பாசிசத்தின் காலடிச் சத்தம் கேட்கிறது
சசிகலா கும்பல்கள் நீக்கங்களுக்குப் பிறகு, அதை ஒட்டி செய்திகள் வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அஇஅதிமுகவினரால் தாக்கப்பட்டுள்ளது. 07.01.2012
அன்று
பத்திரிகை
அலுவலகத்தின்
காவல்
பணியில்
இருந்த
சிவகுமார்
தாக்கப்பட்டார்.
கணினி இயக்கும் அன்புமணியும் தாக்கப்பட்டார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை வேடிக்கை பார்க்கும்போதே அஇஅதிமுக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் அத்துமீறி நுழைந்து அலுவலத்தைப் பூட்டினார். பிறகு காவல்துறை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை விடுவித்தது.
பத்திரிகை பிரதிகள் எரிக்கப்பட்டன. செருப்புகள், துடைப்பங்கள் வீசப்பட்டன. ஜன்னல் கண்ணாடிகள், மேசை நாற்காலிகள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 10.01.2012
இரவு
வரை
காவல்துறை
யாரையும்
கைது
செய்ததாகத்
தெரியவில்லை.
மாறாக நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் மற்றவர்கள் மேல் வழக்குகள் பதிவு செய்து கைது செய்ய முயற்சிக்கிறது.
நக்கீரன் செய்தி அவதூறானதாக இருந்தால், ரசனைக் குறைவாகவோ அநாகரிகமாகவோ இருந்தால், ஜெயலலிதாவுக்கு வழக்கு போட, விமர்சனம் செய்ய உரிமை உண்டு. பத்திரிகை அலுவலகத்தை தாக்குவது, தாக்கப்பட்ட பத்திரிகையினரை கைது செய்வது பாசிச நடவடிக்கையாகும்.
காவல்துறையினர் ஜெயலலிதா அரசின் ஒப்புதல் இல்லாமல் பரமக்குடி வன்முறையை நடத்தியிருக்க முடியாது. அதனால்தான் ஜெயலலிதா தலித்துகள் வன்முறையாளர்கள் என்றும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டதாகவும் பேசினார். இப்போது இதுவரை மாநில முதலமைச்சர் என்ற முறையில் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது பற்றி ஜெயலலிதா கனத்த மவுனம் சாதிக்கிறார்.
சுப்பிரமணிய சாமி தாக்கப்பட்டது, வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது போன்ற தமது முந்தைய ஆட்சிக்கால பாசிச வெறியாட்டங்களுக்கு ஜெயலலிதாவும் அஇஅதிமுகவினரும் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. கருணாநிதி ஆட்சியில் பட்டப்பகலில் தினகரன் அலுவலகம் அழகிரிக்கு வேண்டிய கும்பலால் தாக்கப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்த காவல்துறை, இப்போது நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்ட போதும் வேடிக்கைப் பார்க்கிறது. தாக்குதலுக்கு வசதி செய்து கொடுத்துள்ளது என்று சொல்வது இன்னும் பொருத்தமானதாக இருக்கும்.
தமிழகத்தில் வடக்கு கடலோர மாவட்ட மக்கள் குட்டி சுனாமி போன்ற ‘தானே’ புயலால் தாக்கப்பட்டு, உரிய, உடனடியான, போதுமான நிவாரணமும் உதவியும் கிடைக்காமல், தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு, அஇஅதிமுகவினருக்கு, நக்கீரனுக்கு பாடம் புகட்டுவதுதான் முதன்மைக் கடமையாகி இருக்கிறது.
பரமக்குடி, நக்கீரன் ஆகியவற்றை அடுத்து கூடன்குளம் மீது தாக்குதல் திட்டம் தயாராவதாக தெரிகிறது. போராட்டக்காரர்கள் மீது ஏற்கனவே நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அணுமின் நிலையம் விரைந்து செயல்பட வேண்டும் என்று தா.பாண்டியன் குரல் எழுப்புகிறார். மத்திய அரசோடு சேர்ந்து மாநில அரசு கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை நசுக்கத் தயாராகிறது.
எதிர்ப்புப் போராட்டங்களுக்கு, மாற்றுக் கருத்துக்களுக்கு, ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடுவதற்கு ஒத்திகையாகவே நக்கீரன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல் அமைந்துள்ளது. நக்கீரன் அலுவலகத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு கூட துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தமது ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தொடரவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும், நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கியவர்கள் கைது செய்யப்பட வேண்டும், நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது பொய் வழக்குகள் ஜோடிப்பதைக் கைவிட வேண்டும் என, தமிழகம் முழுவதும் உள்ள ஜனநாயகக் குரல்கள் கண்டனம் முழங்க வேண்டும்.