைப்புக்காக ரூ.1082.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக மாணவர்கள் கண்காணிக்க வேண்டியுள்ளது. இந்தத்
தொகையை வைத்து தமிழகத்திலுள்ள பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது
என்பதை தமிழக முதல்வர் நன்கு அறிவார்.
இந்தியா முழுவதும் வளாக ஜனநாயகம், கருத்துரிமை மிகவும் கொடூரமான முறையில்
மறுக்கப்படுகிறது. கேள்வி கேட்கிற, போராடுகிற மாணவர்கள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் கல்வி மறுத்தல் என்ற தண்டனைக்குள்ளாகிறார்கள். ஒரு பக்கம் கல்வியைத் தனியாருக்கு தாரை வார்த்து செழிக்க வைப்பது, மறுபுறம் தனியார்மயத்தை எதிர்க்கும் மாணவர்களை ஒடுக்குவது என்ற இரட்டைத் தாக்குதல்களை மத்திய மாநில அரசுகள் தொடுக்கின்றன. தமிழகம் முழுக்க இருக்கும் எஸ்.சி., பி.சி., எம்.பி.சி., மாணவர் விடுதிகளில் சுகாதாரமான
குடிநீர், கழிப்பிட வசதி, உணவு போன்றவை
கிடைப்பது இல்லை.
5ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில்
படிக்கும் மாணவர்கள் 80%க்கும் மேல் எழுத
படிக்கத் தெரியாத நிலையில் உள்ளனர். கல்வி
கற்றுக் கொள்ளும் உரிமை மறுக்கப்படுகிறது. படித்து முடித்த பிறகு மாணவர்களுக்கு எந்த
வேலையும் நிரந்தரமில்லை. தமிழக அரசின்
தகவல்படி 5 வருடங்கள் எந்த வேலையும்
கிடைக்காமல் இருந்தால் மேலும் 3 ஆண்டுகளுக்கு வேலை கிடைக்காமல் இருக்கும்பட்சத்தில் கல்வித் தகுதிக்கேற்ப மாதம் ரூ.100 முதல் ரூ.300 வரை வேலை இல்லா காலப்படி
வழங்கப்படும். 2010 - 2011ல் 1,15,101
பேருக்கு ரூ.30.45 கோடி வேலையில்லா காலப்படி
வழங்கப்பட்டுள்ளது. ரூ.100 முதல் ரூ.300 வரை
வைத்துக் கொண்டு இன்றைய விலை உயர்வு
காலத்தில் வாழ முடியாது. இதை தமிழக
இளைஞர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டியுள்ளது. ரூ.30.45 கோடி யாருக்கு வழங்கப்பட்டது என்பதற்கான விவரங்களைத் தர
தமிழக அரசு தயாராக இல்லை.
தமிழக இளைஞர்கள் தற்காலிக, ஒப்பந்த, பயிற்சியாளர், அப்ரன்டிஸ் முறைகளில் நிரந்தரமாக்கப்படாமல் வேலை பார்க்கின்றனர். பணியிடங்களில் தொழிற்சங்க உரிமை மறுக்கப்படுகிறது. பன்னாட்டு, இந்நாட்டு நிறுவனங்களின்
பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். போராடினால், கேள்வி கேட்டால் வேலைநீக்கம், சிறைவாசம்.
10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் இரண்டு ஆட்சியிலும் நிரந்தரமாக்கப்படாமல், பந்தாடப்படுகின்றனர். டாஸ்மாக் உட்பட பல துறைகளில்
வேலை பார்க்கும் இளைஞர்கள் இன்று வரை நிரந்தரமாக்கப்படாமல் பல ஆண்டுகளாக
வேலை பார்க்கின்றனர். வேலை வாய்ப்பை
அடிப்படை உரிமையாக்க, கவுரவத்துடனான
வேலை அளிக்க, வேலையற்றோர் உதவித்
தொகை ரூ.5,000 கோரி அகில இந்திய மாணவர் கழகம் போராடுகிறது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு சமச்சீர்
கல்வி விஷயத்தில் தமிழ்நாட்டில் முதல்
எதிர்ப்புக் குரலை பதிய வைத்தது அய்சா. ரவிராஜபாண்டியன் கல்வி கட்டண உயர்வுக்கு
எதிராக, டிபிஅய் வளாகத்தில் முற்றுகைப்
போராட்டம், சமச்சீர் கல்வி கேட்டு
கோட்டை நோக்கி பேரணி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு, நூலக இடமாற்றம், விலைவாசி
உயர்வு, கூடங்குளம், சில்லறை வணிகத்தில்
அந்நிய முதலீடு போன்ற பிரச்சனைகளில்
ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, பேரணி, முற்றுகை, வகுப்புப் புறக்கணிப்பு, சுவரொட்டி
இயக்கம் என பல்வேறு போராட்டங்களை
தமிழக அரசுக்கு எதிராக நடத்தியது.
ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதியான +1, +2 மாணவர்களுக்கு உதவித்
தொகை ரூ.1000 முதல் ரூ.5,000 வரை தரப்படும் என்பதை நிறைவேற்றக் கோரி அய்சா
பேரணி நடத்தி தமிழக அரசுக்கு மனு அளித்தது. அந்த மனுவை அரசு பரிசீலிப்பதாக கடிதம் தந்தது. பின்பு மாணவர்களுக்கு உதவித்
தொகையை அறிவித்தது. 5 முதல்
14 வயது வரை
இலவச
கல்வி
தருகிற
கட்டாய
கல்வி
உரிமைச் சட்டம்
2009அய்
அமல்படுத்தக்
கோரி அய்சா
பல போராட்டங்கள்
நடத்தியது.
அதன் பிறகு தமிழக அரசு கட்டாய கல்வி உரிமைச்
சட்டம் 2009க்கு சட்டவிதிகள் இயற்றியுள்ளது.
இச்சூழ்நிலையில் பின்வரும் கோரிக்கைகளுடன் அய்சாவின் 2ஆவது மாநில மாநாடு
சேலத்தில் பிப்ரவரி 4 அன்று நடக்கிறது.
மத்திய, மாநில அரசுகளே!
O ஊழலை ஒழிக்க திறன்வாய்ந்த லோக்பால்
மசோதாவை உடனடியாக நிறைவேற்று!
O ஊழலின் ஊற்றுக்கண்ணான பெரு முதலாளிகளை கொழுக்கச் செய்யும் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை
திரும்பப் பெறு! கார்ப்பரேட் கொள்ளையர்
களை கைது செய்து சிறையில் அடை!
O ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட
வெளிநாட்டில் உள்ள ரூ.75 லட்சம் கோடி
கருப்புப்பணத்தை மீட்டு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு செலவிடு!
O கல்வி உரிமை மசோதாவை நிறைவேற்றும்
அதே நேரம் அனைத்து மாணவர்களுக்கும்
தரமான இலவச கல்வி வழங்கு!
O தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசே ஏற்று
நடத்து! கல்வி வியாபாரத்தை தடுத்து
நிறுத்து!
O பள்ளி, கல்லூரிகளில் வளாக ஜனநாயகத்தை அமல்படுத்து!
O அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர் பேரவை தேர்தல் உடனடியாக நடத்து!
O கட்டாய நன்கொடை தடைச் சட்டத்தை
அமல்படுத்து!
O SC,
BC மாணவர் விடுதிகளை சீர்ப்படுத்தி
சுகாதாரமான அறை, உணவு அளித்து
உதவித் தொகையை உயர்த்தி வழங்கிடு!
O கவுரவத்துடனான வேலைவாய்ப்பை
அடிப்படை உரிமையாக்கு!
O வேலையற்றோர் உதவித் தொகை ரூ.5000 என உயர்த்திக் கொடு!
O பரமக்குடி படுகொலையில், பதவியில்
உள்ள நீதிபதிகள் குழு நியமித்து நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடு. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம், அரசு
வேலை வழங்கு! சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு
பதிவு செய்!
O சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய
மூவரின் தூக்கு தண்டனையை ரத்து
செய்து, அவர்களை விடுதலை செய்!
O கூடங்குளம் அணுமின் நிலையத்தை
உடனடியாக இழுத்து மூடு!
தமிழகத்தில் மாணவர், இளைஞர் பிரச்சனைகளில் தலையீடு செய்வதில் பிற மாணவர்
அமைப்புக்களை நிர்ப்பந்தப்படுத்துவதில், அரசின் காதுகளில் கோரிக்கைகளைக் கேட்க
வைப்பதில் அய்சா முக்கிய பங்காற்றியுள்ளது.
தமிழகம் முழுவதும் மாணவர்களை
பள்ளி, கல்லூரிகளில் அமைப்பாக்கி, பகத்சிங்- சந்திரசேகரின் லட்சியங்களை நிறைவேற்ற, உறுதியேற்று, மாணவர் பிரச்சனைகளைப் பற்றி
விவாதித்து, முடிவெடுக்க மாணவர் கரங்களை
வலுப்படுத்த அஐநஅ தனது 2ஆவது மாநில
மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உறுதி
கொண்டுள்ளது.